Monday, May 28, 2007

அதிசயம்! ஆனால் உண்மை!!

ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாரையும் பவுன்ஸர்ல பாத்து ரொம்ப நாளாச்சுல்ல? என்ன செய்ய.. நமது அணியின் செயற்பாடுகளும், அணித் தேர்வுகளும் சரியாகும் வரை (இந்த ஜென்மத்துல நடக்குமானு தெரியல) இவனுங்கள கண்டுக்ககூடாதுன்னு ஒதுங்கியாச்சு.

இதுக்கிடையில், யாரும் எதிர்பாராதவாறு மூக்கின் மேல் விரல் வைக்கும்படி அதிசயமா பங்காளிகளை பிரிச்சு மேஞ்சுட்டு வந்துருக்காங்க. வங்கதேசத்தை இந்தியா வெல்லுமா? என்ற பெரிய கேள்விக்குறியுடன் கிளம்பி போனவர்கள் ஒரு போட்டியில் கூட தோற்காமல் திரும்பி வந்தால் வியப்பாயிராதா?

சே! என்ன பொழப்பு இது! மானங்கெட்ட பொழப்பு! ஒரு இளிச்சவாயன் கிடைச்சா மட்டும் ஒற்றுமையா சேர்ந்து கும்முறது!! இப்போ மட்டும் திசைக்கு ஒரு பக்கம் வடம் பிடிச்ச எல்லா சீனியர்களும் ஒன்னு சேர்ந்து கும்முறாய்ங்க. நம்ம மக்களும் ஆகா! என்ன பிரமாதமா ஆடுறாய்ங்க நம்ம பசங்கன்னு இவனுங்களுக்கு உள்ள நடந்த குடுமிபிடி ஆட்டம், கேவல தோல்விகள், தொடரும் அவலத்தனமான அணித்தேர்வு இதையெல்லாம் மறந்து கைதட்டி ரசிச்சு, இவனுங்களுக்கு காவடி தூக்க கிளம்பியாச்சு. என்னோட அலுவலகத்துல ரொம்ப சிலாகித்து பேசிக்கிறாய்ங்க சச்சின் மேன் ஆஃப் தெ சீரியஸ்னு. கொடுமைடா!! சச்சின் இந்த செஞ்சுரி அடிச்சதை பார்த்து இணையமே சிரிச்சுச்சு.

இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, அணியிலிருந்து தூக்கப்பட்ட கங்குலியும் சச்சினும் கலக்கிட்டாங்களாம். அதுனால இங்கிலாந்தும் செல்லும் அணியில் இருவரும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் இடம் பெறுவார்களாம்! கொடுமைடா!!

இவனுங்க அணிக்குள்ள அடிச்ச கூத்தெல்லாம் தேர்வாளர்கள் வாயால் வெளிவந்ததெல்லாம் இந்திய ரசிக கண்மணிகளுக்கு இந்நேரம் மறந்திருக்கும். மீண்டும் தங்களது ஹீரோக்களுக்கு பூஜிக்க தொடங்கியிருப்பார்கள். பங்களாதேஷை நாமளே பெரிய ஆளாக்கி, இப்போ பெரிய டீமை ஜெயிச்ச மாதிரி ஒரு தோற்றத்தை உண்டாக்குறதுல நம்ம ஆட்கள் கில்லாடிங்க.

இருக்கட்டும் இருக்கட்டும். இங்கிலாந்துக்கு போங்க மக்கா தெரியும்!!

Sunday, April 29, 2007

உலகக் கோப்பை பரிசளிப்பு காட்சிகள்

இறுதி ஓவரும் கொண்டாட்டங்களும்.



பரிசளிப்பு காட்சிகள்:


ஹாட்ரிக்!!!

நான் எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன். எதிர்பார்த்தது போலவே சமிந்தா வாஸுக்கும் முரளிக்கும் சுளுக்கெடுப்பு. எதிர்பார்த்தது போலவே இலங்கையிடமிருந்து ஒரு சிறிய போராட்டம். ஆக, ஆஸ்திரேலியா கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் தோற்கடிக்கப்படாத ஒரு அணியாக 2011-ல் களமிறங்கும்.

இலங்கை ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமெனில் அது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கக் கூடாது. ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக இருந்தாலொழிய ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது என நேற்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதுபோலவே மழை குறுக்கிட்டு 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் மேலும் மழை குறுக்கிட்டால் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவான நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது எனக்கு சிறிது ஆச்சர்யம் தான். காரணம், மழை குறுக்கிடும் (ஏற்கனவே குறுக்கிட்டு) போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமான சூழல் உருவாகும். அப்படியிருக்க துணிந்து பாண்டிங் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.



அவ்வளவுதான், கில்கிறிஸ்ட் வெறி பிடித்தது போல் ஒரு ஆட்டம் ஆடினார். அவருடன் பேட் செய்து கொண்டிருந்த ஹேடன் இந்த உலகக் கோப்பையின் அதிகமான ஓட்டங்களை குவித்திருப்பவர். ஆனால், கில்கிறிஸ்ட் ஆடிய ஆட்டத்தின் முன்பு ஹேடன் ஒரு கொசு போல தோற்றமளித்தார். இலங்கை இரண்டாவது பேட் செய்வதால், எந்த சூழ்நிலையிலும் மழை குறுக்கிடலாம், அதனால் டக்வர்த்-லூயிஸ் முறையில் இலங்கை எந்த நிலையிலும் முன்னிலை பெற இயலாதவாறு ஓட்ட விகித்ததை அதிகரித்து கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் எளிதாக 300 ஐ தொடும் என நினைத்தேன். ஆனால் இறுதி சில ஓவர்களை இலங்கை அணியினர் சிறப்பாக வீசினர். 38 ஓவர்களில் 281 என்பது கடினமான இலக்கை கொடுத்தனர். துருப்புச் சீட்டுகளை சூப்பர்-8 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக ஒளித்து வைத்த இலங்கையின் தந்திரம் பலிக்கவில்லை. வாஸுக்கும் முரளிக்கும் ஈவு இரக்கமில்லாமல் அடி விழுந்தது.

இதனை சேஸ் செய்வது என்பது கடினம். ஆனால், ஒரு வேளை மழை குறுக்கிட்டு டார்கெட் மாற்றப்பட்டால்? அது மட்டுமே போட்டியை சுவராசியமாக்கியது. மற்றபடி ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலக்கை விரட்டிய போதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை இலங்கை வெல்லும் என்று. இலக்கு அப்படி. இலங்கைக்கு வாய்ப்பு உள்ளதெனில் அது மழை மூலமே மட்டுமே இருந்திருக்க முடியும். இறுதியில் நினைத்தது போலவே ஆஸ்திரேலியா வென்றது. இடையிடையே மழை குறுக்கிட்டது இலங்கைக்கு எரிச்சலை தந்திருக்கும்.






இத்தனை பெரிய போட்டியின் இறுதியான முத்தாய்ப்பான கட்டத்தில் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கியது மைதானம். ஆஸ்திரேலியாவின் கொண்டாட்டம் இருளில்தான் நடந்தது.

எது எப்படியோ ஆஸ்திரேலியா மட்டுமே இந்த கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணி. ஆஸ்திரேலியாவுக்கும் உலகின் மற்ற அணிகளுக்குமிடையேயான தூரம் அதிகரித்துள்ளது. இந்திய அணிக்கான சீருடை தைக்க கொடுத்து நான்காண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யச் சொல்லியிருக்கும் வாண்டுகள் கூட்டம் அடுத்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடுமா?

Player of the Final - Gilchrist
Player of the World cup - McGrath

Well deserved. Aussies are real champions. பாராட்டுக்கள்!

இடையிடையே போட்டியை பற்றி தொலைபேசியில் அலசிய (குழப்பிய) அபிஅப்பா மற்றும் சோகத்துடன் உரையாடிய தம்பிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.