கிரேக் சாப்பல் இந்திய அணியிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து தொடங்கிய பயிற்சியாளருக்கான் தேடுதல் வேட்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இது ஒரு வேட்டையாக இல்லாமல் ஒரு ஓட்டையை அதிகவிலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு மூலதனம் கொண்டு அடைத்திருப்பதாகவே உணர்கிறேன்.
வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்தல் நம்மூர் பயிற்சியாளர்களை நியமிப்பதை விட நல்லது என்றுதான் நினைத்திருந்தேன். தேவையில்லாத மண்டல பாகுபாடு இருக்காது. புதிய ஆட்ட நுனுக்கங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். ஆனால், சாப்பல் விளையாடிய சில அழுகுனி ஆட்டங்கள் எரிச்சலைத்தான் தந்தது. அதற்காக எல்லா வெளிநாட்டு பயிற்சியாளர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறுதான். ஏன், அதற்கு முந்தைய ஜான் ரைட் நன்றாகத்தானே நடந்து கொண்டார். அணித்தலைவருடனும், கிரிக்கெட் வாரியத்துடனும் வளைந்து கொடுத்து நடந்து கொண்டார். அதனால், அப்போதய அணியில் விரிசல்களும், சலசலப்புகளும் வெகு குறைவாகவே இருந்தன. அணியின் வளர்ச்சியும் நிறைவாகவே இருந்தது. ஆனால், சாப்பலின் காலத்தில் அவ்வாறு நடக்கவே இல்லை. இதற்கு அவர் மட்டும் காரணமில்லை என்றாலும் அவரின் ஒரு சில அனுகுமுறைகள் அணியில் பெரிய விரிசலை உண்டாக்கியது என்னவோ உண்மைதானே? அதனால், வெளிநாடோ உள்நாடோ ஒரு தனிப்பட்டவரின் குணத்தை பொறுத்தே அவரின் பயிற்சிமுறை அமையும் என்பது எனது தற்போதைய எண்ணம்.
நமது கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. உலகக் கோப்பையின் போது ஆட்டங்கள் (வங்கதேசத்திற்கான) முடிவடையாத நிலையில் டேவ் வாட்மோர் தமக்கு இந்திய அணிக்கு பயிற்சியளிக்க ஆர்வமுள்ளதாக வெளிப்படையாக கூறினார். பிறகு டாம் மூடியின் பெயரும் அடிபட்டது. ஆனால், டாம் மூடி பிறகு அதிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. பிறகு வாட்மோர் பெயர் மட்டும் ஓங்கி ஒலித்தது. இந்திய அணி வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது கூட அங்கு சென்றிருந்த சரத் பவார் வாட்மோரை தனியாக சந்தித்து இது பற்றி பேசியிருக்கிறார். எனவே அவர்தான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என உறுதியாக கூறப்பட்டது.
வாட்மோரின் திறமையில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. எப்படியோ இருந்த இலங்கை அணியை இன்று இந்த நிலைமைக்கு கொண்டுவந்ததில் முக்கியமானவர் அவர் என்றால் மிகையில்லை. பிறகு வங்கதேச அணியின் வளர்ச்சியிலும் அவரது பங்கை கூறலாம். ஆனால், எனக்கு வருவது ஒரேயொரு சந்தேகமே. வங்கதேச அணியினுடனான ஒப்பந்தம் அவருக்கு முடிவடையாத நிலையில் இந்தியாவிற்கு பயிற்சியளிக்க விருப்பம் அளித்ததன் நோக்கம்? இந்திய அணிக்கு தன்னால் முடிந்த வரை தொண்டாற்ற வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணமா? இத்தனை சிக்கலான(கிரிக்கெட் வாரிய அரசியல், ஒத்துழைக்காத ஊடகத் தொல்லை, பொது மக்களின் அளவுக்கு மிஞ்சிய எதிர்ப்பார்ப்பு) ஒரு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்க அவரக்கு ஆர்வத்தை தூண்டியது எது? என்னுடைய கண்ணோட்டத்தில் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க இருக்கும் பெருந்தொகையின்(சம்பளம்) மீதுதான் நாட்டம் இருந்திருக்க வேண்டும். நல்லவேளை தவறான காரணத்தாலோ சரியான காரணத்தாலோ அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை.
பின்னர், திடீரென்று இரண்டு பெயர்கள் அடிபட்டன. ஒன்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ஃபோர்ட், மற்றொன்று அர்ஜூனா ரனதுங்க. திடிரென்று ரனதுங்க பெயரும் மங்கிப் போய், புதிய பெயர் அடிபட்டது. அது முன்னாள் இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளர் ஜான் எம்புரி. இந்த பெயரை பரிந்துரைத்தவர் சுனில் கவாஸ்கர். இதே கவாஸ்கர் ஒரு காலத்தில் தனது கட்டுரையில், கபில் அணித்தலைவராக இருந்த நேரம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஜான் எம்புரி ஆடுகளத்தை சேதப்படுத்தி கையும் களவுமாக பிடிபட்டார் என எழுதினாராம். இப்போது அவர் கள்வன் என்று கூறியவரை அவரே பரிந்துரைக்கிறார். முன்னர் கூறிய கிரஹாம் ஃபோர்ட் ராகுல் டிராவிட்டின் பரிந்துரையாம். டிராவிட் ஆடிய கவுண்டி அணியின் (கெண்ட்) பயிற்சியாளாரக இருக்கிறார், டிராவிட் அவருடைய பயிற்சியில் அங்கு ஆடியிருக்கிறார். அதனால் நல்ல புரிந்து கொள்ளல் இருக்கும் என நினைத்து டிராவிட் நினைத்து தனது எண்ணத்தையும் நிறைவேற்றியுள்ளார். கிரஹாம் ஃபோர்டும் நியமிக்கப்பட்டுவிட்டார்.
அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்பட்டால், விண்ணப்பிப்பவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து தேர்வு செய்வதுதான் வழக்கம். ஆனால், இங்கு நடைபெற்றதோ ஒரு கேலிக் கூத்தாகவே இருக்கிறது. சிலர் தத்தமது தேவைகளுக்கு வளைந்து கொடுப்பார் என தெரியும் ஆட்களை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள். திடீர் திடீரென ஆட்கள் மாறுகிறார்கள். காட்சிகளும் மாறுகிறது.
என்னவோ போங்க, இதில் இயங்கிய யாருக்கும் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியிலோ வெற்றியிலோ அக்கரை ஒரு துளியும் இல்லை என்பது மட்டும் மீண்டும் தெளிவாகிறது. தங்களுக்குள் நடக்கும் ஈகோ போர் மட்டுமே முக்கியம் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.