Saturday, December 24, 2011

நடக்கும் என்பார்...



ரெண்டு அணி வீரர்கள் பட்டியலும் அறிவிச்சாச்சு. கபில் தேவ், இயன் சேப்பல் முதற்கொண்டு இரு நாட்டு முன்னாள்களும் இந்தியாவுக்கு இந்த முறை தொடரை வெல்ல நல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லியாச்சு. ஆரம்பிக்குது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 26ம் தேதி எப்போதும் உள்ள பரபரப்புடன், யூகங்களுடனும், தொடருக்கு முந்தைய வாய்ச்சவடால்களுடனும். இந்திய அணி வலுவாக இருப்பதாக பரவலாக பேச ஆரம்பிச்சாச்சு. நாம எப்பவுமே கண்ணாடியப் பாத்து முகத்த துடைச்சிக்கிறது கிடையாது. அடுத்தவன்கிட்ட மச்சி! மூஞ்சில ஒட்டியிருந்த தூசி போயிருச்சான்னு கேட்கிற ஆளுங்க. நாம பலமா இருக்கோமோ இல்லையோ ஆஸி பலமா இல்ல. அப்போ நமக்கு வாய்ப்பு பிரகாசமாத்தான் இருக்குன்னு சொல்லணும். கடந்து மூணு நாலு வருஷமா பாடிட்டு வர்ற அதே பல்லவி தான்னாலும் இந்த முறை கொஞ்சம் கோரஸ் கூடியிருக்கு. அப்படி இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா? இல்லை ஆஸி அணி பலம் நமக்கு புரியலையா? கொஞ்சமா அலசுவோம்.

ஆச்சு! ராகுல் டிராவிட் ப்ராட்மேன் விழாவுல பேசியாச்சு. (http://www.espncricinfo.com/ci/content/story/545355.html). ஆஸி இந்திய அணி ரெண்டு சகோதர அணிகள்... எங்களுக்குள்ள சண்டையில்ல நாங்க சமாதானமா போறோம்னு பப்ளிக்கா பச்சைக்கொடி (வெள்ளைக்கொடி) காட்டிட்டாரு டிராவிட். அதுக்கும் முன்னாடி ஒரு பேட்டியில, பாண்டிங்கிடம் இன்னும் கிரிக்கெட் பாக்கி இருக்கு, ஆனா அவரு இந்தியாவுக்கு எதிரா விளையாடாம அதக்கப்புறம் விளையாடணும்னு நான் ஆசைப்படறேன்னு ஒரு பயம் கலந்த பகடி. கபில் தேவ் சொல்றாரு பாண்டிங்கை கவனிச்சிகிட்டா இந்தியா செயிச்சிரலாம்னு. ஆக ஜெயிச்சிரலாம்னு வாய் சொன்னாலும் கண்ணுல நிம்மதி இல்ல, கால் ஆட ஆரம்பிச்சிருச்சு. ஏம்ப்பா இதே எதிர்த்து விளையாடற அணி பர்முடாவா இருந்தா சேவாக் எப்படி ஒரு ஆட்டத்துல இருநூறு அடிப்பாப்புலனு சொல்வோமா மாட்டோமா? எங்க போச்சு அந்த தைரியம்.. அந்த நம்பிக்கை? ஏனா நாம அவ்வளவு தெளிவு கிடையாது. இங்கிலாந்துல வாங்கின அடியோட வீக்கம் குறைஞ்சிடுச்சு, ஆனா அடிவாங்கின இடம் கருத்துப்போயி இருக்கே இன்னும். அதுக்கும் மேல இன்னும் ஆஸி மேல பயம் இருக்கு. க்ளார்க் இருக்கான், பாண்டிங் இருக்க்கான், ஹஸ்ஸி இருக்கான், இது போதாதுன்னு பயபுள்ளக இன்னும் மூணு நாலு புது ஆட்கள கூட்டிட்டு வந்திருக்காங்க. புதுசுங்க என்ன செய்யும்னு சொல்லவே முடியாது. மூணு புது பவுலர்கள்னா சச்சின் மூணு மாட்ச் காலி அப்படின்னு இப்போவே கணக்கு போட ஆரம்பிக்கிறோம். அப்போ இந்தியாவுக்கு தொடரை வெல்ல வாய்ப்பு அதிகம் இருக்குன்னு ஏன் சொல்லணும்? ஆங் அங்க தான் நாம சாணக்கியர்கள்னு நிரூபிக்கிறோம். டேய் இந்த பாரு... நீ பேசுவேன்னு எனக்கு தெரியும்... உனக்கு வாய் நீளம்... ஆனா நாங்களும் இப்போ பேச ஆரம்பிச்சிட்டோம்... அதனால அடக்கி வாசி... அப்படின்னு மறைமுக அறைகூவல் இது.


சமீப காலமா ஆஸி அணில சில முக்கிய மாற்றங்கள் நடந்திட்டிருக்கு. பாண்டிங், ஹஸ்ஸி ரெண்டு பேருக்கும் எதிரா அதிகமா சத்தம் கேட்க ஆரம்பிச்சிருக்கு. பாண்டிங் கொஞ்சம் சுதாரிச்சிட்டாரு ஆனா ஹஸ்ஸியோட மூட் என்னான்னு இன்னும் தெரியல. ஆனா இவங்க ரெண்டு பேரும் இந்தியாவுக்கு இந்த தொடர்ல முக்கிய சவாலா இருக்கப்போறாங்கங்கிறது மட்டும் உறுதி. அந்தக் கட்டத்துக்கு அவங்களோட சமீப கால ஃபார்மும், இந்திய அணிக்கெதிரான அவர்களோட அனுபவமும் பெரிய காரணம். இத கணக்குல வச்சுத்தான் கபில் தேவ்வும், டிராவிட்டும் கவனமா எதுக்கும் பாண்டிங் மேல ஒரு கண் இருக்கட்டும்னு ஆரம்பத்திலேயே ஒரு க்னாவ வச்சிட்டாங்க. அது சரி விஷயம் தெரிஞ்சவன் கவனமா இருப்பான்.

புதுசா மிச்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் பாட்டின்ஸன், கோவன், நேத்தன் லையான்னு ஒரு பட்டாளம் வந்திருக்கு (முதல் டெஸ்ட் அணி). இவங்கள்ல்லாம் யாரு, எப்படி, எவனவன் ஆல்-இன்-ஆல் அழகுராஜா என்பது போன்ற விவரங்கள இப்போ நம்மால சொல்ல முடியாது. ஸ்டார்க், பாட்டின்ஸன் பவுலர்கள், லையான் சுமாரா பேட்டிங் பிடிப்பாரு, கோவன் ஓப்பனர்னு சொல்லலாம். ஆனா பாருங்க மிச்சல் ஜான்சன்கிட்ட ரெண்டு மாட்ச் அடிவாங்கின ஆட்கள் தான் நாம். (அப்பாடா அந்தப்பய இப்போ இல்ல! சந்தோசம்!!) அதனால புதுசுங்கள பத்தி இந்தியா சார்புல ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நிச்சயமா சொல்லலாம்னா, சச்சின் புது ஆளுங்க கிட்ட தன்னோட விக்கெட்ட பறிகொடுப்பாருன்னு உறுதியா சொல்லலாம். அதுல இந்த பாட்டின்ஸன் கிலி கிளப்புற பயலாத்தான் இருக்கான். ரெண்டு மாட்ச்ல பதினாலு விக்கெட் எடுத்திருக்கான். 21 வயசு தான் ஆகுது... சின்னப் பய... இளங்கன்று பயமறியாது சரி... ஆனா கொம்பு முளைக்க முன்னாடியே முட்ட வருதே? கவனமா இருக்கணும்!

அப்புறம் மட்டை நாயகர்கள்... டேவிட் வார்னர்... இன்னிக்கு தேதியில சேவாக் ரஜினிகாந்துனா, இவரு ஜாக்கி சான். சேவாக் மாதிரியே தான் இவரும். அடிச்சா தரைல கால் படாம சும்மா சுத்தி சுத்தி அடிப்பாரு... ப்ராட் ஹட்டின், நிதானம் இல்லாம இன்னும் விளையாடிட்டிருக்கிற ஒரு ஆளு. ஆனா அப்பப்போ திறமையா ரன் சேர்த்திருக்காரு. அப்புறமா க்ளார்க். கேப்டன்ங்கிற பளுவோட சுத்திட்டிருக்கிற மனுசன். இன்னும் தன்னால பவுலிங் போட்டு விக்கெட் எடுக்க முடியும்னு நம்புற அளவுக்கு இந்தியா இவருக்கு விக்கெட்டுக்களை முக்கியமான சமயங்கள்ல வாரி வழங்கியிருக்கு. இவரும் ரன் தாகத்துல இருக்கார். ரிக்கி பாண்டிங்! ஏற்கனவே கொஞ்சமா பார்த்துட்டோம் ஆனாலும் இவரு இன்னும் பயம் காட்டிட்டுத்தான் இருக்காரு. அடிலெய்ட்ல ஒரு சதம் நிச்சயம்னு பட்சி சொல்லுது. சிட்னில இன்னொன்னு அடிச்சாருன்னா இந்தியாவோட தொடர் கனவு இல்லாமல் போக சாத்தியக்கூறுகள் அதிகம். அப்புறம் ஹஸ்ஸி, ஷான் மார்ஷ். இருவரும் அணியில இடத்த தக்க வைக்க போறாடிட்டு இருக்காங்க. அது பயமா இருக்கா இல்ல பக்குவமா இருக்கான்னு சொல்ல முடியாது. ஆனா ஹஸ்ஸி இந்தியாவுக்கு பெரிய தலைவலியைத் தரலாம்.

பவுலிங்கில் பீட்டர் சிடில், ஹில்ஃபென்ஹாஸ் இருவரும் பழைய முகங்கள். ஹில்ஃபென்ஹாஸ் சிட்னியில் அதிர்ச்சியைத் தரலாம். மற்றவர்கள் புது முகங்கள். பாட்டின்ஸன் எப்படியும் நான்கு (டெஸ்ட்) மேட்ச்சிலும் விளையாடுவார் எனத் தெரிகிறது. எப்படியும் ஒரு பத்து விக்கெட் எடுப்பது உறுதி.

இவ்வளவு தான் ஆஸி அணியிடம் இருக்கும் விஷயம். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை.
**********************

- கணேஷ்