Monday, May 30, 2011

கெய்ல், தோனி மற்றும் ஐபிஎல்

ஒரு ஆள் தனியா நின்னு ஒரு டீமோட தலையெழுத்த மாத்த முடியுமா? முடியும் என்பதற்கு இந்த ஐபிஎல் உதாரணம். அந்த ஒரு ஆள் கிரிஸ் கெய்ல். டீம் பெங்களூரு. கிரிக்கெட் ஒரு டீம் கேம். சில ஆட்டங்களின் வெற்றிகளை ஒரு தனி நபர் தீர்மானித்தாலும், தனி நபர் வெற்றி, அணியின் வெற்றியாக எல்லா நிகழ்வுகளிலும் சாத்தியமில்லை என்பதற்கும் இந்த ஐபிஎல் நல்ல உதாரணம். நல்ல டீமென்று ஆரம்பம் முதலே பாராட்டப்பட்ட சென்னை கோப்பையை வென்றிருக்கிறது. இறுதி போட்டியிலும் கெய்ல் விளையாடி பெங்களூருக்கு வெற்றி தேடித்தந்திருந்தால் இந்த ஐபிஎல்லை கெய்லின் ஐபிஎல்லென்றே சொல்லியிருக்கலாம். அது நடக்கவில்லை.

தனி நபருக்கென்று வழங்கப்படும் எந்த விருதும், தொடரில் தனி நபர் சாதனை என எதுவும் சென்னை அணியிடம் இல்லை. குழு விருதான, ஃபேர் ப்ளே விருதை வாங்கியிருக்கிறார்கள். கிரிக்கெட் டீம் கேம் என்றும். தோனி டீம் மேன் என்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. வெற்றி பெற்ற பின்பு புகழ்வது எளிதான காரியம். பல நேரங்களில் ஒரிரு வெற்றிகளிலேயே இந்தப் வெற்றிகளும் புகழாரங்களும் நின்று விடுவதும் உண்டு. ஆனால் அளப்பரிய வெற்றிகள் தொடர்ந்து கிடைக்கும் பொழுது, தோனி என்னும் பெயரை அவ்வளவு எளிதாக நம்மால் கடக்க முடியவில்லை. இந்தப் புகழும் போய்ச்சேரட்டும் தோனிக்கே. முடிந்தால் ஒரு விசில் போட்டு விட்டுப் போங்கள் கஷ்டப்பட்டு தமிழ் பேசறான்யா மனுஷன்.

வீரர்கள் ஏலத்தில், சென்னை முந்தைய ஐபிஎல்லில் அவர்களுக்காக விளையாடிய வீரர்களை ஓரளவிற்கு மறுபடியும் வாங்கிவிட்டனர். ஒரு வகையில் வீரர்கள் எல்லோரும் அவர்களுக்கான பொறுப்பை உணர்ந்திருந்தார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர்கள் ஒரு அணியாக எவ்வாறு செயல்பட ஆரம்பித்தார்கள் என்று. இதில் தோனியின் பங்கு எவ்வளவென்று தெரியவில்லை. ஆனால் பழைய வீரர்களை ஒரு அணியாக அவர்கள் பார்த்ததே தோனியின் வெற்றியென்று தான் சொல்ல வேண்டும். அவர்களை அவர்களின் பொறுப்பை உணரச்செய்ததே தோனியின் வெற்றி.

சென்னை மீண்டும் ஐபிஎல்லை வென்றிருக்கிறது. இனி மற்ற அணிகளும் இந்தத் தேர்வு முறையை செயல்படுத்தலாம். குழுவாக இயங்க ஆரம்பிக்கலாம். வலுவான அணியாக செயல்படுவதற்கு முயலலாம். வெல்பவர்கள் செய்வதும் அதையே தான். மற்றவர்களைத் தன் போல் மாற்ற முயல்கிறார்கள். அதனாலேயே அவர்கள் அதிகம் வெற்றிபெறுகிறார்கள். சென்னையின் இந்த வெற்றியும், தோனியின் இந்த வெற்றியும், அடுத்த ஐபிஎல்லுக்கான சரியான ஒரு களத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday, May 25, 2011

சென்னையில் கோடை மழை

உலகக் கோப்பை ஜெயிச்சதும், தொடர்ந்து ஐபிஎல் ஆரம்பிச்சதில எனக்கெல்லாம் உடன்பாடு இல்ல... அதும் இல்லாம சீரியல் மாதிரி மேட்ச நடந்துக்கிட்டே இருக்கவும் ரொம்ப போரடிச்சு மேட்ச் பாக்குறத விட்டுட்டேன்.

நேத்து முதல் இன்னிங்க்ஸ் கூட பார்க்கல... 176 ரன் அடிக்கணும் சென்னைன்னதும் சரிடாப்பா... அடுத்த மேட்ச் யாருகூட இருக்கும்னு கணக்கு போட்டிட்டு, கே டிவில படம் பார்த்திட்டு இருந்தேன்.

அப்பப்ப ஸ்கோர் மட்டும் பார்த்துட்டு இருக்கிறது...

ஹஸ்ஸி ரன் எடுக்காம அவுட். முரளி அவுட்சைட் த லைன் பிட்சான பால்ல எல்பின்னதும் மக்கா முடிஞ்சிடுச்சுடான்னு முடிவே பண்ணிட்டேன்.

அப்புறம் நம்ம அண்ணன் பத்ரிநாத் வந்ததும், ரவிசாஸ்திரி சொல்றாப்ல... மேன் ஃபார் ஆல் சீசன்னு... பத்ரி நல்லாத்தான் ஆடுறான்னாலும் அவன் சிக்ஸ் அடிக்க ட்ரை பண்ணா பால் இன்னர் சர்க்கிளைத் தாண்டி விழும். அத்தனை ஸ்ட்ரங்க்த் அவனுக்கு.... பரவாயில்லை... நேத்து நல்லா ஆடினான்.

அப்பப்ப ஃபோர் அடிச்சிட்டு இருந்தானுக... 7 ஓவருக்கு 28 ரன் ரெண்டு விக்கட்... அண்ணன் ஜாகிர் ஆடினதும், கெயில் ஆடுனதும் பார்த்தா எனக்கு கதி கலங்கிருச்சி...

அப்புறம் ரெய்னா அப்பப்ப காட்டின சிக்ஸரும், நார்மலான ஹைட்ல வந்த ஃபுல்டாஸ் பால்ல ரெய்னா அவுட்டாகி, அதை அம்பயர் நோ பால்னு சொன்னதும், இன்னைக்கு நாம ஜெயிச்சிடுவோம்ன்ற நம்பிக்கை தந்தது.

அப்புறம் பத்ரி அவுட்டானதும், தோனி அடிச்ச ஒரு சிக்ஸர், அப்புறம் மார்க்கல் ஆட்டம்லாம் நல்லா இருந்தது...

கடைசில ரெய்னான்னு ஒரு சின்னப் பையன் சிக்ஸ் அடிச்சு 50 போட்டுட்டு யாருகிட்டயோ பேட்டைக் காட்டி நான் யாருன்னு புரிஞ்சுக்கன்னு சொன்னான்... அனேகமா அது கோஹ்லியாத்தான் இருக்கணும்...

அசாதாரணமா ஜாகிரை, மிதுனையெல்லாம் துவைச்சு எடுத்து 177 ரன் எடுத்து பாலை வார்த்தானுக...

இனி சனிக்கிழமை தான் நமக்கு மேட்ச்... எவன் வரப் போறானோ...

சென்னைலயும் ரெய்னாவின் சிக்ஸர் மழை கோடை மழையா குளிர்ச்சி தரும்னு நம்பலாம்...

Wednesday, May 18, 2011

கெய்ல் ஸ்டார்ம்

ஐந்து அணிகளைப் பற்றிய பார்வையை போன இடுகையில் பார்த்தோம். மீதி ஐந்து அணிகளை இந்த இடுகையில் அலசுவோம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த மூன்று ஐபிஎல் போட்டித் தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறாத ஒரே அணி கொல்கத்தா. அதனால் இந்த முறை மனோஜ் திவாரியைத் தவிர மற்ற அத்தனை ஆட்டக்காரர்களையும் - வங்காளச் சிங்கம் தாதா கங்குலி உட்பட- மாற்றியது கொல்கத்தா. 2.4 மில்லியன் கொடுத்து கம்பீரையும், 2.1 மில்லியன் கொடுத்து யூசுஃப் பதானையும் வாங்கி அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு அணிகளில் ஒரு அணியாக இருக்கக் கூடிய வாய்ப்பை இன்னமும் தக்கவைத்திருக்கிறது கொல்கத்தா. ப்ரெட் லீ, இக்பால் அப்துல்லா, யூசுஃப் பதான், பாலாஜி ஆகியோர் பந்து வீச்சில் கலக்கி வருகிறார்கள். ஆனாலும், ஸ்டார் பவுலர் என்று ஒருவரும் இல்லாதது கொல்கத்தாவின் குறை. பேட்டிங்குக்கு காலிஸ், கம்பீர், மனோஜ் திவாரி, பதான் ஆகியோர் இருந்தாலும் கன்சிஸ்டண்டாக பெர்ஃபாம் செய்யக்கூடியவர்கள் இல்லாமல் தான் இருக்கிறார்கள். இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறினாலும் சேம்பியன்கள் ஆவார்களா என்பது சந்தேகமே.

மும்பை இண்டியன்ஸ்
கடந்த வருடத்தில் இருந்த அணியைப் பெரும்பாலும் தக்க வைத்துள்ளது மும்பை. ஆனாலும் ஜாகிர் கானின் இழப்பைப் பூர்த்தி செய்ய ஒரு பவுலர் இல்லாதது பெரும் குறையே. இந்த ஐபிஎல் தொடரில் லீடிங் விக்கெட் டேக்கர் லசித் மலிங்கா. சளைக்காமல் இவர் வீசும் யார்க்கர்கள் எதிரணி பேட்ஸ்மென்களை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்த அணிக்கு எதிராக ஆடுபவர்களுக்கு 20 ஓவர்களில்லை 16 ஓவர்கள்தான் என்று ஒரு முடிவோடு ஆடவேண்டியிருக்கிறது. ஆனாலும் லசித் மலிங்காவுக்குக் கம்பெனி கொடுக்க நல்ல பவுலர்கள் இல்லை. முனாஃப் பட்டேல் ஓரளவுக்குக் கை கொடுத்தாலும் ஜாகிர் இல்லாத குறை தெரிவது உண்மை. ஹர்பஜன் சிங் சென்னைக்கு எதிரான போட்டியில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற போட்டிகளில் மிக சாதாரணமாகவே அவர் பவுலிங் இருக்கிறது.

பேட்டிங் கடந்த இரண்டு ஆட்டங்களில் கை கொடுக்கவில்லை. இந்திய அணியோ மும்பை அணியோ சச்சின் அவுட்டானால் சைக்கிள் ஸ்டேண்ட் சைக்கிள்கள் போல மள மளவென சரிவது மாறாது போல. இரண்டு மோசமான தோல்விகளைத் தழுவியதால் அரையிறுதிக்கான இடம் உறுதிப்படப் படாமல் இருக்கிறது. பேட்டிங்குக்கு சச்சின், அம்பாட்டி ராயுடு, பொல்லார்ட், சைமண்ட்ஸ், ப்ளிஸ்ஸார்ட் போன்றோர் இருந்தாலும், கன்ஸிஸ்டன்ஸி இல்லை. கண்டிப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியவில்லை. கடந்த ஐபிஎல்லில் ஏற்படுத்திய தாக்கத்தை பொல்லார்ட் இன்னும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஃபைனலுக்குப் போனாலும் கோப்பை இவர்களுடையதாகிவிடும் என்ற நிச்சயம் இல்லை.

புனே வாரியர்ஸ்
A captain is as good as a team - என்று சொல்வார்கள். அதற்கு Exceptions உண்டு. இருக்கின்ற குறைந்த ரிசோர்ஸஸை சிறப்பாக உபயோகித்து சிறப்பான குழு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைத் தேடித்தருபவர்கள் இருக்கிறார்கள். வார்னே, தோனி, இப்போது கில்கிறிஸ்ட் என உதாரணங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஆனால் சிறந்த வீரர்கள் பலரை அணியில் கொண்டிருந்தாலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரே ஒருவர்தான் இருக்கிறார் - யுவராஜ் சிங். Best team on Paper வைத்துக் கொண்டு புள்ளி அட்டவணையில் கடைசியில் இருந்து இரண்டாமிடத்துக்குப் போயிருக்கும் அணி புனே. இதில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல நெஹ்ராவுக்குப் பதிலாக கங்குலியைக் கொண்டுவந்தனர். அதுவும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி புனே அணி மட்டுமே.

அடுத்த ஆண்டு மீண்டு வர வாழ்த்துகள். (வேற என்ன சொல்லமுடியும்?)

ராஜஸ்தான் ராயல்ஸ்
முதல் ஐபிஎல் தொடரில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை இல்லை. ஆரம்பத்தில் நம்பிக்கைக் கொடுக்கும் வண்ணம் ஆடினாலும், போகப் போக மற்ற ஆட்டங்களின் மோசமான ஆட்டத்தான் தோல்விகளைத் தழுவி இப்போது அரை இறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலையை எட்டியிருக்கிறது.

வார்னே இந்தத் தொடரோடு ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். ராஜஸ்தான் அணியைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வார்னேவுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த முறையும் ராஜஸ்தான் ஏலத்துக்குள் நுழையும் போதே மற்ற அணிகளை விட பாதித் தொகையையோடுதான் நுழைந்தது. அதிலும் வார்னேவையும் வாட்சனையும் ரீட்டேய்ன் செய்ததில் இன்னும் பாதித் தொகையை இழந்தது. இருக்கின்ற தொகையில் வாங்க முடிகின்ற ஆட்டக்காரர்களை வாங்கியிருந்தாலும் தொடரின் ஆரம்பத்தில் அமர்க்களமான வெற்றிகள் சில பெற்று நம்பிக்கையளித்தது. ராகுல் ட்ராவிட், ராஸ் டெய்லர், ஜோகன் போத்தா, வாட்ஸன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தாலும், அதிகம் தெரியாத உள்நாட்டு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தைக் காட்டினார்கள்.

ரிட்டயராகப் போகிற கடைசி காலத்தில் ஆர்.சி.ஏ செக்ரட்டரியைத் திட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் வார்னே. அடுத்தத் தொடரில் கோச்/ஆலோசகராக இருந்து மறுபடியும் ராஜஸ்தான் அணியை வளர்த்தெடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த வருடம் ராஜஸ்தானுக்கு விடை கொடுப்போம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஒரே அணி பெங்களூரு. ஆரம்பத்தில் ததிங்கிணத்தோம் போட்ட அணி, கிறிஸ் கெயில் என்ற சூறாவளி வந்ததும் தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஏழே ஆட்டங்களில் 32 சிக்ஸர்களை விளாசி 436 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக விளங்கியுள்ளார் கெயில்.

கெய்லைத் தொடர்ந்து அதிரடியாக ஆட கோஹ்லி, புஜாரா, சௌரவ் திவாரி, ஏ.பி டிவில்லியர்ஸ் போன்றோர் இருக்கிறார்கள். ஆக, பேட்டிங்க் மோசமாக இல்லை.பெங்களூருவுக்குப் பந்துவீச்சும் பலம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பலவீனமாக இல்லை என்று சொல்லலாம்.

நேற்று வரை சேம்பியன் பட்டத்துக்குப் போட்டி போடக்கூடிய அணியாக பெங்களூருவைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று பஞ்சாப் அணிக்கு எதிராகப் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து அப்படி ஒரு முடிவுக்கு வர தயக்கமாக இருக்கிறது. கெய்ல் சூறாவளியைத் தடுத்து நிறுத்திவிட்டால் பெங்களூருவும் சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிவிடலாம் என்பதையே இன்றையத் தோல்வி எடுத்துச் சொல்கிறது. பெங்களூரு இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கக் கூடாது.

ஒட்டுமொத்தமாக, பத்து அணிகளின் ஆட்டத்தைப் பார்ததன் மூலம் இந்த முறை சேம்பியன் பட்டத்தை சென்னை தக்க வைத்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகப் படுகிறது. பெங்களூருவும், பஞ்சாபும்(ஒரு வேளை அரையிறுதிக்குத் தகுதி பெற்றால்) சென்னைக்குச் சவாலாக இருக்கலாம். 

Thursday, May 12, 2011

சென்னை.. சென்னை.. சூப்பர் கிங்க்ஸ்....

ஐபிஎல் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருக்கிறது. அரையிறுதிக்குப் போகும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. இந்த நேரத்தில் ஆடுகளத்தில் இந்த வருட அணிகளின் பெர்ஃபாமன்ஸ் பற்றி கொஞ்சம் அலசலாம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ்
இதுவரை நடந்து முடிந்த மூன்று ஐபிஎல் தொடர்களிலும் கன்ஸிஸ்டண்டாக இருந்த அணி எது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சென்னையை நோக்கிக் கை காட்டலாம். மூன்று முறையும் செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்ற ஒரே அணி. இதில் ஒரு முறை ரன்னர் அப், இன்னொரு முறை சேம்பியன். வெற்றிகரமாக அணியின் பெரும்பாலான வீரர்களை ஏலத்தில் தக்க வைத்துக் கொண்ட சென்னை, இந்த முறையும் செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிடும் சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.

இதுவரை நடந்த 11 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது சென்னை. ஆனால் அந்த நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக முழுமையாக நடைபெறவில்லை. மீதி இரண்டு போட்டிகள் பால் வல்தாட்டி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் அதிசிறப்பான ஆட்டத்தால்/பந்து வீச்சால் தோல்வியைத் தழுவியது (இந்த இருவரும் இந்தப் போட்டிகளைத் தவிர வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது). மேலும், மற்ற அணிகளில் சூப்பர் பெர்ஃபாமர் ஒருத்தர் இருப்பது போல சென்னையில் ஒருவர் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் மொத்த டீமுமே பங்கெடுத்து வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளனர். அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் அள்ளிக் குவிக்கவில்லையென்றாலும், எதிரணியினரை ரன்கள் குவிக்காமல் தடுத்துவந்திருக்கின்றனர். சொந்த கிரவுண்டில் இன்னும் வீழ்த்தப்படாத ஒரே அணியாக சென்னை இருக்கிறது. சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லத் தகுதி படைத்த அணி என்று சென்னையச் சொல்லலாம்.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 3

டெக்கான் சார்ஜர்ஸ்
கடந்த மூன்று ஆண்டுகள் இருந்த அணி இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. சங்கக்கரா தலைமையில் 11 ஆட்டங்களில் மூன்றே வெற்றிகள் மட்டும் பெற்று புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தில் இருக்கிறது. பந்து வீச்சுக்கு டேல் ஸ்டெயின், அவருக்குக் கம்பெனி கொடுக்க இஷாந்த் சர்மா, டேனியல் கிறிஸ்டியன், சுழல் பந்துக்கு பிரக்யான் ஓஜா என இருந்தாலும், பேட்டிங்கில் சற்று வீக்காகவே இருக்கிறது இந்த அணி. ஹைதரபாத்தில் இதுவரை வெற்றியே பெறவில்லை என்ற வரலாற்றை ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியதன் மூலம் மாற்றியமைத்தது மட்டுமே இந்த புதிய அணியின் ஒரே சாதனை.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 10

டெல்லி டேர்டெவில்ஸ்
எல்லா அணிகளும் பலம் குறைந்த பழைய அணியை மாற்றி பலமிக்க புது அணியாக மாற்றிக் கொண்டிருந்த வேளையில் டெல்லி மட்டும் பலமான வீரர்களை விட்டுக் கொடுத்துவிட்டு சோதா அணியை உருவாக்கியிருக்கிறது. இர்ஃபான் பதானுக்கு 1.9 மில்லியன் எதற்குக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சினிமாவில் காட்டுவது போல யாரோ ஏற்றிவிட்டு இர்ஃபானை டெல்லி தலையில் கட்டிவிட்டார்கள் போல.

சேவாக் ஒற்றை ஆளாய்ப் போராடி நான்கில் மூன்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். இப்போது அவரும் தோள்பட்டைக் காயத்தின் காரணமாக தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப்பின் ஜேம்ஸ் ஹோப்ஸ் தலைமையேற்றிருக்கிறார். பெருமைக்காக மட்டுமே ஆட முடிகிற நிலையில்தான் டெல்லி இருக்கிறது.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 8

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்
இரண்டு முறை யுவராஜாலும், ஒரு முறை சங்கக்கராவாலும் தலைமையேற்கப்பட்ட பஞ்சாப் அணி இந்த முறை முற்றிலும் புதிய வடிவெடுத்து கில்கிறிஸ்ட் தலைமையில் இயங்குகிறது. சொல்லிக்கொள்ளும்படி பெரிய வீரர்கள் இல்லையென்றாலும், இருக்கின்ற வீரர்களை வைத்து வல்தாட்டி, பார்கவ் பட் போன்ற புது ஹீரோக்களை உருவாக்கியிருக்கிறார் கில்கிறிஸ்ட். பலம் வாய்ந்த அணிகளான சென்னையையும், மும்பையையும் வீழ்த்தி அதிர்ச்சியை அளித்தது பஞ்சாப். புள்ளி அட்டவணையில் 9வது இடத்தில் இருந்தாலும் இன்னும் நான்கு போட்டிகள் ஆட வேண்டியிருப்பதால் செமி ஃபைனலுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பஞ்சாப் முற்றிலும் இழந்துவிடவில்லை என்பது உண்மை.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 9

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
இந்த ஆண்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட அணி. ஜெயவர்த்தனே தலைமையில் 11 போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்று செமிஃபைனலுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இன்னமும் இழக்காமல் இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கட்டா, டெல்லி ஆகிய நான்கு மெட்ரோக்களையும் வீழ்த்திய பெருமை பெற்றிருக்கிறது இந்த அணி. முரளிதரன் போன்ற ஜாம்பவான்களையே பெஞ்சில் அமர்த்த வேண்டிய அளவுக்கு பவுலிங்குக்கு ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், வினய் குமார் போன்ற வீரர்கள் வைத்திருக்கிறது கொச்சி. அதிரடி பேட்டிங்குக்கு ப்ரெண்டன் மெக்கல்லம், ப்ராட் ஹோட்ஜ், ரவீந்திர ஜடேஜா போன்றோரைக் கொண்டிருக்கிறது. ஹோம் பிட்சை தங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்து வெற்றிகள் பெற நினைத்த வேளையில் கத்தியெடுத்தவன் கத்தியாலே சாவான் என்பது போல அந்த பிட்சினாலேயே டெக்கானிடம் சுருண்டது. கோமெஸ், பரமேஷ்வரன் போன்ற லோக்கல் டேலண்டுகள் வெளிவருவதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியே.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 6

மீதி ஐந்து அணிகளைப் பற்றி நாளை பார்ப்போம்.

Posted by

முகிலன்.