Thursday, May 12, 2011

சென்னை.. சென்னை.. சூப்பர் கிங்க்ஸ்....

ஐபிஎல் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருக்கிறது. அரையிறுதிக்குப் போகும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. இந்த நேரத்தில் ஆடுகளத்தில் இந்த வருட அணிகளின் பெர்ஃபாமன்ஸ் பற்றி கொஞ்சம் அலசலாம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ்
இதுவரை நடந்து முடிந்த மூன்று ஐபிஎல் தொடர்களிலும் கன்ஸிஸ்டண்டாக இருந்த அணி எது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சென்னையை நோக்கிக் கை காட்டலாம். மூன்று முறையும் செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்ற ஒரே அணி. இதில் ஒரு முறை ரன்னர் அப், இன்னொரு முறை சேம்பியன். வெற்றிகரமாக அணியின் பெரும்பாலான வீரர்களை ஏலத்தில் தக்க வைத்துக் கொண்ட சென்னை, இந்த முறையும் செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிடும் சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.

இதுவரை நடந்த 11 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது சென்னை. ஆனால் அந்த நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக முழுமையாக நடைபெறவில்லை. மீதி இரண்டு போட்டிகள் பால் வல்தாட்டி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் அதிசிறப்பான ஆட்டத்தால்/பந்து வீச்சால் தோல்வியைத் தழுவியது (இந்த இருவரும் இந்தப் போட்டிகளைத் தவிர வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது). மேலும், மற்ற அணிகளில் சூப்பர் பெர்ஃபாமர் ஒருத்தர் இருப்பது போல சென்னையில் ஒருவர் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் மொத்த டீமுமே பங்கெடுத்து வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளனர். அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் அள்ளிக் குவிக்கவில்லையென்றாலும், எதிரணியினரை ரன்கள் குவிக்காமல் தடுத்துவந்திருக்கின்றனர். சொந்த கிரவுண்டில் இன்னும் வீழ்த்தப்படாத ஒரே அணியாக சென்னை இருக்கிறது. சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லத் தகுதி படைத்த அணி என்று சென்னையச் சொல்லலாம்.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 3

டெக்கான் சார்ஜர்ஸ்
கடந்த மூன்று ஆண்டுகள் இருந்த அணி இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. சங்கக்கரா தலைமையில் 11 ஆட்டங்களில் மூன்றே வெற்றிகள் மட்டும் பெற்று புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தில் இருக்கிறது. பந்து வீச்சுக்கு டேல் ஸ்டெயின், அவருக்குக் கம்பெனி கொடுக்க இஷாந்த் சர்மா, டேனியல் கிறிஸ்டியன், சுழல் பந்துக்கு பிரக்யான் ஓஜா என இருந்தாலும், பேட்டிங்கில் சற்று வீக்காகவே இருக்கிறது இந்த அணி. ஹைதரபாத்தில் இதுவரை வெற்றியே பெறவில்லை என்ற வரலாற்றை ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியதன் மூலம் மாற்றியமைத்தது மட்டுமே இந்த புதிய அணியின் ஒரே சாதனை.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 10

டெல்லி டேர்டெவில்ஸ்
எல்லா அணிகளும் பலம் குறைந்த பழைய அணியை மாற்றி பலமிக்க புது அணியாக மாற்றிக் கொண்டிருந்த வேளையில் டெல்லி மட்டும் பலமான வீரர்களை விட்டுக் கொடுத்துவிட்டு சோதா அணியை உருவாக்கியிருக்கிறது. இர்ஃபான் பதானுக்கு 1.9 மில்லியன் எதற்குக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சினிமாவில் காட்டுவது போல யாரோ ஏற்றிவிட்டு இர்ஃபானை டெல்லி தலையில் கட்டிவிட்டார்கள் போல.

சேவாக் ஒற்றை ஆளாய்ப் போராடி நான்கில் மூன்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். இப்போது அவரும் தோள்பட்டைக் காயத்தின் காரணமாக தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப்பின் ஜேம்ஸ் ஹோப்ஸ் தலைமையேற்றிருக்கிறார். பெருமைக்காக மட்டுமே ஆட முடிகிற நிலையில்தான் டெல்லி இருக்கிறது.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 8

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்
இரண்டு முறை யுவராஜாலும், ஒரு முறை சங்கக்கராவாலும் தலைமையேற்கப்பட்ட பஞ்சாப் அணி இந்த முறை முற்றிலும் புதிய வடிவெடுத்து கில்கிறிஸ்ட் தலைமையில் இயங்குகிறது. சொல்லிக்கொள்ளும்படி பெரிய வீரர்கள் இல்லையென்றாலும், இருக்கின்ற வீரர்களை வைத்து வல்தாட்டி, பார்கவ் பட் போன்ற புது ஹீரோக்களை உருவாக்கியிருக்கிறார் கில்கிறிஸ்ட். பலம் வாய்ந்த அணிகளான சென்னையையும், மும்பையையும் வீழ்த்தி அதிர்ச்சியை அளித்தது பஞ்சாப். புள்ளி அட்டவணையில் 9வது இடத்தில் இருந்தாலும் இன்னும் நான்கு போட்டிகள் ஆட வேண்டியிருப்பதால் செமி ஃபைனலுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பஞ்சாப் முற்றிலும் இழந்துவிடவில்லை என்பது உண்மை.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 9

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
இந்த ஆண்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட அணி. ஜெயவர்த்தனே தலைமையில் 11 போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்று செமிஃபைனலுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இன்னமும் இழக்காமல் இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கட்டா, டெல்லி ஆகிய நான்கு மெட்ரோக்களையும் வீழ்த்திய பெருமை பெற்றிருக்கிறது இந்த அணி. முரளிதரன் போன்ற ஜாம்பவான்களையே பெஞ்சில் அமர்த்த வேண்டிய அளவுக்கு பவுலிங்குக்கு ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், வினய் குமார் போன்ற வீரர்கள் வைத்திருக்கிறது கொச்சி. அதிரடி பேட்டிங்குக்கு ப்ரெண்டன் மெக்கல்லம், ப்ராட் ஹோட்ஜ், ரவீந்திர ஜடேஜா போன்றோரைக் கொண்டிருக்கிறது. ஹோம் பிட்சை தங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்து வெற்றிகள் பெற நினைத்த வேளையில் கத்தியெடுத்தவன் கத்தியாலே சாவான் என்பது போல அந்த பிட்சினாலேயே டெக்கானிடம் சுருண்டது. கோமெஸ், பரமேஷ்வரன் போன்ற லோக்கல் டேலண்டுகள் வெளிவருவதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியே.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 6

மீதி ஐந்து அணிகளைப் பற்றி நாளை பார்ப்போம்.

Posted by

முகிலன்.

No comments: