Showing posts with label டிராவிட். Show all posts
Showing posts with label டிராவிட். Show all posts

Thursday, April 12, 2007

ஏன்டா அம்புட்டு நல்லவனாடா நீயி?

இந்த உலகக் கோப்பையில் வங்கதேசம் நம் தேசத்தை விரட்டியடித்த அன்று போட்டி முடிந்த பிறகு நடந்த நிகழ்ச்சி இது.

இந்தியாவின் அந்த அவமான தோல்வியால் நாடே கொந்தளிச்சு போயிருந்த நேரம். நம் வீரர்கள் போட்டி முடிந்த பிறகு தங்கள் ஹோட்டலுக்கு திரும்பினர். வங்கதேச வீரர்களும். தமீம் இக்பால் அறையின் இண்டர்காம் ஒலித்தது. எதிர்முனையில் ரணகளப்பட்டு போன எதிர் அணியின் கேப்டன். டிராவிட் தமீம் இக்பாலிடம் சிறிது நேரத்திற்கு தனது அறைக்கு வந்து போகுமாறு கேட்டுள்ளார்.

தமீம் இக்பாலுக்கு பயம் கலந்த ஒரு அதிர்ச்சி. 'என்னடா இது? இன்னிக்கு நாம அடிச்சு ஜெயிக்க வச்சதுக்கு திட்டப்போறானா? இந்தியாவுல வேற எரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு திட்டி பழி வாங்கப்போறானா?' என்ற கலக்கத்துடன் டிராவிட்டின் அறைக் கதவை தட்டினார்.

டிராவிட் சிரித்த முகத்துடன் தமீம் இக்பாலை வரவேற்று இருக்கையில் அமரச்செய்து அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். மிக நேர்த்தியாகவும் துனிச்சலுடன் ஆடியதாக பாராட்டியதோடு எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தமீமிற்கு நம்ப முடியவில்லை. மேலும் அதிர்ச்சியாக டிராவிட் தன் கையொப்பமிட்ட பேட் ஒன்றை தமீமிற்கு பரிசாக அளித்துள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளும்முன்பு மீண்டும் ஒரு பேட்டை கொடுத்து அதை விக்கட் கீப்பர் முஷ்ஃபிக்குர் ரஹீமிற்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம்.

இதை தன் வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டாக தமீம் இக்பால் கூறுகிறார். தமது அணியினருக்கு டிராவிட்டின் மீது அளவு கடந்த மரியாதை இருப்பதாக தெரிவித்துள்ளார். 2004-ல் இந்தியா வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள இளம் வீரர்களுக்கு டிராவிட் பல ஆலோசனைகள் வழங்கினாராம். டிராவிட்டிற்கு கிரிக்கெட் மீது மிகுந்த பற்றுள்ளதை இந்நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன என தமீம் தெரிவித்துள்ளார்.

அடடா! இது டிராவிட்டின் Sportsmanship பன்பை அழகாக எடுத்துக்காட்டுகிறது. உயர்ந்து நிற்கிறார் டிராவிட். இதை நான் ஒரு நாளிதழில் வாசித்தபோது நெகிழ்ந்துதான் போனேன்.

பருத்திவீரனின் சித்தப்பு (டிராவிடை பார்த்து): ஏன்டா அம்புட்டு நல்லவனாடா நீயி?