சேட்டைக்காரன் என்ற வேணுஜி பண்புடன் குழுமத்துக்காக எழுதியது...
நேற்று இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று மின்சாரம் அந்தர்தியானம் ஆனது. ‘எல்லாம் நன்மைக்கே’ என்று எழுந்துகுளித்துவிட்டு திரும்பியபோது குழந்தைகள் கைபேசியில் ஸ்கோர் பார்த்துக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.
'ஆப் டவுண்லோட் பண்ணியிருக்கோம்பா....!'
அட, இந்த கிரிக்கெட் ரசனையைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தாலே, நாடு எங்கிருந்து எங்கு வந்திருக்கிறது என்று தோராயமாகப் புரிந்து கொண்டு விடலாம் போலிருக்கிறதே சாமி.
அந்தக் காலத்திலே எல்லாம்....
பிலிப்சோ மர்பியோ, கால் கிலோ மைசூர்பா டப்பா சைஸுக்கு டிரான்ஸிஸ்டர் ஒன்றுதான் கிரிக்கெட் ரோகத்தை குணப்படுத்தும் அருமருந்தாக இருந்ததது. டெஸ்ட் மேட்ச்கமெண்டரி கேட்டால் பேட்டரி காலியாகிவிடும் என்று பெரும்பாலானவர்கள் வீட்டில் தடையுத்தரவு போடப்பட்டிருக்கும். ஆகையினால், டிரான்ஸிஸ்டரை ஒரு வீட்டிலிருந்தும்,ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தலா ஒரு பேட்டரியும் கொண்டு வந்து திண்ணையில் வட்டமாக உட்கார்ந்து வர்ணனை கேட்ட காலம் இருக்கிறது. சில சமயங்களில் பேட்டரி நிவாரண நிதிவசூலித்து கிஷோர் பிமானியின் ஆங்கிலப் புலமையையும் சுஷில் ஜோஷியின் பிளேடு ஹிந்தியையும் கேட்டு பிறவிப்பயனை அடைந்ததும் உண்டு. கரியடுப்பில் கத்திரிக்காய்சுடுவதுபோல சுட்டாலும் ஹிந்தி தெரியாத பாவத்தால், 'அகலி பால்' என்றால் அடுத்த பந்து என்பது புரியாமல், UGLY BALL என்று புரிந்து கொண்டு குழம்பிய சோகமும் உண்டு.
வாராது வந்த மாமணிபோல, அப்போதுதான் சென்னை வானொலியில் தமிழில் வர்ணனை என்ற சங்கதி ஆரம்பித்தது. இப்போது சட்டென்று நினைவுபடுத்தி சொல்லமுடியவில்லை என்றாலும், ஓரிருவரைத் தவிர பெரும்பாலானவர்கள் கிரிக்கெட்டைத் தமிழ்ப்படுத்தி வானொலி கேட்பவர்களை நிறையவே படுத்தியதாகத்தான் சொல்ல வேண்டும்.உதாரணத்துக்கு....
சென்னையில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் கிறிஸ் தாவ்ரே என்பவர் யஷ்பால் சர்மாவின் கேட்சைக் கோட்டை விட்டு விட்டார்.அவ்வளவுதான் - தமிழ் வர்ணனையாளர்கள் பொங்கியெழுந்து தங்களது புலமையை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
'தாவ்ரே தவறி விட்டார்', 'தாவ்ரே தாவியும் பிடிக்கவில்லை', 'தாவ்ரே அந்த தவறே செய்திருக்கக் கூடாது' என்று தமிழிலேயே மொத்தி விட்டார்கள். அந்த தாவ்ரேக்கு மட்டும்தமிழ் தெரிந்திருந்தால், அவர் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார். அதே மேட்சில் விஸ்வநாத் சதம் அடித்ததும், 'ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்றபேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, இதுதான் சதம்' என்று பேண்ட் சட்டை போட்ட ஒரு பட்டினத்தார் வர்ணிக்க, இரவல் வாங்கிய டிரான்சிஸ்டரை இரக்கமில்லாமல் போட்டு உடைத்துவிடலாமா என்றெல்லாம் யோசித்ததுமுண்டு.
ஆனால், பின்னாளில் தமிழ் வர்ணனை என்பது மிகமிக மெருகேறி, வாசனைக்காக ஒரு சிட்டிகை ஆங்கிலம் தாளித்து படுசுவாரசியமாக்கப்பட்டு, எப்போது சென்னையில் டெஸ்ட்மேட்ச் நடக்கும் என்று சிவாஜி, எம்.ஜி.ஆர் பட ரேஞ்சுக்கு எதிர்பார்க்க வைத்ததை மறுக்க முடியாது.
வானொலி தவிர்த்துப் பார்த்தால், சினிமாக்களுக்கு முன்னால் முன்பெல்லாம் தவறாமல் காட்டப்பட்ட நியூஸ் ரீல்களில் கிரிக்கெட் மேட்சுகளை ஒரு சில நிமிடங்கள் ரத்தினச்சுருக்கமாகக் காட்டுவார்கள். இதைப் பார்ப்பதற்கென்றே ஓசியில் பார்த்தாலும் ஒன்பதுநாள் தலைமுழுக வேண்டிய பல உருப்படாத படங்களைப் பார்த்து, இடைவேளைக்கு முன்பேமதிலேறிக் குதித்துத் தப்பித்து வந்ததுமுண்டு.
டிவி பிரபலமாகத் தொடங்கியபோது அடியேன் காசியாபாத்துக்கு சென்று விட்டிருந்தேன். நேரு நகரில் நான் குடியிருந்த வீட்டுக்கு சொந்தக்காரர், தனது சகதர்மிணியை விடவும்அவரது பெல்டெக் டிவியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார். திங்கள் கிழமையானால், தூரதர்ஷனில் எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் 'சித்ரமாலா'வில் வரும் ஒரே ஒருதமிழ்ப் பாட்டுக்காக, 'நீலமலைத் திருடன்' போல ஒளிந்திருந்து அவர் வீட்டு வரவேற்பறைக்குள் எட்டிப் பார்த்த அனுபவமெல்லாம் நிறைய இருக்கின்றன. பல நாட்களில் தமிழ்ப் பாட்டேவராமலும், வந்தாலும் 'சாந்துப்பொட்டு கமகமக்க....','பக்கத்திலே கன்னிப்பெண்ணிருக்கு கண்பார்வை போடுதே சுருக்கு' போன்ற பெப்டிக் அல்சர் பாடல்களைப் போட்டு பிராணனைவாங்கியதுமுண்டு.
ஜூன் 26, 1983 அன்றுதான் ஒரு கிரிக்கெட் மேட்சை டிவியில் பார்த்தேன். நான் பார்த்த முகூர்த்தம் - இந்தியா உலகக்கோப்பையை வென்றது. அண்ணனின் சினேகிதர் வீட்டுக்கு ஓரிருகிலோ மீட்டர்கள் சைக்கிள் ரிக்ஷாவில் சாவகாசமாகப் போய், 'இதுதான் டிவியா?' என்று திறந்த வாயை மூடுவதற்குள் உத்திரப்பிரதேசத்தின் மின்வெட்டுப் பாரம்பரியம் அல்பசந்தோஷத்தையும் கெடுத்தது. நானும் என் சகோதரர்களும் அறைக்குத் திரும்பி, இந்தியா 183-க்கு சுருண்டு விட்டது என்பதை அறிந்தபோது, 'நல்ல வேளை, இந்த கண்றாவியைபார்த்திருந்தால் வயிற்றெரிச்சல்தான் மிஞ்சியிருக்கும்' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஜிலீர் என்று மின்சாரம் திரும்பியது. உடனே ஒரு தகவலும் வந்து சேர்ந்தது - கிரீனிட்ஜ்அவுட் ஆகி விட்டார். மீண்டும் அதே சைக்கிள் ரிக்ஷா - அதே டிவி - கபில் தேவ் விவியன் ரிச்சர்ட்ஸ் கேட்சைப் பிடித்ததையும், இந்தியா வென்றதையும், ஸ்ரீகாந்த் லார்ட்ஸ் மைதானத்துஉப்பரிகையில் குப்புகுப்பென்று புகைவிட்டதையும் கண்டு உய்தோம். இந்தியாவில் கிரிக்கெட் புரட்சி(?)க்கு வித்திட்ட அந்த வெற்றிக்குப் பிறகு, தூரதர்ஷன் மீது கிரிக்கெட்ஆட்டங்களின்போது மட்டும் கருங்குரங்கு ரசாயனம் சாப்பிட்டதுபோல காமம் அதிகப்படியாக சுரந்தது.
அதன்பிறகு, இந்தியக் கிரிக்கெட் சில சிகரங்களை எட்டியதை நேரலையில் பார்த்த புண்ணியம் வாய்த்தது. 85-ல் பென்சன் ஹெட்ஜஸ் சாம்பியன்ஷிப் வென்றது, காவஸ்கர் 10000ஓட்டங்களை மோட்டேராவில் கடந்தது, 87 உலகக்கோப்பை, இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச் 'டை'யில் முடிந்தது, ஷார்ஜாவில் கடைசிப் பந்தில் மியாந்தாத் சிக்சர் அடித்தது,இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்களை ஸ்ரீகாந்த் துவம்சம் செய்தது(அப்படியும் பெங்களூருவில் தோற்றது!).
இத்தனை இருந்தும், பி.பி.சி மற்றும் சேனல்-9 பார்த்துவிட்டு தூரதர்ஷனைப் பார்த்தபோது அடூர் கோபாலகிருஷ்ணனின் ஆர்ட் பிலிம் பார்ப்பதுபோல அலுப்பாகவே இருந்தது. அங்கேஅவர்கள் ரிச்சி பெனாட், பில் லாவரி, டோனி க்ரேக் என்று நட்சத்திர வர்ணணையாளர்களை வைத்து பட்டைகிளப்பிக் கொண்டிருக்க, கானமயிலாட கண்டிருந்த தூரதர்ஷனும்எம்.எல்.ஜெய்சிம்ஹா, நவாப் பட்டோடி, பிஷன்சிங் பேடி இவர்களுடன் டாக்டர் நரோத்தம் பூரியையும் உட்காரவைத்து, இழவு வீட்டில் பத்தாவது நாள் பாசுரம் வாசிப்பதுபோலதண்டத்துக்கு மாரடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் கிரிக்கெட், டெஸ்ட் மேட்சுகளை ஓரங்கட்டியதுபோலவே, தனியார் அலைவரிசைகள் வந்து தூரதர்ஷனை தூரமாக்கி கொல்லைப்புறத்தில் குந்த வைத்தன. ஸ்டார்ஸ்போர்ட்ஸ், இ.எஸ்.பி.என் , சோனி போன்ற சேனல்கள் வந்தபிறகு, தூரதர்ஷன் என்பது 'டிஸ்கவரி ஆப் இந்தியா' பார்ப்பதற்கோ அல்லது 'திருவையாறு ஆராதனை' பார்ப்பதற்கோமட்டுமே பயன்படத் தொடங்கியது.
சேனல்-9 ஒளிபரப்புகளின்போது, வண்ண வண்ண உடையணிந்து வீரர்கள் விளையாடுவது எம்.ஜி.ஆர். படங்களில் வரும் கனவுக்காட்சிகளைப் போல கண்ணுக்கு இதமாக இருந்தன.அவர்களின் பிட்ச் ரிப்போர்ட், வெதர் ரிப்போர்ட் ஆகியவற்றை முதலில் பார்த்தபோது 'இவர்கள் என்ன விளையாடப் போகிறார்களா, வத்தல் காயப் போடுகிறார்களா?' என்றகுழந்தைத்தனமான சந்தேகம் எழுந்தாலும், கிரிக்கெட் என்பது பேட்டிங், பௌலிங் தவிர்த்தும் பல விஷயங்களை அடக்கியது என்பதை என்போன்ற மரமண்டைகளுக்குப் புரிய வைத்தது.
ஒவ்வொரு உலகக்கோப்பையின் போதும், ஒளிபரப்பில் ஏதாவது ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புதிய தொழில் நுட்பம் கையாளப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் மிகவும்அண்மையாகத் தெரிய ஆரம்பித்தனர். 'பாமாலிவ் தா ஜவாப் நஹீன்' என்று பல்லைக் காட்டிப் பயமுறுத்திய கபில் தேவ் விளம்பரங்கள் எல்லாம் காணாமல்போய், சொகுசுக்காரிலிருந்துசொக்கலால் ராம்சேட் பீடி வரைக்கும் கிரிக்கெட் வீரர்கள் விளம்பரப்படுத்த ஆரம்பித்தனர். இவான் லென்டல், போரிஸ் பெக்கர் ஆகியோரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு சச்சின்போன்றவர்கள் விளம்பரத்தில் காசை அள்ளி அள்ளி அசர வைத்தார்கள்.
‘என்ன இது ரொம்ப ஆணாதிக்கமாக இருக்கிறதே!’ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒளிபரப்பில் அழகானபெண்களை, 'பேசிக் இன்ஸ்டின்க்ட்' ஷரன் ஸ்டோன் போல காலுக்கு மேல் கால் போட்டு உட்கார வைத்தார்கள். மந்திரா பேடி புடவை கட்டியிருக்கிறாரா இல்லையா என்றுபார்வையாளர்களைப் பட்டிமன்றம் பேச வைத்தார்கள். குளித்துவிட்டுத் தலை துவட்டாத மாடல்கள் கையில் மைக்குடன் மைதானத்தை சுற்றி சுற்றி வந்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கோடிக்கணக்கான கண்களை குளிர வைத்தார்கள். ஷர்மிளா டாகூரோடு வழக்கொழிந்துபோனதாகக் கருதப்பட்ட கிரிக்கெட் வீரர்- நடிகை காதல் கதைகள் மீண்டும்புதுப்பிக்கப்பட்டன. எல்லா ஆட்டங்களிலும் ஏதோ ஒரு வீரரின் யாரோ ஒரு நடிகைக்காதலி கருப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு, சூயிங் கம் மென்றபடி சம்பிரதாயமாக உட்காரத்தொடங்கி விட்டார்கள்.
பேஸ்புக், ட்விட்டர், வாட்சப்புகளில் இளம்பெண்கள் கிரிக்கெட் வீரர்களை 'என் செல்லக்குட்டி, பொம்முக்குட்டி' என்றெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு கருத்து சுதந்திரத்தைக் கண்ணும்கருத்துமாய் காப்பாற்றி வருகிறார்கள். கிரிக்கெட் மேட்சுக்காக எண்ணிலடங்கா பாட்டிகளும் தாத்தாக்களும் லீவு அப்ளிகேஷன்களில் சாகடிக்கப்பட்டனர். ஜனாதிபதிகளும் பிரதமமந்திரிகளும் கிரிக்கெட்டில் ஜெயித்தால், வாழ்த்து செய்தி சொல்வதை எழுதப்படாத விதியாக மாற்றினார்கள். கிரிக்கெட் வீரர்களும் தங்களது தோற்றம் குறித்து அதிகம் கவலைப்பட்டு,நல்லாயிருக்கிற மண்டைகளை பூந்திக்கரண்டி போலக் கொத்திக் கொண்டு புளகாங்கிதம் அடைகின்றனர்.
இவை எல்லாவற்றையும் பதிவு செய்தாயிற்று - தொலைக்காட்சிக்கு நன்றி. நேற்று லாஹூரில், பாகிஸ்தான் தோற்ற கோபத்தில் டிவியைப் போட்டு உடைத்தது வரைக்கும் பதிவுசெய்தாயிற்று.
உண்மைதான், டிவியும் கிரிக்கெட்டும் நிறையவே மாறி விட்டது. ஆனால், இன்னும் டிவியை உடைக்கிற பாகிஸ்தானும், இன்னும் மின்வெட்டுக்கு இரையாகிற இந்தியாவும் தான்நிறைய மாற வேண்டியிருக்கிறதோ என்று தோன்றுகிறது.
ஆர்.வேணுகோபாலன்