Sunday, December 25, 2011

புதிய எதிரிகள்

9-மார்ச் '98... முதன் முதலாக நான் கிரிக்கெட் மைதானம் சென்று சர்வதேச போட்டி ஒன்றை பார்த்தது அன்றுதான். அது ஆஸ்திரேலியா இந்தியா வந்திருந்த போது சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி. மார்க் டெய்லர் தலைமையில் மெக்ராத் இல்லாத அணி இந்தியா வந்தது. ஷேன் வார்னே மற்றும் சச்சின் உச்சத்தில் இருந்த காலம். இருவைரையும் மையப் படுத்தியே அத்தொடர் பேசப்பட்டது. அடுத்த பத்தாண்டுக்கான புதிய cricket-rivalry-க்கு வித்திட்டதும் அத்தொடர்தான் என்பதும் என் எண்ணம்.

நான் சென்றிருந்த அன்று (நான்காவது நாள்) சித்துவும், சச்சினும் ஷேன் வார்னேக்கு இந்தியா ஆடுகளங்கள் பற்றி படம் வரைந்து பாகம் குறித்து விளக்கினார்கள். ஷேன் வார்னே ஒவ்வொரு ஓவரும் வீசிவிட்டு பவுண்டரி பக்கம் ஃபீல்டிங் செய்ய வரும்போதெல்லாம் சத்தம் போட்டு நாங்கள் கேலி செய்வோம். அதற்கு அவர் சிரித்து கொண்டே நமது ஊர் முறைப்படி சிறிது குனிந்து கயெடுத்து கும்பிட்டு காட்டுவார். எங்களுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்த்த ஒரு ஆஸி தம்பதிகள் கடைசியில்(வேறு வழியில்லாமல்) எங்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். இப்படியும் சொல்லலாம்... அதாவது அன்றைய சச்சின் மற்றும் சித்துவின் ஆட்டம் ஆஸ்திரேலியர்களுக்கு கும்பிடவும் குத்தாட்டம் போடவும் கற்று கொடுத்ததென்று. மொத்தத்தில் அன்று முதன் முதலாக மைதானத்தில் கிரிக்கெட் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அந்த போட்டியில் சச்சின் நூறு மற்றும் சித்து & அசார் ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அசாரின் அற்புத சதத்தால் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது.

அது.... இந்தியா- பாக் ஆட்டங்கள் அரசியல் சிக்கல்காளால் மங்கி போயிருந்த காலம். ஆஸி-இங்கிலாந்து போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மிகுந்த ஆளுமையாலும் இங்கிலாந்து அணியின் வீழ்ச்சியாலும் சோர்வுற்றிருந்த காலம். cricket-rivalry குறைந்திருந்த காலம். அப்படிபட்ட நேரத்தில் தான் வார்னே-சச்சின் tag-உடன் இந்த புதிய ரைவல்ரி தொடங்கியது.இந்த புதிய பகைமை வளர உதவியது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தலைமை மாற்றங்கள் தான் . Aggressive ஆளுமை கொண்ட இருவர் இரு அணிகளுக்கும் தலைவர்களாயினர். கங்குலியும் ஸ்டீவ் வாக்கும் கேப்டானாயினர். இருவருமே எனக்கு பிடித்த வீரர்கள். இருவரின் வீம்பு கலந்த வெறித்தனம் இரு அணிகளுக்குள்ளேயும் கிரிக்கெட் - பகைமையை பெட்ரோல் ஊற்றி வளர்த்தது. இந்திய-பாக், ஆஷஸ் போட்டிகளை விட மிகவும் விறுவிறுப்பாக இரு அணிகளும் மோதும் போட்டிகள் இருந்தன. ஒரு பக்க ஆட்டங்களாகவோ/தொடராகவோ இல்லாமல் மாறி மாறி இரு அணிகளும் வெற்றி பெற்றன.

இந்தியாவின் கடந்த மூன்று ஆஸ்திரேலியா சுற்றுப்பயண தொடர்களில், முன்னெப்போதுமில்லாத அளவில் இந்தியாவின் ஆட்டங்கள் முன்னேறி இருந்தது. அதுபோல ஆஸ்திரேலியாவும் முப்பது வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் தொடரை வென்றது(Final frontier).

இந்த கால கட்டங்களில், நடந்த காண்ட்ரோவர்சிகளுக்கும் பஞ்சமில்லை. கங்குலி-வாக் டாஸ் பிரச்சனை, பக்னரின் சொதப்பல் தீர்ப்புகள், பாஜி-சைமண்ட்ஸ் வசவுகள்... எல்லாம் சுவராஷ்யங்களை கூட்டின.

இந்த தொடரையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்து காதிருக்கிறேன். தொடரை வெல்ல  முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு இந்தியாவுக்கு   இருப்பதாக தெரிகிறது. கண்டவர்களும் எளிதில் ஆஸ்திரேலியாவை வென்று வருகிறார்கள். ஆனால்... எதிரிக்கேற்ப ஆடுவதுதான் இந்தியாவின் தனித்தன்மையே. பலமில்லாத ஆஸ்திரேலிவுடன் இவர்களும் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து சொதப்பிவிட்டால்???  அடிபட்டு வெறியுடன் தனது ஆளுமையை மீட்டெடுக்க ஒரு கிழட்டு ஆஸி சிங்கம் வேட்டைக்கு காத்திருக்கிறது.

பார்க்கலாம்... ஆஸ்திரேலியா தனது பலத்தை மீண்டும் பெற்று ஒரு புதிய அத்தியாத்தை தொடங்குமா? ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் தொடர் வெற்றியை இந்தியா பெறுமா?

Saturday, December 24, 2011

ஆஸ்திரேலியப் போர்

இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா சென்றாலும் அப்போது ஏதேனும் வாய்ச்சவடால்கள் நடக்கும். அதற்குத் தக்க பதிலடியும் நம் மக்கள் தருவார்கள். ஆனால் பேட்டிகளின் வாய்ச்சவடால்கள் போட்டிகளில் எதிரொலிக்கும்போது நமது அணியினர் தோற்றுவிட்டு வருவார்கள்.

ஆஸ்திரேலிய அணியினர் இந்த வாய்ச்சவடால்களை விடும்போதெல்லாம் அவர்களுக்கு பக்க பலமாக ஷான் வார்ன், மெக் க்ராத் என்ற நட்சத்திரங்கும், ஸ்டீவ் வாக் என்ற விண்வெளி மண்டலமும் உடன் இருக்கும். அதற்கேற்ப எல்லாம் நடந்தது.

ஆனால் இன்று... ??

க்ளார்க் என்ற குமாஸ்தா பழங்கால குமாஸ்தாக்களைப் போல, காலையில் எழும்பி, குளித்து அலுவலகம் சென்று பெஞ்சைத் தேய்த்து, இரவு உண்டு உறங்கி வாழ்ந்ததைப் போலவே வாழ்கிறாரோ என்றே தோன்றுகிறது.

அவரிடம் துடிப்பான தலைமைப் பண்பை ஒரு சில போட்டிகள் தவிர்த்து பெரும்பாலும் பார்த்ததில்லை.

பிராட் ஹாட்டின் - அணியின் துணைத் தலைவர்... டெஸ்ட் போட்டிகளில் 2000ம் ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 2500 ரன்களும் எடுத்திருந்தாலும் 34 வயதைக் கடந்து வீறுநடை போடுகிறார். கில்கிறிஸ்ட் இடத்தில் ப்ராட் ஹாட்டினை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

மைக்கேல் ஹஸ்ஸி - கொஞ்சம் பயப்பட வேண்டிய ஆள். சொன்னா மாதிரி இவரு நின்னு காட்டினாரு...

டேவிட் வார்னர் - அதிரடி சரவெடி. இந்திய அணியில் சேவாக் போல...இவரை ஆட்டமிழக்கச் செய்தாலே டெஸ்ட் போட்டி ஸ்டேட்டஸ் வந்துவிடும். அது 20-20ஆக இருந்தாலும் கூட :)

கடைசியாக ஆருயிர் அண்ணன் - ஜாகிர்கானின் அன்பு நண்பர். பேர் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. :) இந்த ஆளும் ரெண்டு இன்னிங்க்ஸிலும் 60 ரன் எடுத்தாரு...


இவரு ஏன் ஆஸ்திரேலிய அணியில ஆடணும்னு ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளே பேசினப்போ நம்ம தங்கத் தலைவர் ட்ராவிட் தான் இவரு ஆடியே தீரணும்னு சப்போர்ட் பண்ணி இருக்கார். இதில பெரிய விசயம் என்னன்னா ட்ராவிட் மாதிரி ஸ்டைலிஷ் ஷாட் செலக்சன் வச்சிருந்தாலும் பாண்டிங்க் கிட்ட பிடிக்காத விசயம் மண்டைக்கனம்.


இப்படில்லாம் முதல் போட்டிக்கு முன்ன எழுதி வச்சிருந்தேன். ஆனா செமையா ஆப்படிச்சாங்க... நம்ம பேட்ஸ்மென்கள்...

இன்னும் சிலர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுறாங்க. அவங்க யாருன்னு பேரைக் கூட முழுசா கேள்விப்பட்டதில்ல..

இவங்க மட்டும் தான் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுறாங்கன்னு நினைச்சா அது ரொம்ப தப்பு.

எங்க அண்ணன் சச்சின் டெண்டுல்கர் கூட ஆஸ்திரேலிய அணிக்காகத்தான் ஆடுவார். அதே மாதிரி இப்பல்லாம் தோனி டீம்ல என்ன செய்றாருன்னே அவருக்குத் தெரியல... கோட்ச் மாதிரி டைரக்ட் பண்றதுக்கு எதுக்கு ஒரு விக்கட் கீப்பர்/பேட்ஸ்மென் ஸ்லாட்டு வேஸ்டாகுதுன்னு கேள்வி எழாமல் இல்லை. அடுத்த போட்டிலயாவது ஜெயிச்சி மானத்தைக் காப்பாத்துங்க மக்கா....

நடக்கும் என்பார்...ரெண்டு அணி வீரர்கள் பட்டியலும் அறிவிச்சாச்சு. கபில் தேவ், இயன் சேப்பல் முதற்கொண்டு இரு நாட்டு முன்னாள்களும் இந்தியாவுக்கு இந்த முறை தொடரை வெல்ல நல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லியாச்சு. ஆரம்பிக்குது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 26ம் தேதி எப்போதும் உள்ள பரபரப்புடன், யூகங்களுடனும், தொடருக்கு முந்தைய வாய்ச்சவடால்களுடனும். இந்திய அணி வலுவாக இருப்பதாக பரவலாக பேச ஆரம்பிச்சாச்சு. நாம எப்பவுமே கண்ணாடியப் பாத்து முகத்த துடைச்சிக்கிறது கிடையாது. அடுத்தவன்கிட்ட மச்சி! மூஞ்சில ஒட்டியிருந்த தூசி போயிருச்சான்னு கேட்கிற ஆளுங்க. நாம பலமா இருக்கோமோ இல்லையோ ஆஸி பலமா இல்ல. அப்போ நமக்கு வாய்ப்பு பிரகாசமாத்தான் இருக்குன்னு சொல்லணும். கடந்து மூணு நாலு வருஷமா பாடிட்டு வர்ற அதே பல்லவி தான்னாலும் இந்த முறை கொஞ்சம் கோரஸ் கூடியிருக்கு. அப்படி இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா? இல்லை ஆஸி அணி பலம் நமக்கு புரியலையா? கொஞ்சமா அலசுவோம்.

ஆச்சு! ராகுல் டிராவிட் ப்ராட்மேன் விழாவுல பேசியாச்சு. (http://www.espncricinfo.com/ci/content/story/545355.html). ஆஸி இந்திய அணி ரெண்டு சகோதர அணிகள்... எங்களுக்குள்ள சண்டையில்ல நாங்க சமாதானமா போறோம்னு பப்ளிக்கா பச்சைக்கொடி (வெள்ளைக்கொடி) காட்டிட்டாரு டிராவிட். அதுக்கும் முன்னாடி ஒரு பேட்டியில, பாண்டிங்கிடம் இன்னும் கிரிக்கெட் பாக்கி இருக்கு, ஆனா அவரு இந்தியாவுக்கு எதிரா விளையாடாம அதக்கப்புறம் விளையாடணும்னு நான் ஆசைப்படறேன்னு ஒரு பயம் கலந்த பகடி. கபில் தேவ் சொல்றாரு பாண்டிங்கை கவனிச்சிகிட்டா இந்தியா செயிச்சிரலாம்னு. ஆக ஜெயிச்சிரலாம்னு வாய் சொன்னாலும் கண்ணுல நிம்மதி இல்ல, கால் ஆட ஆரம்பிச்சிருச்சு. ஏம்ப்பா இதே எதிர்த்து விளையாடற அணி பர்முடாவா இருந்தா சேவாக் எப்படி ஒரு ஆட்டத்துல இருநூறு அடிப்பாப்புலனு சொல்வோமா மாட்டோமா? எங்க போச்சு அந்த தைரியம்.. அந்த நம்பிக்கை? ஏனா நாம அவ்வளவு தெளிவு கிடையாது. இங்கிலாந்துல வாங்கின அடியோட வீக்கம் குறைஞ்சிடுச்சு, ஆனா அடிவாங்கின இடம் கருத்துப்போயி இருக்கே இன்னும். அதுக்கும் மேல இன்னும் ஆஸி மேல பயம் இருக்கு. க்ளார்க் இருக்கான், பாண்டிங் இருக்க்கான், ஹஸ்ஸி இருக்கான், இது போதாதுன்னு பயபுள்ளக இன்னும் மூணு நாலு புது ஆட்கள கூட்டிட்டு வந்திருக்காங்க. புதுசுங்க என்ன செய்யும்னு சொல்லவே முடியாது. மூணு புது பவுலர்கள்னா சச்சின் மூணு மாட்ச் காலி அப்படின்னு இப்போவே கணக்கு போட ஆரம்பிக்கிறோம். அப்போ இந்தியாவுக்கு தொடரை வெல்ல வாய்ப்பு அதிகம் இருக்குன்னு ஏன் சொல்லணும்? ஆங் அங்க தான் நாம சாணக்கியர்கள்னு நிரூபிக்கிறோம். டேய் இந்த பாரு... நீ பேசுவேன்னு எனக்கு தெரியும்... உனக்கு வாய் நீளம்... ஆனா நாங்களும் இப்போ பேச ஆரம்பிச்சிட்டோம்... அதனால அடக்கி வாசி... அப்படின்னு மறைமுக அறைகூவல் இது.


சமீப காலமா ஆஸி அணில சில முக்கிய மாற்றங்கள் நடந்திட்டிருக்கு. பாண்டிங், ஹஸ்ஸி ரெண்டு பேருக்கும் எதிரா அதிகமா சத்தம் கேட்க ஆரம்பிச்சிருக்கு. பாண்டிங் கொஞ்சம் சுதாரிச்சிட்டாரு ஆனா ஹஸ்ஸியோட மூட் என்னான்னு இன்னும் தெரியல. ஆனா இவங்க ரெண்டு பேரும் இந்தியாவுக்கு இந்த தொடர்ல முக்கிய சவாலா இருக்கப்போறாங்கங்கிறது மட்டும் உறுதி. அந்தக் கட்டத்துக்கு அவங்களோட சமீப கால ஃபார்மும், இந்திய அணிக்கெதிரான அவர்களோட அனுபவமும் பெரிய காரணம். இத கணக்குல வச்சுத்தான் கபில் தேவ்வும், டிராவிட்டும் கவனமா எதுக்கும் பாண்டிங் மேல ஒரு கண் இருக்கட்டும்னு ஆரம்பத்திலேயே ஒரு க்னாவ வச்சிட்டாங்க. அது சரி விஷயம் தெரிஞ்சவன் கவனமா இருப்பான்.

புதுசா மிச்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் பாட்டின்ஸன், கோவன், நேத்தன் லையான்னு ஒரு பட்டாளம் வந்திருக்கு (முதல் டெஸ்ட் அணி). இவங்கள்ல்லாம் யாரு, எப்படி, எவனவன் ஆல்-இன்-ஆல் அழகுராஜா என்பது போன்ற விவரங்கள இப்போ நம்மால சொல்ல முடியாது. ஸ்டார்க், பாட்டின்ஸன் பவுலர்கள், லையான் சுமாரா பேட்டிங் பிடிப்பாரு, கோவன் ஓப்பனர்னு சொல்லலாம். ஆனா பாருங்க மிச்சல் ஜான்சன்கிட்ட ரெண்டு மாட்ச் அடிவாங்கின ஆட்கள் தான் நாம். (அப்பாடா அந்தப்பய இப்போ இல்ல! சந்தோசம்!!) அதனால புதுசுங்கள பத்தி இந்தியா சார்புல ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நிச்சயமா சொல்லலாம்னா, சச்சின் புது ஆளுங்க கிட்ட தன்னோட விக்கெட்ட பறிகொடுப்பாருன்னு உறுதியா சொல்லலாம். அதுல இந்த பாட்டின்ஸன் கிலி கிளப்புற பயலாத்தான் இருக்கான். ரெண்டு மாட்ச்ல பதினாலு விக்கெட் எடுத்திருக்கான். 21 வயசு தான் ஆகுது... சின்னப் பய... இளங்கன்று பயமறியாது சரி... ஆனா கொம்பு முளைக்க முன்னாடியே முட்ட வருதே? கவனமா இருக்கணும்!

அப்புறம் மட்டை நாயகர்கள்... டேவிட் வார்னர்... இன்னிக்கு தேதியில சேவாக் ரஜினிகாந்துனா, இவரு ஜாக்கி சான். சேவாக் மாதிரியே தான் இவரும். அடிச்சா தரைல கால் படாம சும்மா சுத்தி சுத்தி அடிப்பாரு... ப்ராட் ஹட்டின், நிதானம் இல்லாம இன்னும் விளையாடிட்டிருக்கிற ஒரு ஆளு. ஆனா அப்பப்போ திறமையா ரன் சேர்த்திருக்காரு. அப்புறமா க்ளார்க். கேப்டன்ங்கிற பளுவோட சுத்திட்டிருக்கிற மனுசன். இன்னும் தன்னால பவுலிங் போட்டு விக்கெட் எடுக்க முடியும்னு நம்புற அளவுக்கு இந்தியா இவருக்கு விக்கெட்டுக்களை முக்கியமான சமயங்கள்ல வாரி வழங்கியிருக்கு. இவரும் ரன் தாகத்துல இருக்கார். ரிக்கி பாண்டிங்! ஏற்கனவே கொஞ்சமா பார்த்துட்டோம் ஆனாலும் இவரு இன்னும் பயம் காட்டிட்டுத்தான் இருக்காரு. அடிலெய்ட்ல ஒரு சதம் நிச்சயம்னு பட்சி சொல்லுது. சிட்னில இன்னொன்னு அடிச்சாருன்னா இந்தியாவோட தொடர் கனவு இல்லாமல் போக சாத்தியக்கூறுகள் அதிகம். அப்புறம் ஹஸ்ஸி, ஷான் மார்ஷ். இருவரும் அணியில இடத்த தக்க வைக்க போறாடிட்டு இருக்காங்க. அது பயமா இருக்கா இல்ல பக்குவமா இருக்கான்னு சொல்ல முடியாது. ஆனா ஹஸ்ஸி இந்தியாவுக்கு பெரிய தலைவலியைத் தரலாம்.

பவுலிங்கில் பீட்டர் சிடில், ஹில்ஃபென்ஹாஸ் இருவரும் பழைய முகங்கள். ஹில்ஃபென்ஹாஸ் சிட்னியில் அதிர்ச்சியைத் தரலாம். மற்றவர்கள் புது முகங்கள். பாட்டின்ஸன் எப்படியும் நான்கு (டெஸ்ட்) மேட்ச்சிலும் விளையாடுவார் எனத் தெரிகிறது. எப்படியும் ஒரு பத்து விக்கெட் எடுப்பது உறுதி.

இவ்வளவு தான் ஆஸி அணியிடம் இருக்கும் விஷயம். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை.
**********************

- கணேஷ்

Sunday, November 27, 2011

மேற்கிந்திய தீவுகளின் எமன்

1986ம் ஆண்டு இறுதிகளில் சென்னையில் ஏதோவொரு மூலையில் அவதரித்தவனுக்கு, திருமணம் செய்யக்கூட அவகாசம் கிடைக்காத அளவுக்கு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடப்போவேன் என்ற நம்பிக்கை நிச்சயம் இருந்திருக்காது.

ஆனால் அது நிகழ்ந்திருக்கிறது. அதை நிகழ்த்திக்காட்டி நம்முன் நிற்கிறான் ரவிச்சந்திரன் அஷ்வின்.


வெற்றி என்பது ஒரு இரவில் நிகழ்வதில்லை. காத்திருப்புகளும், அவமானங்களும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் மட்டுமே வெற்றிக்கனியை பெற்றுத்தரும்.

14 வயதிற்குட்பட்டோருக்கான தமிழக அணியில் விளையாடிய அஷ்வின் தன் இலக்கு கிரிக்கெட் தான் என நிர்ணயித்த பின் அவர் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

டிசம்பர் 9, 2006ம் ஆண்டு தன் 20ம் வயதில் முதல் தர கிரிக்கெட் ஆட தமிழக அணிக்காக களமிறங்கிய அஷ்வினுக்கு முதல் இன்னிங்க்ஸில் 4 விக்கட்களும் அடுத்த இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும் கிடைக்க ஆட்டம் ஆரம்பமானது.

கிடுகிடுவென முன்னேற ஆரம்பித்த அஷ்வின் முதல்தர கிரிக்கெட்டில் 13 முறை 5 விக்கட்களையும் அதற்கு மேலும் வீழ்த்தி இருக்கிறார். அதாவது 37 போட்டிகளில், 63 இன்னிங்க்ஸ்களில் 13 முறை என்பது கிட்டத்தட்ட 21%.

அதாவது ஒவ்வொரு 5 இன்னிங்க்ஸ்களிலும் 5 விக்கட்களோ அதற்கு மேலோ வீழ்த்தி இருக்கிறார் என்பதை நாம் மெச்சித்தான் ஆகவேண்டும்.

முதல் தர போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகள் என ஆடிக்கொண்டிருந்த அஷ்வினுக்கு அதிர்ஷ்ட தேவதையின் காற்று அடிக்கத் தொடங்கியது ஐபிஎல் ரூபத்தில்.

ஐபிஎல் என்ற அதிதீவிர வியாபார நோக்கிலான போட்டிகளில் பணம் மட்டும் விளையாடவில்லை. அஷ்வினும் விளையாடினார். ஐபிஎல் போட்டிகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட வீரர்களில் முக்கியமானவர் அஷ்வின் என்று சொல்லலாம்.

ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் ஆட்டத்தைத் துவக்குவதாகட்டும், ஆஃப் ப்ரேக் என்ற வகைப் பந்துகளை சிறப்பான முறையில் உபயோகிப்பதிலாகட்டும், இறுதி நேரங்களில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், அஷ்வின் விரைவாக உச்சங்களைத் தொட ஆரம்பித்தார்.

2010ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் அஷ்வினுக்கு மற்றுமொரு உச்சத்தை வழங்கியது. அதில் தொடர்நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஷ்வின், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களங்களில் தன் சுழல் பந்துகளில் எதிரி ஆட்டக்காரர்களைச் சிக்க வைத்து, டொர்னாடோ புயலாக வலம் வரும் அஷ்வினுக்குக் கிடைத்த எதிர்பாராத அதிர்ஷ்டம் இந்திய அணியில் இடம்.

ஒருநாள் போட்டிகளுக்கு முன்னதாக 20-20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தாலும், அணியில் நிரந்தர இடம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகியே நின்றது.

2011க்கான உலகக் கோப்பைக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஹர்பஜன் சிங்கின் மூலமாக விதி விளையாடியது. எப்போதாவது ஓய்வு வேண்டுமென்றால் மட்டும் விளையாட பணிக்கப்பட்ட அஷ்வினுக்கு வாய்ப்புகளை தக்க வைக்கப் பழக்கமிருந்தபடியால், விரைவிலேயே ஒருநாள் போட்டிக்கான அணியில் நிரந்தர இடம் பெற்றார்.

டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு கடினமான போட்டி இருந்த போதிலும், தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 9 விக்கட்களை முதல் போட்டியிலேயே வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்திய அணியில் தான் கலந்துகொண்ட முதல் போட்டியில் அதிக விக்கட்கள் வீழ்த்தியவர்களில் இரண்டாம் இடமும் பெற்றார் அஷ்வின்.

திருமணம் என்பது எத்தனை முக்கியமான ஒரு வைபவம் ஒவ்வொருவருக்கும். அந்தத் திருமணத்தையே அவசரம் அவசரமாக நடத்திக்கொண்டு அணிக்காக ஓடிய தமிழ் மகன் அஷ்வினை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் தனக்கு பேட்டிங்கும் தெரியும் என நிரூபித்தார் அஷ்வின்.... 100 ஓட்டங்கள் எடுக்க இயலாமல் சச்சின் அவுட்டாக அதே இன்னிங்க்ஸில் 103 ஓட்டங்கள் எடுத்தார் அஷ்வின்.

சச்சினுடன் அஷ்வினை ஒப்பிடுவது என்பது கூடாது என்றாலும் அந்த 100 ஓட்டங்களின் மூலம் நாம் மேற்கிந்திய அணிக்கெதிரான ஓட்ட வித்தியாசங்களைப் பெருமளவில் குறைக்க முடிந்தது என்றால் மிகையல்ல.

மொத்தமாக இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடர் தான் அஷ்வினுக்கு நான் இந்த தலைப்பைக் கொடுக்க காரணமானது.

மூன்று போட்டிகள் விளையாடி, அதில் இரண்டில் ஆட்டநாயகனாகத் தேர்வாகி, தொடர்நாயகனாகவும் வென்ற அஷ்வினுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

ஆஸ்திரேலியாவுக்கெதிரான அணியிலும் அஷ்வின் இடம்பெற்றிருக்கிறார். அங்கே தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும். அது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அங்கிருந்து உலகை வீழ்த்தியவர் தான் ஷேன் வார்னே.

இதே போன்ற விடாமுயற்சியும், வெற்றியை ருசிபார்க்கும் வெறியும் இருந்தால் அஷ்வின் இன்னும் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்குத் தருவார் என நம்பலாம்.

வெல்டன் & ஆல் தி பெஸ்ட் அஷ்வின்.

Saturday, August 20, 2011

இந்தியாவின் கனவு டெஸ்ட் அணி

மக்கா... எல்லாரும் நல்லா இருக்கீங்களா??

ரொம்ப நாள் ஆச்சு.. ஏதாச்சும் நாரதர் கலகம் பண்ணி.

இப்ப எனக்குப் பிடிச்ச இந்திய டெஸ்டின் கனவு அணியைச் சொல்லப் போறேன்.

இதுல ஒவ்வொருத்தர் ஆட்டமும் பெஸ்ட்னு சொல்ல முடியாட்டியும் அவங்க இருந்தா இன்னைக்கு இங்கிலாந்தில் போராடும் மக்களுக்கு உதவியா இருந்திருக்கும்.

என்னோட கனவு அணி:

சுனில் கவாஸ்கர் & வீரேந்தர் சேவக் - ஓபனிங்

சேவக் அக்ரசன் ஆப்போசிட் டீமுக்கு எப்பவும் பயம் தரும். கவாஸ்கரை நம்பி பெட் கட்டலாம்... இந்த பாலை அடிக்க மாட்டாருன்னு.. அந்த ஸ்டபிலிட்டி நம்ம ஓபனிங் காம்பினேசன்ல யாரும் இன்னும் தரல. ஒரே மேட்ச்ல கம்பீர் அந்த எபிலிட்டிய காட்டினார். நியூசிலாந்து மேட்ச்... அது மாதிரி இன்னும் இன்னொரு பெர்ஃபார்மன்ஸ் தரல...

ராகுல் ட்ராவிட் - ஒன் டவுன்

மனுசன் ராட்சசன்... க்ரைண்டிங் த ஆப்போசிசன்னு சொன்னா அண்ணன் தான்.

விவிஎஸ் லக்‌ஷ்மண் - செகண்ட் டவுன்

இந்த ஆளையும் ட்ராவிட்டையும் நம்பி அடுத்து இறங்க வேண்டிய ஆள் ரெஸ்ட் ரூம்ல தூங்கலாம்.. ஆனா விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு முக்கியமான பிரச்சினை, ஹி நீட்ஸ் ப்ரஷ்ஷர்..

குண்டப்பா விஸ்வநாத் - அடுத்த டவுன்

அருமையான ப்ளேயர்... அழகா, எலிகண்டா ஸ்ட்ரோக் ஆடுவார்.

திலிப் வெங்சர்க்கார் (அ) மொஹிந்தர் அமர்நாத்

சூப்பரான ப்ளேயர். கன்சிஸ்டண்டா ஆடுவார்

கபில்தேவ் (கேப்டன்) - அருமையான ஆல்ரவுண்டர் என்பதே இந்த பொசிசனுக்கு போதும். கேப்டன் பதவி கொடுத்ததுக்கு முக்கிய காரணம் மனுசன் ஒன்னுக்கும் ஒதவாத டீமையே வேர்ல்டு கப் வரை கொண்டு போனவர்.

கிர்மானி - விக்கட் கீப்பர் - யாராவது இதை அப்போஸ் பண்ணீங்கன்னு வச்சுக்கங்க... கொன்னுட்டேன் உங்களை..

ஜாகிர்கான் & கும்ப்ளே - ரெண்டு விக்கட் டேக்கிங் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்ஸ் :)))

ஹர்பஜனைப் பவுலரா போடலாம்னா பயமா இருக்கு...

பிஷன் சிங் பேடி - இவரை கடைசி ஆளா போடலாம். 266 விக்கட் எடுத்திருக்காப்புல...

ட்வெல்த் மேனா வேணும்னா சச்சினை சேர்த்துக்கலாம்.

Wednesday, August 10, 2011

இந்தியாவின் எழுச்சி

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட்டுகளை இழந்திருக்கிறது. 10ம் தேதி நடந்த மூன்றாம் டெஸ்ட்டில் இந்தியா இங்கிலாந்தை 1 இன்னிங்க்ஸ் மற்றும் 245 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சரித்திரம் படைத்தது.

இந்தியாவின் எழுச்சிக்கான மூல காரணமாக வீரேந்தர் சேவாக்கும் கவுதம் கம்பீரும் அமைந்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து, அமித் மிஸ்ரா மற்றும் ப்ரவீன் குமாரின் சிறப்பான பந்துவீச்சால் 80 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 630 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் சேவாக் 323 ரன்களும், கம்பீர் 227 ரன்களும், டிராவிட்டின் 56 ரன்களும் அடக்கம். சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பேட் செய்யவே இல்லை.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து தனது அனைத்து விக்கட்டுகளையும் 305 ரன்களுக்கு இழந்தது.

இந்தியாவின் இந்த வெற்றியை இந்தியா சுதந்திர தினத்துக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஆட்டநாயகனாக சேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் ஆகஸ்ட் 18 லண்டனில் நடப்பதாக இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் இந்த அபார வெற்றி ஆங்கிலேயர்களைக் கொதிப்படைய வைத்துள்ளதால் லண்டனில் மாபெரும் கலவரம் நடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள - உடான்ஸ் டிவியைப் பாருங்கள்.

Monday, May 30, 2011

கெய்ல், தோனி மற்றும் ஐபிஎல்

ஒரு ஆள் தனியா நின்னு ஒரு டீமோட தலையெழுத்த மாத்த முடியுமா? முடியும் என்பதற்கு இந்த ஐபிஎல் உதாரணம். அந்த ஒரு ஆள் கிரிஸ் கெய்ல். டீம் பெங்களூரு. கிரிக்கெட் ஒரு டீம் கேம். சில ஆட்டங்களின் வெற்றிகளை ஒரு தனி நபர் தீர்மானித்தாலும், தனி நபர் வெற்றி, அணியின் வெற்றியாக எல்லா நிகழ்வுகளிலும் சாத்தியமில்லை என்பதற்கும் இந்த ஐபிஎல் நல்ல உதாரணம். நல்ல டீமென்று ஆரம்பம் முதலே பாராட்டப்பட்ட சென்னை கோப்பையை வென்றிருக்கிறது. இறுதி போட்டியிலும் கெய்ல் விளையாடி பெங்களூருக்கு வெற்றி தேடித்தந்திருந்தால் இந்த ஐபிஎல்லை கெய்லின் ஐபிஎல்லென்றே சொல்லியிருக்கலாம். அது நடக்கவில்லை.

தனி நபருக்கென்று வழங்கப்படும் எந்த விருதும், தொடரில் தனி நபர் சாதனை என எதுவும் சென்னை அணியிடம் இல்லை. குழு விருதான, ஃபேர் ப்ளே விருதை வாங்கியிருக்கிறார்கள். கிரிக்கெட் டீம் கேம் என்றும். தோனி டீம் மேன் என்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. வெற்றி பெற்ற பின்பு புகழ்வது எளிதான காரியம். பல நேரங்களில் ஒரிரு வெற்றிகளிலேயே இந்தப் வெற்றிகளும் புகழாரங்களும் நின்று விடுவதும் உண்டு. ஆனால் அளப்பரிய வெற்றிகள் தொடர்ந்து கிடைக்கும் பொழுது, தோனி என்னும் பெயரை அவ்வளவு எளிதாக நம்மால் கடக்க முடியவில்லை. இந்தப் புகழும் போய்ச்சேரட்டும் தோனிக்கே. முடிந்தால் ஒரு விசில் போட்டு விட்டுப் போங்கள் கஷ்டப்பட்டு தமிழ் பேசறான்யா மனுஷன்.

வீரர்கள் ஏலத்தில், சென்னை முந்தைய ஐபிஎல்லில் அவர்களுக்காக விளையாடிய வீரர்களை ஓரளவிற்கு மறுபடியும் வாங்கிவிட்டனர். ஒரு வகையில் வீரர்கள் எல்லோரும் அவர்களுக்கான பொறுப்பை உணர்ந்திருந்தார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர்கள் ஒரு அணியாக எவ்வாறு செயல்பட ஆரம்பித்தார்கள் என்று. இதில் தோனியின் பங்கு எவ்வளவென்று தெரியவில்லை. ஆனால் பழைய வீரர்களை ஒரு அணியாக அவர்கள் பார்த்ததே தோனியின் வெற்றியென்று தான் சொல்ல வேண்டும். அவர்களை அவர்களின் பொறுப்பை உணரச்செய்ததே தோனியின் வெற்றி.

சென்னை மீண்டும் ஐபிஎல்லை வென்றிருக்கிறது. இனி மற்ற அணிகளும் இந்தத் தேர்வு முறையை செயல்படுத்தலாம். குழுவாக இயங்க ஆரம்பிக்கலாம். வலுவான அணியாக செயல்படுவதற்கு முயலலாம். வெல்பவர்கள் செய்வதும் அதையே தான். மற்றவர்களைத் தன் போல் மாற்ற முயல்கிறார்கள். அதனாலேயே அவர்கள் அதிகம் வெற்றிபெறுகிறார்கள். சென்னையின் இந்த வெற்றியும், தோனியின் இந்த வெற்றியும், அடுத்த ஐபிஎல்லுக்கான சரியான ஒரு களத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday, May 25, 2011

சென்னையில் கோடை மழை

உலகக் கோப்பை ஜெயிச்சதும், தொடர்ந்து ஐபிஎல் ஆரம்பிச்சதில எனக்கெல்லாம் உடன்பாடு இல்ல... அதும் இல்லாம சீரியல் மாதிரி மேட்ச நடந்துக்கிட்டே இருக்கவும் ரொம்ப போரடிச்சு மேட்ச் பாக்குறத விட்டுட்டேன்.

நேத்து முதல் இன்னிங்க்ஸ் கூட பார்க்கல... 176 ரன் அடிக்கணும் சென்னைன்னதும் சரிடாப்பா... அடுத்த மேட்ச் யாருகூட இருக்கும்னு கணக்கு போட்டிட்டு, கே டிவில படம் பார்த்திட்டு இருந்தேன்.

அப்பப்ப ஸ்கோர் மட்டும் பார்த்துட்டு இருக்கிறது...

ஹஸ்ஸி ரன் எடுக்காம அவுட். முரளி அவுட்சைட் த லைன் பிட்சான பால்ல எல்பின்னதும் மக்கா முடிஞ்சிடுச்சுடான்னு முடிவே பண்ணிட்டேன்.

அப்புறம் நம்ம அண்ணன் பத்ரிநாத் வந்ததும், ரவிசாஸ்திரி சொல்றாப்ல... மேன் ஃபார் ஆல் சீசன்னு... பத்ரி நல்லாத்தான் ஆடுறான்னாலும் அவன் சிக்ஸ் அடிக்க ட்ரை பண்ணா பால் இன்னர் சர்க்கிளைத் தாண்டி விழும். அத்தனை ஸ்ட்ரங்க்த் அவனுக்கு.... பரவாயில்லை... நேத்து நல்லா ஆடினான்.

அப்பப்ப ஃபோர் அடிச்சிட்டு இருந்தானுக... 7 ஓவருக்கு 28 ரன் ரெண்டு விக்கட்... அண்ணன் ஜாகிர் ஆடினதும், கெயில் ஆடுனதும் பார்த்தா எனக்கு கதி கலங்கிருச்சி...

அப்புறம் ரெய்னா அப்பப்ப காட்டின சிக்ஸரும், நார்மலான ஹைட்ல வந்த ஃபுல்டாஸ் பால்ல ரெய்னா அவுட்டாகி, அதை அம்பயர் நோ பால்னு சொன்னதும், இன்னைக்கு நாம ஜெயிச்சிடுவோம்ன்ற நம்பிக்கை தந்தது.

அப்புறம் பத்ரி அவுட்டானதும், தோனி அடிச்ச ஒரு சிக்ஸர், அப்புறம் மார்க்கல் ஆட்டம்லாம் நல்லா இருந்தது...

கடைசில ரெய்னான்னு ஒரு சின்னப் பையன் சிக்ஸ் அடிச்சு 50 போட்டுட்டு யாருகிட்டயோ பேட்டைக் காட்டி நான் யாருன்னு புரிஞ்சுக்கன்னு சொன்னான்... அனேகமா அது கோஹ்லியாத்தான் இருக்கணும்...

அசாதாரணமா ஜாகிரை, மிதுனையெல்லாம் துவைச்சு எடுத்து 177 ரன் எடுத்து பாலை வார்த்தானுக...

இனி சனிக்கிழமை தான் நமக்கு மேட்ச்... எவன் வரப் போறானோ...

சென்னைலயும் ரெய்னாவின் சிக்ஸர் மழை கோடை மழையா குளிர்ச்சி தரும்னு நம்பலாம்...

Wednesday, May 18, 2011

கெய்ல் ஸ்டார்ம்

ஐந்து அணிகளைப் பற்றிய பார்வையை போன இடுகையில் பார்த்தோம். மீதி ஐந்து அணிகளை இந்த இடுகையில் அலசுவோம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த மூன்று ஐபிஎல் போட்டித் தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறாத ஒரே அணி கொல்கத்தா. அதனால் இந்த முறை மனோஜ் திவாரியைத் தவிர மற்ற அத்தனை ஆட்டக்காரர்களையும் - வங்காளச் சிங்கம் தாதா கங்குலி உட்பட- மாற்றியது கொல்கத்தா. 2.4 மில்லியன் கொடுத்து கம்பீரையும், 2.1 மில்லியன் கொடுத்து யூசுஃப் பதானையும் வாங்கி அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு அணிகளில் ஒரு அணியாக இருக்கக் கூடிய வாய்ப்பை இன்னமும் தக்கவைத்திருக்கிறது கொல்கத்தா. ப்ரெட் லீ, இக்பால் அப்துல்லா, யூசுஃப் பதான், பாலாஜி ஆகியோர் பந்து வீச்சில் கலக்கி வருகிறார்கள். ஆனாலும், ஸ்டார் பவுலர் என்று ஒருவரும் இல்லாதது கொல்கத்தாவின் குறை. பேட்டிங்குக்கு காலிஸ், கம்பீர், மனோஜ் திவாரி, பதான் ஆகியோர் இருந்தாலும் கன்சிஸ்டண்டாக பெர்ஃபாம் செய்யக்கூடியவர்கள் இல்லாமல் தான் இருக்கிறார்கள். இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறினாலும் சேம்பியன்கள் ஆவார்களா என்பது சந்தேகமே.

மும்பை இண்டியன்ஸ்
கடந்த வருடத்தில் இருந்த அணியைப் பெரும்பாலும் தக்க வைத்துள்ளது மும்பை. ஆனாலும் ஜாகிர் கானின் இழப்பைப் பூர்த்தி செய்ய ஒரு பவுலர் இல்லாதது பெரும் குறையே. இந்த ஐபிஎல் தொடரில் லீடிங் விக்கெட் டேக்கர் லசித் மலிங்கா. சளைக்காமல் இவர் வீசும் யார்க்கர்கள் எதிரணி பேட்ஸ்மென்களை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்த அணிக்கு எதிராக ஆடுபவர்களுக்கு 20 ஓவர்களில்லை 16 ஓவர்கள்தான் என்று ஒரு முடிவோடு ஆடவேண்டியிருக்கிறது. ஆனாலும் லசித் மலிங்காவுக்குக் கம்பெனி கொடுக்க நல்ல பவுலர்கள் இல்லை. முனாஃப் பட்டேல் ஓரளவுக்குக் கை கொடுத்தாலும் ஜாகிர் இல்லாத குறை தெரிவது உண்மை. ஹர்பஜன் சிங் சென்னைக்கு எதிரான போட்டியில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற போட்டிகளில் மிக சாதாரணமாகவே அவர் பவுலிங் இருக்கிறது.

பேட்டிங் கடந்த இரண்டு ஆட்டங்களில் கை கொடுக்கவில்லை. இந்திய அணியோ மும்பை அணியோ சச்சின் அவுட்டானால் சைக்கிள் ஸ்டேண்ட் சைக்கிள்கள் போல மள மளவென சரிவது மாறாது போல. இரண்டு மோசமான தோல்விகளைத் தழுவியதால் அரையிறுதிக்கான இடம் உறுதிப்படப் படாமல் இருக்கிறது. பேட்டிங்குக்கு சச்சின், அம்பாட்டி ராயுடு, பொல்லார்ட், சைமண்ட்ஸ், ப்ளிஸ்ஸார்ட் போன்றோர் இருந்தாலும், கன்ஸிஸ்டன்ஸி இல்லை. கண்டிப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியவில்லை. கடந்த ஐபிஎல்லில் ஏற்படுத்திய தாக்கத்தை பொல்லார்ட் இன்னும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஃபைனலுக்குப் போனாலும் கோப்பை இவர்களுடையதாகிவிடும் என்ற நிச்சயம் இல்லை.

புனே வாரியர்ஸ்
A captain is as good as a team - என்று சொல்வார்கள். அதற்கு Exceptions உண்டு. இருக்கின்ற குறைந்த ரிசோர்ஸஸை சிறப்பாக உபயோகித்து சிறப்பான குழு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைத் தேடித்தருபவர்கள் இருக்கிறார்கள். வார்னே, தோனி, இப்போது கில்கிறிஸ்ட் என உதாரணங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஆனால் சிறந்த வீரர்கள் பலரை அணியில் கொண்டிருந்தாலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரே ஒருவர்தான் இருக்கிறார் - யுவராஜ் சிங். Best team on Paper வைத்துக் கொண்டு புள்ளி அட்டவணையில் கடைசியில் இருந்து இரண்டாமிடத்துக்குப் போயிருக்கும் அணி புனே. இதில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல நெஹ்ராவுக்குப் பதிலாக கங்குலியைக் கொண்டுவந்தனர். அதுவும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி புனே அணி மட்டுமே.

அடுத்த ஆண்டு மீண்டு வர வாழ்த்துகள். (வேற என்ன சொல்லமுடியும்?)

ராஜஸ்தான் ராயல்ஸ்
முதல் ஐபிஎல் தொடரில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை இல்லை. ஆரம்பத்தில் நம்பிக்கைக் கொடுக்கும் வண்ணம் ஆடினாலும், போகப் போக மற்ற ஆட்டங்களின் மோசமான ஆட்டத்தான் தோல்விகளைத் தழுவி இப்போது அரை இறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலையை எட்டியிருக்கிறது.

வார்னே இந்தத் தொடரோடு ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். ராஜஸ்தான் அணியைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வார்னேவுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த முறையும் ராஜஸ்தான் ஏலத்துக்குள் நுழையும் போதே மற்ற அணிகளை விட பாதித் தொகையையோடுதான் நுழைந்தது. அதிலும் வார்னேவையும் வாட்சனையும் ரீட்டேய்ன் செய்ததில் இன்னும் பாதித் தொகையை இழந்தது. இருக்கின்ற தொகையில் வாங்க முடிகின்ற ஆட்டக்காரர்களை வாங்கியிருந்தாலும் தொடரின் ஆரம்பத்தில் அமர்க்களமான வெற்றிகள் சில பெற்று நம்பிக்கையளித்தது. ராகுல் ட்ராவிட், ராஸ் டெய்லர், ஜோகன் போத்தா, வாட்ஸன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தாலும், அதிகம் தெரியாத உள்நாட்டு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தைக் காட்டினார்கள்.

ரிட்டயராகப் போகிற கடைசி காலத்தில் ஆர்.சி.ஏ செக்ரட்டரியைத் திட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் வார்னே. அடுத்தத் தொடரில் கோச்/ஆலோசகராக இருந்து மறுபடியும் ராஜஸ்தான் அணியை வளர்த்தெடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த வருடம் ராஜஸ்தானுக்கு விடை கொடுப்போம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஒரே அணி பெங்களூரு. ஆரம்பத்தில் ததிங்கிணத்தோம் போட்ட அணி, கிறிஸ் கெயில் என்ற சூறாவளி வந்ததும் தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஏழே ஆட்டங்களில் 32 சிக்ஸர்களை விளாசி 436 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக விளங்கியுள்ளார் கெயில்.

கெய்லைத் தொடர்ந்து அதிரடியாக ஆட கோஹ்லி, புஜாரா, சௌரவ் திவாரி, ஏ.பி டிவில்லியர்ஸ் போன்றோர் இருக்கிறார்கள். ஆக, பேட்டிங்க் மோசமாக இல்லை.பெங்களூருவுக்குப் பந்துவீச்சும் பலம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பலவீனமாக இல்லை என்று சொல்லலாம்.

நேற்று வரை சேம்பியன் பட்டத்துக்குப் போட்டி போடக்கூடிய அணியாக பெங்களூருவைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று பஞ்சாப் அணிக்கு எதிராகப் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து அப்படி ஒரு முடிவுக்கு வர தயக்கமாக இருக்கிறது. கெய்ல் சூறாவளியைத் தடுத்து நிறுத்திவிட்டால் பெங்களூருவும் சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிவிடலாம் என்பதையே இன்றையத் தோல்வி எடுத்துச் சொல்கிறது. பெங்களூரு இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கக் கூடாது.

ஒட்டுமொத்தமாக, பத்து அணிகளின் ஆட்டத்தைப் பார்ததன் மூலம் இந்த முறை சேம்பியன் பட்டத்தை சென்னை தக்க வைத்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகப் படுகிறது. பெங்களூருவும், பஞ்சாபும்(ஒரு வேளை அரையிறுதிக்குத் தகுதி பெற்றால்) சென்னைக்குச் சவாலாக இருக்கலாம். 

Thursday, May 12, 2011

சென்னை.. சென்னை.. சூப்பர் கிங்க்ஸ்....

ஐபிஎல் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருக்கிறது. அரையிறுதிக்குப் போகும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. இந்த நேரத்தில் ஆடுகளத்தில் இந்த வருட அணிகளின் பெர்ஃபாமன்ஸ் பற்றி கொஞ்சம் அலசலாம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ்
இதுவரை நடந்து முடிந்த மூன்று ஐபிஎல் தொடர்களிலும் கன்ஸிஸ்டண்டாக இருந்த அணி எது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சென்னையை நோக்கிக் கை காட்டலாம். மூன்று முறையும் செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்ற ஒரே அணி. இதில் ஒரு முறை ரன்னர் அப், இன்னொரு முறை சேம்பியன். வெற்றிகரமாக அணியின் பெரும்பாலான வீரர்களை ஏலத்தில் தக்க வைத்துக் கொண்ட சென்னை, இந்த முறையும் செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிடும் சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.

இதுவரை நடந்த 11 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது சென்னை. ஆனால் அந்த நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக முழுமையாக நடைபெறவில்லை. மீதி இரண்டு போட்டிகள் பால் வல்தாட்டி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் அதிசிறப்பான ஆட்டத்தால்/பந்து வீச்சால் தோல்வியைத் தழுவியது (இந்த இருவரும் இந்தப் போட்டிகளைத் தவிர வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது). மேலும், மற்ற அணிகளில் சூப்பர் பெர்ஃபாமர் ஒருத்தர் இருப்பது போல சென்னையில் ஒருவர் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் மொத்த டீமுமே பங்கெடுத்து வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளனர். அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் அள்ளிக் குவிக்கவில்லையென்றாலும், எதிரணியினரை ரன்கள் குவிக்காமல் தடுத்துவந்திருக்கின்றனர். சொந்த கிரவுண்டில் இன்னும் வீழ்த்தப்படாத ஒரே அணியாக சென்னை இருக்கிறது. சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லத் தகுதி படைத்த அணி என்று சென்னையச் சொல்லலாம்.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 3

டெக்கான் சார்ஜர்ஸ்
கடந்த மூன்று ஆண்டுகள் இருந்த அணி இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. சங்கக்கரா தலைமையில் 11 ஆட்டங்களில் மூன்றே வெற்றிகள் மட்டும் பெற்று புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தில் இருக்கிறது. பந்து வீச்சுக்கு டேல் ஸ்டெயின், அவருக்குக் கம்பெனி கொடுக்க இஷாந்த் சர்மா, டேனியல் கிறிஸ்டியன், சுழல் பந்துக்கு பிரக்யான் ஓஜா என இருந்தாலும், பேட்டிங்கில் சற்று வீக்காகவே இருக்கிறது இந்த அணி. ஹைதரபாத்தில் இதுவரை வெற்றியே பெறவில்லை என்ற வரலாற்றை ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியதன் மூலம் மாற்றியமைத்தது மட்டுமே இந்த புதிய அணியின் ஒரே சாதனை.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 10

டெல்லி டேர்டெவில்ஸ்
எல்லா அணிகளும் பலம் குறைந்த பழைய அணியை மாற்றி பலமிக்க புது அணியாக மாற்றிக் கொண்டிருந்த வேளையில் டெல்லி மட்டும் பலமான வீரர்களை விட்டுக் கொடுத்துவிட்டு சோதா அணியை உருவாக்கியிருக்கிறது. இர்ஃபான் பதானுக்கு 1.9 மில்லியன் எதற்குக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சினிமாவில் காட்டுவது போல யாரோ ஏற்றிவிட்டு இர்ஃபானை டெல்லி தலையில் கட்டிவிட்டார்கள் போல.

சேவாக் ஒற்றை ஆளாய்ப் போராடி நான்கில் மூன்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். இப்போது அவரும் தோள்பட்டைக் காயத்தின் காரணமாக தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப்பின் ஜேம்ஸ் ஹோப்ஸ் தலைமையேற்றிருக்கிறார். பெருமைக்காக மட்டுமே ஆட முடிகிற நிலையில்தான் டெல்லி இருக்கிறது.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 8

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்
இரண்டு முறை யுவராஜாலும், ஒரு முறை சங்கக்கராவாலும் தலைமையேற்கப்பட்ட பஞ்சாப் அணி இந்த முறை முற்றிலும் புதிய வடிவெடுத்து கில்கிறிஸ்ட் தலைமையில் இயங்குகிறது. சொல்லிக்கொள்ளும்படி பெரிய வீரர்கள் இல்லையென்றாலும், இருக்கின்ற வீரர்களை வைத்து வல்தாட்டி, பார்கவ் பட் போன்ற புது ஹீரோக்களை உருவாக்கியிருக்கிறார் கில்கிறிஸ்ட். பலம் வாய்ந்த அணிகளான சென்னையையும், மும்பையையும் வீழ்த்தி அதிர்ச்சியை அளித்தது பஞ்சாப். புள்ளி அட்டவணையில் 9வது இடத்தில் இருந்தாலும் இன்னும் நான்கு போட்டிகள் ஆட வேண்டியிருப்பதால் செமி ஃபைனலுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பஞ்சாப் முற்றிலும் இழந்துவிடவில்லை என்பது உண்மை.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 9

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
இந்த ஆண்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட அணி. ஜெயவர்த்தனே தலைமையில் 11 போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்று செமிஃபைனலுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இன்னமும் இழக்காமல் இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கட்டா, டெல்லி ஆகிய நான்கு மெட்ரோக்களையும் வீழ்த்திய பெருமை பெற்றிருக்கிறது இந்த அணி. முரளிதரன் போன்ற ஜாம்பவான்களையே பெஞ்சில் அமர்த்த வேண்டிய அளவுக்கு பவுலிங்குக்கு ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், வினய் குமார் போன்ற வீரர்கள் வைத்திருக்கிறது கொச்சி. அதிரடி பேட்டிங்குக்கு ப்ரெண்டன் மெக்கல்லம், ப்ராட் ஹோட்ஜ், ரவீந்திர ஜடேஜா போன்றோரைக் கொண்டிருக்கிறது. ஹோம் பிட்சை தங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்து வெற்றிகள் பெற நினைத்த வேளையில் கத்தியெடுத்தவன் கத்தியாலே சாவான் என்பது போல அந்த பிட்சினாலேயே டெக்கானிடம் சுருண்டது. கோமெஸ், பரமேஷ்வரன் போன்ற லோக்கல் டேலண்டுகள் வெளிவருவதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியே.

பாயிண்ட்ஸ் டேபிள் பொசிஷன்: 6

மீதி ஐந்து அணிகளைப் பற்றி நாளை பார்ப்போம்.

Posted by

முகிலன்.

Sunday, April 3, 2011

தோனி, நீ தெய்வ மச்சானடா!!!* நேற்றைய ஆட்டத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லும் நிலையில் இல்லை மனம். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கிறது.


* நான் கிரிக்கெட் பார்க்க துவங்கியது 87 உ.கோப்பை முதல்.... அன்று அரை-இறுதியில் அசாருத்தீன் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தவுடன் இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது முதல்... இந்த உ.கோப்பைக்கான எனது ஏக்கமும் தொடங்குகியது. ஒவ்வொரு உ.கோப்பைக்கும் அணியின் பலம் பலவீனம் பற்றியெல்லாம் கவலையில்லாமல் குருட்டுத்தனமாக நம்பினேன்.


* 96 உ. கோப்பை அரை இறுதி கல்லுரி விடுதியில் 200 நண்பர்களுடன் தாரை தப்பட்டை சூழ ஆட்டத்தை காண ஆரம்பித்த நான்... இந்தியாவின் 5 விக்கெட விழுந்தவுடன் தோல்வியை தாங்க இயலாமலும், ஏமாற்றத்தாலும் வீரர்களின் மேல் ஒரு வெறியான கோபத்தில் அறைக்குச் சென்று அங்கு ஒட்டியிருந்த சச்சின், அசாருத்தீன் மற்றும் மைக் டைசன்(பாவமரியாதவன்) கிழித்து நொறுக்கி .. ஒரு போர்வைக்குள் அழுகையுடன் முடங்கி போனேன். கல்கத்தாவே கலவரமானது, காம்ப்ளி அழுதது எதுவுமே நான் பார்க்கவில்லை.


* இப்படி ஒவ்வொரு முறையும் வாய்ப்பு நழுவும் போதும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.


* இப்படி எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. வென்ற போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம். என்னுடைய கல்லூரி விடுதி நாட்களும் நண்பர்களும் கண் முன் வந்து போயினர். அவர்களுடன் இந்த கணத்தை கொண்டாட முடியவில்லையே.


* போட்டி முடிந்து வீரர்கள் பலர் ஆனந்த கண்ணீர் வடித்தாலும் மனம் நெகிழ்ததே தவிர கண்ணீர் வரவில்லை. ஆனால், காலையில் காரில் அலுவலகம் வரும்போது 'சிறப்பு செய்தி தொகுப்பு (இன்றைக்கு நேற்றைய வெற்றி குறித்து மலையாள பண்பலையில் )' கேட்ட போது உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்னையும் அறியாமல் ஒரு வெறியில் "yessssssssss" என்று கீரிட்டு கத்தியே விட்டேன்.


* நான் ஏற்கனவே இங்கு சொன்னது போல யுவராஜ் ஜொலிக்கும் தொடர்கள் எப்போதும்(பெரும்பாலும்) இந்தியாவுக்கு சாதகமாகவே முடியும். அதுபோலவே உ.கொப்பையிலும் நடந்து விட்டது. சச்சின் மற்றும் அனைத்து வீரர்களும் (யாரப்பா அது ஸ்ரீசாந்துமான்னு கேக்குறது?) பங்களிப்பு செய்திருந்தாலும்.... தோனி, நீ தெய்வ மச்சானடா!!!

1996-2011


நேற்றைய மேட்சில் டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தவுடன் எனக்கு  1996 ஆம் வருடம் கல்கத்தாவில் நடந்த அரை இறுதிப் போட்டிதான் நினைவுக்கு வந்தது. அதில் இந்தியா டாஸ் வென்று  அவர்களை பேட் செய்ய அழைத்தது. அந்த உலகக் கோப்பையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜெயசூர்யா மற்றும் கலுவிதரனா இருவரும் முதல் இரண்டு ஓவர்களிலேயே ஆட்டம் இழக்க , இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் அரவிந்த டி சில்வா அற்புதமாக ஆடி 251 ரன்கள் சேர்க்க உதவினார். 

அதன்பின் அந்த ஸ்கோரை சேஸ் பண்ணத் துவங்கிய இந்தியா , சச்சின் ஆடிய வரை சமாளித்தது. அவர் அவுட் ஆகியவுடன் மளமளவென்று விக்கெட்களை இழக்கத்துவங்கி , பின் ரசிகர்களின் கோபத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கா வென்றதாக அறிவிக்கப்பட்டது. 


நேற்று அவர்கள் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தனர். இந்த உலகக் கோப்பையில் தரங்கா, தில்ஷன் இணை நன்றாகவே ஆடியுள்ளனர். ஆனால் நேற்று அவர்களால்  தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட இயலவில்லை. விரைவிலேயே இருவரும் அவுட் ஆனார்கள். பின் அப்பொழுது டி சில்வா ஆடியவாறு ஜெயவர்தனே ஆடத் துவங்கினார். கடைசி கட்டத்தில் நமது பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கும் வள்ளல்கள் ஆனார்கள். 


275 என்றக் கடினமான இலக்குடன் ஆடத் துவங்கிய இந்திய அணி, விரைவில் சேவாகையும், சச்சினையும் இழந்தது. அந்த சமயத்தில் பெரும்பாலானோர் மனதில் 1996 ம்,2003 ம் எட்டிப் பார்த்திருக்கும். ஆனால் , கம்பீர் ஒரு முனையில் கம்பீரமாக ஆட, மறுமுனையில் முதலில் கொஹ்லி பின் , கேப்டன் கூல் தோனி இருவரும் கைக் குடுக்க இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 1996 ஆம் வருட அரை இறுதிப் போட்டியில் தோற்றதற்கு சரியான பதிலடி நேற்றுத் தரப்பட்டுள்ளது.


மேட்ச்  முழுவதும் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வீரர்கள் வெற்றிப் பெற்றவுடன் வெளிப்படுத்தினர். எப்பொழுதும் கூலாக இருக்கும் தோனியும் சிறிது உணர்ச்சிவசப்பட்டார். பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணிலும் நேற்று ஒரு துளி கண்ணீராவது வந்திருக்கும் அந்தத் தருணத்தில். 

அன்புடன் எல்கே

Thursday, March 31, 2011

தோனி ஒரு மந்திரவாதி...

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது தான் ஃபைனல். இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் டென்ஷன், டென்ஷன், டென்ஷன்......மிலிட்டரி, போலீஸ் என்று மொகாலியே ஆடிப்போகிறது...மேட்ச் பிக்ஸிங் ஆகுமா...? இந்தியா வெற்றி பெறுமா..? கனவு பிட்ச் மும்பைக்குள் பாதுகாப்பு வளையத்துடன் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்து விடுமா? எண்ணிலடங்கா கேள்விகள்..


அணி அறிவிக்கப்படுகிறது...இந்தியர் ரசிகர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு...அட ஏன் அஸ்வின் இல்லை? என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது...ஆனால் பிட்ச் சுழல் பந்திற்கு சாதகமில்லை என்று காரணம் கூறப்படுகிறது.மேட்ச் ஆரம்பிக்கிறது..இந்தியா முதல் பேட்டிங், சுழல்பந்து வீச்சாளர் அஜ்மல் வருகிறார்...அதுவரை ஆடிவந்த நமது பேட்ஸ்மேன்கள் திணற ஆரம்பிக்கிறார்கள்...ரசிகர்கள் கொதித்துப் போகிறார்கள்...அடப்பாவமே..இப்படி ஒரு பிட்சில் விளையாட அஸ்வினை எடுக்காமல், சென்ற ஆட்டத்தில் ரன்களை அள்ளிக் கொடுத்த நெஹ்ராவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்களே...? என்று டென்சன் ஆகிறார்கள்....முதல் பேட்டிங் முடிகிறது...இந்தியா 260 ரன்கள்...பாகிஸ்தானை ஜெயிக்க, இதெல்லாம் பத்தாதடா..? என்று ரசிகர்கள் வடிவேலு பாணியில் கூறுகிறார்கள்...


நண்பர் பாஸ்ட் பவுலர் நவ்பல், தொலைபேசியில் அழைக்கிறார்...கிரிக்கெட் பற்றிய விசயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அஸ்வினை எடுத்திருக்க வேண்டும், என்ன செய்வது...பிட்ச் மாறிவிட்ட்து...என்றாளும் தோனி ஒரு மெஜிசியன்...எதாவது ஒரு கணக்குப் போட்டு கடைசியில் நமது மூஞ்சில் கரியை பூசி விடுவான்...:-) என்றார்...


இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்கிறது...நண்பர்கள் ஒன்று சேர்ந்து, அல்நாதாவில் ஒரு நண்பர் வீட்டில், நோன்புக் கஞ்சி, வடை, சமோசா என்று ஒரு வித்தியாசமான சிற்றுண்டியுடன்.. மேட்ச் பார்க்கிறோம்...இந்தியா பந்து வீச்சில் சாதிக்கிறது...அனைத்து பவுலர்களும் சொல்லி வைத்தாற்ப் போல் தலா 2 விக்கெட்களை வீழ்த்துகிறார்கள்...தோனி மீது குறை சொல்லி வந்த அனைவரும் வாயடைத்துப் போகிறார்கள்.....


பாஸ்ட் பவுலர் சொன்னது போல தோனி ஒரு மந்திரவாதி தான்...:-) சில நேரங்களில் அவர் என்ன செயதாலும் அது அணிக்கு சாதகமாகி விடுகிறது...அது ஃபைனலிலும் தொடருமா...?

நேற்றைய ஆட்டத்தில் என்னைக் கவர்ந்தவை...


  • எந்த பிட்ச் ஆனாலும் தன் சொந்த பிட்ச் போல் விளையாடும் சேவாக்கின் அதிரடி ஆட்டம்.

  • யார் என்ன சொன்னாலும், அனைத்து இளம் வீர்ர்களையும் தண்ணி வாங்கச் செய்யும் டெண்டுல்கரின் ஆட்டம்.

  • தன் பொறுப்புணர்ந்து நிதானமாக ஆடிய ரைனா.

  • 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் ரியாஸ்.

  • இந்திய பவுலர்களின் ஆட்டம்..

  • நெஹ்ராவின் நேர்மை... ( அப்ரிடி கேட்ச் விவகாரத்தில்)

  • ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று ஆடிய மிஸ்பாவின் ஆட்டம்.

  • பிரசண்டேஷன் செருமனியில்...அஃப்ரிடியின் உருக்கமானப் பேச்சு...

எப்படியோ இந்தியா ஃபைனலுக்கு வந்து விட்டது...இந்தியா....மும்பை...சச்சின்...


இந்தியாவிற்கு அனைத்துமே சாதகம் தான்...இந்தியா சாதிக்குமா..?

நன்றி மிஸ்பா

 இந்தியா வெற்றி பெற்றதுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்றி சொல்லணும். அதுவும் குறிப்பா பெரிய அண்ணன் மிஸ்பாவுக்கு. அவர்தான் டெண்டுல்கர் குடுத்த முதல் கேட்சை மிஸ் பண்ணி கணக்கை துவங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஒரு மூணு கேட்ச் மிஸ் பண்ணாங்க. 

அப்புறம் பேட்டிங் பண்றப்ப ரொம்ப நேரம்  எதோ டெஸ்ட் மேட்ச்ல ஆடற மாதிரியே ஆடிக்கிட்டு இருந்தான். இவன் ரொம்ப ஸ்லோவா ஆடினதுல கூட விளையாடற வீரர்கள் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஆகிடுச்சி. அவர் விளையாடிய முதல் 42 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே அவர் அடித்தார். அப்புறம் பவர் ப்ளேல அத சரி பண்ற மாதிரி ஆடியதுக் கைக்குடுக்கலை. ரொம்ப லேட் பண்ணிட்டாங்க அடிச்சு ஆட. 


நேத்து அணியை அறிவிச்சப்ப பொதுவா மொஹாலி பிட்ச் ஸ்பின்னருக்கு உதவாது என்பதால் அச்வின்னை தேர்வு செய்யவில்லை. ஆனால் எல்லோரும் நினைச்சதுக்கு மாறா பிட்ச் ஸ்பின்னருக்கு உதவியது. கடைசியா தன் தப்பை ஒத்துகிட்டார் தோனி. இதுதான் அவர்கிட்ட பிடிச்ச விஷயம். எதோ நேத்து இந்தியாவுக்கு நல்ல நேரம். படேல், நெஹ்ரா ரெண்டு பேருமே ஒழுங்கா பந்து வீசினாங்க . 

சனிக்கிழமை இறுதிப்போட்டி மும்பையில், சச்சினின் ஊரில். தனது நூறாவது சதத்தை அங்கே அடிப்பாரா அவர் ?

அன்புடன் எல்கே 

Sunday, March 27, 2011

இலங்கை - இங்கிலாந்து அலசல்

போட்டி நடத்துங்கடான்னா சும்மா டைம் பாஸ் வெளாட்டு விளையாடினாங்க ஸ்ரீலங்கா பசங்க...

ஸ்ரீலங்கா ஆளுங்க கைல கிடைக்கிற கேட்செல்லாம் விடுறதை இப்பத்தான் பாக்குறேன்.

இந்தியா கூட 330 ரன்னை டை பண்ண டீமை இப்படியாயா வெளுப்பீங்க?? இந்தியாவோட பேட்டிங்கும் பல்லிளிக்குது. விக்கெட்டே விழாம இப்புடி ஆடினா, அடுத்த செமி ஃபைனல் என்னாகுமோ நியூஸிலாந்துக்குன்னு பயமா இருக்கு.

நாங்க இம்புட்டு தூரம் வந்ததே பெரிசுன்னு ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சொல்லி இருக்கார். ஆமா... இங்கிலாந்துலேர்ந்து இந்தியா ரொம்ப தூரம் தான்.

முதல்ல பேட் பண்றவங்க தான் ஜெயிப்பாங்கன்னு சொன்ன பசங்களை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு கை பரபரக்குது. என்னவோ போங்கடான்னு போகவும் முடியல..

இன்னும் 63 பால் மீதி இருக்கு. 10 விக்கட் மிச்சம் இருக்கு. அப்படின்னா 350 ரன் கூட அசால்ட்டா ஜெயிப்போம்டான்னு இலங்கை சவால் விடுறா மாதிரி இருக்கு.

இதெல்லாம் பார்த்தா......

நம்ம பசங்க எப்ப என்ன செய்வாங்கன்னே தெரியாது. ப்யூஸ் சாவ்லாவையும் ஆசிஷ் நெஹ்ராவையும் டீம்ல சேர்த்து, அஷ்வினை உக்கார வச்சாலும் நாம் ஆச்சர்யப்பட முடியாது. ஏன்னா நம்ம கேப்டன் தான் விஞ்ஞானியாச்சே...

வெளையாட மாட்டாரு... ஆனா ஆராய்ச்சி பண்ணுவாரு.

எனக்கென்னமோ இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில இந்தியா ஜெயிக்கிறதுக்கு சில பேரை மட்டும் நம்பி இருக்கோமோன்னு தோணுது. டீமா ஆடினா ஜெயிக்கலாம். இங்கிலாந்து இலங்கை மேட்ச் மாதிரி... இல்லன்னா பொட்டியைக் கட்டிட்டு கிளம்பிடலாம்.

ஐபிஎல் வேற வருதுல்ல...

Thursday, March 24, 2011

ஆடுகளத்தில் அனல் பறக்குமா இன்று?

முதல் காலிறுதி என்னமோ ஒரு பயிற்சி ஆட்டம் மாதிரி ஆகிப்போச்சு. இன்னிக்கு ஆட்டமாச்சும் அப்படி ஆகாம தீயா இருந்தா சரிதான். மே.இ கிரிக்கெட்டின் கேள்விக்குறியான எதிர்காலம் தொடர்வதில் மிகுந்த மன வருத்தமே. யாராச்சும் இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். :(

சரி... இன்னிக்கு போட்டி பத்தி பேசலாம். எனக்கு பிடிச்ச ரெண்டு அணியும் ஆடுகளத்தில் இறங்குது இன்னிக்கு. ஆஸ்திரேலியா முன்னாடி மாதிரி இல்லாததால், ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கே தன்னம்பிக்கை குறைவாகத்தான் இருக்கு. இல்லன்னா இப்படி வாயை பொத்திகிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க. இந்நேரம் சவடால்கள் பல விடப்பட்டிருக்கும். அடக்கி வாசிப்பது ஆஸ்திரேலியத்தனம் இல்லை. :)

ஆஸ்திரேலியாவின் பலவீனமாக நான் நினைப்பது பாண்டிங்கோட ஃபார்ம் மற்றும் சுழல் பந்து சுழியில் சிக்குவது. இது ஒன்னுக்கொன்னு தொடர்புடையாதலால் கொஞ்சம் சிக்கல்தான். இருந்தாலும் இவர்களின் வெறித்தனமான ஆட்டத்தால் எதையும் சாதிப்பார்கள்.

இந்தியாவின் பலவீனம் பேட்டிங் கடைசியில் சொதப்புவதும், பந்துவீச்சு தொடக்கத்தில் சொதப்புவதும். இந்தியாவின் வெற்றியை சேவாக் கொஹ்லி மற்றும் யுவராஜின் ஆட்டங்கள் முடிவு செய்யும். யுவராஜ் ஜொலித்த தொடர்கள் இந்தியாவிற்கு சாதகமா இருந்துள்ளது ஒரு ப்ளஸ்.

இந்த இரு அணிகளிமுள்ள சில ஆட்டக்காரர்களுக்கு சில வகைகளில் 'இறுதி' ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. பாண்டிங்கிற்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம். அவருக்கும் சச்சினுக்கும் (ஜாகிருக்கும்) இறுதி உலகக்கோப்பை ஆட்டமாக அமையலாம். தோனிக்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம்.

ஆஸ்திரேலியா தோற்று வெளியேறினால் பெரியளவில் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படும். இந்தியா தோற்று வெளியேறினால்??..... இதுலாம் நமக்கு புதுசா?? நாமும் நமது ஸ்டார்கள் ஐ.பி.எல்-ல் அடிச்சு நொறுக்குவதை காண ஆயத்தமாகிவிடுவோம்.

ஆக மொத்தம் ஆடுகளத்தில் இன்னிக்கு அனல் பறக்கும் என எதிர் பார்க்கலாம்.

Sunday, March 20, 2011

இந்தியா - மேற்கிந்திய தீவுகள்

இந்த ஆட்டத்தைப் பற்றி எல்லோருக்கும் சில அபிப்ராயங்கள் பேதங்கள் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் அடுத்த ஆட்டங்களின் ஸ்ட்ராடஜியை முடிவு செய்யும் என்பதில் யாருக்கும் வேறு சந்தேகங்கள் இருக்காது.

இன்றைய போட்டியில் தோற்றால் இந்தியா ஸ்ரீலங்காவை காலிறுதியில் சந்திக்கும். இன்றைய போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியாவை சந்திக்கும்.

அப்படியானால், இந்தியாவின் இந்த போட்டி நமது அரையிறுதி வாய்ப்பினை அசைத்துப் பார்க்கவே போகிறது.

உளவியல் ரீதியாக இந்தப் போட்டியில் தோற்றால் இந்தியாவிற்கு வென்றாக வேண்டுமென்ற உத்வேகம் இல்லாமல் போய்விடும் (killer instinct).

இந்தியா எல்லாப் போட்டிகளும் வெல்லும் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லலாம்.

தென்னாப்பிரிக்காவுடன் நாம் தோற்றவுடன் எனக்கு முதலில் தோன்றியது 2003 உலகக் கோப்பை தான். அப்போது லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றோம். ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். இப்போது சவுத் ஆப்ரிக்காவுடன் தோற்றிருக்கிறோம். இறுதியில் அவர்களை எதிர்கொள்ளலாம். அப்போது பான்டிங் போல் இப்போது ஸ்மித். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் எப்போதும் உள்ளது.

நம்பிக்கை தானே சார் வாழ்க்கை....

Thursday, March 17, 2011

முதல் சுற்றின் முக்கியமான போட்டி

பி-பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டுமே. மற்ற நான்கு அணிகளில் எந்த மூன்று அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும் என்ற முக்கியமான முடிவு இந்தப் போட்டியில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆறு புள்ளிகள் பெற்று இருந்தாலும், இனி வரும் இரு போட்டிகளும் பெரிய அணிகளுக்கு எதிராக, ஒரே மைதானத்தில். நாளைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் இந்தியா பங்களாதேஷ் ரசிகர்களும் சேர்ந்து நன்றி சொல்வார்கள். பங்களாதேஷில் சிறப்புப் பிரார்த்தனைகளே துவங்கியிருப்பார்கள் இந்நேரம். வெஸ்ட் இண்டீஸின் பலம் என்று எதையுன் அறுதியிட்டுக் கூறி விட முடியாது. ரோச் தனது வேகத்தால் நெதர்லாந்து, பங்களாதேஷ் அணியைத் திணறடித்தார். அந்த வேகம் இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு எதிரில் எடுபடுமா என்பது சந்தேகம். சென்னை எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கை கொடுத்தது இல்லை. ஆகவே இரண்டு ஸ்பின்னர்களோடு மூன்றாவதாக கிறிஸ் கெயிலின் பார்ட் டைம் ஸ்பின்னையும் உபயோகப் படுத்தலாம். வழக்கம் போல பென் இரண்டாவது ஓவர் போடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸில் “அடித்து” ஆடக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கன்ஸிஸ்டண்டாக ஆடக் கூடியவர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாளைய ஆட்டத்தில் அனுபவம் மிக்க சந்தர்பாலும் சர்வனும் பிரகாசிக்கலாம். பூம் பூம் கெயிலும், பூம் பூம் பூம் போலார்டும் ஸ்வானை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெஸ்ட் இண்டீஸின் வெற்றி இருக்கிறது.

இங்கிலாந்துக்கு இது வாழ்வா சாவா போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குப் போக வாய்ப்பு (உறுதி இல்லை) இருக்கிறது என்பதால் இந்த அணி தன் முழுத் திறமையையும் காட்டி ஆடும் என்பதில் எந்த மாற்று எண்ணமும் இல்லை. ஆனால் கெவின் பீட்டர்சனின் பார்ட் டைம் ஆஃப் ப்ரேக், தென்னாப்பிரிக்காவுடன் வெற்றியைத் தேடித் தந்த பந்துவீச்சு, இல்லாதது இங்கிலாந்துக்கு ஒரு பெரும் குறையே. ஸ்பின்னுக்கு ஸ்வானை மட்டுமே நம்பியிருப்பது இங்கிலாந்துக்கு பின்னடைவே. மற்ற ஸ்பின்னர்கள் யாரும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை என்பது ஸ்ட்ராஸை யோசிக்க வைக்கும் விசயங்கள். எதிர்பாராத வகையில் நன்றாக பந்து வீசி வரும் டிம் ப்ராஸ்னன் இந்தப் போட்டியிலும் கை கொடுப்பார் என்று நம்புவோம்.

பேட்டிங் பொறுத்த வரையில் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்களில் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். ரோச்சை அடித்து நொறுக்கும் பவர்ஃபுல் பேட்ஸ்மென்கள் வரிசை கட்டி இருக்கிறார்கள். ஸ்பின் பவுலிங்தான் பெரும் பிரச்சனை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்ததைப் போல நடக்க வாய்ப்பு மிக அதிகம். (இடது கை பந்து வீச்சாளர் பீட்டர்சன் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்ததை மறக்க வேண்டாம்). வெஸ்ட் இண்டீஸில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகமே.

இந்தப் போட்டியில் டாஸ் மிக மிக முக்கியம். சென்னையின் ட்யூ ஃபேக்டர் உலகப் பிரசித்தி பெற்றது. இரண்டாவதாக ஃபீல்டிங் செய்யும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ட்யூ மிகுந்த இடையூறாக இருக்கும் என்பதச் சொல்லத் தேவையில்லை. டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங் எடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.

மொத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து காத்திருக்கிறது. 

Monday, March 14, 2011

போட்டோ டூன்ஸ்

Saturday, March 12, 2011

ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு..! ஆனா பினிஸிங் இல்லையப்பா..!!

அருமையாகப் படித்து விட்டுத் தேர்வெழுதச் சென்றானாம் ஒருவன், கேள்வித்தாளைப் பார்த்தால் அனைத்தும் மிக மிக சுலபமான கேள்வியாம், அட இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் எழுத எனக்கு சில நிமிடங்களே போதுமே எனக்கெதற்கு மணிக்கணக்கான நேரமென்று, எழுத ஆரம்பித்தவன்...நேரம் முடியும் போது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டியவன், தேர்வில் தோல்வியைத் தழுவினால் எப்படியிருக்குமோ...அப்படி இருந்தது..இன்றைய இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேலான போட்டியில் இந்தியாவின்
நிலை...:-(

ஆட்டம் ஆரம்பித்ததும் டெண்டுல்கர், சேவாக் அதிரடியில் ஆட்டம் கண்டது, நாக்பூர் அரங்கம். ஒவ்வொரு இந்திய ரசிகனும் அனுபவித்து பார்க்க வேண்டிய அந்த ஆரம்ப கட்ட, ஆட்டம் உண்மையில் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய ஒன்று..!டெண்டுல்கரும், சேவாக்கும் சேர்ந்தாடும் போது, வழக்கமாக டெண்டுல்கர், பொறுமையை கடைபிடிப்பார்...அந்தப் பொறுமை இன்று மிஸ்ஸிங்க். பத்து ஓவர்களில் 87 ரன்கள், 33 பந்துகளில் டெண்டுல்கரின் அரைசதம் என அதிரடியாக ஆரம்பித்த ஆட்டம், சேவாக்கின் விக்கெட்டிற்குப் பிறகு சற்று நிதானமானது..

38 வது ஓவரில் இந்தியா தேர்ந்தெடுத்த பவர் ப்ளேவில் அருமையான ஸ்கோரை பெற்றிருக்க வேண்டிய இந்தியா, அதில் சட சட வென விக்கெட்களை பறி கொடுத்தது, ரசிகர்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல் இந்த பேட்டிங் மற்றும் பௌலிங்கை வைத்தா நம்ம அணி, ஆஸ்திரேலியா,
பாகிஸ்தான், மற்றும் இலங்கை போன்ற ஜாம்பவான்களை எதிர் கொள்ளப் போகிறது..? என்ற கேள்விகளையும் எதிர் கொண்டுள்ளது...( இதை ஆரம்பத்திலேயே நம்ம ஆடுகள குருப் கேட்க ஆரம்பிச்சது வேறு விசயம்)

ஒரு கட்டத்தில் 267 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, பேட்டிங்கில் இந்தியாவை அடிச்சிக்க யாராலும் முடியாது என்று மார் தட்ட வைத்த இந்திய அணி, சில நிமிடங்களிலேயே வெறும் 30 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையைக் கண்டு ரசிகர்கள்..இந்திய அணி மீதான நம்பகத்தன்மையை இழந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அடுத்து விளையாட வந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு 297 என்பது ஒரு பெரிய இலக்கு இல்லை...இந்திய பவுலர்களும் அவர்களால் ஆன முயற்சியை
செய்தும், ( பாவம் அவர்களால் என்ன செய்ய இயலும்..?) கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிகச்சாதாரணமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியது இந்தியா...(இதில் தோற்றால் என்ன? நாம தான் நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறோமே? :-) கென்யா, கனடா அணிகளையும் நம்ம குரூப்பிலே சேர்த்திருந்தா அவங்களை ட்ரா பண்ணியாவது எப்படியாவது காலிறுதிக்குள் சுலபமாக நுழைந்திருக்கலாம் .. சே வடை போச்சே..:-)
சரி இந்த தோல்விக்கு என்ன காரணம்...? நிபுணத்துவமாக உள்ளோடி யார் யாரையோ காரணம் சொன்னாலும், கடைசியில் இந்தப் பழியைத் தாங்க போவது டெண்டுல்கர் தான்...! ஆமாங்க அவர் என்ன தான் அடிச்சி, எவ்வளவு தான் ஸ்கோர் பண்ணினாலும் கடைசியில் அவர் செஞ்சுரி அடிச்சா, டீம் ஜெயிக்காது என்ற ஆருடம் தானே ஜெயிக்கிறது..! இப்போதும் வழக்கம் போல டெண்டுல்கர் மேலே பழியை போட்டு விட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்...! ( எத்தனை பெரியார் வந்தாலும் இதை நிறுத்த முடியாது ராசா...)...:-)

என்ன நடக்கும் இனி???

முதல்ல எல்லாரும் எழுந்து நின்னு கைத்தட்டிக்குவோம். எட்டு விக்கெட் போனதும் அம்புட்டுத்தான்னு அல்லாரும் முடிவு பண்ணியாச்சி. ஆனாலும் டென்ஷன் ஆவாம ஒரு ஓவர் பாக்கியிருக்கும்போதே மேட்சை முடிச்சி வச்ச மஹமதுல்லாவுக்கும் ஷஃபியுல் இஸ்லாமுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். இங்கிலாந்து நிலைமை இப்போ ரொம்ப மோசமாயிடுச்சி.

பங்களாதேஷின் இந்த வெற்றிக்குப் பிறகு க்ரூப்-பி என்னவாகும்? என்ன வேணும்னாலும் நடக்கலாம். எந்த எந்த டீம் செமிஃபைனலுக்குப் போவும்னு சொல்றது கஷ்டம்தான்.

1. இந்தியா disqualify ஆக வாய்ப்பிருக்கா??

இருக்கு. எப்படி? இந்தியா இனி வர்ற ரெண்டு மேட்சுமே தோத்து, பங்களாதேஷ், ரெண்டு மேட்சுமே ஜெயிச்சி, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸை நல்ல ரன் ரேட் வித்தியாசத்துல ஜெயிச்சா, இந்தியாவுக்கு ஆப்பு. ஆனா இது நடக்குறது கொஞ்சம் கஷ்டம்தான். இந்தியா ரெண்டுல ஒரு மேட்ச் கண்டிப்பா ஜெயிச்சிரும். அதுனால இது ஒரு ஆப்சனே இல்லை.

இப்போ பங்களாதேஷ், நெதர்லாந்து கூடவும், தென்னாப்பிரிக்கா கூடவும் ஜெயிக்க முயற்சி செய்யணும். அவங்க நல்ல நேரம் தென்னாப்பிரிக்கா கூட அவங்க ஆடும்போது இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் முடிஞ்சிருக்கும். அதை வச்சி அவங்க ஜெயிச்சே ஆகணுமா, இல்ல தோத்தாக்கூட போதுமானு முடிவு செஞ்சிக்கலாம்.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸைத் தோக்கடிக்கிறது மட்டுமில்லாம, தென்னாப்பிரிக்கா பங்களாதேஷையோ, இல்லை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கூடயோ தோக்கணும்னு ப்ரே பண்ணிட்டே இருக்கணும்.

தென்னாப்பிரிக்கா இனி இருக்கிற மூணு போட்டியில ரெண்டு போட்டியில ஜெயிச்சாக்கூட போதும். அந்த ரெண்டு போட்டியில ஒரு போட்டி பங்களாதேஷ் கூடவா இருந்துட்டா அவங்களுக்கு ரொம்பவே சேஃப்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு இனி ரெண்டு மேட்சுமே பெரிய டீமோட. அதுல ஒரே ஒரு மேட்சாவது ஜெயிச்சிட்டாங்கன்னா போதும். அந்த டீம் இங்கிலாந்தா இருந்தா அவங்க ப்ளேஸ் சேஃப்.

ஆக எல்லாத்துக்கும் பாஸிபிளிட்டி இருக்கிற க்ரூப்பா க்ரூப்-பி மாறி உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு ஒரு சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்திருக்கிறது கிரிக்கெட்டுக்கும் உலகக் கோப்பைக்கும் நல்லது.

ஒரு முக்கியமான விசயம் இதுல என்னன்னா, இதுக்கெல்லாம் அடி போட்டது, அயர்லாந்தோட வெற்றி. ஐசிசி அசோசியேட் நாடுகளை அடுத்த உலகக் கோப்பையில சேத்துக்கிறதில்லைங்கிற முடிவை அவங்க மறுபரிசீலனை செய்யறது நல்லது.

இனி நாளைய மேட்சைப் பார்ப்போம். இந்தியா இதுவரைக்கும் தோல்வியைச் சந்திக்கவே இல்லைன்னாலும், இமாலய வெற்றி இன்னும் பெறவே இல்லை. பவுலிங் ரொம்பவே வீக்கா இருக்கு. நெதர்லாந்து கூடவும், அயர்லாந்து கூடவுமே சரியா விளையாடாத இந்தியாவோட டாப் ஆர்டர், தென்னாப்பிரிக்காவோட கேர்ஃபுல்லா ஆடுவாங்கன்னு எதிர்பார்க்கலாம். ஆனா,  டாப் ஆர்டர் நல்லா ஆடுனா மிடில் ஆர்டர் கடைசியில சொதப்பிடுது. நாளைக்கி எல்லா டிபார்ட்மெண்ட்ஸும் சரியா ஆடணும். அனேகமா சாவ்லாவுக்கு பதிலா அஷ்வின் உள்ள வரலாம். நெஹ்ராவுக்கு பதிலா முனாஃப் பட்டேல் உள்ள வரலாம். இந்தியாவோட ஃபீல்டிங் இன்னும் இம்ப்ரூவ் ஆகணும்.

தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து கூட தோத்த அதிர்ச்சியில இருந்து மீண்டு வந்திருப்பாங்க. C டேக் எப்போ அவங்களை விட்டுப் போகுமோ தெரியலை. அவங்களோட டாப் பவுலர் இம்ரான் தாஹிரும் இஞ்சூர்டா இருக்கிற இந்த நிலமையில அவங்க பவுலிங்கும் கொஞ்சம் வீக்காத்தான் இருக்கும். காலிஸ் இந்தியாவோட நடந்த டெஸ்ட் தொடருக்கு அப்புறம் இன்னும் பழைய ஃபார்முக்கு வரலை. தன்னோட ஃபேவரைட் ஆப்பொனண்ட்ஸ் கூட காலிஸ் பழைய ஃபார்மை மீட்டெடுப்பாரா?? எ.பி.டிவில்லியர்ஸ் ஸ்பின் ஆடுறதுல புலி. ஆம்லா ஆசிய பிட்சஸ்ல இந்திய பவுலர்ஸை எதிர்கொள்ளக் கூடிய திறன் படைச்ச ஆள். தென்னாப்பிரிக்காவோட ஃபீல்டிங் வழக்கம்போல சிறப்பாவே இருக்கு.

இந்த ப்ளஸ் மைனஸ் எல்லாம் பார்க்கும்போது தென்னாப்பிரிக்காதான் இந்த மேட்சுல ஃபேவரைட்ஸ்னு தோணுது. ஆனா கிரிக்கெட்ல என்ன வேணும்னா நடக்கலாம்.

நாளைக்கி சில பல பத்திரிகைகள் இப்பிடி எழுதும் - “Last time when Sachin faced these opponents in Indian soil in an ODI, he scored a 200".

Anyways, ஒரு பரபரப்பான போட்டி காத்துட்டு இருக்கு.

பதிவிட்டவர்,

முகிலன்

Wednesday, March 9, 2011

என்ன அடி.. என்ன அடி...

பல்வேறு பிரச்சனைகளோடு உலகக்கோப்பைக்கு வந்த பாக்கிஸ்தான், அதிரடியான இரண்டு வெற்றிகளால் எல்லாருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது. இதுல என்னங்க இருக்கு ஆச்சர்யப்பட. பாக்கிஸ்தான் எப்போவும் இப்படித்தான். அவங்க எப்ப ஜெயிப்பானுங்க எப்ப தோத்துப்போவனுங்கன்னு அவனுங்க 'மேட்சை ஃபிக்ஸ்' பண்ற புக்கிக்கே தெரியாது.

ரெண்டு ஆட்டத்தை வென்றவுடனே பாக்கிஸ்தான் அணி என்னமோ வலிமையான அணின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு ஒரு சின்ன எச்சரிக்கையா அமைஞ்சதுதான் கனடா ஆட்டம். எப்படியோ தட்டு தடுமாறி 180+ ஓட்டங்களை எடுக்கவிடாம ஜெயிச்சுட்டாங்க. அப்பவே மண்டைக்குள்ள மணி அடிச்சுச்சு. பாக்கிஸ்தானும் (இந்தியாவும் என பிராக்கெட்ல போட தேவையில்லைன்னு நினைக்கிறேன்) தேறுவது மாதிரி தெரியலன்னு. காரணம், அவங்க பந்துவீச்சுல அஃபிரிடி தவிர வேற யாரும் பெருசா கிழிக்கிற மாதிரி தெரியல. அப்புறம், தொடக்க ஆட்டமும் ரொம்ப பலவீனமா இருக்கு.

நினைச்ச மாதிரியே கனடா தவற விட்டதை நியுசிலாந்து செய்து காட்டிடுச்சு. கடைசி அஞ்சு ஓவர்ல 100 ரன்ஸ். என்ன அடி... என்ன அடி!!! இதுக்கு நம்ம இந்திய பந்துவீச்சே பரவாயில்லை(நம்மள நல்லவனா ஆக்கிட்டாய்ங்களே) போல. இப்போதைக்கு ஆஸ்திரேலியா தவிற வேற எவனும் தேருற மாதிரி தெரியல.

இன்னிக்கு இந்திய அணிக்கு ரொம்ப கடினமான சோதனை. நமக்குத்தான் சோமாலியா கூட ஆடுனாலும் ஆட்டம் 'டஃப்'பா இருக்குமாமே. சாயாக்கடையில பேசிக்கிட்டாய்ங்க. :)

Sunday, March 6, 2011

நான் சொல்றது சரியா ??

இன்றைய ஆட்டங்கள் க்ரூப் பியின் முக்கியமான ஆட்டங்கள் ஆகும். இந்தியாவுடன் டையும், அயர்லாந்துடன் தோல்வியும் கண்ட இங்கிலாந்து அணி வலிமையான தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து மோதவிருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் சிறந்த வேகப் பந்துவீச்சு இணையை கொண்டுள்ள அணி இது. ஸ்டெயின் ஒருபுறம் அதி வேக அவுட்ச்விங்கர்களில் பயமுறுத்தினால் உடம்புக்கு குறிவைத்து பவுன்சர்களை போடுவதில் மார்க்கல் வல்லவர்.

இவர்களை அடுத்து புதிய வரவான தாகிர் . இவரது பந்துவீச்சை எப்படி இங்கிலாந்து எதிர் கொள்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே கவுண்டி மேட்ச்களில் இவரை அவர்கள் விளையாடி இருக்கலாம். அடுத்து தென்னாப்ரிக்காவின் பேட்டிங். இப்போதைக்கு வலுவாகத் தெரிகிறது. இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நன்றாகத் தான் விளையாடி உள்ளனர். இங்கிலாந்து பந்து  வீச்சாளர்கள் ஒழுங்காக பந்து வீசாவிட்டால் எப்படியும் முன்னூறு ரன்களுக்கு மேல் குவித்து விடுவார்கள். எனவே இங்கிலாந்து ஜெயிப்பதும் தோற்பதும் அவர்களுடைய பந்து வீச்சாளர்களின் கையில்தான் உள்ளது. 

அதேபோல் பேட்டிங்கில் பீட்டர்சன் சொதப்பாமல் ஆட வேண்டும். முப்பது நாற்ப்பது ரன்கள வேகமா அடிப்பது பின் அவுட் ஆவது என்பதை மாற்றி களத்தில் நிலைத்து நின்று ஆட முயற்சிக்கவேண்டும். அணியிங் மிடில் ஆர்டர் ரொம்ப பலவீனமா இருக்கு , கடைசி நேரத்தில் இந்தியாவை விட மோசமா சரியாறாங்க. எனவே ட்ராட் கடைசி வரை நின்று ஆட முயற்சி செய்தால் நல்லது. அதேபோல் கொளிங்க்வுத் அணிக்கு தேவையா என்று யோசிக்க வேண்டும். பந்துவீசும் சரியில்லை, பேட்டிங்கும் இல்லை அவருக்கு பதில் ரவி பொப்பாராவை சேர்க்கலாம் என்பது என் கருத்து.

பீல்டிங்கில் தென்னப்ரிகா சிறந்த என்பதால் அவர்கள் 330 அடித்தால் அது 350 க்கு சமம். ஆனால் இங்கிலாந்தின் பீல்டிங் இந்தியாவைப் போன்றுதான் இருக்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றால் ,அவர்களது நிலை இன்னும் மோசம் ஆகும். அதே சமயம் ,பங்களாதேஷ்,அயர்லாந்து அணிகளுக்கு காலிறுதியில் நுழைய வாய்ப்புகள் இருக்கும்.

என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்க விரும்புகிறேன். புதுசா ஒரு அணி காலிறுதிக்கு வரட்டுமே. என்ன நான் சொல்றது சரியா ??


அன்புடன் எல்கே 

Saturday, March 5, 2011

“கிரிக்கெட்” பற்றி உனக்கென்ன தெரியும்..?


“நீங்க கண்டிப்பா எதாவது உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் அட்லீஸ்ட் உங்களுக்கு பிடித்த கேம்மாவது விளையாட வேண்டும்…உங்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்…?”

“கிரிக்கெட் டாக்டர்”
“ரொம்ப நல்லதா போயிற்று ஒரு வாரம் தொடர்ச்சியா கிரிக்கெட் விளையாடுங்க..ஒரு வாரம் கழிச்சி வாங்க டெஸ்ட் பண்ணி பாத்துடலாம்…கண்டிப்பா வெயிட்டுலே ஒரு மாற்றம் தெரியும்”

உடம்பு குறைக்கும் நோக்கில் டாக்டரை சந்தித்த, நம்ம ஹீரோ, அதன் பின் ஒரு வாரமாக ஒரே கிரிக்கெட் தான்…

“தம்பி தீயா விளையாடனும்னு” அவருக்கு அவரே உற்சாகப் படுத்திக் கொள்வார்…ஒரு வாரம் முடிந்த்து…தெரிந்த வரை அவர் உடல் எடையில் ஒரு மில்லி மீட்டர் கூட குறைந்ததாகத் தெரியவில்லை. டாக்டரை சந்தித்தார்.."

டாக்டர் வெயிட் செக் பண்ணினார்…பெரு மூச்சு விட்டார்.. ஒரு கிலோ ஏறியிருந்தது..!

“என்ன நான் சொன்ன படி செஞ்சீங்களா?”

“ ஆமா டாக்டர், தினமும் ஒரு மணி நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டுத்தான் மறு வேலை”

“நீங்க பேட்ஸ் மேனா? பௌலரா..?

“எல்லாமே நான் தான் டாக்டர்”

“ஆல் ரவுண்டரா அப்படின்னா கண்டிப்பா குறைஞ்சிருக்கணுமே…? ஆமா யார் கூட விளையாடுறீங்க?”

“ ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அல் மோஸ்ட் எல்லா டீமோடையும்”

டாக்டருக்குத் தலை சுற்றியது..சுதாரித்துக் கொண்டு,
“அடடே இப்ப வெல்லாம் உள்ளூர் டீமுக்கே இண்டர் நேஷனல் அளவுக்கு பேர் வச்சிடுறீங்களா..?வாரம் முழுதும் விளையாடுனீங்களா? இல்லை இடையிலே லீவு எதாவது…?”

“ஒரே ஒரு நாள் பவர்கட் அன்றைக்கு மட்டும் விளையாட வில்லை”

“பவர்கட்டா? நீங்க என்ன டே நைட் மேட்சா விளையாடுறீங்க..!! ?

“என்ன டாக்டர் விவரம் இல்லாமே கேட்குறீங்க..? ஒரு நாள் முழுவதும் பவர் கட், யூபிஸ் கூட ஒரு மணி நேரம் தான் தாங்கும்,, இதுலே எப்படி கம்ப்யூட்டரை ஆன் பண்ணுறது..?

“கிரிக்கெட் விளையாட எதுக்கு கம்ப்யூட்டர்..?”

கம்ப்யூட்டர் கேம் விளையாட கம்ப்யூட்டர் இல்லாமே எப்படி டாக்டர் ..?
என்னது கம்ப்யூட்டர் கேமா ? நீ இவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் கேம் கிரிக்கெட் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தீயா..? என்று டாக்டர் மயக்கம் போட்டு விழுந்தார்…

என்னைத் தெரிந்தவர்கள் இந்தக் கதையை படித்தால் உன் சொந்தக் கதையா இது..? என்று கேட்பார்கள் அந்த அளவிற்கு எனக்கும் இந்தக் கதைக்கும் எனக்கும் நிறைய தொடர்பு உண்டு...:-)

பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் இந்த ஆடுகளத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த வேளை, நீங்களும் ஆடுகளத்தில் எழுதுங்களேன்ன்னு ..ஒரு உரிமையுடன் என்னைக் கேட்ட போது…”அட இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புதுன்னு தான் தோன்றியது”வீடியோ கேம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் நானும், அவ்வப்போது நம்ம அணியினரை விமர்சிப்பேன். ( நம்ம அணியை விமர்சிக்க அந்தத் திறமை போதும்னு சொல்லிடாதீங்க) நண்பர்கள் டெண்டுல்கர், பாஜி, தோனி , சேவாக் ஆகியோர் பொறுத்துக் கொள்ள வேண்டும்..:-)


இண்டர்நேசனல் ப்ளேயருக்கு டேமேஜ் அதிகமா இருக்காதுன்னு நம்பறேன்…:-) நமக்கெல்லாம் களத்துலே இறங்கி விளையாடுறதுன்னாத்தான் அலர்ஜி, மற்றபடி களத்துக்கு வெளியே இருந்து விமர்சிப்பதுன்னா…நம்ம ஆளுங்களை மிஞ்ச முடியாது ..:-) இல்லேன்னா ரவிசாஸ்திரி மாதிரி ஆட்களெல்லாம் இப்ப மைக்கை பிடிச்சுக்கிட்டு ஒரு ஓவருக்கு இருபது ரன் எடுக்குறவங்களையெல்லாம் கமெண்ட் பண்ண முடியுமா..?.:-) ( அவரெல்லாம் ஒரு மேட்ச் முழுதும் நின்றாலே அவ்வளவு தான் எடுப்பார்.:-)). அந்த வரிசையில் நானும் இப்ப இந்த குழுவுடன் மைக்கை பிடிச்சுவிட்டேன்…
இனி கிளப்புடா தம்பி கிளப்புடா…:-)
அன்புடன்
கீழைராஸா