Wednesday, May 18, 2011

கெய்ல் ஸ்டார்ம்

ஐந்து அணிகளைப் பற்றிய பார்வையை போன இடுகையில் பார்த்தோம். மீதி ஐந்து அணிகளை இந்த இடுகையில் அலசுவோம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த மூன்று ஐபிஎல் போட்டித் தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறாத ஒரே அணி கொல்கத்தா. அதனால் இந்த முறை மனோஜ் திவாரியைத் தவிர மற்ற அத்தனை ஆட்டக்காரர்களையும் - வங்காளச் சிங்கம் தாதா கங்குலி உட்பட- மாற்றியது கொல்கத்தா. 2.4 மில்லியன் கொடுத்து கம்பீரையும், 2.1 மில்லியன் கொடுத்து யூசுஃப் பதானையும் வாங்கி அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு அணிகளில் ஒரு அணியாக இருக்கக் கூடிய வாய்ப்பை இன்னமும் தக்கவைத்திருக்கிறது கொல்கத்தா. ப்ரெட் லீ, இக்பால் அப்துல்லா, யூசுஃப் பதான், பாலாஜி ஆகியோர் பந்து வீச்சில் கலக்கி வருகிறார்கள். ஆனாலும், ஸ்டார் பவுலர் என்று ஒருவரும் இல்லாதது கொல்கத்தாவின் குறை. பேட்டிங்குக்கு காலிஸ், கம்பீர், மனோஜ் திவாரி, பதான் ஆகியோர் இருந்தாலும் கன்சிஸ்டண்டாக பெர்ஃபாம் செய்யக்கூடியவர்கள் இல்லாமல் தான் இருக்கிறார்கள். இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறினாலும் சேம்பியன்கள் ஆவார்களா என்பது சந்தேகமே.

மும்பை இண்டியன்ஸ்
கடந்த வருடத்தில் இருந்த அணியைப் பெரும்பாலும் தக்க வைத்துள்ளது மும்பை. ஆனாலும் ஜாகிர் கானின் இழப்பைப் பூர்த்தி செய்ய ஒரு பவுலர் இல்லாதது பெரும் குறையே. இந்த ஐபிஎல் தொடரில் லீடிங் விக்கெட் டேக்கர் லசித் மலிங்கா. சளைக்காமல் இவர் வீசும் யார்க்கர்கள் எதிரணி பேட்ஸ்மென்களை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்த அணிக்கு எதிராக ஆடுபவர்களுக்கு 20 ஓவர்களில்லை 16 ஓவர்கள்தான் என்று ஒரு முடிவோடு ஆடவேண்டியிருக்கிறது. ஆனாலும் லசித் மலிங்காவுக்குக் கம்பெனி கொடுக்க நல்ல பவுலர்கள் இல்லை. முனாஃப் பட்டேல் ஓரளவுக்குக் கை கொடுத்தாலும் ஜாகிர் இல்லாத குறை தெரிவது உண்மை. ஹர்பஜன் சிங் சென்னைக்கு எதிரான போட்டியில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற போட்டிகளில் மிக சாதாரணமாகவே அவர் பவுலிங் இருக்கிறது.

பேட்டிங் கடந்த இரண்டு ஆட்டங்களில் கை கொடுக்கவில்லை. இந்திய அணியோ மும்பை அணியோ சச்சின் அவுட்டானால் சைக்கிள் ஸ்டேண்ட் சைக்கிள்கள் போல மள மளவென சரிவது மாறாது போல. இரண்டு மோசமான தோல்விகளைத் தழுவியதால் அரையிறுதிக்கான இடம் உறுதிப்படப் படாமல் இருக்கிறது. பேட்டிங்குக்கு சச்சின், அம்பாட்டி ராயுடு, பொல்லார்ட், சைமண்ட்ஸ், ப்ளிஸ்ஸார்ட் போன்றோர் இருந்தாலும், கன்ஸிஸ்டன்ஸி இல்லை. கண்டிப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியவில்லை. கடந்த ஐபிஎல்லில் ஏற்படுத்திய தாக்கத்தை பொல்லார்ட் இன்னும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஃபைனலுக்குப் போனாலும் கோப்பை இவர்களுடையதாகிவிடும் என்ற நிச்சயம் இல்லை.

புனே வாரியர்ஸ்
A captain is as good as a team - என்று சொல்வார்கள். அதற்கு Exceptions உண்டு. இருக்கின்ற குறைந்த ரிசோர்ஸஸை சிறப்பாக உபயோகித்து சிறப்பான குழு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைத் தேடித்தருபவர்கள் இருக்கிறார்கள். வார்னே, தோனி, இப்போது கில்கிறிஸ்ட் என உதாரணங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஆனால் சிறந்த வீரர்கள் பலரை அணியில் கொண்டிருந்தாலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரே ஒருவர்தான் இருக்கிறார் - யுவராஜ் சிங். Best team on Paper வைத்துக் கொண்டு புள்ளி அட்டவணையில் கடைசியில் இருந்து இரண்டாமிடத்துக்குப் போயிருக்கும் அணி புனே. இதில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல நெஹ்ராவுக்குப் பதிலாக கங்குலியைக் கொண்டுவந்தனர். அதுவும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி புனே அணி மட்டுமே.

அடுத்த ஆண்டு மீண்டு வர வாழ்த்துகள். (வேற என்ன சொல்லமுடியும்?)

ராஜஸ்தான் ராயல்ஸ்
முதல் ஐபிஎல் தொடரில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை இல்லை. ஆரம்பத்தில் நம்பிக்கைக் கொடுக்கும் வண்ணம் ஆடினாலும், போகப் போக மற்ற ஆட்டங்களின் மோசமான ஆட்டத்தான் தோல்விகளைத் தழுவி இப்போது அரை இறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலையை எட்டியிருக்கிறது.

வார்னே இந்தத் தொடரோடு ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். ராஜஸ்தான் அணியைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வார்னேவுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த முறையும் ராஜஸ்தான் ஏலத்துக்குள் நுழையும் போதே மற்ற அணிகளை விட பாதித் தொகையையோடுதான் நுழைந்தது. அதிலும் வார்னேவையும் வாட்சனையும் ரீட்டேய்ன் செய்ததில் இன்னும் பாதித் தொகையை இழந்தது. இருக்கின்ற தொகையில் வாங்க முடிகின்ற ஆட்டக்காரர்களை வாங்கியிருந்தாலும் தொடரின் ஆரம்பத்தில் அமர்க்களமான வெற்றிகள் சில பெற்று நம்பிக்கையளித்தது. ராகுல் ட்ராவிட், ராஸ் டெய்லர், ஜோகன் போத்தா, வாட்ஸன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தாலும், அதிகம் தெரியாத உள்நாட்டு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தைக் காட்டினார்கள்.

ரிட்டயராகப் போகிற கடைசி காலத்தில் ஆர்.சி.ஏ செக்ரட்டரியைத் திட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் வார்னே. அடுத்தத் தொடரில் கோச்/ஆலோசகராக இருந்து மறுபடியும் ராஜஸ்தான் அணியை வளர்த்தெடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த வருடம் ராஜஸ்தானுக்கு விடை கொடுப்போம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஒரே அணி பெங்களூரு. ஆரம்பத்தில் ததிங்கிணத்தோம் போட்ட அணி, கிறிஸ் கெயில் என்ற சூறாவளி வந்ததும் தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஏழே ஆட்டங்களில் 32 சிக்ஸர்களை விளாசி 436 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக விளங்கியுள்ளார் கெயில்.

கெய்லைத் தொடர்ந்து அதிரடியாக ஆட கோஹ்லி, புஜாரா, சௌரவ் திவாரி, ஏ.பி டிவில்லியர்ஸ் போன்றோர் இருக்கிறார்கள். ஆக, பேட்டிங்க் மோசமாக இல்லை.பெங்களூருவுக்குப் பந்துவீச்சும் பலம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பலவீனமாக இல்லை என்று சொல்லலாம்.

நேற்று வரை சேம்பியன் பட்டத்துக்குப் போட்டி போடக்கூடிய அணியாக பெங்களூருவைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று பஞ்சாப் அணிக்கு எதிராகப் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து அப்படி ஒரு முடிவுக்கு வர தயக்கமாக இருக்கிறது. கெய்ல் சூறாவளியைத் தடுத்து நிறுத்திவிட்டால் பெங்களூருவும் சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிவிடலாம் என்பதையே இன்றையத் தோல்வி எடுத்துச் சொல்கிறது. பெங்களூரு இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கக் கூடாது.

ஒட்டுமொத்தமாக, பத்து அணிகளின் ஆட்டத்தைப் பார்ததன் மூலம் இந்த முறை சேம்பியன் பட்டத்தை சென்னை தக்க வைத்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகப் படுகிறது. பெங்களூருவும், பஞ்சாபும்(ஒரு வேளை அரையிறுதிக்குத் தகுதி பெற்றால்) சென்னைக்குச் சவாலாக இருக்கலாம். 

1 comment:

எல் கே said...

மீண்டும் சென்னைக்கு வாய்ப்புகள் அதிகம் .காரணம் இந்த வருடம் சென்னையில் இன்னும் தோற்கவில்லை !!!!