Monday, February 28, 2011

இந்தியாவுக்கு காத்திருக்கிறது ஆப்பு

விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம் ஒருத்தன். அது சரி விடிய விடிய ராமாயணம் சொல்லி தூக்கத்த கெடுத்தவனுக்கு அந்தத் தண்டைனையக் கூட கொடுக்கலைன்னா ராமாயணம் கேட்டதுக்கு என்ன அர்த்தம்? ராமாயணம்னா ”காத்தடிக்குது காத்தடிக்குது” பாட்டுல பிரபுதேவா & co ஆடி காட்டுவாங்களே அத்த மாதிரி சும்ம அஞ்சு செகண்ட்ல சொல்லணும். இப்படி தினுசு தினுசா யோசிச்சு உதாரணம் கொடுத்தாலும் நேத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடந்தது உச்சக் கட்ட கொடுமை. பத்து மணி நேரம் டிவிக்கு முன்னாடி உட்கார்ந்து எச்சில் பண்ணி கடிச்ச நகமெல்லாம் போக, மேட்ச் பாத்த எல்லாருக்கும் இன்னைக்கு மிஞ்சினது நல்லா சோப்புப் போட்டு கழுவின பின்னாடியும் எஞ்சியிருக்கும் விரல் வீச்சந்தான்.

”பவுலிங் கொஞ்சம் சொதப்பல். ஆனா சாகீர் இருக்கிறதனால கொஞ்சம் வலுவானதா இருக்கும்”, “எட்டு பேட்ஸ்மேன் இருக்கோம்ல ஹர்பஜனையும் சேர்த்து அதனால பேட்டிங்க்ல நாம வலுவான அணிதான். பேட்டிங்கை வச்சு ஜெயிச்சிரலாம்.”, “டெண்டுல்கர் எப்படியும் அடுத்த உலகக்கோப்பைக்கு இருக்கப் போறதில்ல. இந்த வருஷம் எப்படியும் வாங்கணும்னு விளையாடுவாரு. அதனால கண்டிப்பா ஜெயிச்சிருவோம்.”, “தோனிகிட்ட என்னமோ ஒண்ணு இருக்குய்யா, என்னத்தையாவது பண்ணி ஜெயிக்க வச்சிர்ராம்ல” இப்படியாக பட்டிதொட்டி எங்கும் ஒரே விதமான குரல்களைக் கேட்க முடிகிறது. 

எதிரணி எந்த அணியா இருந்தாலும் 300க்கு மேல அடிக்கும் வலுவான பேட்டிங் லயனப் இருக்கலாம். டெண்டுல்கர் அடிச்சு ஆடலாம், கோப்பையை ஜெயிக்கனுங்கிற கனவோட வழக்கத்திற்கு மாறாக அஞ்சு சிக்ஸர், அதுவும் சிறந்த ஸ்பின் பவுலர்னு சொல்ற ஸ்வான்னை அநாயசமாக விரட்டலாம். தோத்திட்டிருந்த மேட்ச்சை இந்தியா பக்கம் திருப்பினாண்டா சாகீர்னு இனி சாகீர் புகழ் எக்ஸ்ட்ரா டெஸிபலில் ஒலிக்கலாம். தோனி திடீர்னு லெக் ஸ்பின்னர் டீமுக்கு தேவைனு அவருக்கே உரித்தான அந்த குணகத்தை வெளிப்படுத்தலாம். எல்லாம் நினைத்தது போல நடந்தாலும் வெற்றி நினைத்தது போல கிடைக்காமல் போகலாம் என்பதற்கு நேத்து இந்திய அணிக்கு விழுந்த அடி ஒரு உதாரணம். இது ஒரு அபாய மணி. குறைகள் களையப்படாமல் இருந்தால் எதிர்பாராத சமயத்தில் களையமுடியாத சந்தர்பத்தில் நம்மை பாதிக்கும்னு சொல்வாங்க. நம்ம பவுலிங் தேராது, இவங்களை வச்சிட்டு உலகக்கோப்பை ஜெயிக்கிறது கஷ்டம்னு ஏற்கனவே பேசினாலும், இன்னைக்கு வரைக்கும் பெரிசா ஒரு மாறுதலும் வரலை. அதிலும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு ஆட்டதுக்கு முன்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமா அல்லது ஒரு ஓவர் போட்ட பின்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமான்னு இன்னும் யாருக்கும் தெரியல. முதல்ல அறிவிச்ச பதினைஞ்சு பேர் கொண்ட அணியில இல்லாம இருந்த ஸ்ரீசாந்த்தான் உலகக் கோப்பைல இந்திய அணியின் முதல் ஓவரைப் போட வேண்டிய நிர்பந்தத்தில இந்திய அணி இருக்கு. முணாஃப் படேல் கோயில்ல கொடுக்கிற சக்கரைப் பொங்கல் மாதிரி! நமக்கு யோகம் இருந்தா முந்திரிப்பருப்பு வரும் இல்லைன்னா ஒழுங்கா பிசையாம கிடைக்கும் சோற்றுக்கட்டி.

எப்பேற்பட்ட எதிரணியா இருந்தாலும் எட்டிலிருந்து பத்து ஓவருக்கு மேல் ஒரு விக்கெட்டை எடுக்காமலிருந்தால் அது ஆபத்தானது. இது ஆட்டத் தொடக்கத்தில் நடந்தால் இன்னும் மோசமான விளைவுகளைத் தரும். அதற்கு நேற்றைய ஆட்டம் ஒரு உதாரணம். முதலில் ஸ்ட்ராஸ்-பீட்டர்சன் ஜோடியை பத்து ஓவருக்கு (9.3 ஓவர்) ஆட விட்டார்கள். பின்னர் ஸ்ட்ராஸ்-இயான் பெல் ஜோடியை 20 ஓவருக்கு மேல் (26 ஓவர்) ஆட விட்டார்கள். இதில் சத்தம் அதிகமா இருந்ததால் ஸ்ட்ராஸ் எட்ஜ் கேட்காமல் போனதென சப்பைக்கட்டு வேறு (http://www.rediff.com/cricket/report/world-cup-2011-strauss-edged-it-twice-but-indians-didnt-appeal/20110228.htm). இங்கிலாந்தை இந்தியாவுக்கு நிகரான அணியென நம்பாமல் இந்திய ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன்பே ஷேன் வார்னே ட்வீட்டியது “Looking forward to the game between india and England today should be a cracker.. My prediction a tie!”. ஷேன் வார்னே சொன்ன அளவிற்கு நூறு சதவிகிதம் துல்லியமாக முடிவு தெரியாமல் போனாலும் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு இப்படியொரு சவாலைத் தருமென்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இந்திய அணி பவுலிங்கில் ஜிம்பாப்வேவைவிட மோசமான நிலையிலிருக்கிறது. ஜிம்பாப்வே கூட உலகக்கோப்பையில் இதுவரையிலும் எதிரணியின் ஒரு விக்கெட்டை எடுக்க 26 ஓவர் எடுத்துக்கொண்டதில்லை.

பலவீனம் தெளிவாக கண் முன் தெரிகிறது. பவுலிங்க்கு சாகீரை மட்டுமே நம்பி இருக்கலாகாது. எவ்வளவு நல்ல பவுலராயிருந்தாலும் அவனாலும் ஒரளவிற்கு மட்டுமே அணியை காப்பாற்ற முடியும். 338 ரன் அடித்தாலும் பவுலிங் மோசமாகயிருந்தால் எதிரணி எளிதாக வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. இன்னும் உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்களில் நுழைந்து விட்டால் இந்த பவுலிங்கை நம்பி இந்தியா வெற்றி பெருமென்று கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. இரண்டே வழி. ஒன்று பவுலிங்கை கொஞ்சம் வலுவானதாக்குவது. அது இனிமேல் நடப்பது கொஞ்சம் கஷ்டம். ஒருவேளை ஆசிஷ் நெஹ்ரா முழு உடல் தகுதியுடன் வந்து ஒழுங்காக பந்து வீசி சாகீருக்கு தகுந்த இணையாக இருந்தால் நடக்கலாம். இரண்டாவது, டாஸ் ஜெயித்தால் பவுலிங்கை தேர்வு செய்து எதிரணி எவ்வளவு அடித்தாலும் நமது பலமான பேட்டிங்கைக் கொண்டு சேஸ் செய்வது. இல்லையென்றால் நாக் அவுட் சுற்றில் ஏதேனும் ஒரு எதிரணி வீரர் 150+ ஸ்கோர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

”Do onto others as they would do onto you; only do it first!”னு சொல்வாங்க. தோனிக்கு இவ்விஷயம் இந்நேரம் தெரிந்திருக்கலாம். அல்லது தோனி இந்நேரம் இப்படியும் யோசித்துக் கொண்டிருக்கலாம். எதற்கும் ஷேன் வார்னேவிடம் கோப்பையை இந்தியா வெல்லுமாவென ஆரூடம் கேட்டு வையுங்கள்.
 
எழுதியவர்: கோ.கணேஷ்

இந்தியா - இங்கிலாந்து அலசிக் காய்ப் போடுதல்

இந்த வேர்ல்ட் கப் சீரிஸ் ஆரம்பிக்க முன்னாடி எல்லாரும் (நான் உட்பட) இந்தியாவுக்கு கப் ஜெயிக்க வாய்ப்பு நிறைய இருக்கிறதாச் சொல்லிட்டு இருந்தாங்க. இந்த மேட்சுக்கு அப்புறம் நிறைய பேருக்கு (இங்கயும் நான் உட்பட) அந்த நம்பிக்கை பொடிப்பொடியாகியிருக்கும்.

ஸ்ட்ராங்கஸ்ட் பேட்டிங் லைன் அப்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனாலும் சச்சின் அவுட்டானதும் சீட்டுக்கட்டு மாதிரி சரியிறது இன்னும் (22 வருசமா) மாறவேயில்லையே? இதுவா ஸ்ட்ராங்க் பேட்டிங் லைன் அப்?

சரி முதல்ல இருந்து வருவோம். உலக அதிசயமா தோனி டாஸ் ஜெயிச்சிட்டாரு. அதுக்கே அவருக்கு மேட்ச் ஜெயிச்ச மாதிரி ஒரு சந்தோசம். எல்லாரும் எதிர் பார்த்த மாதிரி பேட்டிங் எடுத்தாரு. ஸ்ட்ராஸ் நான் டாஸ் ஜெயிச்சிருந்தா பேட்டிங்தான் எடுத்திருப்பேன்னு சொன்னாரு. (நல்ல வேளை ஜெயிக்கலை. ஜெயிச்சிருந்தா 400 ரன் அடிச்சிருப்பாய்ங்க).

இண்டியாவோட பேட்டிங்ல இன்னைக்கு சிறப்பம்சம்னா சச்சின் செஞ்சுரிதான் (இன்னொரு க்ரூப்பு சச்சின் 100 அடிச்சதாலதான் இந்த மேட்ச இந்தியா ஜெயிக்கலைன்னு சொல்லுவாய்ங்க). ஆரம்பத்துல சேவாக் அடிக்க, அடுத்து கம்பீர் அடிக்க, தல அடக்கிவாசிச்சிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல அவரோட ஸ்ட்ரைக் ரேட் 60 தான் இருந்தது. அப்ப பேட் மாத்தினாரு. அதுக்கப்புறம் அந்த பேட்ல இருந்து ரன் மழைதான். என்னைக்கும் இல்லாத திருநாளா 5 சிக்ஸ் அடிச்சாரு. அதுவும் ஸ்வான் செகண்ட் ஸ்பெல் வரும்போது ரெண்டு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடிச்சி தல அவரை வரவேற்ற விதம் இருக்கே..ஆகா ஓகோ.. அட்டகாசம். தல அவுட்டாகும்போது அவர் ஸ்கோர் 115 பால்ல 120 ரன். அவர் அவுட்டாகிப் போனதுக்கப்புறம் தோனியும் யுவராஜும் கொஞ்ச நேரம் தடவினாங்க. கடைசியில 11 ரன்னுக்கு 4 விக்கெட் குடுத்து (டிம் ப்ரெஸ்னனுக்கெல்லாம் 5 விக்கெட்டு) 338 ரன் எடுத்து 49.5 ஓவர்லயே ஆல் அவுட் ஆகிட்டாங்க. கண்டிப்பா சச்சின் ஆடிட்டிருந்த வேகத்துக்கு 40-50 ரன் கம்மியாத்தான் எடுத்திருந்தாங்க.

சரிதான், வார்ம் அப் மேட்ச்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரா இருநூத்திச் சொச்ச ரன்னையே டிஃபண்ட் செஞ்சாங்களே, 338 டிஃபண்ட் செய்ய மாட்டாங்களாங்கிற என் போன்ற ரசிகர்களோட நினைப்புல மண்ணு லாரியவே கொட்டினாய்ங்க ஸ்ட்ராஸும், கே.பியும். கே.பி யுவராஜ் வரத் தேவையில்லாமலே முனாஃப் பட்டேலுக்கு ஒரு ஆச்சரிய அதிர்ச்சி விக்கெட் குடுத்துட்டு அவுட்டாகிப் போனாரு. ஆனா, அது ஆட்டத்தோட போக்குல எந்த மாற்றத்தையும் கொண்டு வரலை. ஸ்ட்ராஸ் ஒரு பக்கம் அடி வெளுத்துக்கிட்டு இருக்க, இந்தப் பக்கம் ட்ராட் அவருக்குக் கம்பெனி குடுத்துட்டு இருந்தாரு. ஒரு வழியா ட்ராட்டை சாவ்லா தூக்கிர, அடுத்து வந்த இயான் பெல் ஸ்ட்ராஸுக்குக் கம்பெனி குடுத்தாரு. ரெண்டு பேரும் சேர்ந்து இந்தியாவோட கையில இருந்து வெற்றியை ரொம்ப தூரத்துக் கொண்டு போயிட்டு இருந்தாங்க.

இதுக்கு நடுவுல UDRSஇன் ஷார்ட்-கமிங் வெள்ளிடை மலையாத்(நாங்களும் இந்த வார்த்தையை உபயோகிச்சிட்டோம்ல)  தெரிய வச்ச ஒரு சம்பவம் நடந்தது. ப்யூஷ் சாவ்லா போட்ட பந்து இயன் பெல்லோட கால்ல பட, அம்பயர் நாட் அவுட் குடுத்துட்டாரு. இந்தியா அதை ரிவ்யூ செஞ்சாங்க. ப்ளம்ப் எல்பியா இருந்தாலும், பெல்லோட கால் ஸ்டம்ப்ல இருந்து 2.5 மீட்டருக்கு மேல இருந்ததால ஹாக் ஐ டெசிசனை ஃபீல்ட் அம்பயர் டெசிஷன் ஓவரைட் செஞ்சிருமாம் (ஏன்னா இந்த தூரத்துக்கு ஹாக் ஐ அக்யூரசி குறைவா இருக்கும்). அதுனால நாட் அவுட் குடுத்துட்டாங்க. பெல் கிட்டத்தட்ட பெவிலியன் போயிட்டாரு. ஒரு வேளை அது அவுட்டாகியிருந்தா கதை வேற மாதிரி ஆகியிருக்கலாம்.

அதுக்கப்புறம் இங்கிலாந்து பேட்டிங் பவர் ப்ளே எடுக்க, ஜாகிர் கான் வந்து அடுத்தடுத்து பெல்லையும், ஸ்ட்ராஸையும் அவுட்டாக்கி இந்தியாவுக்கு ஒரு நம்பிக்கையைக் கொண்டு வந்தாரு. மேட்சும் டைட்டாப் போச்சி. கடைசி ரெண்டு ஓவருக்கு 29 ரன் எடுக்க வேண்டியிருந்த நிலையில ப்யூஷ் சாவ்லா வந்து ரெண்டு சிக்ஸ் குடுத்து இங்கிலாந்துக்கு ஒரு ஹோப் குடுத்தாரு. கடைசி ஓவர்ல 14 ரன் எடுக்க வேண்டியிருந்த நிலையில பந்து போட வந்தாரு முனாஃப் பட்டேல். ஷஹாசத் அடிச்ச அந்த ஒரு சிக்ஸலயே இந்தியா தோத்துரும்ங்கிறது உறுதியான நிலையில இங்கிலாந்து தடவி ஒரு வழியா டைல முடிச்சாங்க.

இன்னைக்கி இந்தியாவோட எந்த டிப்பார்ட்மெண்டுமே ஒழுங்கா ஆடலை. பேட்டிங்க்ல 338 ரன் எடுத்திருந்தாலும், ஆட ஆரம்பிச்ச வேகத்துக்கும், “ஸ்ட்ராங்க் பேட்டிங் லைன் அப்”ங்கிற டேகுக்கும் இது பிலோ பார் ஸ்கோர்.
இந்த டோர்னமெண்ட்ல பர்ஸ்ட் பத்து ஓவர்ல இன்னைக்கி இங்கிலாந்து எடுத்த 77 ரன் தான் அதிக பட்ச ஸ்கோர். இதுல இருந்தே இந்தியாவோட பவுலிங் எவ்வளவு மோசமான நிலமையில இருக்குங்கிறதும் தெரியுது. ஃபீல்டிங்கும் மோசமா இல்லைன்னாலும் ரொம்ப ஆவரேஜ் ஃபீல்டிங்.

முதல்ல இந்தியா இந்த ஓட்டைகளை அடைக்கணும். 5 பவுலர்களோட ஆடுறது கூட தப்பே இல்லை. மூணு ஸ்பின்னர், ரெண்டு பேஸ் பவுலரோட வர்றது முயற்சிக்கலாம். அஷ்வினை டீமுக்குள்ள கொண்டு வந்து பவுலிங் ஓப்பன் செய்ய வைக்கிற ஒரு ஆப்ஷனையும் முயற்சி செஞ்சி பார்க்கலாம். அடுத்த போட்டி அயர்லாந்தோட. இதையெல்லாம் முயற்சி செஞ்சி பார்க்க இந்தப் போட்டி நல்ல ப்ளாட்ஃபார்மா இருக்கும். செஞ்சி பார்ப்பாங்களா?

யாருக்கு வேணும் இந்த உலகக்கோப்பை??

முன்னெப்போதும் போல் இந்த உலக கோப்பை என்னிடம் பெரிய ஆர்வத்தையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அளவுக்கு அதிகமான போட்டிகளாலோ, இந்திய அணியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாததினாலோ, இரண்டு மூன்றாண்டுகளாக என்னை புதியதாய் தொற்றியிருக்கும் புகைப்படக்கலையின் மீதுள்ள ஆர்வத்தினாலோ இருக்கலாம். அது மட்டுமல்ல... கிரிக்கெட் விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் கூட நம்ப முடியவில்லை. ஏதோ ஒன்று இங்கு எழுதவும் தடுத்தே வந்திருக்கிறது. ஒரு வழியாக சில நாட்களுக்கு முன் நண்பன் சுபைர் மற்றும் சில இணைய நண்பர்களினுடனான உரையாடல் முலம இத்தளம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. எனக்கும் எழுத சிறிய நாட்டம் வந்துள்ளது.

20 ஓவர் போட்டிகளால்... எங்கே டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடுமோ என என் போன்றோர் கவலையுற, பாதிக்கப்பட்டதென்னவோ ஒருநாள் போட்டிகளே. எனக்கும் கூட ஒருநாள் போட்டிகளில் நாட்டம் குறைந்துள்ளது. இப்படி ஒரு சூழலில் இந்த உலகக்கோப்பை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க வார போட்டிகளும் மந்தமாகவே இருந்தன.

எந்த அணிக்கு இந்த உலகக்கோப்பை தேவை? அதவாது ஏதோ ஒரு வகையில்... எந்த நாட்டில் இந்த உலகக்கோப்பை வெற்றி கிரிக்கெட்டை உயிர்பிக்கும் என பார்த்தால்.... பண பலத்தாலும் நம்மைப் போன்ற கிரிக்கெட் பைத்தியங்களும் இருக்கும் வரை இந்தியா இதை வென்றாலும் இல்லையென்றாலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஒரு பாதிப்பும் இல்லை. கேவலமாக தோற்றாலும் நம்மால் கிரிக்கெட்டை ஒதுக்க முடியாது. இந்தியாவின் தற்போதைய முதன்மை வணிகமே கிரிக்கெட்தான். அப்புறம்... ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பலமான கிரிக்கெட் உட்கட்டமைப்பால் கிரிக்கெட்டிற்கு உ.கோப்பை வெற்றி இல்லையென்றாலும் பாதிப்பு இருக்காது. நியுசிலாந்து அணிக்கு தற்போதைய ஒரே பிரச்சனை அணித்தலைவர் மட்டுமே. அதுவும் விரைவில் சரியாகிவிடும் என நம்பலாம். அதனால் அவர்களின் எதிர்கால கிரிக்கெட்டும் நெருக்கடியில் இல்லை.

ஆனால், ஒரு காலத்தில் முடி சூடா அரசர்களாக இருந்த மேற்கிந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் பல்வேறு வகைகளில் சமீப காலமாக கிரிக்கெட்டில் நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. மே.இந்திய இளைஞர்களின் இரத்தத்தில் ஊறியிருந்த கிரிக்கெட் ஆர்வம் இப்போது குறையத்தொடங்கியுள்ளதாம். மே.இந்திய தென்னை மரங்களை உலுக்கினால் முன்போல் வேகப்பந்து வீச்சாளர்கள் விழுவதில்லை. அவர்கள் கூடைப்பந்து, பேஸ்-பால் ஆட்டங்களை விரும்ப தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். பல நாடுகளை ஒருங்கிணைத்து போவதே பெரிய பாடாகியுள்ளதாம். பாகிஸ்தானிலோ... அரசியல் சூழல், போதை அடிமைகள், மற்ற அணிகள் அங்கு சென்ற விளையாட முடியாத சூழ்நிலை போன்றவை அவர்களின் கிரிக்கெட்டை மிகவும் பின்னோக்கி தள்ளியிருக்கிறது. இரு அணிகளுக்குமே இருபது நாட்களுக்கு முன் வரை அணித்தலைவர் யாரென்பதே முடிவில்லாத நிலை.

இந்த இரண்டு அணிகளிலும் ஒரு காலத்திலும் திறமைக்கு பஞ்சம் இருந்ததில்லை. இவர்களுடைய மக்களுக்கு கிரிக்கெட்டின் மீது மீண்டும் பழையது போல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்கள் கிரிக்கட் அமைப்பை வலுப்படுத்தவும் உ.கோப்பை வெற்றியைப்போல் வேறெதுவும் உதவாது.

நம்மை போன்ற ஆர்வலர்களுக்கும் கிரிக்கெட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, தெ.ஆ - யோடு குறுகிய இடத்தில் சுழலாமல் வேகப்பந்து வேங்கைகளின் மண்ணிலும் ஒளிரவேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். நடக்குமா?

Sunday, February 27, 2011

டெப்யூ சென்சுரி - நூறாவது சிறப்புப் பதிவு

ஆடுகளம் ஆரம்பித்து நாட்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. சுமார் 95 பதிவுகள் எழுதி, தன் சொந்தப்பணி காரணமாக ரிட்டையர்ட் அனவ்ன்ஸ் செய்யும் நிலையில் இருக்கும் நவ்ஃபல் இந்த தளத்திற்கு புது வடிவம் கொடுக்க நினைக்கிறார்.

அதனால் இன்று முதல் இந்த தளம் நவ்ஃபல் மட்டுமல்லாது மேலும் சிலரின் பங்களிப்புடன் செயல்படத் துவங்குகிறது.

பங்களிப்பாளர்கள் பற்றிய குறிப்பு:

கேப்டன்

ஆரம்பித்த நபர் என்றாலும் புதிதாய் வருபவர்களை வாரி அணைத்து வழிநடத்தும் வல்லமை பெற்ற நண்பர் நவ்ஃபல் தான் இந்த வலைப்பூவின் கேப்டன்.

நவ்ஃபல், அமீரகத்தில் கணினி வல்லுனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் ஆடுவதில் மிக்க ஆர்வம் உள்ளவர். கிரிக்கெட் பற்றி பேசுவதிலும். புகைப்படக் கலை மீது மிக்க ஆர்வம் கொண்டு கேமிராவும் கையுமாய் எந்நேரமும் காணலாம்.

பிடித்த ப்ளேயர்கள்: ஸ்டீவ் வாக், வாசிம் அக்ரம், அசாருதீன், சவ்ரவ் கங்குலி, சேவாக், கும்ப்ளே & டிராவிட்

பிடித்த அணி: இந்தியா & ஆஸ்திரேலியா (By default)

துணை கேப்டன்:
இந்த வலைப்பூவின் துணை கேப்டன் அகமது சுபைர்.

இவர் தொழிலால் கட்டுமானப் பொறியாளர். மேலாண்மையில் ஆய்வியல் நிறைஞர் (அதான்ப்பா M.Phil.). புறத்திட்டு மானகை வல்லுநர் (அதான்ப்பா PMP). தற்போது அமீரகத்தில் வசிக்கும் இவர், வெண்பா பாடல்கள் எழுதுவதில் வல்லவர். சுபைரின் பக்கங்கள் என்ற வலைப்பூவும் வைத்திருக்கிறார். கல்லூரி அளவில் கிரிக்கெட் ஆடிய அனுபவமுள்ளவர்.

பிடித்த ப்ளேயர்: ராகுல் ட்ராவிட்
பிடித்த ஷாட்: கவர் ட்ரைவ்
பிடித்த டீம்: இந்தியா


ஓபனர்:
அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ்.

முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் பயின்று, பிறப்பது ஓரிடம் பிழைப்பது வேறிடம் என்ற தமிழனின் தலையெழுத்துக்குத் தப்பாமல் பெரியண்ணன் ஊரில் திட்ட மேலாளராக (Project Manager) ப்ரொக்ராம்மர் அடிமைகளை (நன்றி ஆசிஃப் அண்ணாச்சி) மேய்த்து வருகிறார். பள்ளி, கல்லூரி அணிகளுக்கு விக்கெட் கீப்பர்/ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடிய அனுபவமுள்ளது.

பிடித்த ப்ளேயர்: சச்சின், சச்சின், சச்சின்.
பிடித்த கேப்டன்: தோனி
பிடித்த பவுலர்: வாசிம் அக்ரம்
பிடித்த ஷாட்: புல் ஷாட்
பிடித்த டீம்: இந்தியா & சென்னை சூப்பர் கிங்க்ஸ்

பிடிக்காத ப்ளேயர்: ஆஸ்திரேலிய அணியின் உடையை (டெஸ்ட் போட்டி என்றால் பச்சைத்தொப்பி) அணியும் எந்த வீரரும்


மிட்டில் ஆர்டர்:

நம்ம ஆடுகளத்தின் மிடில் ஆர்டர் நாயகன் எல்.கார்த்திக் (எல்.கே.)

கால் சென்டரில் அணித்தலைவர் , கல்லூரி படிக்கும்பொழுது துவக்க
ஆட்டக்காரராக ஆடிய அனுபவம் உண்டு

பிடித்த ப்ளேயர்: கங்குலி
பிடித்த கேப்டன்: கங்குலி
பிடித்த பவுலர்: கும்ப்ளே
பிடித்த ஷாட்: கவர் டிரைவ் & ஸ்ட்ரெய்ட் டிரைவ்
பிடித்த டீம்: இந்தியா & சென்னை சூப்பர் கிங்க்ஸ்
பிடிக்காத அணி : ஆஸ்த்ரேலியா


பௌலர்:

இந்த ஆடுகளத்தின் கதாநாயகன் கணேஷ்.

டெக்னிகல் புலியாக பெண்களூரில் வலம் வரும் இவர் கல்லூரி அளவிலான கிரிக்கெட் ஆட்டங்களும், நிறுவன அளவிலான ஆட்டங்களிலும் விளையாடி இருக்கிறார்.

பிடித்த பேட்ஸ்மென்: ரிக்கி பாண்டிங், ஜாக்ஸ் கல்லிஸ், மார்க் வாக்
பிடித்த பௌலர்: ஆலன் டொனால்ட், ஆம்ப்ரோஸ்
பிடித்த கேப்டன்: கங்குலி
பிடித்த அணிகள்: இந்தியா & ஆஸ்திரேலியா


இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆடப்போகும் இந்த ஆடுகளத்தில் ஆக்ரோஷமான விவாதங்கள் நடக்கலாம். அப்படியே எதுவும் இல்லாமலும் போகலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள்.

உலகக்கோப்பை நடக்கும் அத்தனை நாட்களிலும் ஒரு பதிவாவது எழுதிவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் புறப்பட்டிருக்கும் எங்களை வாழ்த்துங்கள். வளர்கிறோம்.

Saturday, February 26, 2011

புலியின் பாய்ச்சல்

நேற்றைய பங்களாதேஷ் - அயர்லாந்து போட்டியினைப் பார்த்தவர்கள் இதயம் இடம் மாறித் துடித்திருக்கும். போன முறை உலகக் கோப்பையில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பங்களாதேஷ் முதலில் ஆடி 205 ரன்கள் மாத்திரம் எடுத்ததும் மனம் மிக வருத்தமுற்றது.

மிர்பூர் கூட்டத்தில் கூட சோபிக்காமல் இவர்கள் எதற்கு உலகக் கோப்பை ஆடவேண்டும்? என்ற எண்ணம் உண்டாகி இருந்தது. என் பக்கத்தில் இருந்த பங்களாதேஷ் நண்பனிடம் உதார் விட்டுக்கொண்டிருந்தேன். நீங்க முதல்ல எங்க ஊரு க்ரிக்கெட் டீமை ஜெயிச்சிட்டு அப்புறமா உலகக் கோப்பைல ஆடுங்கடா என்றெல்லாம் வெட்டி பந்தா பேசிக் கொண்டிருந்தேன்.

என்ன மாயம் நடந்தது என்றே யோசிக்க இயலாத பொழுதில் பட்டென்று ஆட்டம் சூடுபிடித்தது. இந்த ஆட்டத்தில் அஷ்ரஃபுல்லின் இரண்டு விக்கட்கள் யாரும் எதிர்பாராதது.

என்ன வேலைக்காக டீமில் சேர்ந்தோமோ அதைச் செய்யாமல் இன்னொரு வேலையில் சிறப்பாக விளையாடிய அஷ்ரஃபுல்லை என்ன சொல்ல?? ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட அஷ்ரஃப், இரண்டு விக்கட்டுகளை எடுத்து தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டார்.

அயர்லாந்து கட்டாயம் ஜெயித்துவிடும் என்ற நிலையிலிருந்து தோல்வியுற்றதை நிச்சயம் நான் எண்ணிப்பார்க்கவில்லை.

எதற்கும் பயப்படாமல், வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு, இறுதிவரை போராடி வெற்றி பெற்ற பங்களாதேஷுக்கு வாழ்த்துகள்.

வெற்றிகள் தொடரட்டும்.

இந்தியா vs இங்கிலாந்து

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் மூடிக்கிடந்த ஆடுகளத்தில் இன்று முதல் களம் இறங்குகிறோம் நாங்கள். உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் 

உலகக் கோப்பை ஆரம்பித்து ஒரு வாரம் ஆகப் போகிறது. முதல் வாரப் போட்டிகளில் பெரிதாக அதிர்ச்சி தரும் வகையில் எந்த போட்டிகளும் அமையவில்லை. நெதர்லாந்து அணி மட்டும் இங்கிலாந்தை தோற்கடிக்கும் நிலைக்கு சென்றாலும் அனுபவம் இல்லாதக் காரணத்தால் வெற்றிப் பெற இயலாமல் போனது.  நேற்றையப் போட்டியிலும் அயர்லாந்து அணி வங்காளதேசத்தை குறைந்த ரன்களுக்குள் சுருட்டினாலும் , வெற்றிப் பெற இயலவில்லை. மற்றப் படி அனைத்துப் போட்டிகளும் எதிர்பார்த்தவாறே அமைந்தன.


இன்றைக்கு இரண்டாவது வாரம் ஆரம்பிக்கிறது. இன்றையப் போட்டியில் இலங்கை பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களுருவில் நடக்க உள்ளது. 

நேற்றையப் பயிற்சியின் பொழுது சேவாகிற்கு அடிபட்டது இந்தியாவிற்கு பின்னடைவே. ஆனால் அவர் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்றுக் கூறப் படுகிறது. நாளை மதியம்தான் அவர் ஆடுவாரா இல்லையா என்ற விவரம் தெரிய வரும். அவர் ஆடாவிட்டால் அவருக்கு பதில் ரெய்னா ஆட வாய்ப்புகள் உள்ளது. அதே போன்று இந்தியா இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஆடவும் வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்து பொதுவாக லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியுள்ளதாலும், இதே பெங்களுருவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் நன்றாக பந்து வீசியதாலும் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக சாவ்லா ஆட வாய்ப்பு உள்ளது .

இந்திய அணியின் பலம் பேட்டிங் . எனவே டாஸ் ஜெயித்தால் முதலுள் பேட் சேது முன்னூறு ரன்களுக்கு மேலே அடிக்க முயற்சி செய்வார்கள். . பந்த்வீசை பொறுத்தவரை ஜாஹீர்க்ஹான்,ஹர்பஜனையே நம்பி உள்ளது. துவக்க ஆட்டத்தில்  நன்றாக பந்து வீசியதால் முனாப் படேல் ஆட வாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஆன பீட்டர்சன்,ட்ராட்,பெல் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. ஆனால் அணித்தலைவர் ஸ்ட்ராஸ் மற்றும் கோளின்க்வுட் இருவரும் இந்திய ஆடுகளங்களில் முக்கியமான வீரர்கள். ஸ்ட்ராஸ் அதிரடி ஆட்டக்காரர் இல்லை. ஆனால் களத்தில் நிலைத்துவிட்டால் அவரை அவுட் செய்வதுக் கடினம். அதே போன்றுதான் காளிங்க்வுட்டும் . அவரது பந்துவீசும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு உள்ளது,.


இங்கிலாந்தின் பந்து வீச்சில் சுழற்பந்துவீச்சாளர் ச்வானை இந்தியா கவனமுடன் ஆடவேண்டும். இன்றைய சுழற்பந்துவீச்சாளர்களில் மிக அருமையாக பந்துவீசுபவர்  என்றுப் பேசப்படுபவர் அவர். அதேபோல் பிராட் ,ஆண்டர்சன் போன்றோரும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்களே. ஆண்டர்சன் பாலை ஸ்விங் செய்வதில் கில்லாடி. எனவே , இந்தியா டாஸ் ஜெயித்தால் முதலில் ஆடுவதுதான் சரியாக இருக்கும். மாலை நேரத்தில், பால் ஸ்விங் ஆக வாய்ப்புகள் உள்ளது. 

கிட்டத்தட்ட சமபலத்தில் இருந்தாலும், பேட்டிங்கில் இந்தியா அதிகபலத்துடன் இருப்பதால் இந்தியா வெற்றிப் பெற வாய்ப்புகள் அதிகம்.
அன்புடன் எல்கே