Sunday, October 5, 2008

வந்துட்டோம்ல!

"வந்துட்டோம்ல!"... அப்படின்னு நம்ம 'தாதா' அணிக்கு திரும்பியதை பத்தி சொல்லலைங்க. அவர் எப்போ அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார் மீண்டும் திரும்பி வந்தார்னு சொல்றதுக்கு? ஏந்தான் இந்த ஊடகப்பசங்க அவரை போட்டு படுத்துறாங்களோ தெரியல. விட்டா கும்ப்ளே விக்கெட் எடுக்காவிட்டால் கூட தூக்குடா கங்குலியைன்னு சொல்லுவாங்களோ என்னமோ தெரியல. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை? தாதா அணிக்கு மீள்வரவு (டிச - 2006-ன்னு நினைக்கிறேன்) ஆனதிலிருந்து இந்தியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் அவர்தான் என இங்குள்ள தினசரி புள்ளிவிபரம் கொடுத்திருந்தது. ஆனா அதே தினசரி அந்த செய்தியின் தலைப்பாக வைத்திருந்தது என்ன தெரியுமா? 'கங்குலிக்கு இறுதி வாய்ப்பு'. ஐயோ கொடுமை! இது போல தலைப்பையெல்லாம் கங்குலியும் சரி நாமும் சரி கடந்த கொஞ்ச காலாம பாத்துக்கிட்டுத்தான் வருகிறோம். நமக்கொன்றும் புதிதல்ல.

அதற்காக, கடந்த இரு தொடர்களைப் போலல்லாமல் தாதாவும் சரி அவரோட பங்காளிங்களும் (அதாங்க மூத்த வீரர்கள்) சரி 'வாம்மா மின்னல்!' மாதிரி பிட்சுக்கு வந்துட்டு போகாம, நிலைச்சு நின்னு ஆடனும். குறிப்பா நம்ம டிராவிட். அவரது ஆட்டத்தின் வீழ்ச்சியே நமது அணியின் அண்மைய மோசமான தோல்விகளுக்கும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டைமைக்கும் காரணம் என்பது எனது எண்ணம். அவரது ஆட்டத்தை சுற்றியே நமது அணியின் பேட்டிங் உள்ளது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தேர்வு கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் நம்மூர்காரர் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம். பத்ரிநாத்தின் தேர்வும் ஸ்ரீகாந்தின் தலைமைப்பதவியும் ஒரு கோ-இன்ஸிடண்ட். அவரது தேர்வில் அரசியல் இல்லையென்றாலும், கிரிக்கெட்டில் அரசியலில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் பத்து பேர் சேர்ந்து ஒரு அணியோ அல்லது அமைப்போ அமைக்கும் போது, அதில் அரசியல் இருக்கும் போது இவ்வளவு வருமானம் (பி.சி.சி.ஐ-யின் இந்தாண்டு வருமானம் 1000 கோடியாம்) வரும் அமைப்பினுள் அரசியலில்லாமல் இருக்குமா. இதெல்லாம் சகஜமப்பா!

இதற்கிடையில், ஒருவர் மீன் பிடிக்க சென்றதால் தனது அணியில் இடத்தை இழந்துள்ளார். அதனால் இலாபம் இந்தியாவிற்கே. சைமண்ட்ஸிற்கு இந்திய ரசிகர்கள் நன்றி சொல்லிக்கொள்ளும் விதமாக நிறைய தூண்டிலும் வலையும் அனுப்பி வைச்சு, இந்திய தொடருக்கு முன் மீன் பிடிக்க போகச்சொல்லலாம். நிச்சயம் ஆஸி-க்கு அவரது இழப்பின் வலி தெரியவரும். இருந்தாலும், இது போல கடுமையான தண்டனைகளை மற்ற அணி நிர்வாகங்களும் கடைபிடிக்கலாம் என்பது எனதெண்ணம்.

இம்முறை ஆஸி அணி சற்று வலு குறைந்ததாகவே காணப்படுகிறது. இந்தியாவிற்க்கு இம்முறை வெல்ல வாய்ப்பு கூடுதலே.

இன்னமும், 'வந்துட்டோம்ல' தலைப்புக் காரணம் சொல்லல இல்ல... அதாவாது நான் கடைசியாய் பதிவிட்டது கடந்த இந்தோ-ஆஸி தொடர் முடிவில். அதன் பிறகு இப்பத்தான் முதல் பதிவு. நம்ம மூத்த மிடில்-ஆர்டர் வீரர்களின் ஃபார்ம் மாதிரி கொஞ்ச நீண்ண்ண்ட ஓய்வெடுத்து விட்டேன். நான் திரும்பி வந்தது போல அவர்களது ஃபார்மும் மீண்டு(ம்) வரட்டும்.

இனியாவது அடிக்கடி இங்கு சந்திக்கலாம்.... :)

Thursday, January 31, 2008

இந்தோ-ஆஸி தொடர்:- சில நினைவுகள்

நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் சில மறக்க முடியாத நிகழ்ச்சிகளை தந்திருந்தாலும் இந்தியாவை மீண்டும் வெறுங்கையுடனே திரும்ப அனுப்பியுள்ளது. ஆனால், கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவில் இந்தியா சிறப்பாக விளையாடியதை யாரும் மறுக்க முடியாது. கடந்த (2003-04) முறை இந்தியாவின் தொடர் வெற்றிக்கு குறுக்கே நின்றவர் தனது கடைசி போட்டியில் விளையாடிய 'ஸ்டீவ்' வாஹ். இந்த முறை இந்தியாவின் வெற்றியை தட்டிப்பறித்தவர் (தனது கடைசி போட்டியில் நடுவராக??) 'ஸ்டீவ்' பக்னர் என்றால் மிகையில்லை. அடுத்த முறையாவது இந்தியா ஆஸ்திரேலியாவை நோக்கி பயணிக்கும் போது எந்த 'ஸ்டீவ்'வும் இல்லாமல் பார்த்துக்கொள்ளட்டும்.

இந்த தொடரின் இறுதியில் எனக்கு தோன்றிய சிலவை:

* ஆஷஸ் & இந்தோ - பாக் பகைமை (Rivalry) எல்லாம் காலாவதியாகிவிட்டது. இந்தோ-ஆஸிதான் இப்போ பெஸ்ட்.

* சேவாக்கிடம் இன்னமும் சரக்கு உள்ளது. இவர் ஒருவரால் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வெற்றிகள் இன்னும் பல உள்ளன.

* இந்திய அணி நிர்வாகம் 'பேட்டிங்' என்ற பெயரில் இர்ஃபான் பத்தானின் டெஸ்ட் வாழ்க்கையையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிகிறது.

* சச்சினின் பேட்டிங்கின் பார்க்கும் போது இது ஒன்றும் அவருக்கு இறுதி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் போல் தெரியவில்லை. :)

* கும்ப்ளே இன்னும் கொண்டாடப்படாத நாயகனாகவே உள்ளார்.

* கங்குலி, டிராவிட், லட்சுமன் & கும்ப்ளே (கவனிக்கவும் சச்சின் இந்த லிஸ்டில் இல்லை) போனதிற்குப் பின் இந்திய டெஸ்ட் அணியின் நிலை மிகப்பெரிய ?

* ஆஸ்திரேலிய அணியை வெல்ல திறமை மட்டும் போதாது.

* மிகச்சிறந்த பேட்ஸ்மென்கள் ஃபார்முக்கு திரும்புவதை ஒரு கலை போல் வெளிப்படுத்துவார்கள். (டிராவிட் & பாண்டிங் )

* வார்னேக்குப் பின் ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சு???? அக்டோபரில் ஆஸியின் இந்திய வருகைக்கு காத்திருக்கிறேன். ஒருவேளை மைக்கேல் க்ளார்க்கை ஆஸ்திரேலியா நம்புமோ? :)))

* வாயைக்கட்டினால் ஆஸ்திரேலிய அணியை யாராலும் காப்பாற்றமுடியாது.

* Perth is not Aussies Birth Right.

* ஐ.சி.சி மெதுவாக பி.சி.சி.ஐ-யின் பிடிக்குள்.

* ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறுவதில் மானமுள்ளவர்கள். கில்லியின் முடிவை மற்ற அணியின் பந்துவீச்சாளர்கள் திருவிழாவகாக்கூட கொண்டாடலாம். தவறில்லை. (என்ன பாடு படுத்துனாம்பா மனுஷன்! :) )

* ப்ரெட் லீ ஒன்றும் அத்தனை மோசமான பந்துவீச்சாளர் இல்லை. ஸ்டூவர்ட் க்ளார்க் ஒன்றும் அத்தனை அபாயகரமான பந்துவீச்சாளர் இல்லை.


இன்னும் பல... பின்னூட்டங்களில் நீங்களும் சிலவற்றை பகிர்ந்துகொள்ளும் போது நானும் விடுபட்டவைகளை பின்னூட்டுகிறேன்.

Monday, January 21, 2008

அணித்தேர்வு சரியா?

அடப்பாவிங்களா!! கொஞ்ச நாளைக்கு கூட இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியா இருக்க விடமாட்டேங்குறாங்க இந்த தேர்வாளர்கள். மீண்டும் தொடங்கி விட்டது தேர்வாளர்களின் கூத்து.

Squad: Mahendra Singh Dhoni (capt & wk), Sachin Tendulkar, Yuvraj Singh, Virender Sehwag, Dinesh Karthik, Robin Uthappa, Gautam Gambhir, Suresh Raina, Rohit Sharma, Irfan Pathan, Praveen Kumar, RP Singh, Ishant Sharma, Sreesanth, Harbhajan Singh, Piyush Chawla

இதுதான் வரும் உலகக் கோப்பையை மனதில் கொண்டு தேர்வாளர்கள் அறிவித்திருக்கும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்.

முதலில், எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. கிரிக்கெட்டில் உலகக் கோப்பை மட்டுந்தான் Ultimate Acheivement-ஆ? அதை மட்டும் மனதில் வைத்து செயல்படுவது ஏன்?

கங்குலிக்கு பதிலாக இவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த இளம் வீரர்கள் (Robin Uthappa, Gautam Gambhir, Suresh Raina, Rohit Sharma) - கங்குலி தனது இறுதி கால கட்டத்தில் தற்போது ஆடும் ஆட்டத்திற்கு சற்றேனும் ஈடு கொடுக்க முடியுமா? சிறந்த ஃபீல்டர்கள் என்பதற்காக இவர்கள் கங்குலிக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், யார் ஓட்டங்களை எடுப்பது?

நிச்சயம் இளம்வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்தான். அதற்காக, ஒரு மூத்த அனுபவமுள்ள வீரர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் உள்ளபோது அவரை நீக்குவது எந்த வகையில் நியாயமாகும்? அது மட்டுமில்லாமல் இளையவர்களிடம் அணி ஒப்படைக்கும் விதம் இவ்விதம் அமைவது பாதகமாகவே அமையும். ஒட்டு மொத்தமாக இளைஞர்கள் மட்டும் ஆடும் போது, குறிப்பாக ஒருநாள் ஆட்டங்களில் புலிகளாக இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக, இவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

சரி, அதையும் விடுத்து இளையவர்களை தேர்ந்தெடுத்ததிலும் தேர்வாளர்கள் முறையாக நடந்து கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை.

கடந்த ஆண்டு ஆட்டங்களை பார்ப்போம்.

உத்தப்பா:- ஒருநாள் போட்டிகள் - 20 போட்டிகள், 529 ஓட்டங்கள், 29.94 ஆவரேஜ்... ரஞ்சியில் 5 போட்டிகள், 188 ஓட்டங்கள், 26.85 ஆவரேஜ்.

தினேஷ் கார்த்திக்:- ஒருநாள் போட்டிகள் - 16, 303, 26.09

ரோஹித் ஷர்மா:- ரஞ்சி - 5, 191, 27.28

இவர்கள் மூவரும் எந்த வகையில் கைஃப்-ஐ விட சிறந்தவர்கள்?

கைஃப் - 8, 687, 57.25.

திறம்பட உ.பி-யை வழிநடத்தி இரண்டாவது முறையாக ரஞ்சி இறுதி போட்டி வரை கொண்டு வந்தார். இவரல்லவா மேற்கண்ட மூவர்களுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவரை தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன்? கங்குலி எப்படி பந்தாடப்படுகிறாரோ அதேதான் இவருக்கும் என்பது எனது கருத்து. கங்குலிக்காவது உள்ளும் புறமும் சிறிதளவாவது ஆதரவு உள்ளது. கைஃபுக்காக யார் தெருவில் இறங்கி போராடப்போகிறார்கள்.

இதிலிருந்த தெரிவது என்னவென்றால், திறமை, வயது இன்னபிற சல்லிகள் எல்லாம் இவர்கள்(தேர்வாளர்கள்) கட்டும் சப்பை கட்டே அன்றி வேறில்லை. ஒரு மீட்டர் ஏறினால் ஒரு மைல் சறுக்குகிறது. இது தான் இந்திய கிரிக்கெட்.

Sunday, January 20, 2008

பெர்த் பதிலடி, ஐ.சி.சி அணுகுமுறை...

இப்படியான ஒரு பதிலடியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும், 'வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கம்' என வர்ணிக்கப்படும் பெர்த்தில். பெர்த் ஆடுகளத்தில், மணிக்கு 150 கி.மீ மேல் பந்து வீசக்கூடிய மூன்று பந்து வீச்சாளர்கள் மற்றும் நுணுக்கமாக பந்து வீசக்கூடிய க்ளார்க் ஆகியோரின் பந்து வீச்சில் இந்தியா சுருண்டு மூன்று நாட்களுக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. நடந்ததென்னவோ இந்தியாவின் மிதவேக பந்துவீச்சுக்கும், ஸ்விங்- பந்து வீச்சிற்கும் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் நான்கே நாட்களில் முடிந்தது. சரியான பதிலடிதான். அதுவும் இந்த அடி பெர்த்தில் வைத்து கொடுக்கப்பட்டதுதான் சூப்பர்.

இந்த தொடரின் முதல் நாளிலிருந்தே (மெல்போர்ன் டெஸ்ட்) ஆஸ்திரேலியாவின் பேட்டிங் திணறல் கண்கூடாக தெரிந்தது. இந்திய மட்டையாளர்களும் தங்கள் பங்கிற்கு முதல் போட்டியில் சொதப்பியதால் நமக்கு தோல்வியே மிஞ்சியது. இரண்டாவது சிட்னியில் இந்தியா வென்றிருக்க வேண்டிய ஆட்டம். குறைந்த பட்சம் சமநிலை ஆகியிருக்கவேண்டியது. கொடுமை 'நாட்டாமைகள்' வடிவத்தில் தலைவிரித்தாடியதால் தோற்றோம்.

இரண்டாவது போட்டிக்கு பிறகு பலவித நாடகங்கள் அறங்கேறி மீண்டும் இந்தியா தொடரை தொடர சம்மதித்தது. மூன்றாவது போட்டிக்கு சேவாக்கை தேர்ந்தெடுத்ததன் மூலம் ட்ராவிட்டிற்கு அவரது வழக்கமான one-down இடத்தை கொடுத்து கும்ப்ளே வெற்றிக்கு வித்திட்டார் என்று சொல்லலாம். ட்ராவிட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி அவரும் அணியும் பட்டபாடு முதலிரண்டு ஆட்டத்தை கண்டவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிகள் பெரும்பாலும் ட்ராவிட்டை சார்ந்தே அமைந்திருக்கும் போது அவரை 'பலிகடா'வாக்கியது எந்தவித திட்டமோ தெரியவில்லை. யுவராஜ் அற்புதமான ஆட்டக்காரர்தான். அவரும் அணியில் இடம்பெற வேண்டும் தான். ஆனால் அதற்கான விலை ட்ராவிட் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. யுவராஜ்ஜின் கெட்ட நேரம் அவரும் ஜொலிக்கவில்லை, மூத்தவர்களும் சொதப்பவில்லை. விளைவு - யுவராஜ் இன்னும் காத்திருக்கத்தான் வேண்டும்.

இந்த வெற்றிக்கு காரணியாக குறிப்பிட ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. தொடக்கம் முதலே அடித்து ஆடி பந்துவீச்சாளர்களை நிலைகுலைத்த சேவாக், போராளி கும்ப்ளே, மிடில் ஆர்டர், எல்லாவற்றிற்கும் மேலாக பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சு + பேட்டிங். இப்படி பலகாரணங்களுடன் ஒரு வாரம் முன்பு நடந்த நிகழ்வுகளும் ஒரு வகையில் காரணம். கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்திரேலியவிற்கு சிறிதளவேனும் சவால் கொடுக்கும் அணியாக உள்ளது இந்தியா மட்டுமே. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர் 2-1 என்று இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டியது. குறைந்தபட்சம் 1-1 என்ற சமநிலையிலாவது இருந்திருக்க வேண்டியது. ஆனால், ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் முடிவு 2-2 என்று முடிந்தாலும் வியப்பிற்கில்லை.

இந்த போட்டியிலும் நடுவர்கள் ஒரு சில தவறுகளை செய்தனர். அவையெல்லாம் LBW தீர்ப்புகளில் மட்டுமே. அதெல்லாம் இயல்பான மனிதத் தவறுகளே. கடந்த போட்டியை போல Catch-களில் கூத்து நடக்கவில்லை. மூன்றாவது நடுவரின் சொத்தப்பல்களும் நடைபெறவில்லை. இக்கட்டான சூழலில் ஆசாத் ரவூஃபும், பில்லியும் போட்டியை திறமையாக கையாண்டார்கள்.

ஸ்டீவ் பக்னரை தொடரிலிருந்து வெளியேற்றியதன் மூலம் ஐ.சி.சி தற்காலிகமான தீர்வை வேண்டுமானால் தந்திருக்கலாம். இதே போன்று தவறுகள் தொடரும்போதெல்லாம் நடுவரை நீக்கினால் கிரிக்கெட் கேலிக்கூத்தாகிவிடும் என்பதை ஐ.சி.சி உணர வேண்டும். தீர்வாக, கூடுதல் நடுவர்களை Elite panel-ல் சேர்த்து நன்கு பயிற்சியளிக்க வேண்டும். தொழில் நுட்ப உதவிகளை நடுவர்களும் வீரர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சட்டங்களை வகுக்க வேண்டும். எல்லா தீர்ப்புகளும் சரியான தீர்ப்புகளாக அமைய முடியாதுதான். சில தவறுகள் நேரலாம். ஆனால், முடிந்த அளவு தவறுகளை கணிசமாக குறைக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஐ.சி.சி விரைந்து செயல்பட வேண்டும். இத்தனை சுவையான டெஸ்ட் கிரிக்கெட்டை காக்கும் பொறுப்பு தற்போது அவர்கள் கையில்தான்.

இறுதியாக, செல்லும் இடங்களிலெல்லாம் இப்போதுதான் (சில ஐந்தாறு ஆண்டுகளாகத்தான்) இந்தியா வெல்ல தொடங்கியுள்ளது. இதற்கு முன்பெல்லாம் கவாஸ்கர்களும், பட்டோடிகளும், கபில்தேவ்களும் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இனியாவது, வெளிநாட்டு தொடர்களில் ஒரு வெற்றியோடு திருப்தியடைந்து விடாமல் தொடர்ந்து வெற்றிகளை பெற முயற்சிக்க வேண்டும். நிச்சயம் இந்த அணியால் அது முடியும். அது பல முறை நிறுவப்பட்டுள்ளது. நேற்றும். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். சந்தேகிக்க முடியாத திறமையுள்ளவர்கள் உள்ள அணி, அத்துடன் பண பலமும் உள்ளது. வேறென்ன வேண்டும் பிறகு. கடின உழைப்பும் ஒற்றுமையும் தவிர.

பெர்த்தில் அற்புதமாக ஆடிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!!

Thursday, January 3, 2008

மூவருமா இப்படி?

நடந்து வரும் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மீள்வரவு நன்றாகவே அமைந்தது ஆர்.பி. சிங்கின் அற்புதமான பந்து வீச்சு மூலம். ஆனாலும் அதற்கு உலை வைக்கும் விதமாக அமைந்தது நேற்று (முதல் நாள்) நடுவர்கள் தந்த தீர்ப்புகள்.

ஸ்டீவ் பக்னர், சில காலமாகவே இந்தியர்களின் கொலை வெறியை தூண்டி வருபவர். இவரைப் பற்றி பலமுறை இந்திய அணி புகார் கொடுத்ததும் நினைவிருக்கலாம். இவர், அதுபற்றியெல்லாம் கவலையில்லாமல் மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வருகிறார். நேற்று அவர் சைமண்ட்ஸிற்கு கொடுத்த வாழ்க்கையால், சைமண்ட்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

அவர் மட்டுமல்ல, ஆஸி அணித்தலைவர் பாண்டிங் 17 ஓட்டங்கள் எடுத்திரிந்த நிலையில் 'தல' கங்குலியின் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்தார். இதை இல்லையென்று சொன்னவர் மற்றொரு நடுவர் மார்க் பென்ஸன். ஆனால், இவர் தனது தவற்றை இன்னொரு தவறின் மூலம் இந்தியாவிற்கு உதவினார். அதாவது இன்ஸைட்-எட்ஜ் ஒன்றிற்கு பாண்டிங்கை (55 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்) lbw முறையில் அவுட் வழங்கினார். இருந்தாலும் இந்தியாவிற்கு 38 ஓட்டங்கள் நட்டமே. இந்தியாவிற்கு சாதகமானலும் இதுவும் தவறான தீர்ப்பே என்பதில் இருவேறு கருத்தில்லை.

சரி, இந்த இரண்டு நடுவர்களுக்கும் தீர்ப்பளிப்பது அத்தனை சுலபமல்ல, பலவகையான சிக்கல்கள் நடுவர்களுக்குள்ளது, ரசிகர்களின் கூச்சல்களால் இவர்களுக்கு மட்டையில் பந்து படும் சத்தம் கேட்பதில் சிக்கலுள்ளது என்று சல்லியடித்தால், மூன்றாவது நடுவருக்கு என்ன சிக்கலுள்ளது? இந்த போட்டியின் மூன்றாவது நடுவர் ஆஸியின் ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்ட். இவரும் சைமண்ட்ஸுக்கு புத்தாண்டு பரிசை வழங்கினார். ஒரு ஸ்டம்பிங் அவுட்டை இல்லையென்று சொன்னார். இத்தனைக்கும் இவர் அமர்ந்திருப்பது பலவகையான முன்னேற்றமடைந்த தொழில்நுட்பங்களுக்கு முன்.

எனக்கென்னவோ மூன்றாவது நடுவரின் தீர்ப்பு மிகுந்த ஒருதலையாகவே படுகிறது. மற்ற இருவரையாவது மன்னித்து விடலாம். எத்தனையோ முறை கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தின் தேவை குறித்து இடையிடையே பேசி ஓய்ந்தாலும், மூன்றாவது நடுவரின் இத்தகைய பாதாள சறுக்கல்களின் மூலம், இதில் தொழில்நுட்பந்தான் உண்மையான காரணியா என்ற நெருடலை ஏற்படுத்துகிறது. இதற்கு முடிவுதான் என்ன என்பது ஐ.சி.சி-யின் ஒருதலை சாரா முடிவுகளைப் பொறுத்தே இருக்கும்.

இதுபோலவே இந்தியாவிற்கெதிராக செயல்பட்ட மற்றொரு நடுவர் தற்போது காணாமல் போன அசோக்-டி-சில்வா. இவரும் ஸ்டீவ் பக்னருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல.

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா வெல்ல வேண்டும்? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக?