Tuesday, January 30, 2007

உலகக் கோப்பைக்கான இந்திய அணி

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளன. மார்ச் மாதம் 13-ந் தேதி வெ.இ மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் துவங்குகிறது 2007 உலகக் கோப்பை. இதற்கான இறுதி அணி பட்டியலை பங்கேற்கும் அணிகளை வரும் பிப்ரவரி 13ந்தேதிக்குள் சமர்பிக்குமாறு ஐ.சி.சி கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு பிப்ரவரி 11 அல்லது 12ந்தேதியில் நடைபெறும் என இந்திய தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

எல்லா அணிகளும் வரும் உலகக் கோப்பைக்காக ஆயத்தம் செய்து வருகின்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, தெ.ஆ, நியூசிலாந்து, பாக்கிஸ்தான் ஆகிய அணிகள் வெற்றிக்கான ஃபார்முலாவை (சரியான காம்பினேஷன்) ஓரளவு கண்டுபிடித்து தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்க ஆயத்தமாகிவிட்டன. இதில் ஆஸ்திரேலியா பற்றி சொல்லவே வேண்டாம். நான்காவது முறையாக கோப்பையை வென்றாலும் நான் வியப்படையப் போவதில்லை. வெ.இ அணி கூட இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்பு வரை நல்ல முறையிலேயே ஆடி வந்துள்ளது. ஆனால், இந்திய அணிதான் (இங்கிலாந்து அணியை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை) 11 பேர் பொறுக்கி எடுப்பதற்கே படாத பாடு பட்டு வருகிறது இல்லாத சோதனைகள் எல்லாம் செய்து வருகிறது. காவஸ்கர் வேறு இந்திய அணியே கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார்.

இதுவரை உள்ள சூழ்நிலையை வைத்தும் எனக்கிருக்கும் கொஞ்சம் நஞ்சம் கிரிக்கெட் அறிவை வைத்தும் உலக் கோப்பைக்கான அணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என அலசலாம் என்றெண்ணியதால் விளைந்ததே இப்பதிவு. இந்திய தேர்வுக்குழு என்ன செய்யப் போகிறதோ அது நமக்கு தேவையில்லை. இது போல அமைந்தால் அணிக்கு நலம் என என்னுடைய கண்ணோட்டத்தில்.

துவக்க ஆட்டக்காரர்கள்:
1. கங்குலி:- பல புருவங்களை உயர்த்த செய்து, அணிக்கும் மீண்டு(ம்) வந்திருக்கும் வங்கப்புலியின் தற்போதைய ஆட்டம் ஐயங்களுக்கிடமின்றி அவருடைய பழைய ஃபேவரிட் இடத்தை (Favourite Position) பெற்றுத்தந்திருக்கிறது. அணித் தேர்வில் கேப்டனுக்கு அடுத்தபடியாக உறுதி செய்யப்பட்டவர் இவராகத் தான் இருக்கும். வெல்கம் பேக் ப்ரின்ஸ்.

2.உத்தப்பா:- வெ.இ எதிராக நடைபெற்ற சென்னை ஆட்டத்தில் இவருடைய ஆட்டத்தை தொ.கா.யில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பயமறியா இளங்காளை. பின்னி பெடலெடுக்கிறார். இவரை இந்தியா கடந்த ஒராண்டு காலமாக கண்டுகொள்ளாமல் தவறு செய்து விட்டதோ என தோன்றியது. நல்ல எதிர்காலம் உண்டு இவருக்கு.

மிடில் ஆர்டர்:
3.சச்சின்:- சமீப காலமாக ஓட்டங்கள் எடுக்க தினறினாலும் இவருக்கெதிராய் நாக்கு மேல் பல் போட்டு பேச ஆளில்லை. யார் பேச முடியும் இவருடைய சாதனைகளைப் பார்த்தால்? இவர் நினைத்தால் கண்டிப்பாக சிறப்பாக ஆட முடியும். மனதில் அவரைப்பற்றி அவருக்குள்ள ஐயங்களை அவரே களைந்து களமிறங்கும் பட்சத்தில். இவருடைய அனுபவம் கை கொடுக்கும்.

4.ட்ராவிட்:- அணித்தலைவர் என்பதை விட இவருடைய ஆட்டம் அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். முன்பு போல் அலுப்படையச் செய்வதில்லை இவருடைய ஒருநாள் போட்டி ஆட்டங்கள். விரைவாக ஓட்டங்கள் எடுப்பதில் நல்ல முன்னேற்றமுள்ளது. 5 வது பந்து வீச்சாளரை கையாலுவதில் திறமையை வளர்த்தால் நல்லது.

5.யுவ்ராஜ்:-இவர் முழு தகுதி பெற்றிருந்தால் மட்டுமே இவரை அனுப்ப வேண்டும். இல்லையேல் கைஃபிற்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சென்னை போட்டியில் இவருடைய உடல் தகுதியில் எனக்கு முழு நம்பிக்கையில்லை.

6.சேவாக்:- என்னடா இது சேவாக்கிற்கு இடமுண்டா என எண்ணாதீர்கள். இவர் 50 ஓட்டங்கள் எடுத்தாலே போதும் இந்தியா பகுதி வென்றது போல். ஆம், துவக்க ஆட்டக்காரராக இல்லாவிடிலும் இவரால் சாதிக்க முடியும். கொஞ்சம் பொறுப்புணர்வு வேண்டும். இவர் இல்லாவிடில் நமது கார்த்திக் விளையாட வேண்டும்.

7. தோனி:- இவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இவருடைய ஆட்டம் பற்றி யாருக்கும் சொல்லத் தேவையில்லை. :)

பந்து வீச்சாளர்கள்:
8. இர்ஃபான்:- நிச்சயமாக உலகக் கோப்பை போட்டியில் நன்றாக பந்து வீசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மனதிலிருந்து 'தான் ஒரு பேட்ஸ்மேன்' என்பதை நீக்கினாலே அவருடைய ப்ராப்ளம் தீர்ந்தது.

9. கும்ப்ளே:- இந்தியாவின் நீண்ட கால மேட்ச் வின்னர் டெஸ்டில். உலகக் கோப்பை போட்டியில் ஆடப்போகும் பலநாட்டு புது வீரர்கள் இவருடைய பந்து வீச்சில் தடுமாறுவார்கள்.

10. ஜாஹிர்:- அற்புதமாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார் தற்போது.

11.ஸ்ரிசாந்த்:- இவருக்கு ஆடும் 11 பேரில் நிச்சயமாக வாய்ப்பளிக்க வேண்டும். இவரின் sprit எனக்கு பிடிக்கும்.

மேலே கைஃப் மற்றும் கார்த்திக்குடன் சேர்த்து 13 வீரர்களின் பெயரை நான் கூறிவிட்டேன். மேலும் 2 வீரர்களாக ஹர்பஜன் மற்றும் முனாஃப் (உடல் தகுதியில்லையெனில் அகார்கர்) சேர்க்கப்பட வேண்டும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்னுடைய தேர்வைப் பற்றி. உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

பறக்கும்... ஸ்டம்பு பறக்கும்..

வேகப்பந்து வேதாளங்களின் (என்னைப் போன்ற) திறமைக்கு இது ஒரு சிறிய சான்று. அவ்வளவுதான். பாருங்கள் வக்கார் யூனுஸின் இந்த யார்க்கர் எப்படி லாராவின் லெக்-ஸ்டம்பை பெயர்த்தெடுக்கிறது என்று. உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனின் விக்கெட் வேகப்பந்து வேதாளங்களில் தலை சிறந்தவர்களில் ஒருவர் மூலம் பிடுங்கி எறியப்படும் கண்கொள்ளா காட்சியை கண்டுகளியுங்கள்.

Monday, January 29, 2007

இனி எல்லாம் டி.டி.யில்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து விளையாட்டுகளும் கண்டிப்பாக அரசு
தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் காட்டப்படவேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள தனியார் தொலைக்காட்சிகள்
போட்டிகள் ஒளிபரப்பை இடையில் வரும் விளம்பரங்கள் இன்றி தூர்தர்ஷனுடன் பகிர்ந்து
கொள்ள வேண்டும். இதற்காக தூர்தர்ஷன் அந்த தொலைக்காட்சிகளுக்கு எந்த பணமும் கொடுக்க
வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அறிவிப்பு மூலம் விளையாட்டு சேனல்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும்
என்று கருதப்படுகிறது. ஏனெனில் பல விளையாட்டு சானல்கள் விளையாட்டு ஒளிபரப்பு உரிமை
பெற்று அதனிடையே வரும் விளம்பரங்கள் மூலமும் மற்றும் கட்டண சானலாக வைத்திருப்பதன்
மூலமும் வருவாய் ஈட்டி வருகின்றன.

இந்தியா சம்பந்தமான அனைத்து விளையாட்டுகளும் இலவசமாக தூர்தர்ஷனில்
ஒளிபரப்பாகும் பட்சத்தில் இந்த கட்டண சானல்கள் மதிப்பிழந்து போகும். இதனால் இந்த
போட்டிகளிடையே விளம்பரம் கொடுப்பதற்கும் நிறுவனங்களும் தயக்கம் காட்டும் நிலை
ஏற்படும்.

ஏற்கனவே முதலில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இதே அறிவிப்பு வந்த போது உரிமை
பெற்ற நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி வழக்கு நிலுவையில் உள்ளது எனபது
குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பல முக்கியமான விளையாட்டுகளை
தேர்ந்தெடுத்து அந்த விளையாட்டு போட்டிகள் மக்களுக்கு இலவசமாக சென்று சேர்வதை உறுதி
செய்கின்றன. அதே போனற ஒரு நிலையை கருத்தில் கொண்டு தான் இந்தியாவிலும் இது போன்ற
உத்தரவு பிறந்திருப்பதாக பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு பட்டியலில் இடம் பெறும் விளையாட்டுகளை தகவல் மற்றும்
ஒளிபரப்பு அமைச்சகம் விளையாட்டு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து வெளியிடுகிறது. இதன்
மூலம் ஈட்டப்படும் வருவாயில் 25 சதவீதம் பிரசார் பாரதிக்கு கிடைக்கும்.


நன்றி msn tamil

உலகக்கோப்பையில் கங்குலி துவக்க ஆட்டக்காரர்

இவ்வுலகில் ஒவ்வொரு விசயங்களும் எவ்வளவு தற்காலிகமானது. நிரந்தரமானது மாற்றம் என்பது மட்டுமே. இல்லையா? இந்திய கிரிக்கெட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை 'அவருடைய இறுதிப்போட்டியே அவர் எப்போதோ விளையாடிவிட்டார்' எனவும் 'கங்குலியின் கதை முடிந்தது' எனவும் கிரிக்கெட் விமர்சகர்களாலும், ஊடகங்களாலும், ஏன் பொது மக்களாலும் கூட விமர்சிக்கப்பட்டார் கங்குலி. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். உலகக் கோப்பைக்கான போட்டிகளில் ஆடும் 11 பேரில் அவர் பெயர் முதலில் உறுதிப்படுத்தப்படுகிறது. இன்று கூட ஒரு பேட்டியில் இந்திய தலைமை தேர்வாளர் திலிப் வெங்க்சர்க்கார் கூறுகையில்: (msn tamil -ல் வெளியான செய்தி)

உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக சவுரவ் கங்குலி
களமிறக்கப்படுவார் என இந்திய அணியின் தேர்வாளர் திலிப் வெங்சர்க்கார்
கூறியுள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கங்குலி சிறப்பாக விளையாடியதாகவும்,
உலகக் கோப்பை போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என தான் நம்புவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.

கடந்த 15 மாதங்களுக்கு பின்னர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்ற கங்குலி
நாக்பூரில் 98 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடக்கூடிய
கங்குலி உலகக் கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று
வெங்சர்க்கார் திட்டவட்டமாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக டெண்டுல்கர் திகழ்வதாக கூறிய
வெங்சர்க்கார் அவரை அணியில் இருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்
கூறினார்.


அதற்குத்தான் முதலிலேயே மாற்றம் ஒன்றே நிலையானது என நான் சொன்னேன். :)

Sunday, January 28, 2007

ஆட்டத்தை தொடங்கலமா?

எல்லாருக்கும் வணக்கம். இந்த தமிழ்மணம் மற்றும் தேன்கூடு ஆகியவற்றின் மூலம் எழுதப்படும் வலைப்பதிவுகளில் பெரும்பாலும் அரசியல், இனம், மொழி, கவிதை/கவுஜை, கதைகள் பற்றியதாகவே இருக்கின்றன. இந்தியாவின் உயிர் துடிப்பான (தேஷ்கா தட்கன் - அப்படித்தாங்க விளம்பரத்துல காட்டுராங்க) கிரிக்கெட்டிற்கென்று எழுதப்படுபவை மிகவும் குறைவு. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் இடையிடையே பதிவுகள் இட்டாலும் யாரும் தனியாக கிரிக்கெட்டிற்காக தொடர்ந்து எழுதவில்லை என்று தெரிகிறது. அந்த குறையை தீர்க்கவே இந்த பவுன்ஸர். சில நேரங்களில் தாக்குதலுக்காக வீசப்படும். சில நேரங்களில் நேரப்போக்கிற்காக வீசப்படும். சில நேரங்களில் வேடிக்கைக்காக வீசப்படும். ஆனால் தொடர்ந்து வீசப்பட்டுகொண்டே இருக்கும்.