Showing posts with label வியர்டு. Show all posts
Showing posts with label வியர்டு. Show all posts

Monday, February 28, 2011

இந்தியாவுக்கு காத்திருக்கிறது ஆப்பு

விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம் ஒருத்தன். அது சரி விடிய விடிய ராமாயணம் சொல்லி தூக்கத்த கெடுத்தவனுக்கு அந்தத் தண்டைனையக் கூட கொடுக்கலைன்னா ராமாயணம் கேட்டதுக்கு என்ன அர்த்தம்? ராமாயணம்னா ”காத்தடிக்குது காத்தடிக்குது” பாட்டுல பிரபுதேவா & co ஆடி காட்டுவாங்களே அத்த மாதிரி சும்ம அஞ்சு செகண்ட்ல சொல்லணும். இப்படி தினுசு தினுசா யோசிச்சு உதாரணம் கொடுத்தாலும் நேத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடந்தது உச்சக் கட்ட கொடுமை. பத்து மணி நேரம் டிவிக்கு முன்னாடி உட்கார்ந்து எச்சில் பண்ணி கடிச்ச நகமெல்லாம் போக, மேட்ச் பாத்த எல்லாருக்கும் இன்னைக்கு மிஞ்சினது நல்லா சோப்புப் போட்டு கழுவின பின்னாடியும் எஞ்சியிருக்கும் விரல் வீச்சந்தான்.

”பவுலிங் கொஞ்சம் சொதப்பல். ஆனா சாகீர் இருக்கிறதனால கொஞ்சம் வலுவானதா இருக்கும்”, “எட்டு பேட்ஸ்மேன் இருக்கோம்ல ஹர்பஜனையும் சேர்த்து அதனால பேட்டிங்க்ல நாம வலுவான அணிதான். பேட்டிங்கை வச்சு ஜெயிச்சிரலாம்.”, “டெண்டுல்கர் எப்படியும் அடுத்த உலகக்கோப்பைக்கு இருக்கப் போறதில்ல. இந்த வருஷம் எப்படியும் வாங்கணும்னு விளையாடுவாரு. அதனால கண்டிப்பா ஜெயிச்சிருவோம்.”, “தோனிகிட்ட என்னமோ ஒண்ணு இருக்குய்யா, என்னத்தையாவது பண்ணி ஜெயிக்க வச்சிர்ராம்ல” இப்படியாக பட்டிதொட்டி எங்கும் ஒரே விதமான குரல்களைக் கேட்க முடிகிறது. 

எதிரணி எந்த அணியா இருந்தாலும் 300க்கு மேல அடிக்கும் வலுவான பேட்டிங் லயனப் இருக்கலாம். டெண்டுல்கர் அடிச்சு ஆடலாம், கோப்பையை ஜெயிக்கனுங்கிற கனவோட வழக்கத்திற்கு மாறாக அஞ்சு சிக்ஸர், அதுவும் சிறந்த ஸ்பின் பவுலர்னு சொல்ற ஸ்வான்னை அநாயசமாக விரட்டலாம். தோத்திட்டிருந்த மேட்ச்சை இந்தியா பக்கம் திருப்பினாண்டா சாகீர்னு இனி சாகீர் புகழ் எக்ஸ்ட்ரா டெஸிபலில் ஒலிக்கலாம். தோனி திடீர்னு லெக் ஸ்பின்னர் டீமுக்கு தேவைனு அவருக்கே உரித்தான அந்த குணகத்தை வெளிப்படுத்தலாம். எல்லாம் நினைத்தது போல நடந்தாலும் வெற்றி நினைத்தது போல கிடைக்காமல் போகலாம் என்பதற்கு நேத்து இந்திய அணிக்கு விழுந்த அடி ஒரு உதாரணம். இது ஒரு அபாய மணி. குறைகள் களையப்படாமல் இருந்தால் எதிர்பாராத சமயத்தில் களையமுடியாத சந்தர்பத்தில் நம்மை பாதிக்கும்னு சொல்வாங்க. நம்ம பவுலிங் தேராது, இவங்களை வச்சிட்டு உலகக்கோப்பை ஜெயிக்கிறது கஷ்டம்னு ஏற்கனவே பேசினாலும், இன்னைக்கு வரைக்கும் பெரிசா ஒரு மாறுதலும் வரலை. அதிலும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு ஆட்டதுக்கு முன்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமா அல்லது ஒரு ஓவர் போட்ட பின்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமான்னு இன்னும் யாருக்கும் தெரியல. முதல்ல அறிவிச்ச பதினைஞ்சு பேர் கொண்ட அணியில இல்லாம இருந்த ஸ்ரீசாந்த்தான் உலகக் கோப்பைல இந்திய அணியின் முதல் ஓவரைப் போட வேண்டிய நிர்பந்தத்தில இந்திய அணி இருக்கு. முணாஃப் படேல் கோயில்ல கொடுக்கிற சக்கரைப் பொங்கல் மாதிரி! நமக்கு யோகம் இருந்தா முந்திரிப்பருப்பு வரும் இல்லைன்னா ஒழுங்கா பிசையாம கிடைக்கும் சோற்றுக்கட்டி.

எப்பேற்பட்ட எதிரணியா இருந்தாலும் எட்டிலிருந்து பத்து ஓவருக்கு மேல் ஒரு விக்கெட்டை எடுக்காமலிருந்தால் அது ஆபத்தானது. இது ஆட்டத் தொடக்கத்தில் நடந்தால் இன்னும் மோசமான விளைவுகளைத் தரும். அதற்கு நேற்றைய ஆட்டம் ஒரு உதாரணம். முதலில் ஸ்ட்ராஸ்-பீட்டர்சன் ஜோடியை பத்து ஓவருக்கு (9.3 ஓவர்) ஆட விட்டார்கள். பின்னர் ஸ்ட்ராஸ்-இயான் பெல் ஜோடியை 20 ஓவருக்கு மேல் (26 ஓவர்) ஆட விட்டார்கள். இதில் சத்தம் அதிகமா இருந்ததால் ஸ்ட்ராஸ் எட்ஜ் கேட்காமல் போனதென சப்பைக்கட்டு வேறு (http://www.rediff.com/cricket/report/world-cup-2011-strauss-edged-it-twice-but-indians-didnt-appeal/20110228.htm). இங்கிலாந்தை இந்தியாவுக்கு நிகரான அணியென நம்பாமல் இந்திய ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன்பே ஷேன் வார்னே ட்வீட்டியது “Looking forward to the game between india and England today should be a cracker.. My prediction a tie!”. ஷேன் வார்னே சொன்ன அளவிற்கு நூறு சதவிகிதம் துல்லியமாக முடிவு தெரியாமல் போனாலும் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு இப்படியொரு சவாலைத் தருமென்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இந்திய அணி பவுலிங்கில் ஜிம்பாப்வேவைவிட மோசமான நிலையிலிருக்கிறது. ஜிம்பாப்வே கூட உலகக்கோப்பையில் இதுவரையிலும் எதிரணியின் ஒரு விக்கெட்டை எடுக்க 26 ஓவர் எடுத்துக்கொண்டதில்லை.

பலவீனம் தெளிவாக கண் முன் தெரிகிறது. பவுலிங்க்கு சாகீரை மட்டுமே நம்பி இருக்கலாகாது. எவ்வளவு நல்ல பவுலராயிருந்தாலும் அவனாலும் ஒரளவிற்கு மட்டுமே அணியை காப்பாற்ற முடியும். 338 ரன் அடித்தாலும் பவுலிங் மோசமாகயிருந்தால் எதிரணி எளிதாக வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. இன்னும் உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்களில் நுழைந்து விட்டால் இந்த பவுலிங்கை நம்பி இந்தியா வெற்றி பெருமென்று கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. இரண்டே வழி. ஒன்று பவுலிங்கை கொஞ்சம் வலுவானதாக்குவது. அது இனிமேல் நடப்பது கொஞ்சம் கஷ்டம். ஒருவேளை ஆசிஷ் நெஹ்ரா முழு உடல் தகுதியுடன் வந்து ஒழுங்காக பந்து வீசி சாகீருக்கு தகுந்த இணையாக இருந்தால் நடக்கலாம். இரண்டாவது, டாஸ் ஜெயித்தால் பவுலிங்கை தேர்வு செய்து எதிரணி எவ்வளவு அடித்தாலும் நமது பலமான பேட்டிங்கைக் கொண்டு சேஸ் செய்வது. இல்லையென்றால் நாக் அவுட் சுற்றில் ஏதேனும் ஒரு எதிரணி வீரர் 150+ ஸ்கோர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

”Do onto others as they would do onto you; only do it first!”னு சொல்வாங்க. தோனிக்கு இவ்விஷயம் இந்நேரம் தெரிந்திருக்கலாம். அல்லது தோனி இந்நேரம் இப்படியும் யோசித்துக் கொண்டிருக்கலாம். எதற்கும் ஷேன் வார்னேவிடம் கோப்பையை இந்தியா வெல்லுமாவென ஆரூடம் கேட்டு வையுங்கள்.
 
எழுதியவர்: கோ.கணேஷ்

Monday, March 26, 2007

வியர்டு ஃபாஸ்ட் பவுலர்

நம்ம அபிஅப்பாவும், மணிகண்டனும் எனக்கு ஆளுக்கொரு பவுன்ஸர் வீசிட்டு போயிட்டாங்க. ஃபாஸ்ட் பவுலருக்கே பவுன்ஸர். புரியலயா? அதாங்க என்னோட வித்தியாசமான் ஐந்து குணங்களை/செயல்களை சொல்லனுமாம். இது என்னடா வம்பா போச்சுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

முதலில், இதுக்கு போயி ஒரு பதிவு போடவா அப்படின்னு ஒரு சோம்பல் மூளையில் ஒரு மணி அடிச்சுது. உலகக் கோப்பை நேரம் வேற. நம்ம பசங்க வேற கொலைவெறியை தூண்டிவிட்டுட்டு போயிட்டாய்ங்க. இந்த மூட்ல இந்த வியர்டு பதிவை எங்கே போடுறதுண்ணு தள்ளிப் போட்டுகிட்டே வந்துட்டேன். இந்தியா தோற்றுப்போன அன்னிக்கு 99.99 % மக்கள்ஸ் ஒருவிதமான வியர்டு மூட்ல தான் இருந்திருப்பாங்க.

சரி, நடந்ததை நினைச்சு என்ன நடக்கப்போகுதுன்னு மனசை தேத்திகிட்டு யோசிச்சப்ப, என்னையே நான் அலச முடிஞ்சது. அதுக்காகவாச்சும் இந்த ரெண்டு பேருக்கும் நன்றி. எனக்குள்ள சில வித்தியாசமன குணங்களை (இதே குணங்கள் உங்களில் பலருக்கு கூட இருக்கலாம்) இங்கே அறியத்தருகிறேன்.

# முன்னாடியெல்லாம் (இப்ப உண்டான்னு தெரியல) ஞாயிற்றுக்கிழமை மதியம் டி.டி-யில் பிறமொழி படம் போடுவாங்க தெரியும்ல. அப்போ கீழே பாத்தீங்கன்னா சப்-டைட்டில் ஆங்கிலத்துல போடுவாய்ங்க. அப்போ ஆரம்பிச்சுது இந்த பழக்கம். அதாவது சப்-டைட்டிலை படிச்சு வசனத்தை புரிந்து கொள்கிறேன் பேர்வழின்னு வீடியோவை பார்க்க மாட்டேன். என்னதான் படத்தை பார்க்க நான் முயற்சி செய்தாலும், கண்ணு தானாக சப்-டைட்டில்லதான் போயி நிக்கும். இப்ப வரைக்கும் இந்த பழக்கம் இருக்கு. பிறமொழி படங்கள் இப்ப பார்த்தாலும் சப்-டைட்டில் ஆஃப் செஞ்சுட்டுதான் பார்க்கிறேன். ஆஃப் செய்ய வழியில்லையேல், வெறென்ன செய்ய சப்-டைட்டிலை படிச்சதோடு திருப்திபட்டுக்க வேண்டியதுதான்.

# நான் ஒரு சரியான மறதி பேர்வழிங்க. கடைக்கு ஒரு பொருள் வாங்கப்போனா கடைக்கு போய் சேர்ந்ததும் என்ன வாங்க வந்தோம்னு மறந்துடுவேன். அந்த அளவுக்கு மறதி. ஊர்ல இருக்கும் போது மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே போவேன். இப்போ ஒன்னும் கவலையில்லை, கடைக்குப் போய் மறந்தாலும் செல்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம். என்ன இலவசாமா ரெண்டு திட்டு வாங்கிகொள்ளவேண்டும். :)

# அப்புறம், நடக்கும் போது என்னமோ உலகப்போரையே நான் தான் போயி நிறுத்தனும். அதான் அவசரமா போறென்னு சொல்ற மாதிரி வேகமாக நடப்பது. சில நேரம் வேகமா நடக்கிறமோன்னு தோணும். உடனே வேகம் குறைத்து நடக்க ஆரம்பிப்பேன். ஆனால், சில நிமிடங்களில் எனக்கே தெரியாது எப்போ வேகம் கூட்டினேன் என்று அந்தளவிற்கு மாறியிருக்கும் நடை வேகம்.

# நம்ம ஊர்ல தெருவில் நடக்கும் போது, கடைகளில் மாட்டப்பட்டிருக்கும் போர்டுகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் ஃபாண்ட்ஸ் (Fonts) பார்த்து ரசித்தவாறு நடப்பது. அதே போர்டுகளின் மூலையில் Art by அப்படிங்கிற இடத்துல யாரு வரைஞ்சிருக்கான்னு கையொப்பம் இருக்கும். அதையும் பார்த்தவாறு நடப்பது வழக்கம். இத்தனைக்கும் நடையில் அதே வேகம் இருக்கும். :)

இவ்ளோதாங்க எனக்குத் தெரிஞ்சு என்கிட்ட இருக்கும் வியர்டு பழக்கங்கள். மற்றபடி, என்னுடன் இருக்கும் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இன்னும் சிலவை தெரிந்திருக்கலாம். என்னடா இவன் கிரிக்கெட்டை பற்றி ஒன்னு கூட வியர்டா சொல்லலைன்னு பார்க்கிறீங்களா? கிரிக்கெட் பார்க்க போனாலோ, விளையாட போனாலோ சீரியஸாகிடுவேன். இதெயெல்லாம் கவனிக்க நேரமிருப்பதில்லை. :)

ஆகா, யாராவது அஞ்சு பேரை கோர்த்து விடனுமாமே. எனக்கு அவ்வளவா பதிவர்களை பழக்கமில்லை. சிலரைத்தவிர. பின்னூடமிட்டதோடு சரி. அதனால், இவர்கள் ஏற்கனவே வியர்டு சொல்லிட்டாங்களா இல்லையான்னு தெரியல. இருந்தாலும் கூப்பிட்டு பார்க்கலாம்.

1. ஆசிப் அண்ணாச்சி
2. முத்துகுமரன்
3. பினாத்தல் சுரேஷ்

மற்றபடி எனக்குத் தெரிந்த பதிவர்களான அபிஅப்பா, தம்பி இருவரும் தங்கள் வியர்டு குணங்களை சொல்லிட்டாங்க. அதனால், அவர்களுக்கு ப்ராக்ஸியாக:

4. கிரேக் சாப்பல்
5. டிராவிட்