Monday, January 29, 2007

இனி எல்லாம் டி.டி.யில்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து விளையாட்டுகளும் கண்டிப்பாக அரசு
தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் காட்டப்படவேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள தனியார் தொலைக்காட்சிகள்
போட்டிகள் ஒளிபரப்பை இடையில் வரும் விளம்பரங்கள் இன்றி தூர்தர்ஷனுடன் பகிர்ந்து
கொள்ள வேண்டும். இதற்காக தூர்தர்ஷன் அந்த தொலைக்காட்சிகளுக்கு எந்த பணமும் கொடுக்க
வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அறிவிப்பு மூலம் விளையாட்டு சேனல்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும்
என்று கருதப்படுகிறது. ஏனெனில் பல விளையாட்டு சானல்கள் விளையாட்டு ஒளிபரப்பு உரிமை
பெற்று அதனிடையே வரும் விளம்பரங்கள் மூலமும் மற்றும் கட்டண சானலாக வைத்திருப்பதன்
மூலமும் வருவாய் ஈட்டி வருகின்றன.

இந்தியா சம்பந்தமான அனைத்து விளையாட்டுகளும் இலவசமாக தூர்தர்ஷனில்
ஒளிபரப்பாகும் பட்சத்தில் இந்த கட்டண சானல்கள் மதிப்பிழந்து போகும். இதனால் இந்த
போட்டிகளிடையே விளம்பரம் கொடுப்பதற்கும் நிறுவனங்களும் தயக்கம் காட்டும் நிலை
ஏற்படும்.

ஏற்கனவே முதலில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இதே அறிவிப்பு வந்த போது உரிமை
பெற்ற நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி வழக்கு நிலுவையில் உள்ளது எனபது
குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பல முக்கியமான விளையாட்டுகளை
தேர்ந்தெடுத்து அந்த விளையாட்டு போட்டிகள் மக்களுக்கு இலவசமாக சென்று சேர்வதை உறுதி
செய்கின்றன. அதே போனற ஒரு நிலையை கருத்தில் கொண்டு தான் இந்தியாவிலும் இது போன்ற
உத்தரவு பிறந்திருப்பதாக பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு பட்டியலில் இடம் பெறும் விளையாட்டுகளை தகவல் மற்றும்
ஒளிபரப்பு அமைச்சகம் விளையாட்டு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து வெளியிடுகிறது. இதன்
மூலம் ஈட்டப்படும் வருவாயில் 25 சதவீதம் பிரசார் பாரதிக்கு கிடைக்கும்.


நன்றி msn tamil

No comments: