Monday, February 28, 2011

யாருக்கு வேணும் இந்த உலகக்கோப்பை??

முன்னெப்போதும் போல் இந்த உலக கோப்பை என்னிடம் பெரிய ஆர்வத்தையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அளவுக்கு அதிகமான போட்டிகளாலோ, இந்திய அணியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாததினாலோ, இரண்டு மூன்றாண்டுகளாக என்னை புதியதாய் தொற்றியிருக்கும் புகைப்படக்கலையின் மீதுள்ள ஆர்வத்தினாலோ இருக்கலாம். அது மட்டுமல்ல... கிரிக்கெட் விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் கூட நம்ப முடியவில்லை. ஏதோ ஒன்று இங்கு எழுதவும் தடுத்தே வந்திருக்கிறது. ஒரு வழியாக சில நாட்களுக்கு முன் நண்பன் சுபைர் மற்றும் சில இணைய நண்பர்களினுடனான உரையாடல் முலம இத்தளம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. எனக்கும் எழுத சிறிய நாட்டம் வந்துள்ளது.

20 ஓவர் போட்டிகளால்... எங்கே டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடுமோ என என் போன்றோர் கவலையுற, பாதிக்கப்பட்டதென்னவோ ஒருநாள் போட்டிகளே. எனக்கும் கூட ஒருநாள் போட்டிகளில் நாட்டம் குறைந்துள்ளது. இப்படி ஒரு சூழலில் இந்த உலகக்கோப்பை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க வார போட்டிகளும் மந்தமாகவே இருந்தன.

எந்த அணிக்கு இந்த உலகக்கோப்பை தேவை? அதவாது ஏதோ ஒரு வகையில்... எந்த நாட்டில் இந்த உலகக்கோப்பை வெற்றி கிரிக்கெட்டை உயிர்பிக்கும் என பார்த்தால்.... பண பலத்தாலும் நம்மைப் போன்ற கிரிக்கெட் பைத்தியங்களும் இருக்கும் வரை இந்தியா இதை வென்றாலும் இல்லையென்றாலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஒரு பாதிப்பும் இல்லை. கேவலமாக தோற்றாலும் நம்மால் கிரிக்கெட்டை ஒதுக்க முடியாது. இந்தியாவின் தற்போதைய முதன்மை வணிகமே கிரிக்கெட்தான். அப்புறம்... ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பலமான கிரிக்கெட் உட்கட்டமைப்பால் கிரிக்கெட்டிற்கு உ.கோப்பை வெற்றி இல்லையென்றாலும் பாதிப்பு இருக்காது. நியுசிலாந்து அணிக்கு தற்போதைய ஒரே பிரச்சனை அணித்தலைவர் மட்டுமே. அதுவும் விரைவில் சரியாகிவிடும் என நம்பலாம். அதனால் அவர்களின் எதிர்கால கிரிக்கெட்டும் நெருக்கடியில் இல்லை.

ஆனால், ஒரு காலத்தில் முடி சூடா அரசர்களாக இருந்த மேற்கிந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் பல்வேறு வகைகளில் சமீப காலமாக கிரிக்கெட்டில் நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. மே.இந்திய இளைஞர்களின் இரத்தத்தில் ஊறியிருந்த கிரிக்கெட் ஆர்வம் இப்போது குறையத்தொடங்கியுள்ளதாம். மே.இந்திய தென்னை மரங்களை உலுக்கினால் முன்போல் வேகப்பந்து வீச்சாளர்கள் விழுவதில்லை. அவர்கள் கூடைப்பந்து, பேஸ்-பால் ஆட்டங்களை விரும்ப தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். பல நாடுகளை ஒருங்கிணைத்து போவதே பெரிய பாடாகியுள்ளதாம். பாகிஸ்தானிலோ... அரசியல் சூழல், போதை அடிமைகள், மற்ற அணிகள் அங்கு சென்ற விளையாட முடியாத சூழ்நிலை போன்றவை அவர்களின் கிரிக்கெட்டை மிகவும் பின்னோக்கி தள்ளியிருக்கிறது. இரு அணிகளுக்குமே இருபது நாட்களுக்கு முன் வரை அணித்தலைவர் யாரென்பதே முடிவில்லாத நிலை.

இந்த இரண்டு அணிகளிலும் ஒரு காலத்திலும் திறமைக்கு பஞ்சம் இருந்ததில்லை. இவர்களுடைய மக்களுக்கு கிரிக்கெட்டின் மீது மீண்டும் பழையது போல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்கள் கிரிக்கட் அமைப்பை வலுப்படுத்தவும் உ.கோப்பை வெற்றியைப்போல் வேறெதுவும் உதவாது.

நம்மை போன்ற ஆர்வலர்களுக்கும் கிரிக்கெட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, தெ.ஆ - யோடு குறுகிய இடத்தில் சுழலாமல் வேகப்பந்து வேங்கைகளின் மண்ணிலும் ஒளிரவேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். நடக்குமா?

4 comments:

எல் கே said...

மேற்கிந்திய அணி வெற்றிப்பெற்றால் மகிழ்வேன்

Naufal MQ said...

ஆமாங்க... இருபது ஆண்டுகளா மந்தமா இருக்கானுங்க.

SURVEJ said...

//(இன்னொரு க்ரூப்பு சச்சின் 100 அடிச்சதாலதான் இந்த மேட்ச இந்தியா ஜெயிக்கலைன்னு சொல்லுவாய்ங்க)//

of course he is not a match winning player, see the records.... and we need confident with our team... india ll win the cup

Naufal MQ said...

டே..மச்சான் ஹசன், நீ கமெண்டை வேற இடத்துல போட்டுட்டேன்னு நினைக்கிறேன். :)