
Sunday, April 3, 2011
தோனி, நீ தெய்வ மச்சானடா!!!

1996-2011
Thursday, March 31, 2011
தோனி ஒரு மந்திரவாதி...

- எந்த பிட்ச் ஆனாலும் தன் சொந்த பிட்ச் போல் விளையாடும் சேவாக்கின் அதிரடி ஆட்டம்.
- யார் என்ன சொன்னாலும், அனைத்து இளம் வீர்ர்களையும் தண்ணி வாங்கச் செய்யும் டெண்டுல்கரின் ஆட்டம்.
- தன் பொறுப்புணர்ந்து நிதானமாக ஆடிய ரைனா.
- 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் ரியாஸ்.
- இந்திய பவுலர்களின் ஆட்டம்..
- நெஹ்ராவின் நேர்மை... ( அப்ரிடி கேட்ச் விவகாரத்தில்)
- ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று ஆடிய மிஸ்பாவின் ஆட்டம்.
- பிரசண்டேஷன் செருமனியில்...அஃப்ரிடியின் உருக்கமானப் பேச்சு...
எப்படியோ இந்தியா ஃபைனலுக்கு வந்து விட்டது...இந்தியா....மும்பை...சச்சின்...
இந்தியாவிற்கு அனைத்துமே சாதகம் தான்...இந்தியா சாதிக்குமா..?
Thursday, March 24, 2011
ஆடுகளத்தில் அனல் பறக்குமா இன்று?
சரி... இன்னிக்கு போட்டி பத்தி பேசலாம். எனக்கு பிடிச்ச ரெண்டு அணியும் ஆடுகளத்தில் இறங்குது இன்னிக்கு. ஆஸ்திரேலியா முன்னாடி மாதிரி இல்லாததால், ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கே தன்னம்பிக்கை குறைவாகத்தான் இருக்கு. இல்லன்னா இப்படி வாயை பொத்திகிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க. இந்நேரம் சவடால்கள் பல விடப்பட்டிருக்கும். அடக்கி வாசிப்பது ஆஸ்திரேலியத்தனம் இல்லை. :)
ஆஸ்திரேலியாவின் பலவீனமாக நான் நினைப்பது பாண்டிங்கோட ஃபார்ம் மற்றும் சுழல் பந்து சுழியில் சிக்குவது. இது ஒன்னுக்கொன்னு தொடர்புடையாதலால் கொஞ்சம் சிக்கல்தான். இருந்தாலும் இவர்களின் வெறித்தனமான ஆட்டத்தால் எதையும் சாதிப்பார்கள்.
இந்தியாவின் பலவீனம் பேட்டிங் கடைசியில் சொதப்புவதும், பந்துவீச்சு தொடக்கத்தில் சொதப்புவதும். இந்தியாவின் வெற்றியை சேவாக் கொஹ்லி மற்றும் யுவராஜின் ஆட்டங்கள் முடிவு செய்யும். யுவராஜ் ஜொலித்த தொடர்கள் இந்தியாவிற்கு சாதகமா இருந்துள்ளது ஒரு ப்ளஸ்.
இந்த இரு அணிகளிமுள்ள சில ஆட்டக்காரர்களுக்கு சில வகைகளில் 'இறுதி' ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. பாண்டிங்கிற்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம். அவருக்கும் சச்சினுக்கும் (ஜாகிருக்கும்) இறுதி உலகக்கோப்பை ஆட்டமாக அமையலாம். தோனிக்கு அணித்தலைவராக இறுதி ஆட்டமாக அமையலாம்.
ஆஸ்திரேலியா தோற்று வெளியேறினால் பெரியளவில் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படும். இந்தியா தோற்று வெளியேறினால்??..... இதுலாம் நமக்கு புதுசா?? நாமும் நமது ஸ்டார்கள் ஐ.பி.எல்-ல் அடிச்சு நொறுக்குவதை காண ஆயத்தமாகிவிடுவோம்.
ஆக மொத்தம் ஆடுகளத்தில் இன்னிக்கு அனல் பறக்கும் என எதிர் பார்க்கலாம்.
Sunday, March 20, 2011
இந்தியா - மேற்கிந்திய தீவுகள்
இன்றைய போட்டியில் தோற்றால் இந்தியா ஸ்ரீலங்காவை காலிறுதியில் சந்திக்கும். இன்றைய போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியாவை சந்திக்கும்.
அப்படியானால், இந்தியாவின் இந்த போட்டி நமது அரையிறுதி வாய்ப்பினை அசைத்துப் பார்க்கவே போகிறது.
உளவியல் ரீதியாக இந்தப் போட்டியில் தோற்றால் இந்தியாவிற்கு வென்றாக வேண்டுமென்ற உத்வேகம் இல்லாமல் போய்விடும் (killer instinct).
இந்தியா எல்லாப் போட்டிகளும் வெல்லும் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லலாம்.
தென்னாப்பிரிக்காவுடன் நாம் தோற்றவுடன் எனக்கு முதலில் தோன்றியது 2003 உலகக் கோப்பை தான். அப்போது லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றோம். ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். இப்போது சவுத் ஆப்ரிக்காவுடன் தோற்றிருக்கிறோம். இறுதியில் அவர்களை எதிர்கொள்ளலாம். அப்போது பான்டிங் போல் இப்போது ஸ்மித். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் எப்போதும் உள்ளது.
நம்பிக்கை தானே சார் வாழ்க்கை....
Thursday, March 17, 2011
முதல் சுற்றின் முக்கியமான போட்டி
வெஸ்ட் இண்டீஸ் - ஆறு புள்ளிகள் பெற்று இருந்தாலும், இனி வரும் இரு போட்டிகளும் பெரிய அணிகளுக்கு எதிராக, ஒரே மைதானத்தில். நாளைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் இந்தியா பங்களாதேஷ் ரசிகர்களும் சேர்ந்து நன்றி சொல்வார்கள். பங்களாதேஷில் சிறப்புப் பிரார்த்தனைகளே துவங்கியிருப்பார்கள் இந்நேரம். வெஸ்ட் இண்டீஸின் பலம் என்று எதையுன் அறுதியிட்டுக் கூறி விட முடியாது. ரோச் தனது வேகத்தால் நெதர்லாந்து, பங்களாதேஷ் அணியைத் திணறடித்தார். அந்த வேகம் இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு எதிரில் எடுபடுமா என்பது சந்தேகம். சென்னை எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கை கொடுத்தது இல்லை. ஆகவே இரண்டு ஸ்பின்னர்களோடு மூன்றாவதாக கிறிஸ் கெயிலின் பார்ட் டைம் ஸ்பின்னையும் உபயோகப் படுத்தலாம். வழக்கம் போல பென் இரண்டாவது ஓவர் போடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.
பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸில் “அடித்து” ஆடக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கன்ஸிஸ்டண்டாக ஆடக் கூடியவர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாளைய ஆட்டத்தில் அனுபவம் மிக்க சந்தர்பாலும் சர்வனும் பிரகாசிக்கலாம். பூம் பூம் கெயிலும், பூம் பூம் பூம் போலார்டும் ஸ்வானை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெஸ்ட் இண்டீஸின் வெற்றி இருக்கிறது.
இங்கிலாந்துக்கு இது வாழ்வா சாவா போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குப் போக வாய்ப்பு (உறுதி இல்லை) இருக்கிறது என்பதால் இந்த அணி தன் முழுத் திறமையையும் காட்டி ஆடும் என்பதில் எந்த மாற்று எண்ணமும் இல்லை. ஆனால் கெவின் பீட்டர்சனின் பார்ட் டைம் ஆஃப் ப்ரேக், தென்னாப்பிரிக்காவுடன் வெற்றியைத் தேடித் தந்த பந்துவீச்சு, இல்லாதது இங்கிலாந்துக்கு ஒரு பெரும் குறையே. ஸ்பின்னுக்கு ஸ்வானை மட்டுமே நம்பியிருப்பது இங்கிலாந்துக்கு பின்னடைவே. மற்ற ஸ்பின்னர்கள் யாரும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை என்பது ஸ்ட்ராஸை யோசிக்க வைக்கும் விசயங்கள். எதிர்பாராத வகையில் நன்றாக பந்து வீசி வரும் டிம் ப்ராஸ்னன் இந்தப் போட்டியிலும் கை கொடுப்பார் என்று நம்புவோம்.
பேட்டிங் பொறுத்த வரையில் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்களில் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். ரோச்சை அடித்து நொறுக்கும் பவர்ஃபுல் பேட்ஸ்மென்கள் வரிசை கட்டி இருக்கிறார்கள். ஸ்பின் பவுலிங்தான் பெரும் பிரச்சனை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்ததைப் போல நடக்க வாய்ப்பு மிக அதிகம். (இடது கை பந்து வீச்சாளர் பீட்டர்சன் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்ததை மறக்க வேண்டாம்). வெஸ்ட் இண்டீஸில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகமே.
இந்தப் போட்டியில் டாஸ் மிக மிக முக்கியம். சென்னையின் ட்யூ ஃபேக்டர் உலகப் பிரசித்தி பெற்றது. இரண்டாவதாக ஃபீல்டிங் செய்யும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ட்யூ மிகுந்த இடையூறாக இருக்கும் என்பதச் சொல்லத் தேவையில்லை. டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங் எடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.
மொத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து காத்திருக்கிறது.
Saturday, March 12, 2011
ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு..! ஆனா பினிஸிங் இல்லையப்பா..!!
ஆட்டம் ஆரம்பித்ததும் டெண்டுல்கர், சேவாக் அதிரடியில் ஆட்டம் கண்டது, நாக்பூர் அரங்கம். ஒவ்வொரு இந்திய ரசிகனும் அனுபவித்து பார்க்க வேண்டிய அந்த ஆரம்ப கட்ட, ஆட்டம் உண்மையில் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய ஒன்று..!டெண்டுல்கரும், சேவாக்கும் சேர்ந்தாடும் போது, வழக்கமாக டெண்டுல்கர், பொறுமையை கடைபிடிப்பார்...அந்தப் பொறுமை இன்று மிஸ்ஸிங்க். பத்து ஓவர்களில் 87 ரன்கள், 33 பந்துகளில் டெண்டுல்கரின் அரைசதம் என அதிரடியாக ஆரம்பித்த ஆட்டம், சேவாக்கின் விக்கெட்டிற்குப் பிறகு சற்று நிதானமானது..
ஒரு கட்டத்தில் 267 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, பேட்டிங்கில் இந்தியாவை அடிச்சிக்க யாராலும் முடியாது என்று மார் தட்ட வைத்த இந்திய அணி, சில நிமிடங்களிலேயே வெறும் 30 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையைக் கண்டு ரசிகர்கள்..இந்திய அணி மீதான நம்பகத்தன்மையை இழந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
என்ன நடக்கும் இனி???
பங்களாதேஷின் இந்த வெற்றிக்குப் பிறகு க்ரூப்-பி என்னவாகும்? என்ன வேணும்னாலும் நடக்கலாம். எந்த எந்த டீம் செமிஃபைனலுக்குப் போவும்னு சொல்றது கஷ்டம்தான்.
1. இந்தியா disqualify ஆக வாய்ப்பிருக்கா??
இருக்கு. எப்படி? இந்தியா இனி வர்ற ரெண்டு மேட்சுமே தோத்து, பங்களாதேஷ், ரெண்டு மேட்சுமே ஜெயிச்சி, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸை நல்ல ரன் ரேட் வித்தியாசத்துல ஜெயிச்சா, இந்தியாவுக்கு ஆப்பு. ஆனா இது நடக்குறது கொஞ்சம் கஷ்டம்தான். இந்தியா ரெண்டுல ஒரு மேட்ச் கண்டிப்பா ஜெயிச்சிரும். அதுனால இது ஒரு ஆப்சனே இல்லை.
இப்போ பங்களாதேஷ், நெதர்லாந்து கூடவும், தென்னாப்பிரிக்கா கூடவும் ஜெயிக்க முயற்சி செய்யணும். அவங்க நல்ல நேரம் தென்னாப்பிரிக்கா கூட அவங்க ஆடும்போது இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் முடிஞ்சிருக்கும். அதை வச்சி அவங்க ஜெயிச்சே ஆகணுமா, இல்ல தோத்தாக்கூட போதுமானு முடிவு செஞ்சிக்கலாம்.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸைத் தோக்கடிக்கிறது மட்டுமில்லாம, தென்னாப்பிரிக்கா பங்களாதேஷையோ, இல்லை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கூடயோ தோக்கணும்னு ப்ரே பண்ணிட்டே இருக்கணும்.
தென்னாப்பிரிக்கா இனி இருக்கிற மூணு போட்டியில ரெண்டு போட்டியில ஜெயிச்சாக்கூட போதும். அந்த ரெண்டு போட்டியில ஒரு போட்டி பங்களாதேஷ் கூடவா இருந்துட்டா அவங்களுக்கு ரொம்பவே சேஃப்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு இனி ரெண்டு மேட்சுமே பெரிய டீமோட. அதுல ஒரே ஒரு மேட்சாவது ஜெயிச்சிட்டாங்கன்னா போதும். அந்த டீம் இங்கிலாந்தா இருந்தா அவங்க ப்ளேஸ் சேஃப்.
ஆக எல்லாத்துக்கும் பாஸிபிளிட்டி இருக்கிற க்ரூப்பா க்ரூப்-பி மாறி உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு ஒரு சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்திருக்கிறது கிரிக்கெட்டுக்கும் உலகக் கோப்பைக்கும் நல்லது.
ஒரு முக்கியமான விசயம் இதுல என்னன்னா, இதுக்கெல்லாம் அடி போட்டது, அயர்லாந்தோட வெற்றி. ஐசிசி அசோசியேட் நாடுகளை அடுத்த உலகக் கோப்பையில சேத்துக்கிறதில்லைங்கிற முடிவை அவங்க மறுபரிசீலனை செய்யறது நல்லது.
இனி நாளைய மேட்சைப் பார்ப்போம். இந்தியா இதுவரைக்கும் தோல்வியைச் சந்திக்கவே இல்லைன்னாலும், இமாலய வெற்றி இன்னும் பெறவே இல்லை. பவுலிங் ரொம்பவே வீக்கா இருக்கு. நெதர்லாந்து கூடவும், அயர்லாந்து கூடவுமே சரியா விளையாடாத இந்தியாவோட டாப் ஆர்டர், தென்னாப்பிரிக்காவோட கேர்ஃபுல்லா ஆடுவாங்கன்னு எதிர்பார்க்கலாம். ஆனா, டாப் ஆர்டர் நல்லா ஆடுனா மிடில் ஆர்டர் கடைசியில சொதப்பிடுது. நாளைக்கி எல்லா டிபார்ட்மெண்ட்ஸும் சரியா ஆடணும். அனேகமா சாவ்லாவுக்கு பதிலா அஷ்வின் உள்ள வரலாம். நெஹ்ராவுக்கு பதிலா முனாஃப் பட்டேல் உள்ள வரலாம். இந்தியாவோட ஃபீல்டிங் இன்னும் இம்ப்ரூவ் ஆகணும்.
தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து கூட தோத்த அதிர்ச்சியில இருந்து மீண்டு வந்திருப்பாங்க. C டேக் எப்போ அவங்களை விட்டுப் போகுமோ தெரியலை. அவங்களோட டாப் பவுலர் இம்ரான் தாஹிரும் இஞ்சூர்டா இருக்கிற இந்த நிலமையில அவங்க பவுலிங்கும் கொஞ்சம் வீக்காத்தான் இருக்கும். காலிஸ் இந்தியாவோட நடந்த டெஸ்ட் தொடருக்கு அப்புறம் இன்னும் பழைய ஃபார்முக்கு வரலை. தன்னோட ஃபேவரைட் ஆப்பொனண்ட்ஸ் கூட காலிஸ் பழைய ஃபார்மை மீட்டெடுப்பாரா?? எ.பி.டிவில்லியர்ஸ் ஸ்பின் ஆடுறதுல புலி. ஆம்லா ஆசிய பிட்சஸ்ல இந்திய பவுலர்ஸை எதிர்கொள்ளக் கூடிய திறன் படைச்ச ஆள். தென்னாப்பிரிக்காவோட ஃபீல்டிங் வழக்கம்போல சிறப்பாவே இருக்கு.
இந்த ப்ளஸ் மைனஸ் எல்லாம் பார்க்கும்போது தென்னாப்பிரிக்காதான் இந்த மேட்சுல ஃபேவரைட்ஸ்னு தோணுது. ஆனா கிரிக்கெட்ல என்ன வேணும்னா நடக்கலாம்.
நாளைக்கி சில பல பத்திரிகைகள் இப்பிடி எழுதும் - “Last time when Sachin faced these opponents in Indian soil in an ODI, he scored a 200".
Anyways, ஒரு பரபரப்பான போட்டி காத்துட்டு இருக்கு.
பதிவிட்டவர்,
முகிலன்
Wednesday, March 9, 2011
என்ன அடி.. என்ன அடி...
ரெண்டு ஆட்டத்தை வென்றவுடனே பாக்கிஸ்தான் அணி என்னமோ வலிமையான அணின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு ஒரு சின்ன எச்சரிக்கையா அமைஞ்சதுதான் கனடா ஆட்டம். எப்படியோ தட்டு தடுமாறி 180+ ஓட்டங்களை எடுக்கவிடாம ஜெயிச்சுட்டாங்க. அப்பவே மண்டைக்குள்ள மணி அடிச்சுச்சு. பாக்கிஸ்தானும் (இந்தியாவும் என பிராக்கெட்ல போட தேவையில்லைன்னு நினைக்கிறேன்) தேறுவது மாதிரி தெரியலன்னு. காரணம், அவங்க பந்துவீச்சுல அஃபிரிடி தவிர வேற யாரும் பெருசா கிழிக்கிற மாதிரி தெரியல. அப்புறம், தொடக்க ஆட்டமும் ரொம்ப பலவீனமா இருக்கு.
நினைச்ச மாதிரியே கனடா தவற விட்டதை நியுசிலாந்து செய்து காட்டிடுச்சு. கடைசி அஞ்சு ஓவர்ல 100 ரன்ஸ். என்ன அடி... என்ன அடி!!! இதுக்கு நம்ம இந்திய பந்துவீச்சே பரவாயில்லை(நம்மள நல்லவனா ஆக்கிட்டாய்ங்களே) போல. இப்போதைக்கு ஆஸ்திரேலியா தவிற வேற எவனும் தேருற மாதிரி தெரியல.
இன்னிக்கு இந்திய அணிக்கு ரொம்ப கடினமான சோதனை. நமக்குத்தான் சோமாலியா கூட ஆடுனாலும் ஆட்டம் 'டஃப்'பா இருக்குமாமே. சாயாக்கடையில பேசிக்கிட்டாய்ங்க. :)
Sunday, March 6, 2011
நான் சொல்றது சரியா ??
அன்புடன் எல்கே
Monday, February 28, 2011
இந்தியா - இங்கிலாந்து அலசிக் காய்ப் போடுதல்
ஸ்ட்ராங்கஸ்ட் பேட்டிங் லைன் அப்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனாலும் சச்சின் அவுட்டானதும் சீட்டுக்கட்டு மாதிரி சரியிறது இன்னும் (22 வருசமா) மாறவேயில்லையே? இதுவா ஸ்ட்ராங்க் பேட்டிங் லைன் அப்?
சரி முதல்ல இருந்து வருவோம். உலக அதிசயமா தோனி டாஸ் ஜெயிச்சிட்டாரு. அதுக்கே அவருக்கு மேட்ச் ஜெயிச்ச மாதிரி ஒரு சந்தோசம். எல்லாரும் எதிர் பார்த்த மாதிரி பேட்டிங் எடுத்தாரு. ஸ்ட்ராஸ் நான் டாஸ் ஜெயிச்சிருந்தா பேட்டிங்தான் எடுத்திருப்பேன்னு சொன்னாரு. (நல்ல வேளை ஜெயிக்கலை. ஜெயிச்சிருந்தா 400 ரன் அடிச்சிருப்பாய்ங்க).
இண்டியாவோட பேட்டிங்ல இன்னைக்கு சிறப்பம்சம்னா சச்சின் செஞ்சுரிதான் (இன்னொரு க்ரூப்பு சச்சின் 100 அடிச்சதாலதான் இந்த மேட்ச இந்தியா ஜெயிக்கலைன்னு சொல்லுவாய்ங்க). ஆரம்பத்துல சேவாக் அடிக்க, அடுத்து கம்பீர் அடிக்க, தல அடக்கிவாசிச்சிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல அவரோட ஸ்ட்ரைக் ரேட் 60 தான் இருந்தது. அப்ப பேட் மாத்தினாரு. அதுக்கப்புறம் அந்த பேட்ல இருந்து ரன் மழைதான். என்னைக்கும் இல்லாத திருநாளா 5 சிக்ஸ் அடிச்சாரு. அதுவும் ஸ்வான் செகண்ட் ஸ்பெல் வரும்போது ரெண்டு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடிச்சி தல அவரை வரவேற்ற விதம் இருக்கே..ஆகா ஓகோ.. அட்டகாசம். தல அவுட்டாகும்போது அவர் ஸ்கோர் 115 பால்ல 120 ரன். அவர் அவுட்டாகிப் போனதுக்கப்புறம் தோனியும் யுவராஜும் கொஞ்ச நேரம் தடவினாங்க. கடைசியில 11 ரன்னுக்கு 4 விக்கெட் குடுத்து (டிம் ப்ரெஸ்னனுக்கெல்லாம் 5 விக்கெட்டு) 338 ரன் எடுத்து 49.5 ஓவர்லயே ஆல் அவுட் ஆகிட்டாங்க. கண்டிப்பா சச்சின் ஆடிட்டிருந்த வேகத்துக்கு 40-50 ரன் கம்மியாத்தான் எடுத்திருந்தாங்க.
சரிதான், வார்ம் அப் மேட்ச்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரா இருநூத்திச் சொச்ச ரன்னையே டிஃபண்ட் செஞ்சாங்களே, 338 டிஃபண்ட் செய்ய மாட்டாங்களாங்கிற என் போன்ற ரசிகர்களோட நினைப்புல மண்ணு லாரியவே கொட்டினாய்ங்க ஸ்ட்ராஸும், கே.பியும். கே.பி யுவராஜ் வரத் தேவையில்லாமலே முனாஃப் பட்டேலுக்கு ஒரு ஆச்சரிய அதிர்ச்சி விக்கெட் குடுத்துட்டு அவுட்டாகிப் போனாரு. ஆனா, அது ஆட்டத்தோட போக்குல எந்த மாற்றத்தையும் கொண்டு வரலை. ஸ்ட்ராஸ் ஒரு பக்கம் அடி வெளுத்துக்கிட்டு இருக்க, இந்தப் பக்கம் ட்ராட் அவருக்குக் கம்பெனி குடுத்துட்டு இருந்தாரு. ஒரு வழியா ட்ராட்டை சாவ்லா தூக்கிர, அடுத்து வந்த இயான் பெல் ஸ்ட்ராஸுக்குக் கம்பெனி குடுத்தாரு. ரெண்டு பேரும் சேர்ந்து இந்தியாவோட கையில இருந்து வெற்றியை ரொம்ப தூரத்துக் கொண்டு போயிட்டு இருந்தாங்க.
இதுக்கு நடுவுல UDRSஇன் ஷார்ட்-கமிங் வெள்ளிடை மலையாத்(நாங்களும் இந்த வார்த்தையை உபயோகிச்சிட்டோம்ல) தெரிய வச்ச ஒரு சம்பவம் நடந்தது. ப்யூஷ் சாவ்லா போட்ட பந்து இயன் பெல்லோட கால்ல பட, அம்பயர் நாட் அவுட் குடுத்துட்டாரு. இந்தியா அதை ரிவ்யூ செஞ்சாங்க. ப்ளம்ப் எல்பியா இருந்தாலும், பெல்லோட கால் ஸ்டம்ப்ல இருந்து 2.5 மீட்டருக்கு மேல இருந்ததால ஹாக் ஐ டெசிசனை ஃபீல்ட் அம்பயர் டெசிஷன் ஓவரைட் செஞ்சிருமாம் (ஏன்னா இந்த தூரத்துக்கு ஹாக் ஐ அக்யூரசி குறைவா இருக்கும்). அதுனால நாட் அவுட் குடுத்துட்டாங்க. பெல் கிட்டத்தட்ட பெவிலியன் போயிட்டாரு. ஒரு வேளை அது அவுட்டாகியிருந்தா கதை வேற மாதிரி ஆகியிருக்கலாம்.
அதுக்கப்புறம் இங்கிலாந்து பேட்டிங் பவர் ப்ளே எடுக்க, ஜாகிர் கான் வந்து அடுத்தடுத்து பெல்லையும், ஸ்ட்ராஸையும் அவுட்டாக்கி இந்தியாவுக்கு ஒரு நம்பிக்கையைக் கொண்டு வந்தாரு. மேட்சும் டைட்டாப் போச்சி. கடைசி ரெண்டு ஓவருக்கு 29 ரன் எடுக்க வேண்டியிருந்த நிலையில ப்யூஷ் சாவ்லா வந்து ரெண்டு சிக்ஸ் குடுத்து இங்கிலாந்துக்கு ஒரு ஹோப் குடுத்தாரு. கடைசி ஓவர்ல 14 ரன் எடுக்க வேண்டியிருந்த நிலையில பந்து போட வந்தாரு முனாஃப் பட்டேல். ஷஹாசத் அடிச்ச அந்த ஒரு சிக்ஸலயே இந்தியா தோத்துரும்ங்கிறது உறுதியான நிலையில இங்கிலாந்து தடவி ஒரு வழியா டைல முடிச்சாங்க.
இன்னைக்கி இந்தியாவோட எந்த டிப்பார்ட்மெண்டுமே ஒழுங்கா ஆடலை. பேட்டிங்க்ல 338 ரன் எடுத்திருந்தாலும், ஆட ஆரம்பிச்ச வேகத்துக்கும், “ஸ்ட்ராங்க் பேட்டிங் லைன் அப்”ங்கிற டேகுக்கும் இது பிலோ பார் ஸ்கோர்.
இந்த டோர்னமெண்ட்ல பர்ஸ்ட் பத்து ஓவர்ல இன்னைக்கி இங்கிலாந்து எடுத்த 77 ரன் தான் அதிக பட்ச ஸ்கோர். இதுல இருந்தே இந்தியாவோட பவுலிங் எவ்வளவு மோசமான நிலமையில இருக்குங்கிறதும் தெரியுது. ஃபீல்டிங்கும் மோசமா இல்லைன்னாலும் ரொம்ப ஆவரேஜ் ஃபீல்டிங்.
முதல்ல இந்தியா இந்த ஓட்டைகளை அடைக்கணும். 5 பவுலர்களோட ஆடுறது கூட தப்பே இல்லை. மூணு ஸ்பின்னர், ரெண்டு பேஸ் பவுலரோட வர்றது முயற்சிக்கலாம். அஷ்வினை டீமுக்குள்ள கொண்டு வந்து பவுலிங் ஓப்பன் செய்ய வைக்கிற ஒரு ஆப்ஷனையும் முயற்சி செஞ்சி பார்க்கலாம். அடுத்த போட்டி அயர்லாந்தோட. இதையெல்லாம் முயற்சி செஞ்சி பார்க்க இந்தப் போட்டி நல்ல ப்ளாட்ஃபார்மா இருக்கும். செஞ்சி பார்ப்பாங்களா?
யாருக்கு வேணும் இந்த உலகக்கோப்பை??
20 ஓவர் போட்டிகளால்... எங்கே டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடுமோ என என் போன்றோர் கவலையுற, பாதிக்கப்பட்டதென்னவோ ஒருநாள் போட்டிகளே. எனக்கும் கூட ஒருநாள் போட்டிகளில் நாட்டம் குறைந்துள்ளது. இப்படி ஒரு சூழலில் இந்த உலகக்கோப்பை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க வார போட்டிகளும் மந்தமாகவே இருந்தன.
எந்த அணிக்கு இந்த உலகக்கோப்பை தேவை? அதவாது ஏதோ ஒரு வகையில்... எந்த நாட்டில் இந்த உலகக்கோப்பை வெற்றி கிரிக்கெட்டை உயிர்பிக்கும் என பார்த்தால்.... பண பலத்தாலும் நம்மைப் போன்ற கிரிக்கெட் பைத்தியங்களும் இருக்கும் வரை இந்தியா இதை வென்றாலும் இல்லையென்றாலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஒரு பாதிப்பும் இல்லை. கேவலமாக தோற்றாலும் நம்மால் கிரிக்கெட்டை ஒதுக்க முடியாது. இந்தியாவின் தற்போதைய முதன்மை வணிகமே கிரிக்கெட்தான். அப்புறம்... ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பலமான கிரிக்கெட் உட்கட்டமைப்பால் கிரிக்கெட்டிற்கு உ.கோப்பை வெற்றி இல்லையென்றாலும் பாதிப்பு இருக்காது. நியுசிலாந்து அணிக்கு தற்போதைய ஒரே பிரச்சனை அணித்தலைவர் மட்டுமே. அதுவும் விரைவில் சரியாகிவிடும் என நம்பலாம். அதனால் அவர்களின் எதிர்கால கிரிக்கெட்டும் நெருக்கடியில் இல்லை.
ஆனால், ஒரு காலத்தில் முடி சூடா அரசர்களாக இருந்த மேற்கிந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் பல்வேறு வகைகளில் சமீப காலமாக கிரிக்கெட்டில் நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. மே.இந்திய இளைஞர்களின் இரத்தத்தில் ஊறியிருந்த கிரிக்கெட் ஆர்வம் இப்போது குறையத்தொடங்கியுள்ளதாம். மே.இந்திய தென்னை மரங்களை உலுக்கினால் முன்போல் வேகப்பந்து வீச்சாளர்கள் விழுவதில்லை. அவர்கள் கூடைப்பந்து, பேஸ்-பால் ஆட்டங்களை விரும்ப தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். பல நாடுகளை ஒருங்கிணைத்து போவதே பெரிய பாடாகியுள்ளதாம். பாகிஸ்தானிலோ... அரசியல் சூழல், போதை அடிமைகள், மற்ற அணிகள் அங்கு சென்ற விளையாட முடியாத சூழ்நிலை போன்றவை அவர்களின் கிரிக்கெட்டை மிகவும் பின்னோக்கி தள்ளியிருக்கிறது. இரு அணிகளுக்குமே இருபது நாட்களுக்கு முன் வரை அணித்தலைவர் யாரென்பதே முடிவில்லாத நிலை.
இந்த இரண்டு அணிகளிலும் ஒரு காலத்திலும் திறமைக்கு பஞ்சம் இருந்ததில்லை. இவர்களுடைய மக்களுக்கு கிரிக்கெட்டின் மீது மீண்டும் பழையது போல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்கள் கிரிக்கட் அமைப்பை வலுப்படுத்தவும் உ.கோப்பை வெற்றியைப்போல் வேறெதுவும் உதவாது.
நம்மை போன்ற ஆர்வலர்களுக்கும் கிரிக்கெட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, தெ.ஆ - யோடு குறுகிய இடத்தில் சுழலாமல் வேகப்பந்து வேங்கைகளின் மண்ணிலும் ஒளிரவேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். நடக்குமா?
Sunday, April 29, 2007
உலகக் கோப்பை பரிசளிப்பு காட்சிகள்
பரிசளிப்பு காட்சிகள்:
ஹாட்ரிக்!!!
இலங்கை ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமெனில் அது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கக் கூடாது. ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக இருந்தாலொழிய ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது என நேற்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதுபோலவே மழை குறுக்கிட்டு 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் மேலும் மழை குறுக்கிட்டால் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவான நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது எனக்கு சிறிது ஆச்சர்யம் தான். காரணம், மழை குறுக்கிடும் (ஏற்கனவே குறுக்கிட்டு) போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமான சூழல் உருவாகும். அப்படியிருக்க துணிந்து பாண்டிங் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

அவ்வளவுதான், கில்கிறிஸ்ட் வெறி பிடித்தது போல் ஒரு ஆட்டம் ஆடினார். அவருடன் பேட் செய்து கொண்டிருந்த ஹேடன் இந்த உலகக் கோப்பையின் அதிகமான ஓட்டங்களை குவித்திருப்பவர். ஆனால், கில்கிறிஸ்ட் ஆடிய ஆட்டத்தின் முன்பு ஹேடன் ஒரு கொசு போல தோற்றமளித்தார். இலங்கை இரண்டாவது பேட் செய்வதால், எந்த சூழ்நிலையிலும் மழை குறுக்கிடலாம், அதனால் டக்வர்த்-லூயிஸ் முறையில் இலங்கை எந்த நிலையிலும் முன்னிலை பெற இயலாதவாறு ஓட்ட விகித்ததை அதிகரித்து கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் எளிதாக 300 ஐ தொடும் என நினைத்தேன். ஆனால் இறுதி சில ஓவர்களை இலங்கை அணியினர் சிறப்பாக வீசினர். 38 ஓவர்களில் 281 என்பது கடினமான இலக்கை கொடுத்தனர். துருப்புச் சீட்டுகளை சூப்பர்-8 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக ஒளித்து வைத்த இலங்கையின் தந்திரம் பலிக்கவில்லை. வாஸுக்கும் முரளிக்கும் ஈவு இரக்கமில்லாமல் அடி விழுந்தது.
இதனை சேஸ் செய்வது என்பது கடினம். ஆனால், ஒரு வேளை மழை குறுக்கிட்டு டார்கெட் மாற்றப்பட்டால்? அது மட்டுமே போட்டியை சுவராசியமாக்கியது. மற்றபடி ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலக்கை விரட்டிய போதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை இலங்கை வெல்லும் என்று. இலக்கு அப்படி. இலங்கைக்கு வாய்ப்பு உள்ளதெனில் அது மழை மூலமே மட்டுமே இருந்திருக்க முடியும். இறுதியில் நினைத்தது போலவே ஆஸ்திரேலியா வென்றது. இடையிடையே மழை குறுக்கிட்டது இலங்கைக்கு எரிச்சலை தந்திருக்கும்.


இத்தனை பெரிய போட்டியின் இறுதியான முத்தாய்ப்பான கட்டத்தில் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கியது மைதானம். ஆஸ்திரேலியாவின் கொண்டாட்டம் இருளில்தான் நடந்தது.
எது எப்படியோ ஆஸ்திரேலியா மட்டுமே இந்த கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணி. ஆஸ்திரேலியாவுக்கும் உலகின் மற்ற அணிகளுக்குமிடையேயான தூரம் அதிகரித்துள்ளது. இந்திய அணிக்கான சீருடை தைக்க கொடுத்து நான்காண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யச் சொல்லியிருக்கும் வாண்டுகள் கூட்டம் அடுத்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடுமா?
Player of the Final - Gilchrist
Player of the World cup - McGrath
Well deserved. Aussies are real champions. பாராட்டுக்கள்!
இடையிடையே போட்டியை பற்றி தொலைபேசியில் அலசிய (குழப்பிய) அபிஅப்பா மற்றும் சோகத்துடன் உரையாடிய தம்பிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Saturday, April 28, 2007
இறுதிப் போட்டி - அசத்தப் போவது யாரு?
இந்த உலகக் கோப்பை பல அதிர்ச்சிகளுடன் தொடங்கி ஒருவாறு இறுதி நிலையை எட்டியிருக்கிறது. பாக் & இந்திய வெளியேற்றம். அதைத் தொடர்ந்து பாப் உல்மரின் கொலை. இப்படி வரிசையாக அதிர்ச்சிகளுடன் தொடங்கியது. பாப் உல்மரின் கொலையாளி பற்றி அறிவிப்பதில் உலகக் கோப்பை நடந்து வருவதால் தாமதம் காட்டினார்கள் என்றே தொன்றுகிறது. நாளையே கூட கொலையாளி யார் என்பது அதிர்ச்சி முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, அது பற்றி இப்போ நமக்கெதுக்கு. பிறகு பார்க்கலாம்.

கடந்த 25 போட்டிகளுக்கும் மேலாக தோல்வியே கண்டிராத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. அவர்களது அதிரடியான கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் எதிரணியினரை வதம் செய்து வருகின்றனர். அவர்களது மனதிடமே இதற்கு முதன்மையான காரணம். எளிதில் அசராத தளராத மனதிடம்.
ஆஸ்திரேலியாவின் கில்க்ரிஸ்ட் இந்த உலகக் கோப்பையில் அந்தளவிற்கு அடித்து அசத்தவில்லை என்றாலும் அவரின் பங்காளி ஹேடன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் 621 ஓட்டங்களை இதுவரை குவித்து முதலிடத்தில் உள்ளார். அதன்பின்பு வரும் பாண்டிங்கும் 502 ஓட்டங்கள் குவித்து மூன்றாமிடத்தில் உள்ளார். க்ளார்க்கும் 428 ஓட்டங்கள் குவித்து நல்ல ஃபார்மில் உள்ளார். பின்னர் வரும் ஸைமண்ட்ஸ், ஹஸ்ஸி & வாட்ஸனுக்கு இதுவரை நல்ல முறையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்தால் வெளுத்து வாங்கும் திறமையுள்ளவர்கள் இவர்கள். இப்படிப்பட்ட பேட்டிங் வரிசை ஆஸ்திரேலிய அணிக்கு பலம்.
பந்துவீச்சை பொருத்தவரை மெக்ராத் 25 விக்கெட்டுகள் இந்த உலகக் கோப்பையில் முன்னனியில் உள்ளார். இவரைப் பற்றி அதிகம் குறிப்பிட தேவையில்லை. இதுவே அவரது இறுதி சர்வதேச போட்டியாக இருக்கும். அதனால் தன்னால் முடிந்தளவு வெற்றிகரமாக Log-out செய்வதில் குறி(வெறி?)யாக இருக்கிறார். இன்று இவருக்கு இரையாகப் போவது யார் யாரோ? பின்பு, ப்ரெட் லீயின் இடத்தை நிரப்ப வந்த ஷான் டைட் தொடக்க போட்டிகளில் சிறிதி தினறினாலும் பின்னர் அற்புதமாக வீசத் தொடங்கிவிட்டார். 23 விக்கெட்டுகளுடன் முரளியுடன் இரண்டாமிடத்தை பங்கு போட்டுள்ளார். இவரும் இலங்கைக்கு மிகுந்த சவாலாக இருக்கக் கூடும். பின்னர், ப்ராக்கன், ஹாக், வாட்ஸன் மற்றும் ஸைமண்ட்ஸ், க்ளார்க்கும் பந்து வீச்சிற்கு பக்க பலமாக இருப்பார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் இன்னொரு பலம் அவர்களது மின்னல் வேக களத்தடுப்பு. ஆக, ஆஸ்திரேலியா மனபலம், திறமை மற்றும் என்னைப் போன்றோரின் ஆதரவுடன் களமிறங்க இருக்கிறது. ஆஸ்திரேலியா வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகமிருப்பதாக நான் நினைக்கிறேன்.
இலங்கை அணியும் திறமையில் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. இது இந்த உலகக் கோப்பையில் நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு வரும் போது அத்தனை வெற்றிகரமான தொடர் வெற்றிகளுடன் அவர்கள் வரவில்லை. இருந்தாலும் உலகக் கோப்பைக்கேற்ப பொங்கியெழுந்து விளையாடி வருகிறார்கள். இலங்கையின் இந்த உலகக் கோப்பையின் ஆட்டம் எனக்கு 2003 உலகக் கோப்பையின் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது. இறுதிப் போட்டிக்கு முன்பு வரை இந்தியா ஆஸ்திரெலியாவிடம் மட்டுமே தோற்றிருந்தது. இலங்கையும் அதுபோலவே ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இதுவரை தோற்றுள்ளது. 2003 இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு நேர்ந்தது இன்று இலங்கைக்கும் நேருமா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
இலங்கை அணி ஆஸ்திரேலியா போலவே ஒரு balanced அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஜெயசூர்யா போன்ற தொடக்க ஆட்டக்காரர், ஜெயவர்தனே (529 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்) போன்ற க்ளாசிக் மட்டையாளர், சங்கக்கரா மற்றும் தில்ஷான் போன்ற திறமையாளர்கள், சில்வா போன்ற இளம்புயல்கள் உள்ள பேட்டிங் இலங்கை அணிக்கு பலம். ஆனால், ஆஸ்திரேலியா போன்றதொரு consistant scoring இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கை அணிக்கு மிகுந்த பலம் அவர்களது பந்து வீச்சுதான். வாஸ் & முரளி போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சளார்களின் பந்து வீச்சை சமாளிப்பது ஆஸ்திரேலிய அணியினருக்கு அத்தனை சுலபமாக இருக்காது என்பது ஆஸ்திரேலிய அணியினருக்கே தெரியும். 250+ இலக்கை எளிதாக Defend செய்யக் கூடியவர்கள் இவர்கள். பின்னர் மலிங்கா. இவர் இந்த உலகக் கோப்பை சிறப்பாக பந்து வீசி வந்தாலும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக எப்படி வீசுவார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கனும். எனக்கென்னமோ சந்தேகமாகத்தான் உள்ளது. அடுத்ததாக, மஹ்ரூஃப், தில்ஷான் & ஜெயசூர்யாவின் பந்து வீச்சும் கை கொடுக்கும்.
ஆஸ்திரேலியா போலவே இலங்கையும் ஒரு நல்ல களத்தடுப்பை கொண்டுள்ள அணி என்பதை மறுக்க இயலாது.
ஒரு அணி மற்ற அணிகளுடன் என்னதான் சிறப்பாக ஆடி வென்றாலும் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் போதுதான் ஒரு அணியின் உண்மையான திறமையை அறிய இயலும். நாம் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும் கிரிக்கெட்டின் தற்போதையா உரைகல் ஆஸ்திரேலியாதான். இது வேதனையான கசப்பான உண்மை. என்ன செய்வது அவர்களுக்கு சவால் விடும் ஒரு அணி இன்றில்லை. இலங்கை தங்கள் திறமையை இன்று ஆஸ்திரேலியாவுடன் உரசிப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா நான்காவது முறையாக கோப்பையை வெல்லுமா? ஹாட்ரிக் சாதனை படைக்குமா? இலங்கை இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா? 1996 ஆஸ்திரேலியாவுடன் மோதி வென்றதை போல மீள்வெற்றி கொள்ளுமா? இன்று தெரியும்.
எனக்கென்னமோ 2003 உலகக் கோப்பை ஞாபகம் வந்து தொலைக்கிறது. :)
அமீரகக் குறிப்பு: இன்றும் சிலருக்கு காதில் புகை வரும் என்பதே எனது கணிப்பு.
Thursday, April 26, 2007
அரை இறுதி 2 - சொதப்புவது எப்படி?
இந்தியாவும் தெ.ஆப்பிரிக்காவும் கிரிக்கெட் உலகின் முடிசூடா 'சொதப்பிகள்' (Chokers) என கிரிக்கெட் உலகம் நன்கறியும். இந்தியாவையாவது ஒருமுறையில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தெ.ஆப்பிரிக்கர்கள் படு கேவலம். பெரிய போட்டிகள் என்றால் போட்டி தொடங்கும் முன்பே எதிரியின் காலில் விழுந்து சரணடைந்து விடுவார்கள் போல. கை கூடி வந்த வாய்ப்பை 4 பந்துகள் மீதமிருக்க 1999-ல் கோட்டை விட்டவர்கள்தானே.
நேற்றும் அப்படித்தான் இருந்தது இவர்களின் ஆட்டம். நம்ம ஆஸ்திரேலியாவின் திட்டம் சூப்பர். இந்த உலகக் கோப்பையில் இதுவரை புதிய பந்தை வீசி வந்த ஷான் டைட்டிற்கு பதிலாக 'ஃபெர்பெஃக்ட்' மெக்ராத் கையில் புதிய பந்து கொடுக்கப்பட்டது. அதுவே தெ.ஆப்பிரிக்க அணியினருக்கு தமது திட்டத்தில் மண் விழுந்தது போலிருந்திருக்கும். அவர்கள் 'ஷான் டைட்டுதான் புதிய பந்து வீசுவான். அவனுக்கு தொடக்கத்துலேயே ரெண்டு காட்டு காட்டுனா மேட்ச் நம்ம கண்ட்ரோலுக்கு வந்துடும்' என்பது போல் திட்டங்கள் இருந்திருக்கும். ஷான் டைட் இளைஞர். பதட்டம் காரணமாக சொதப்பிவிடக் கூடும் என அறிந்த ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பை தொடக்கம் முதலே 'புதிய பந்தை எனக்குத் தா' என அழுது அடம் பிடித்த மெக்ராத்திடம் ஒப்படைத்தது. அதுவே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.
தெ. ஆப்பிரிக்க அணியினர் ஆடிய விதம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. விக்கெட்டுகள் விழுந்தாலும் தடுத்து ஆடுவதை விட்டு விட்டு வருபவர்கள் எல்லாம் மட்டையை வீசினார்கள். மோசமான ஷாட் செலக்க்ஷன் மூலம் அவர்கள் விக்கெட்டை வீசியெறிந்தார்கள். இன்றாவது ஒரு நல்ல போட்டியை ஆஸ்திரேலியாவிற்கெதிராக தருவார்கள் என்ற நம்பிக்கையில் டி.வி முன்னமர்ந்தவர்கள் மீது சேறடித்து சென்றார்கள்.
ஆஸ்திரேலியாவின் இந்த ஃபார்ம் இறுதிப் போட்டியிலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. மற்ற அணிகளுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்தே வருவது சிறிது வேதனையே. இலங்கை அணியினர் குறைந்த பட்சம் போராடவாவது செய்வார்களா?
Wednesday, April 25, 2007
அரை இறுதி 1 - பலே ஜெயவர்தனே!
இதில் ஜெயவர்த்தனேயின் பொறுமையான பொறுப்பான ஆட்டத்தை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். 'ஜெயசூர்யா அவுட்டானா இலங்கை அவ்ளோதான். பெரிய ஸ்கோர் ஒன்னும் வராது' அப்படின்னு நிறைய பேர் நினைச்சிருந்தாங்க. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை நேற்று. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஜெயவர்தனே இந்த ஆட்டத்தை [115* (109b 10x4 3x6)]வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தில் முதல் பவுண்டரி வந்தது 47 வது பந்தில் தான். அந்தளவிற்கு பொறுமையாக ஆடியவர் இறுதியில் கியர் மாற்றி ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். அவரது ஆட்டமே இலங்கை வெல்வதற்கு காரணம் என்றால் மிகையாகாது.

250+ எடுத்தாலே வெற்றிகரமாக எதிரணியை மடக்க கூடிய திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இலங்கையில் இருப்பதால் இலங்கை வெல்லும் என்பதில் இருவித கருத்து எனக்குள் எழவில்லை. அதுபோலவே அவர்கள் பந்து வீச்சும் இருந்தது. ஒரு கட்டத்தில் 104/2 (21 ஒவர்களில்) என்ற நிலையில் நியூசிலாந்து இருந்த போது 'சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு சைக்கிள் விழுந்தால் அனைத்தும் வரிசையாக சரிவது' போல நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்து இலங்கை வெற்றியை உறுதி செய்தன.
நியூசிலாந்து அணியின் ஆட்டம் ஒன்றும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது வருத்தமே. ஷான் பாண்ட் முதல் ஓவரை ஓரளவு கட்டுப்படுத்தி வீசியிருந்தால் அவரது அன்றைய நாளின் பந்து வீச்சு தன்மையே மாறியிருக்குமோ என்னவோ. முதல் ஓவரில் லெக்-சைடிலேயே பந்து வீசி ரன்களை வாரிக்கொடுத்தார். பின்வந்த ஓவர்கள் அவர் ரன்களை கட்டுப்படுத்தினாலும் நம்பிக்கை குறைந்தவராகவே காணப்பட்டார். ஒரு அட்டாக்கிங் இல்லை.

இந்தப் போட்டி முடிந்ததும் ஃப்ளமிங், ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியிலிருந்து தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த வெள்ளைக்கார பய புள்ளைக ரோசக்காரய்ங்க. நம்ம ஆட்களுந்தான் போனய்ங்க வந்தாய்ங்க!! ஹூம்...
இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி வாய்ந்த ஒரு அணியே. அதில் சந்தேகமேயில்லை. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. Well Balanced. All the best for the Final.
1992-முதல் தொடர்ந்து 5 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் ஒரு துனைக்கண்ட அணி இடம் பிடிப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது.
Tuesday, April 24, 2007
யாரு ஜெயிக்கனும்?
இப்போ வெறும் நான்கு அணிகள் மட்டுமே இந்த உலகக் கோப்பைக்கான போட்டியில் எஞ்சியிருக்கின்றன. இவற்றில் தற்போது வலிமையை வைத்து பார்த்தால் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் என் மனதிற்குள் ஆஸ்திரெலியா மற்றும் இலங்கை வெல்லுவதை விட நியுசிலாந்தோ அல்லது தெ.ஆப்பிரிக்காவோ வென்றால் நன்றாக இருக்கும் என விருப்பம் இருக்கிறது. காரணம, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஏற்கனவே உலகக் கோப்பையை வென்ற அணிகள்.
ஏற்கனவே இரண்டு முறை மயிரிழையில் அரை-இறுதியில் தோற்று வெளியேறியதால் தெ.ஆ வெல்ல எனக்கு கூடுதல் விருப்பம. இது போல் உங்களுக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அதை வலதுபுறம் உள்ள வாக்குப் பெட்டியில் தெரிவியுங்கள். பார்க்கலாம், எந்த அணிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் ஆதரவு இருக்கிறதென்று.
Wednesday, April 18, 2007
சூப்பர் 8 முடிஞ்சது
தெ.ஆ நேற்று இங்கிலாந்தை தகர்த்தெரிந்து விட்டு அரை-இறுதியில் நுழைந்தது. ஆக, அரை-இறுதிக்கு தகுதி பெற்ற நான்காவது அணி தெ.ஆ. ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் தகுதி பெற்றிருந்தது எல்லாரும் அறிந்ததே.
இலங்கை இன்று அயர்லாந்துடன் தோற்காத பட்சத்தில் அரை-இறுதி இவ்வாறு அமையும்.
முதல் அரை-இறுதி: நியூசிலாந்து Vs இலங்கை
இரண்டாம் அரை-இறுதி: ஆஸ்திரேலியா Vs தெ.ஆ
இதில் தெ.ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத அணிகளாதலால் அவர்கள் வென்றால் நன்றாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா அதற்கெல்லாம் இரக்கப்படுவதாக இல்லை. இலங்கையும் நியூசிலாந்திற்கு பெறும் முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே தெ.ஆ Vs நியூசிலாந்து இறுதிப்போட்டி என்பது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இனி நடக்க இருக்கும் நான்கு சூப்பர் 8 போட்டிகளும் உப்புக்கு சப்பாணி போட்டிகளே. ஆனால், இதில் ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து போட்டிக்கு சில தனிப்பட்ட காரணங்களால் எதிர்பார்க்கப்படும். பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. அது தீர்ந்தாத்தான் நிம்மதி.
Monday, April 16, 2007
ஆஸி - இலங்கை மோதல்
இதுவரை ஆஸ்திரேலியா விளையாடிய எல்லா போட்டிகளும் ஒருதரப்பு போட்டிகளாகவே அமைந்திருந்தன. தெ.ஆ-வுடனான போட்டி பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் அதுவும் ஒருதரப்பாகவே முடிந்தது. ரிக்கி பாண்டிங் சொன்னது போல் இங்கிலாந்துடனான போட்டி மட்டுமே சிறிதேனும் போட்டி என்று கூறும்படி இருந்தது. அதனால், இன்றாவது போட்டி ஒரு சவலான போட்டியாக இருக்கும் என பாண்டிங் எதிர்பார்க்கிறார்.
அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆடுகளத்தன்மை இலங்கைக்கு சாதகாமாக சுழல்பந்து வீச்சுக்கு ஏற்றது. அதனால், இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ் மென்களை சோதிப்பார்கள் என்று கருதுகின்றனர். ஆனால், எனக்கென்னவோ இதுவும் ஒரு Hype ஆகவே தோன்றுகிறது. இதுவும் ஒரு ஒருதரப்பு போட்டியாகவே ஆஸ்திரேலியாவுக்கு அமையும்.

இந்த உலகக் கோப்பையில் இலங்கைக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள மலிங்கா (அதாங்க, மாங்கா அடிப்பாரே அவரேதான்) காயம் காரணமாக ஆடமாட்டார் என்றே கிசுகிசுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அவர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் ஒன்றுதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது. :)
ஜெயசூர்யாவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தடுமாறி வந்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனக்கு இது போன்ற புள்ளிவிபரங்களின் மீது நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு கூட வங்கதேசத்திற்கான புள்ளிவிபரமாக 18-ல் இந்தியாவும் 1-ல் வங்கதேசமும் வென்றுள்ளதாக கூறி அதனால் இந்தியா வெற்றி பெறும் என்றார்கள். ஆனால், நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதுபோல ஜெயசூர்யா இன்று அடித்துவிட்டால்?? ஆகையால், புள்ளிவிபரங்களால் நடந்தவற்றை மட்டும் தான் கூற முடியும். அவற்றால் வருபவற்றை கணிக்க இயலாது (அடடா! என்ன தத்துவம்!).
என்னுடைய தனிப்பட்ட கருத்தாக, ஆஸ்திரேலியா எளிதில் இந்த போட்டியையும் வெல்லும். வழக்கம்போல, இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்.