Thursday, March 17, 2011

முதல் சுற்றின் முக்கியமான போட்டி

பி-பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டுமே. மற்ற நான்கு அணிகளில் எந்த மூன்று அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும் என்ற முக்கியமான முடிவு இந்தப் போட்டியில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆறு புள்ளிகள் பெற்று இருந்தாலும், இனி வரும் இரு போட்டிகளும் பெரிய அணிகளுக்கு எதிராக, ஒரே மைதானத்தில். நாளைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் இந்தியா பங்களாதேஷ் ரசிகர்களும் சேர்ந்து நன்றி சொல்வார்கள். பங்களாதேஷில் சிறப்புப் பிரார்த்தனைகளே துவங்கியிருப்பார்கள் இந்நேரம். வெஸ்ட் இண்டீஸின் பலம் என்று எதையுன் அறுதியிட்டுக் கூறி விட முடியாது. ரோச் தனது வேகத்தால் நெதர்லாந்து, பங்களாதேஷ் அணியைத் திணறடித்தார். அந்த வேகம் இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு எதிரில் எடுபடுமா என்பது சந்தேகம். சென்னை எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கை கொடுத்தது இல்லை. ஆகவே இரண்டு ஸ்பின்னர்களோடு மூன்றாவதாக கிறிஸ் கெயிலின் பார்ட் டைம் ஸ்பின்னையும் உபயோகப் படுத்தலாம். வழக்கம் போல பென் இரண்டாவது ஓவர் போடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸில் “அடித்து” ஆடக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கன்ஸிஸ்டண்டாக ஆடக் கூடியவர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாளைய ஆட்டத்தில் அனுபவம் மிக்க சந்தர்பாலும் சர்வனும் பிரகாசிக்கலாம். பூம் பூம் கெயிலும், பூம் பூம் பூம் போலார்டும் ஸ்வானை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெஸ்ட் இண்டீஸின் வெற்றி இருக்கிறது.

இங்கிலாந்துக்கு இது வாழ்வா சாவா போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குப் போக வாய்ப்பு (உறுதி இல்லை) இருக்கிறது என்பதால் இந்த அணி தன் முழுத் திறமையையும் காட்டி ஆடும் என்பதில் எந்த மாற்று எண்ணமும் இல்லை. ஆனால் கெவின் பீட்டர்சனின் பார்ட் டைம் ஆஃப் ப்ரேக், தென்னாப்பிரிக்காவுடன் வெற்றியைத் தேடித் தந்த பந்துவீச்சு, இல்லாதது இங்கிலாந்துக்கு ஒரு பெரும் குறையே. ஸ்பின்னுக்கு ஸ்வானை மட்டுமே நம்பியிருப்பது இங்கிலாந்துக்கு பின்னடைவே. மற்ற ஸ்பின்னர்கள் யாரும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை என்பது ஸ்ட்ராஸை யோசிக்க வைக்கும் விசயங்கள். எதிர்பாராத வகையில் நன்றாக பந்து வீசி வரும் டிம் ப்ராஸ்னன் இந்தப் போட்டியிலும் கை கொடுப்பார் என்று நம்புவோம்.

பேட்டிங் பொறுத்த வரையில் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்களில் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். ரோச்சை அடித்து நொறுக்கும் பவர்ஃபுல் பேட்ஸ்மென்கள் வரிசை கட்டி இருக்கிறார்கள். ஸ்பின் பவுலிங்தான் பெரும் பிரச்சனை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்ததைப் போல நடக்க வாய்ப்பு மிக அதிகம். (இடது கை பந்து வீச்சாளர் பீட்டர்சன் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்ததை மறக்க வேண்டாம்). வெஸ்ட் இண்டீஸில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகமே.

இந்தப் போட்டியில் டாஸ் மிக மிக முக்கியம். சென்னையின் ட்யூ ஃபேக்டர் உலகப் பிரசித்தி பெற்றது. இரண்டாவதாக ஃபீல்டிங் செய்யும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ட்யூ மிகுந்த இடையூறாக இருக்கும் என்பதச் சொல்லத் தேவையில்லை. டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங் எடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.

மொத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து காத்திருக்கிறது. 

No comments: