Thursday, March 3, 2011

அயர்லாந்து vs இங்கிலாந்து

உலகக்கோப்பையின் வேகமான சதத்தை அயர்லாந்து வீரர் அடிப்பாரென்றும், அயர்லாந்து இரண்டாவதாக பேட் செய்து அதிகமான ஸ்கோரை அடித்து வெல்லும் என்றும் நேற்று மாலை வரை யாரவது சொல்லியிருந்தால் அவரை அனைவரும் பைத்தியக்காரன் என்றே நினைத்திருப்பர். ஏன், அயர்லாந்து வீரர்களே சிரித்திருப்பார்கள் .

ஆனால், இந்த இரண்டு ரெக்கார்டுகளும் இன்று அயர்லாந்து வசம். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்கள் அடித்தபொழுது, அனைவரும் இங்கிலாந்து எளிதில் வென்றுவிடும் என்றுதான் எண்ணி இருப்பார்கள். அதேபோல்தான் தொடக்கத்தில் அயர்லாந்தின் ஆட்டமும் இருந்தது . ஸ்டெர்லிங் சிறிது அடித்து ஆடினாலும் , சீக்கிரம் ஆட்டமிழந்து விட்டார். பாதி ஓவர்கள் முடிந்த நிலையில் இருநூறு ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டது,பாதி வீரர்களும் அவுட் ஆகிவிட்டனர். 

இந்த நிலையில்தான் கெவினின் ருத்ர தாண்டவம் ஆரம்பம் ஆகியது. முதலில் ஸ்வானின் சுழற்பந்துவீச்சில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அப்பொழுது கூட யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்படியும் சிறிது நேரத்தில் ஆட்டம் இழந்துவிடுவார் என்றே எண்ணினார்கள். 32 ஆவது ஓவரில் பேட்டிங் பவர்ப்ளேயை எடுத்த கெவின் மற்றும் குஷாக் இணை ஐந்து ஓவர்களில் 62 ரன்கள் குவித்தனர். இந்த ஐந்து ஓவர்கள்தான் ஆட்டம் மாற அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து அடித்து ஆடிய கெவின் உலகக்கோப்பை வரலாற்றில் வேகமான சதத்தை அடித்தார். ஐம்பது பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 

அவருக்கு உறுதுணையாக ஆடிய  குஷாக் 47 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனப் பின் களமிறங்கிய மூனி துவக்கத்தில் சிறிது தடுமாறினாலும் , வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கெவின் அவுட் ஆனபின் பதட்டம் அடையாமல் நிதானமாக ஆடி அயர்லாந்தை வெற்றிப் பெற வைத்தார். 

அயர்லாந்து வெற்றிபெற கெவினின் ஆட்டம் முக்கியக்காரணமாக இருந்தாலும், இங்கிலாந்து  பேட் செய்தபொழுது கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே அடித்ததும் ஒரு காரணம். பீல்டிங்கிலும் இங்கிலாந்து அதிகக் கேட்ச்களை தவறவிட்டது அயர்லாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

எந்த அணியாக இருந்தாலும், லேசாக எடைப்போடக் கூடாது என்பதும், எத்தனை ரன்கள் அடித்தாலும் வெற்றி உறுதி இல்லை என்பதும் இந்த ஆட்டத்தின் படிப்பினைகளாகும். 

அயர்லாந்தின் வெற்றி மீதம் இருக்கும் ஆட்டங்களை முக்கிய ஆட்டங்களாக மாற்றி  உள்ளது . இங்கிலாந்து இனி அனைத்து ஆட்டங்களையும் குறிப்பாக பங்களாதேஷ் உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும்.இல்லையெனில் காலிறுதியில் நுழைவது அவர்களுக்குக் கடினமாகி விடும். 

அன்புடன் எல்கே 

 

2 comments:

Asiya Omar said...

இங்கிலாந்தில் இந்தியா போட்டியில் தோற்க வேண்டிய நம்மை தோனி ஏதோ ட்ராவில் முடியும் படி பார்த்து கொண்டார்.அயர்லாந்து அடிச்சி ஆடும் பொழுது,அதுவும் கெவின் ஐம்பது பந்தில் 100 ரன் பெரிய சாதனை,இப்படில்லாம் கிளம்பிட்டாங்கய்யா, கொஞ்சம் எனக்கே இந்தியா நிலையை நினைத்து பயமாத்தான் இருக்கு,அதற்கு தகுந்தாற் போல் நேற்று கபில்தேவ் பேட்டியை சன் டிவியில் பார்த்தேன்,இந்தியா இந்த நிலமையில் பந்து வீசினால் அரையிறுதி கூட நுழைவது சிரமம்னு வருததப்பட்டார்.பகிர்வு விளக்கம் அருமை.

pozhuthupoku said...

அது டோனி பாத்து இல்லேங்கோ.. கடவுளா பாத்து பண்ணினது..