Showing posts with label மே.இந்தியா. Show all posts
Showing posts with label மே.இந்தியா. Show all posts

Sunday, March 20, 2011

இந்தியா - மேற்கிந்திய தீவுகள்

இந்த ஆட்டத்தைப் பற்றி எல்லோருக்கும் சில அபிப்ராயங்கள் பேதங்கள் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் அடுத்த ஆட்டங்களின் ஸ்ட்ராடஜியை முடிவு செய்யும் என்பதில் யாருக்கும் வேறு சந்தேகங்கள் இருக்காது.

இன்றைய போட்டியில் தோற்றால் இந்தியா ஸ்ரீலங்காவை காலிறுதியில் சந்திக்கும். இன்றைய போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியாவை சந்திக்கும்.

அப்படியானால், இந்தியாவின் இந்த போட்டி நமது அரையிறுதி வாய்ப்பினை அசைத்துப் பார்க்கவே போகிறது.

உளவியல் ரீதியாக இந்தப் போட்டியில் தோற்றால் இந்தியாவிற்கு வென்றாக வேண்டுமென்ற உத்வேகம் இல்லாமல் போய்விடும் (killer instinct).

இந்தியா எல்லாப் போட்டிகளும் வெல்லும் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லலாம்.

தென்னாப்பிரிக்காவுடன் நாம் தோற்றவுடன் எனக்கு முதலில் தோன்றியது 2003 உலகக் கோப்பை தான். அப்போது லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றோம். ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டோம். இப்போது சவுத் ஆப்ரிக்காவுடன் தோற்றிருக்கிறோம். இறுதியில் அவர்களை எதிர்கொள்ளலாம். அப்போது பான்டிங் போல் இப்போது ஸ்மித். எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் எப்போதும் உள்ளது.

நம்பிக்கை தானே சார் வாழ்க்கை....

Monday, February 28, 2011

யாருக்கு வேணும் இந்த உலகக்கோப்பை??

முன்னெப்போதும் போல் இந்த உலக கோப்பை என்னிடம் பெரிய ஆர்வத்தையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அளவுக்கு அதிகமான போட்டிகளாலோ, இந்திய அணியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாததினாலோ, இரண்டு மூன்றாண்டுகளாக என்னை புதியதாய் தொற்றியிருக்கும் புகைப்படக்கலையின் மீதுள்ள ஆர்வத்தினாலோ இருக்கலாம். அது மட்டுமல்ல... கிரிக்கெட் விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் கூட நம்ப முடியவில்லை. ஏதோ ஒன்று இங்கு எழுதவும் தடுத்தே வந்திருக்கிறது. ஒரு வழியாக சில நாட்களுக்கு முன் நண்பன் சுபைர் மற்றும் சில இணைய நண்பர்களினுடனான உரையாடல் முலம இத்தளம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. எனக்கும் எழுத சிறிய நாட்டம் வந்துள்ளது.

20 ஓவர் போட்டிகளால்... எங்கே டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடுமோ என என் போன்றோர் கவலையுற, பாதிக்கப்பட்டதென்னவோ ஒருநாள் போட்டிகளே. எனக்கும் கூட ஒருநாள் போட்டிகளில் நாட்டம் குறைந்துள்ளது. இப்படி ஒரு சூழலில் இந்த உலகக்கோப்பை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க வார போட்டிகளும் மந்தமாகவே இருந்தன.

எந்த அணிக்கு இந்த உலகக்கோப்பை தேவை? அதவாது ஏதோ ஒரு வகையில்... எந்த நாட்டில் இந்த உலகக்கோப்பை வெற்றி கிரிக்கெட்டை உயிர்பிக்கும் என பார்த்தால்.... பண பலத்தாலும் நம்மைப் போன்ற கிரிக்கெட் பைத்தியங்களும் இருக்கும் வரை இந்தியா இதை வென்றாலும் இல்லையென்றாலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஒரு பாதிப்பும் இல்லை. கேவலமாக தோற்றாலும் நம்மால் கிரிக்கெட்டை ஒதுக்க முடியாது. இந்தியாவின் தற்போதைய முதன்மை வணிகமே கிரிக்கெட்தான். அப்புறம்... ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பலமான கிரிக்கெட் உட்கட்டமைப்பால் கிரிக்கெட்டிற்கு உ.கோப்பை வெற்றி இல்லையென்றாலும் பாதிப்பு இருக்காது. நியுசிலாந்து அணிக்கு தற்போதைய ஒரே பிரச்சனை அணித்தலைவர் மட்டுமே. அதுவும் விரைவில் சரியாகிவிடும் என நம்பலாம். அதனால் அவர்களின் எதிர்கால கிரிக்கெட்டும் நெருக்கடியில் இல்லை.

ஆனால், ஒரு காலத்தில் முடி சூடா அரசர்களாக இருந்த மேற்கிந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் பல்வேறு வகைகளில் சமீப காலமாக கிரிக்கெட்டில் நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. மே.இந்திய இளைஞர்களின் இரத்தத்தில் ஊறியிருந்த கிரிக்கெட் ஆர்வம் இப்போது குறையத்தொடங்கியுள்ளதாம். மே.இந்திய தென்னை மரங்களை உலுக்கினால் முன்போல் வேகப்பந்து வீச்சாளர்கள் விழுவதில்லை. அவர்கள் கூடைப்பந்து, பேஸ்-பால் ஆட்டங்களை விரும்ப தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள். பல நாடுகளை ஒருங்கிணைத்து போவதே பெரிய பாடாகியுள்ளதாம். பாகிஸ்தானிலோ... அரசியல் சூழல், போதை அடிமைகள், மற்ற அணிகள் அங்கு சென்ற விளையாட முடியாத சூழ்நிலை போன்றவை அவர்களின் கிரிக்கெட்டை மிகவும் பின்னோக்கி தள்ளியிருக்கிறது. இரு அணிகளுக்குமே இருபது நாட்களுக்கு முன் வரை அணித்தலைவர் யாரென்பதே முடிவில்லாத நிலை.

இந்த இரண்டு அணிகளிலும் ஒரு காலத்திலும் திறமைக்கு பஞ்சம் இருந்ததில்லை. இவர்களுடைய மக்களுக்கு கிரிக்கெட்டின் மீது மீண்டும் பழையது போல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்கள் கிரிக்கட் அமைப்பை வலுப்படுத்தவும் உ.கோப்பை வெற்றியைப்போல் வேறெதுவும் உதவாது.

நம்மை போன்ற ஆர்வலர்களுக்கும் கிரிக்கெட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, தெ.ஆ - யோடு குறுகிய இடத்தில் சுழலாமல் வேகப்பந்து வேங்கைகளின் மண்ணிலும் ஒளிரவேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். நடக்குமா?

Thursday, April 12, 2007

லாரா ஓய்வு பெருகிறார்

உலகக் கோப்பைக்குப் பின் லாரா ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.


நடந்து வரும் உலகக் கோப்பையில் மே.இ தீவு அணி தோல்விக்கு மேல் தோல்விகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் அரை-இறுதிக்கு தகுதி பெறாது என்று உறுதியாக கூற இயலாத நிலை. ஆனால், அதற்குள் மே.இ தீவு அணிக்கு பலமான நெருக்கடி தொடங்கி விட்டது. லாரா பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



லாராவுக்கும் அணித்தேர்வாளர்களுக்கும் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இருந்தாலும், தனக்கு வயதாகி விட்டதால் ஒருநாள் போட்டிகளிலிருந்து இந்த உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெற போவதாக திட்டமிட்டுள்ளார். இவர் ஆடும் ஐந்தாவது உலகக் கோப்பையாகும். இதுவரை 297 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த உலகக் கொப்பையில் சூப்பர் 8-ல் மே.இ அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளே உள்ளன. மே.இ அணி அரை-இறுதிக்கு தகுதி பெறவில்லையெனில்லை லாராவின் ஒருநாள் போட்டிகள் வாழ்க்கை 299-ல் முடிய வேண்டியிருக்கும்.

நமது மூத்த வீரர்கள் கவனிக்கவும். :)

Monday, April 2, 2007

உ.கோ நடத்துபவர்களுக்கு அடுத்த ஆப்பு

ஆம். இந்த முறை உலகக் கோப்பை நடத்தும் நாடுகளான மே.இந்திய தீவுகளுக்கு பொருளாதார சிக்கல் மேலும் வலுவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவே இதற்கு காரணம்.

மே.இ அணி நேற்று இலங்கையுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்தது மூலம் கிட்டத்தட்ட அரை-இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கிறது. மே.இ அணி இனி அரை-இறுதிக்கு தகுதி பெற வேண்டுமெனில், தெ.ஆ, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். தற்போதய மே.இ அணியின் ஃபார்மை பார்த்தால் தெ.ஆ அணியை வெல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். மற்ற இரண்டு போட்டிகளை வென்று விடும் என கருதினாலும்.



(வேகப்பந்து வீச்சாளர் வாஸின் பந்தில் லாரா ஸ்டம்பிங் செய்யப்பட்டார்)


ஆனால், இப்பொழுதே மே.இ அணி வெளியேறிவிட்டதாக அவர்கள் நாட்டு மக்களும், ஊடகங்களும் முடிவுக்கே வந்துவிட்டார்கள். அவர்கள் அணியின் மீது எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். தமது அணி மீது நம்பிக்கை வைப்பதில் நமக்கு ஈடு இணை யாருமில்லை என்று நினைக்கிறேன். பெர்முடா வங்கதேசத்தை தோற்கடிக்கும், அதன் மூலம் இந்தியா சூப்பர் 8-க்குள் நுழையும் என்று நம்பிய நாம் எங்கே. மூன்று போட்டிகளையும் வென்றால் அரை-இறுதிக்கு போகலாம் என்ற நிலையிலும் தமது அணியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் மே.இ தீவு மக்கள் எங்கே. :)

இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டு அணியும் வெளியேறிவிட்டதாக கருதப்படும் இச்சூழ்நிலையில் போட்டி ஒருங்கினைப்பாளர்களுக்கு இக்கட்டான நிலை. அதிகளவில் ரசிகர்கள் கொண்ட அணிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியேறிய போதே சுற்றுலாத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தவர்களுக்கு மேலும் விழுந்துள்ள அடி இது. ஏற்கனவே ஈ விரட்டிக்கொண்டிருந்த மைதானங்கள் மேலும் வறட்சியுடன் காணப்படும். மே.இ மக்கள் கூட போட்டிகளை காண ஆர்வமிழப்பார்கள். டிக்கெட்டுகளின் விலை மிகக் கூடுதல் என ஏற்கனவே புலம்பிக்கொண்டிருந்தார்கள். மைதானங்களில் நாற்காலிகள் மட்டுமே போட்டிகளைக் காணும் நிலை ஏற்படும். இது இந்த உலகக் கோப்பையில் பெருத்த பின்னடைவாக இருக்கும்.

(ஆஸியுடன் இந்தியா மோத வேண்டிய போட்டியில் வங்கதேசம்- வெறுமையுடன் ஒரு ரசிகை)


இந்தியா, பாகிஸ்தான் வெளியேறியதால் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இவர்களை நம்பி முதலீடு செய்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திலுள்ளனர். இந்தியாவின் தேசியக் கொடிகளும், இந்திய அணியின் சீருடைகளும் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வீணாகப்போகும் நிலை. அனைத்து ஹோட்டல்களும் இப்போது Tour-package-களை மலிந்த விலைக்கு தர முன்வந்துள்ளார்களாம். தள்ளுபடியாம்.

(நேற்றைய போட்டியில் மே.இ ரசிகர்களின் தாராள மனப்பான்மை)

நேற்றைய போட்டியில் மே.இ அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளனர். லாராவை உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று போட்டியின் இறுதியில் வெருப்பில் மைதானத்திற்குள் கையில் கிடைத்தவற்றை எறிந்தனர்.

இந்த சூப்பர் 8 போட்டிகள் செல்லும் விதத்தை பார்த்தால், ஆஸ்திரேலியா, இலங்கை, தெ,ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை-இறுதிக்கு வரும்.

ஆக, மற்றொரு இந்தியாவும் அவுட். (இந்தியாவுக்கு இன்ஷியல் வச்சா கூட விரட்டியடிக்கிறாங்கப்பா)

Tuesday, March 13, 2007

முதல் போட்டி - வெ.இ Vs பாக்

அப்பாடா! பல பேரின் பலநாள் ஏக்கத்திற்கு இன்று நிறைவேறப்போகிறது. ஒன்பதாவது உலகக் கோப்பையின் முதல் போட்டி இன்று ஜமைக்காவில் சபீனா பார்க் மைதானத்தில் பாகிஸ்தான் - வெ.இ அணிகளுக்கிடையே நடக்க இருக்கிறது. முதல் போட்டியே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விறுவிறுப்பை எதிர்பார்ப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. இதுவரை இவ்விரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று விறுவிறுப்பான போட்டிகளைத் தந்துள்ளது. இரு அணியினரும் ஆடியுள்ள 7 உலகக் கோப்பை போட்டிகளில் 5-2 என்ற கணக்கில் வெ.இ -பாக் அணிகளின் வெற்றி எண்ணிக்கை உள்ளது. இவை பெரும்பாலும் 70 - 80 களின் அசைக்க முடியாத வெ.இ அணியால் கிடைத்த வெற்றிகளாகும். சமீபத்திய 10 போட்டிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் 8-2 என்ற கணக்கில் வெ.இ அணியை வீழ்த்தியுள்ளது.


தற்போதய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் மூலதனமான வேகப்பந்து வீச்சு கேள்விக்குள்ளாகியுள்ளது. அக்தர் மற்றும் ஆஸிஃப் பங்குபெறாத இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை காண உலகமே காத்திருக்கிறது. முஹம்மது சமி - உமர் குல் - அசார் - ரானா ஆகியோர் எப்படி பந்துவீசப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், நிலையான ஒரு மிடில்-ஆர்டர் மட்டையாளர்கள் தான் இந்த பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள். யூனுஸ், யூசுஃப் & இண்ஜமாம் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டிங் வரிசை ஷொகைப் மாலிக் மற்றும் அஃப்ரிடியால் மேலும் வலுப்பெறும். தொடக்க ஆட்டக்காரர்களின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைக்க இயலும் என்பதை உறுதியாக கூற இயலாத நிலை. பயிற்சி போட்டிகளின் வெற்றி நிச்சயம் பாகிஸ்தானுக்கு நம்பிக்கை அளித்திருக்கும். குறிப்பாக தெ.ஆ அணிக்கெதிரான வெற்றி. கிரிக்கெட்டின் கணிக்க இயலாத அணி ஒன்று உண்டென்றால் அது பாகிஸ்தான் தான்.


வெ.இ அணியைப் பொறுத்தவரை 50-50 வாய்ப்புள்ள ஒரு அணியாகும். கரீபியன் தீவுகளின் தென்னைமரங்களை உலுக்கினால் விழுவது வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று கிரிக்கெட்டில் சொல்லிக் கொள்வார்கள். அந்தளவிற்கு வேகப்பந்து வீச்சிற்கு புகழ்பெற்ற இடம். ஆனால், தற்போத அணியில் சொல்லிக் கொள்ளும்படியான புகழ்பெற்ற ஒரு வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை. பெரும்பாலும் இளைய வேகப் பந்து வீச்சாளர்கள். பேட்டிங்கை பொறுத்தவரை கெய்ல் - லாராவின் ஆட்டத்தை பொருத்தே அமையும். சந்திரபால் & சர்வான் இருந்தாலும் கெய்ல் மட்டும் ஒரு 15 ஓவர்கள் பேட்டிங் செய்தால் ஆட்டத்தின் போக்கில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. லாராவின் தலைமையின் கீழ் ஒற்றுமையாக ஆடத்துவங்கியுள்ளனர் இந்த 9 நாடுகளின் கூட்டமைப்பு வீரர்கள். ஒற்றுமைக்கு பலன் கிட்டுமா? வெ.இ இன்றைய வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

ரசிகர்கள் தவறாமல் இந்த போட்டியை கண்டுகழியுங்கள். இரு அணிகளும் ஏறக்குறைய ஒரே அளவான திறமையுடன் இருப்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.

என் கணிப்பு: பாகிஸ்தான் வெற்றி பெறும்.