Wednesday, April 18, 2007
சூப்பர் 8 முடிஞ்சது
தெ.ஆ நேற்று இங்கிலாந்தை தகர்த்தெரிந்து விட்டு அரை-இறுதியில் நுழைந்தது. ஆக, அரை-இறுதிக்கு தகுதி பெற்ற நான்காவது அணி தெ.ஆ. ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் தகுதி பெற்றிருந்தது எல்லாரும் அறிந்ததே.
இலங்கை இன்று அயர்லாந்துடன் தோற்காத பட்சத்தில் அரை-இறுதி இவ்வாறு அமையும்.
முதல் அரை-இறுதி: நியூசிலாந்து Vs இலங்கை
இரண்டாம் அரை-இறுதி: ஆஸ்திரேலியா Vs தெ.ஆ
இதில் தெ.ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத அணிகளாதலால் அவர்கள் வென்றால் நன்றாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா அதற்கெல்லாம் இரக்கப்படுவதாக இல்லை. இலங்கையும் நியூசிலாந்திற்கு பெறும் முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே தெ.ஆ Vs நியூசிலாந்து இறுதிப்போட்டி என்பது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இனி நடக்க இருக்கும் நான்கு சூப்பர் 8 போட்டிகளும் உப்புக்கு சப்பாணி போட்டிகளே. ஆனால், இதில் ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து போட்டிக்கு சில தனிப்பட்ட காரணங்களால் எதிர்பார்க்கப்படும். பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. அது தீர்ந்தாத்தான் நிம்மதி.
Monday, April 16, 2007
ஆஸி - இலங்கை மோதல்
இதுவரை ஆஸ்திரேலியா விளையாடிய எல்லா போட்டிகளும் ஒருதரப்பு போட்டிகளாகவே அமைந்திருந்தன. தெ.ஆ-வுடனான போட்டி பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் அதுவும் ஒருதரப்பாகவே முடிந்தது. ரிக்கி பாண்டிங் சொன்னது போல் இங்கிலாந்துடனான போட்டி மட்டுமே சிறிதேனும் போட்டி என்று கூறும்படி இருந்தது. அதனால், இன்றாவது போட்டி ஒரு சவலான போட்டியாக இருக்கும் என பாண்டிங் எதிர்பார்க்கிறார்.
அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆடுகளத்தன்மை இலங்கைக்கு சாதகாமாக சுழல்பந்து வீச்சுக்கு ஏற்றது. அதனால், இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ் மென்களை சோதிப்பார்கள் என்று கருதுகின்றனர். ஆனால், எனக்கென்னவோ இதுவும் ஒரு Hype ஆகவே தோன்றுகிறது. இதுவும் ஒரு ஒருதரப்பு போட்டியாகவே ஆஸ்திரேலியாவுக்கு அமையும்.

இந்த உலகக் கோப்பையில் இலங்கைக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள மலிங்கா (அதாங்க, மாங்கா அடிப்பாரே அவரேதான்) காயம் காரணமாக ஆடமாட்டார் என்றே கிசுகிசுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அவர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் ஒன்றுதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது. :)
ஜெயசூர்யாவும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தடுமாறி வந்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனக்கு இது போன்ற புள்ளிவிபரங்களின் மீது நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு கூட வங்கதேசத்திற்கான புள்ளிவிபரமாக 18-ல் இந்தியாவும் 1-ல் வங்கதேசமும் வென்றுள்ளதாக கூறி அதனால் இந்தியா வெற்றி பெறும் என்றார்கள். ஆனால், நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதுபோல ஜெயசூர்யா இன்று அடித்துவிட்டால்?? ஆகையால், புள்ளிவிபரங்களால் நடந்தவற்றை மட்டும் தான் கூற முடியும். அவற்றால் வருபவற்றை கணிக்க இயலாது (அடடா! என்ன தத்துவம்!).
என்னுடைய தனிப்பட்ட கருத்தாக, ஆஸ்திரேலியா எளிதில் இந்த போட்டியையும் வெல்லும். வழக்கம்போல, இன்று ஆஸ்திரேலியா மோதுவதால் துபை வானிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
இது எப்படி இருக்கு?
நேற்று நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் அயர்லாந்து அணி வங்கதேச அணியை 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் வங்கதேசத்தின் அரை-இறுதி ஆசை தகர்ந்ததுள்ளது.

வங்கதேச அணி சூப்பர் 8-ல் தெ.ஆ அணியை வீழ்த்தியதால் அரை-இறுதிக்கு தகுதி பெறும் நான்காவது (ஆஸி, நியூ & இலங்கை - உறுதி செய்ப்பட்ட அந்த மூன்று அணிகள்) அணிக்கான இடத்தை திறந்து வைத்தது. அதற்கு தெ.ஆ, இங்கிலாந்து, வங்கதேசம் & மே.இ அணிகள் பலமாக போட்டியிட்டன. ஆனால் வங்கதேசத்தின் பயணத்திற்கு அயர்லாந்து முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் அரை-இறுதிக்கு இடம்பெறும் நான்காவது அணிக்கான போட்டியில் இப்போது தெ.ஆ-வும் இங்கிலாந்தும் & மே.இவும் மட்டுமே மிஞ்சியுள்ளன.(பதிவு முதல் பின்னூட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டுள்ளது).
அதாவது, இங்கிலாந்திற்கு இரண்டு போட்டிகளும் தெ.ஆ-விற்கு ஒரு போட்டியும் மிஞ்சியுள்ளன.இங்கிலாந்து 4 புள்ளிகளுடனும் தே.ஆ 6 புள்ளிகளுடனும் உள்ளன. இதில் இங்கிலாந்து - தெ.ஆ போட்டியில் தெ.ஆ வென்றால் தெ.ஆ 8 புள்ளிகள் பெறும். அதனால் எளிதாக தெ.ஆ அரை-இறுதியில் நுழைந்து விடும். இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்தும் 6 புள்ளிகள் பெற்று தெ.ஆ அணியுடன் சமநிலை பெற்றுவிடும். ஆனால், இங்கிலாந்திற்கு மே.இ-வுடன் போட்டி ஒன்று மீதமுள்ளது. அதனால், இங்கிலாந்து அதை வென்றால் 8 புள்ளிகள் பெற்று அரை-இறுதிக்கு நுழையும். இங்கிலாந்து ஒருவேளை தெ.ஆ அணியுடனான போட்டியில் தோற்று மே.இ அணியை வென்றால் ரன் ரேட் அடிப்படையில் அரை-இறுதிக்கு செல்லும் அணி தேர்ந்தெடுக்கப்படும். மே.இ-அணியுடனான இங்கிலாந்து போட்டிதான் சூப்பர் 8-ல் இறுதி போட்டி என்பதால் இங்கிலாந்து அணிக்கு தெளிவான வாய்ப்புள்ளது (தெ.ஆ-வுடனான போட்டியை வென்றிருந்தால்).
(நான் குறிப்பிட மறந்த மற்றொரு நிலை முதல் பின்னூட்டத்தில் அனானி குறிப்பிட்டுள்ளார். அதை படிக்கவும். நன்றி அனானி.)
ஆஸ்திரேலியாவிற்கு சவால் விடப்போகும் அணியாக ஜம்பம் விடப்பட்ட தெ.ஆ-வின் இன்றைய நிலை அரை-இறுதிக்கு நுழைவதற்கே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
Saturday, April 14, 2007
இதுக்கெல்லாம் ஒரு பதிவா?
அயர்லாந்து மற்ற அணிகளை சிறிது திணறடித்தது என்றே கூறலாம். கீழுள்ள போட்டி முடிவுகள் அதையே கூறுகின்றன. யாரும் அயர்லாந்தை அத்தனை Convincing-காக ஜெயிச்சதில்லை. ஆனால் ஆஸி ஆஸிதான். நேற்று நடந்த போட்டியில் சட்டு புட்டுனு ஆடி முடிச்சுட்டு போயிட்டாங்க. அதான் ஆஸ்திரேலியா!
5th Match, Group D: Ireland v Zimbabwe at Kingston - Mar 15, 2007
Match tied. Ireland 221/9 (50 ov); Zimbabwe 221 (50 ov)
9th Match, Group D: Ireland v Pakistan at Kingston - Mar 17, 2007
Ireland won by 3 wickets (with 32 balls remaining) (D/L method). Pakistan 132 (45.4 ov); Ireland 133/7 (41.4/47 ov)
21st Match, Group D: West Indies v Ireland at Kingston - Mar 23, 2007
West Indies won by 8 wickets (with 59 balls remaining) (D/L method). Ireland 183/8 (48/48 ov); West Indies 190/2 (38.1/48 ov)
28th Match, Super Eights: England v Ireland at Providence - Mar 30, 2007
England won by 48 runs. England 266/7 (50 ov); Ireland 218 (48.1 ov)
32nd Match, Super Eights: Ireland v South Africa at Providence - Apr 3, 2007
South Africa won by 7 wickets (with 21 balls remaining) (D/L method). Ireland 152/8 (35/35 ov); South Africa 165/3 (31.3/35 ov)
36th Match, Super Eights: Ireland v New Zealand at Providence - Apr 9, 2007
New Zealand won by 129 runs. New Zealand 263/8 (50 ov); Ireland 134 (37.4 ov)
40th Match, Super Eights: Australia v Ireland at Bridgetown - Apr 13, 2007
Australia won by 9 wickets (with 226 balls remaining). Ireland 91 (30 ov); Australia 92/1 (12.2 ov)
Monday, April 9, 2007
'ட்'ரிக்கி பாண்டிங்
சூழல் இவ்வாறிருக்க நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் களமிறங்கின. இங்கிலாந்தை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றுவோம் என்ற சபதத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அது போலவே ஆஸ்திரேலியா வெற்றியும் பெற்றது.
அதற்காக, இந்த போட்டியின் முடிவை வைத்து இங்கிலாந்து வெளியேறிவிட்டதாக கருதமுடியாது. ஆனால், கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இங்கிலாந்திற்கு மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இதில் இங்கிலாந்து குறைந்தது இரண்டிலாவது வெல்ல வேண்டும். வ.தே, தெ.ஆ & மே.இ அணிகளுடன் மோத வேண்டும். இந்த மூன்று அணிகளுக்கும் அதே அளவிலான வாய்ப்புகள் உள்ளதால் ஆட்டம் இனி சூடு பிடிக்கும். இந்த நான்கு அணிகள் பங்கு பெறும் போட்டிகளில் அனல் பறக்கும்.

சரி, நேற்றைய போட்டிக்கு வருவோம். கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக துவங்கிய ருத்ர-தாண்டவத்தை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறார் ரிக்கி பாண்டிங். எனக்கு விபரம் தெரிய இந்த நான்கு ஆண்டுகளாக ஓட்டங்கள் குவித்து வருபவர் அவர் ஒருவர் மட்டுமே. அவருக்கு அவுட் ஆஃப் ஃபார்ம் என்பதே இல்லையா? உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் லாராவாம் சிலருக்கு சச்சினாம் சிலருக்கு. சிரிப்புத்தான் வருகிறது. எனக்கெதுக்கு வம்பு? நான் சிரிச்சா சிலருக்கு காதில் புகை வரும். :)
ஆஸ்திரேலியாவின் நேற்றைய ஸ்கோர் போர்டை பாருங்கள். டாப்-ஆர்டர் ஆட்டத்தை பாருங்கள். 27, 41,86,55,28. யார் ஃபார்மில் இல்லை என்பதை பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். இந்நிலை தொடருமாயின் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை கொண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது.
Sunday, April 8, 2007
துபையில் இன்றிரவு மழை?

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு அரை-குறை அணியாக (காயங்கள் & ஓய்வுகள் காரணமாக) விளையாடிய ஆஸ்திரேலியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தும் வென்றவுடன் ஆஸ்திரேலியாவின் சரிவு தொடங்கிவிட்டது போன்ற மாயை ஏற்படுத்திவிட்டனர். சிலர் பதிவிட்டு கொண்டாடினர். அப்போதே, நான் எச்சரித்தேன் 'தப்பு கணக்கு போட வேண்டாம்' என்று. கேட்டார்களா? சண்டைக்கு வந்தார்கள். ஆனால், இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆஸ்திரேலியா யாரிடமும் தினறியது போல கூட தெரியவில்லை. நம்பர் 1 அணி என்று தலையில் வைத்து கொண்டாடும் தெ.ஆ அணியை நாம் பெர்முடாவை துவைத்து காயப் போட்டது போல் போட்டார்கள். நமக்கு பெர்முடா என்றால் ஆஸ்திரேலியாவிற்கு தெ.ஆ. :)
என்னுடைய கணிப்பில் இந்த உலகக் கோப்பையும் ஆஸ்திரேலியாவிற்கே. இன்றைய போட்டி முத்தரப்பு தொடரை வென்று எக்காளமிட்ட இங்கிலாந்திற்கு பாடம் புகட்டும் ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைப் பார்த்து துபையில் சிலருக்கு காதில் புகை வரும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.
அதனால், அறிவிப்பதென்னவென்றால் இன்றிரவு துபை வானம் முகில் கூட்டத்துடன் காணப்படும். மழை பெய்தால் நாம் செய்த புண்ணியம். அண்ணாச்சிக்கும் நண்பர் முத்துகுமரனுக்கும் நன்றி சொல்லிக்கொள்ளுங்கள்.
அரை-இறுதிக்கு வங்கதேசம்?
சரி, அது போகட்டும். அதற்குப் பின் நடந்ததுதான் உலகமகா ஆப்பு. ஒரு பில்லியன் நீலக் கனவு தகர்ந்தது. நேற்று வரை அதற்கு விடைகாணப்படவில்லை. அப்போது கூட இந்தியாவின் மோசமான அனுகுமுறையால் தான் வங்கதேசம் வென்றது என்று நினைத்திருந்தேன். அதை உறுதிப்படுத்துவது போலவே வங்கதேசத்தின் முதலிரண்டு போட்டிகள் சூப்பர் 8-ல். இந்த அணியிடமா தோற்று வெளியேறினோம் என புலம்பித்திரிந்தேன்.
ஆனால், இந்த வங்கப்புலிகள் அதையும் பொய்யாக்கி விட்டனர் நேற்று. இந்த முறை அவர்கள் உலகின் நம்பர் 1 அணிக்கு ஆப்பு வைத்தனர். அதுவும் 67 ஓட்டங்களில் மிகப்பெறும் வெற்றி. ஒருவேளை இந்தியாவைப் போல் தெ.ஆ அணியும் Chokers என்பார்களே அது தான் காரணமா? இல்லை வங்கதேசம் உண்மையில் நன்றாக ஆடியுள்ளதா? எனக்கென்னவோ வங்கதேசம் வெற்றிகளை மெல்ல சுவைக்கத் தொடங்கியுள்ளது போல் தான் தெரிகிறது. வங்கதேசம் இலங்கை அணி 95-96-ல் பெற்ற ஒரு வளர்ச்சியை பெறத் துவங்கியுள்ளது. ஒரு நல்ல வழிகாட்டியும், ஒற்றுமையுடன் போராடும் குணமும் இவ்வணிக்கு தொடருமாயின் துனைக்கண்டத்தில் இன்னொரு வலிமையான உருவாகும் அணி வெகு தொலைவில் இல்லை. பணம் புரண்டதால் தடம் புரண்டுள்ள பெரியண்ணன்கள் (இந்தியா & பாக்) கிரிக்கெட்டில் காணாமல் போனாலும் தம்பிகள் (இலங்கை & வ.தேசம்) கிரிக்கெட்டில் ஜொலிக்கட்டும். நம்பிக்கை இருக்கிறது.
ஏன் வெகு தொலைவிற்கு போக வேண்டும். இந்த உலகக் கோப்பையிலேயே வங்கதேசம் அரை-இறுதிக்கு தகுதி பெற நல்ல வாய்ப்புள்ளது. இன்னும் அவர்களுக்கு அயர்லாந்து, இங்கிலாந்து மற்று மே.இ அணிகளுடனான மூன்று போட்டிகள் மீதமுள்ளன. அதில் அயர்லாந்துடன் வெற்றி ஏறக்குறைய உறுதி. இங்கிலாந்து மற்றும் மே.இ அணிகளுடனான போட்டிகளில் ஏதேனும் ஒன்றை வென்றால் கூட அரை-இறுதிக்கான கதவு திறக்க வாய்ப்புள்ளது. இதில், இங்கிலாந்து & மே.இ ஆடி வரும் மோசமான கிரிக்கெட்டை கணக்கில் கொண்டால் அது சாத்தியமே என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்த்துக்கள் வங்கதேசம்!
Monday, April 2, 2007
உ.கோ நடத்துபவர்களுக்கு அடுத்த ஆப்பு
மே.இ அணி நேற்று இலங்கையுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்தது மூலம் கிட்டத்தட்ட அரை-இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கிறது. மே.இ அணி இனி அரை-இறுதிக்கு தகுதி பெற வேண்டுமெனில், தெ.ஆ, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். தற்போதய மே.இ அணியின் ஃபார்மை பார்த்தால் தெ.ஆ அணியை வெல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். மற்ற இரண்டு போட்டிகளை வென்று விடும் என கருதினாலும்.
ஆனால், இப்பொழுதே மே.இ அணி வெளியேறிவிட்டதாக அவர்கள் நாட்டு மக்களும், ஊடகங்களும் முடிவுக்கே வந்துவிட்டார்கள். அவர்கள் அணியின் மீது எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். தமது அணி மீது நம்பிக்கை வைப்பதில் நமக்கு ஈடு இணை யாருமில்லை என்று நினைக்கிறேன். பெர்முடா வங்கதேசத்தை தோற்கடிக்கும், அதன் மூலம் இந்தியா சூப்பர் 8-க்குள் நுழையும் என்று நம்பிய நாம் எங்கே. மூன்று போட்டிகளையும் வென்றால் அரை-இறுதிக்கு போகலாம் என்ற நிலையிலும் தமது அணியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் மே.இ தீவு மக்கள் எங்கே. :)
இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டு அணியும் வெளியேறிவிட்டதாக கருதப்படும் இச்சூழ்நிலையில் போட்டி ஒருங்கினைப்பாளர்களுக்கு இக்கட்டான நிலை. அதிகளவில் ரசிகர்கள் கொண்ட அணிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியேறிய போதே சுற்றுலாத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தவர்களுக்கு மேலும் விழுந்துள்ள அடி இது. ஏற்கனவே ஈ விரட்டிக்கொண்டிருந்த மைதானங்கள் மேலும் வறட்சியுடன் காணப்படும். மே.இ மக்கள் கூட போட்டிகளை காண ஆர்வமிழப்பார்கள். டிக்கெட்டுகளின் விலை மிகக் கூடுதல் என ஏற்கனவே புலம்பிக்கொண்டிருந்தார்கள். மைதானங்களில் நாற்காலிகள் மட்டுமே போட்டிகளைக் காணும் நிலை ஏற்படும். இது இந்த உலகக் கோப்பையில் பெருத்த பின்னடைவாக இருக்கும்.
இந்தியா, பாகிஸ்தான் வெளியேறியதால் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இவர்களை நம்பி முதலீடு செய்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திலுள்ளனர். இந்தியாவின் தேசியக் கொடிகளும், இந்திய அணியின் சீருடைகளும் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வீணாகப்போகும் நிலை. அனைத்து ஹோட்டல்களும் இப்போது Tour-package-களை மலிந்த விலைக்கு தர முன்வந்துள்ளார்களாம். தள்ளுபடியாம்.

நேற்றைய போட்டியில் மே.இ அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளனர். லாராவை உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று போட்டியின் இறுதியில் வெருப்பில் மைதானத்திற்குள் கையில் கிடைத்தவற்றை எறிந்தனர்.
இந்த சூப்பர் 8 போட்டிகள் செல்லும் விதத்தை பார்த்தால், ஆஸ்திரேலியா, இலங்கை, தெ,ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை-இறுதிக்கு வரும்.
ஆக, மற்றொரு இந்தியாவும் அவுட். (இந்தியாவுக்கு இன்ஷியல் வச்சா கூட விரட்டியடிக்கிறாங்கப்பா)
Thursday, March 29, 2007
சூடு பிடிக்கும் சூப்பர் 8
அது அப்படியிருக்கு. மற்றொரு சூப்பர் 8 போட்டியில காதுல புகை வரும் (யாருக்குன்னு வலையுலக மக்களுக்கு சொல்லத்தேவையில்லை) போட்டி முடிவு கிடைச்சிருக்கு. 322 அடிச்சா ஜெயிக்கலாம் என்று களம் கண்ட மே.இ சொல்ற மாதிரி ஒன்னும் ஆடல. லாரா மட்டும் பொறுப்போடு (இந்திய மூத்த வீரர்கள் கவனிக்க) ஆடி 77 ஓட்டங்கள் எடுத்தாரு. ராம்தின் 52 ஓட்டங்கள் எடுத்து 212 ஓட்டங்கள் வரை வந்திருக்காங்க. ஆஸ்திரேலியா 103 ஓட்டங்கள வித்தியாசத்தில் வென்றது. மத்த அணிகளெல்லாம் தட்டு தடுமாறி ஆடிக்கொண்டிருக்கும் போது 'நம்ம' (மீண்டும் காதில் புகை) ஆஸ்திரேலியா மட்டும் கலக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஆறாவது முறையாக 300+ ஸ்கோர் எடுத்துள்ளது ஆஸி அணி. இனியும் தொடரும். இம்முறை ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதை தடுக்க வேறெந்த அணியும் அருகில் கூட தென்படவில்லை.
இன்னொரு நெருடும் செய்தி. இன்னிக்கும் மே.இ அணிக்கு போட்டியுள்ளது. நியுசிலாந்து அணியுடன். தொடர்ந்து மூன்றாவது நாளாக களமிறங்கவுள்ளனர் மே.இ அணியினர். நேற்றைய முன் தினம் தொடங்கிய ஆஸி-மே.இ போட்டி மழை காரணமாக பகுதி ஆட்டம் நேற்று நடத்தப்பட்டு நிறைவடைந்தது. இன்று மற்றொரு போட்டி அட்டவனையில் உள்ளது மே.இ அணிக்கு. என்ன வகையான திட்டமிடலோ? நினைத்து பாருங்கள் எப்படி இருக்கும் மே.இ அணிக்கு.
நம்ம பசங்க தங்களின் மே.இ சுற்றுப்பயணம் (sun and sand visit) முடிந்து நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர். இரவோடு இரவாக வந்து சேர்ந்ததால் எதிர்பார்த்திருந்த அர்ச்சனைகளிலிருந்து தப்பித்துள்ளனர். அட்லீஸ்ட், அதையாவது ஒழுங்கா திட்டமிட்டார்களே. பாராட்டுக்கள்!!