Thursday, November 22, 2007

நீங்களுமா கும்ப்ளே இப்படி?

இந்தியா - பாகிஸ்தான் தொடர்கள் முன்பு போல ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படாவிட்டாலும் இந்த இரு அணிகளும் களத்தில் மோதுகையில் தோற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் இன்னும் இருப்பது ஆட்டங்களை பார்க்கையில் தெரிய வரும். அதிலும் டெஸ்ட் போட்டிகள் என்றால் கேட்கவே வேண்டாம் இரு அணிகளும் தோல்விக்கு பயந்து டிரா ஆக்கிய போட்டிகளே அதிகம். ஏதோ கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகத்தான் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் முடிவுகள் கிடைக்கின்றன.

ஒரு வழியாக சிறுபிள்ளைகள் விளையாட்டு (ஒருநாள் போட்டிகள்) முடிந்து இந்தியா - பாகிஸ்தான் தொடர் உண்மையான கிரிக்கெட்டிற்கு எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு அணித்தலைவராக கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது தேர்வு கிரிக்கெட் விமர்சகர்களிடையே இருவிதமான கருத்துக்களை எழுப்பியது. முதலாவது, இந்திய அணி எதிர்காலத்தை மனதில் கொள்ளுமானால் கும்ப்ளேயின் தேர்வு தவறு என்றும் டோனிக்கே டெஸ்ட் அணி தலைவர் பதவியை கொடுத்திருக்கலாம் என்றும் கூறினர். இரண்டாவது கருத்தாக, தாமதமாக வழங்கப்பட்டாலும் கும்ளே இதற்கு தகுதியானவர்தான், அவர் திறம்பட அணியை வழிநடத்தி இளைஞர்களுக்கு அணியை ஒப்படைப்பார் என்றனர்.

எனக்கென்னவோ அணித்தேர்வாளர்கள் அணி நலனுக்காக செயல்படுவதில்லை, மாறாக தற்காலிக பிரச்சனைகளிலிருந்து விடுபடும் அளவிலேயே செயல்படுவதாக தோன்றுகிறது. சச்சின் அணித்தலைவர் பதவியை (2001?) தூக்கியெறிந்த போதே கும்ப்ளேவிற்கு வழங்கியிருக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அவர்கள் நல்ல நேரம் அதற்கு பதில் அவர்கள் தேர்ந்தெடுத்த கங்குலி இன்று வரை இந்தியாவின் நம்பர் ஒன் அணித்தலைவராயிருக்கிறார். இப்போது நடைபெறும் உட்பூசல்களுக்கான தற்காலிக தீர்வே கும்ப்ளே. அதிலும் கூட இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு மட்டுமே அவரை அறிவித்திருப்பதிலிருந்தே தெரிகிறது இவ்ர்களை கும்ப்ளேக்கு கொடுக்கப்பட்ட பரிசல்ல இதுவென்று. வரும் ஆஸ்திரேலிய தொடருக்கும் அவரை தலைவராக அறிவித்திருந்தால் ஏதோ ஒரு தொலைநோக்குடன் செயல்படுகிறது தேர்வுக்குழு என்று சொல்லலாம்.

எப்படியோ கும்ப்ளே மிகத்தெளிவாக இருக்கிறார். தனக்கு வழங்கப்பட்டது தற்காலிகமென்று அவரும் உணர்ந்திருக்கிறார். அணியை முதியவர்களிடமிருந்து இளைஞர்களிடம் மெதுவாக ஒப்படைக்கும் முகமாக தான் செயல்படப் போவதாக தெரிவித்தார்.

சரி, இப்போது பதிவின் தலைப்பிற்கு வருவோம். இந்த ஆண்டு முழுதும் சிறப்பாக விளையாடி வரும் யுவராஜ் சிங்கிற்கு இன்றைய டெஸ்ட் போட்டியிலும் இடம் கிடைக்கவில்லை. கடந்த பல ஒரு நாள் தொடர்களிலும் அவர்தான் தொடர்நாயகன், 20/20 உலகக் கோப்பையிலும் தொடர்நாயகன். இருந்தும் அவரால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. தொடக்க வீரர்களாக வாஸிம் ஜாஃபரும் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக செயல்பட்டதால் அவர்களை நீக்குவது கடினம். பின்பு டிராவிட் & சச்சின். நினைத்துக்கூட பார்க்க முடியாது அவர்களில்லாத ஒரு டெஸ்ட் அணியை. அப்புறம், கங்குலி நடந்து முடிந்த இந்தியாவின் கடைசி டெஸ்ட் தொடரில் இரண்டாவது அதிக ஓட்டங்களை குவித்த வீரர். அவரை நீக்குவதும் கடினம். லட்சுமன், இவர் சிறிது நாட்களுக்கு முன் நடந்த உள்ளூர் போட்டியில் ஹைதராபாத் அணியில் ஆடிய போது முதுகு வலியால் அவதியுற்றார். இருந்தும் இப்போது குணமாகிவிட்டதாலும், தேர்வுக் குழுவிற்கு இவர் மேல் நம்பிக்கை இருப்பதாலும் இவரை நீக்க முடியாத சூழலில் கும்ப்ளேயின் கையில் இறுதி XI தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கும்ப்ளே வழக்கமாக எல்லாரையும் போல 'யுவராஜ் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்' என்று கூறி விட்டார். நீங்களுமா கும்ப்ளே இப்படி? என்ன கொடுமை சரவனா இது? ஒரு வீரர் தனது திறமையின் உச்சத்தில் இருக்கையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட காத்திருக்க வேண்டுமாம். :(

Pity Yuwaraj!!!

4 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

Please check the record of Lakshman in the last test series conducted in England.

3 205 54 51.25 0 2 0 - - 0 4 0

முத்துகுமரன் said...

// 'யுவராஜ் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்' என்று கூறி விட்டார்.//

11 பேர்தான் விளையாட முடியும். லஷ்மண்/யுவராஜ் என்று வரும் போது வேறு வழி இல்லை கும்ளேவிற்கு. டெஸ்ட் போட்டிகளில் யுவராஜை சுற்றி இந்திய பேட்டிங் வரும் காலத்தில் இருக்கும் என்றும் சோல்லியிருக்கிறாரே! அதை விட்டுட்டீங்களே!!

Naufal MQ said...

செந்தில் குமரன்,

நான் ஒன்றும் லட்சுமனின் ஆட்டத்தை குறை சொல்லவில்லையே. தற்போத உடல் தகுதி அடிப்படையிலாவது யுவராஜ் சிங்கை சேர்த்திருக்கலாம் என்றுதான் ஆதங்கப்பட்டேன்.

வாங்க முத்துக்குமரன்,
//யுவராஜை சுற்றி இந்திய பேட்டிங் வரும் காலத்தில் இருக்கும் என்றும் சோல்லியிருக்கிறாரே! அதை விட்டுட்டீங்களே!! //
அந்த காலம் யுவராஜ் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் போது வராதது சோகமே. :)

A Simple Man said...

ஆஸ்திரேலிய மண்ணில் கங்குலியின் ஆட்டம் இதுவரை எப்படி இருக்கிறது?? கங்குலிக்குப் பதிலாக யுவராஜ் களமிறங்க வாய்ப்பிருக்கிறதா??

எனக்கென்னவோ 2 ஸ்பின்னர்களுக்குப் பதிலாக இன்னொரு பாஸ்ட் பௌலரை சேர்த்தால் நல்லதென்று படுகிறது... உங்களுக்கு??