Sunday, November 27, 2011

மேற்கிந்திய தீவுகளின் எமன்

1986ம் ஆண்டு இறுதிகளில் சென்னையில் ஏதோவொரு மூலையில் அவதரித்தவனுக்கு, திருமணம் செய்யக்கூட அவகாசம் கிடைக்காத அளவுக்கு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடப்போவேன் என்ற நம்பிக்கை நிச்சயம் இருந்திருக்காது.

ஆனால் அது நிகழ்ந்திருக்கிறது. அதை நிகழ்த்திக்காட்டி நம்முன் நிற்கிறான் ரவிச்சந்திரன் அஷ்வின்.


வெற்றி என்பது ஒரு இரவில் நிகழ்வதில்லை. காத்திருப்புகளும், அவமானங்களும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் மட்டுமே வெற்றிக்கனியை பெற்றுத்தரும்.

14 வயதிற்குட்பட்டோருக்கான தமிழக அணியில் விளையாடிய அஷ்வின் தன் இலக்கு கிரிக்கெட் தான் என நிர்ணயித்த பின் அவர் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

டிசம்பர் 9, 2006ம் ஆண்டு தன் 20ம் வயதில் முதல் தர கிரிக்கெட் ஆட தமிழக அணிக்காக களமிறங்கிய அஷ்வினுக்கு முதல் இன்னிங்க்ஸில் 4 விக்கட்களும் அடுத்த இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும் கிடைக்க ஆட்டம் ஆரம்பமானது.

கிடுகிடுவென முன்னேற ஆரம்பித்த அஷ்வின் முதல்தர கிரிக்கெட்டில் 13 முறை 5 விக்கட்களையும் அதற்கு மேலும் வீழ்த்தி இருக்கிறார். அதாவது 37 போட்டிகளில், 63 இன்னிங்க்ஸ்களில் 13 முறை என்பது கிட்டத்தட்ட 21%.

அதாவது ஒவ்வொரு 5 இன்னிங்க்ஸ்களிலும் 5 விக்கட்களோ அதற்கு மேலோ வீழ்த்தி இருக்கிறார் என்பதை நாம் மெச்சித்தான் ஆகவேண்டும்.

முதல் தர போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகள் என ஆடிக்கொண்டிருந்த அஷ்வினுக்கு அதிர்ஷ்ட தேவதையின் காற்று அடிக்கத் தொடங்கியது ஐபிஎல் ரூபத்தில்.

ஐபிஎல் என்ற அதிதீவிர வியாபார நோக்கிலான போட்டிகளில் பணம் மட்டும் விளையாடவில்லை. அஷ்வினும் விளையாடினார். ஐபிஎல் போட்டிகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட வீரர்களில் முக்கியமானவர் அஷ்வின் என்று சொல்லலாம்.

ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சில் ஆட்டத்தைத் துவக்குவதாகட்டும், ஆஃப் ப்ரேக் என்ற வகைப் பந்துகளை சிறப்பான முறையில் உபயோகிப்பதிலாகட்டும், இறுதி நேரங்களில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், அஷ்வின் விரைவாக உச்சங்களைத் தொட ஆரம்பித்தார்.

2010ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் அஷ்வினுக்கு மற்றுமொரு உச்சத்தை வழங்கியது. அதில் தொடர்நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஷ்வின், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களங்களில் தன் சுழல் பந்துகளில் எதிரி ஆட்டக்காரர்களைச் சிக்க வைத்து, டொர்னாடோ புயலாக வலம் வரும் அஷ்வினுக்குக் கிடைத்த எதிர்பாராத அதிர்ஷ்டம் இந்திய அணியில் இடம்.

ஒருநாள் போட்டிகளுக்கு முன்னதாக 20-20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தாலும், அணியில் நிரந்தர இடம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகியே நின்றது.

2011க்கான உலகக் கோப்பைக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஹர்பஜன் சிங்கின் மூலமாக விதி விளையாடியது. எப்போதாவது ஓய்வு வேண்டுமென்றால் மட்டும் விளையாட பணிக்கப்பட்ட அஷ்வினுக்கு வாய்ப்புகளை தக்க வைக்கப் பழக்கமிருந்தபடியால், விரைவிலேயே ஒருநாள் போட்டிக்கான அணியில் நிரந்தர இடம் பெற்றார்.

டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு கடினமான போட்டி இருந்த போதிலும், தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 9 விக்கட்களை முதல் போட்டியிலேயே வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்திய அணியில் தான் கலந்துகொண்ட முதல் போட்டியில் அதிக விக்கட்கள் வீழ்த்தியவர்களில் இரண்டாம் இடமும் பெற்றார் அஷ்வின்.

திருமணம் என்பது எத்தனை முக்கியமான ஒரு வைபவம் ஒவ்வொருவருக்கும். அந்தத் திருமணத்தையே அவசரம் அவசரமாக நடத்திக்கொண்டு அணிக்காக ஓடிய தமிழ் மகன் அஷ்வினை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் தனக்கு பேட்டிங்கும் தெரியும் என நிரூபித்தார் அஷ்வின்.... 100 ஓட்டங்கள் எடுக்க இயலாமல் சச்சின் அவுட்டாக அதே இன்னிங்க்ஸில் 103 ஓட்டங்கள் எடுத்தார் அஷ்வின்.

சச்சினுடன் அஷ்வினை ஒப்பிடுவது என்பது கூடாது என்றாலும் அந்த 100 ஓட்டங்களின் மூலம் நாம் மேற்கிந்திய அணிக்கெதிரான ஓட்ட வித்தியாசங்களைப் பெருமளவில் குறைக்க முடிந்தது என்றால் மிகையல்ல.

மொத்தமாக இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடர் தான் அஷ்வினுக்கு நான் இந்த தலைப்பைக் கொடுக்க காரணமானது.

மூன்று போட்டிகள் விளையாடி, அதில் இரண்டில் ஆட்டநாயகனாகத் தேர்வாகி, தொடர்நாயகனாகவும் வென்ற அஷ்வினுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

ஆஸ்திரேலியாவுக்கெதிரான அணியிலும் அஷ்வின் இடம்பெற்றிருக்கிறார். அங்கே தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும். அது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அங்கிருந்து உலகை வீழ்த்தியவர் தான் ஷேன் வார்னே.

இதே போன்ற விடாமுயற்சியும், வெற்றியை ருசிபார்க்கும் வெறியும் இருந்தால் அஷ்வின் இன்னும் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்குத் தருவார் என நம்பலாம்.

வெல்டன் & ஆல் தி பெஸ்ட் அஷ்வின்.

3 comments:

Unknown said...

அது சாம்பியன்ஸ் லீக்

(2010ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த ஐபிஎல் அஷ்வினுக்கு மற்றுமொரு உச்சத்தை வழங்கியது.)

DR said...

நல்லா எழுதியிருக்கீங்க...

தமிழ்மனம் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை, அதை சரி செய்யவும்.

Arun Ambie said...

கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் இருந்து தான் அஸ்வினை கவனிக்க ஆரம்பித்தேன். சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் ஆடுவதாகத் தோன்றுகிறது. அது ஓய்வு பெறும் வரை தொடர வேண்டும். தன் சாதனைகளுக்காக மட்டுமே ஆடாமல் டிராவிட் போல அணிக்காக ஆடும் வீரராக இருப்பது அவருக்கும் அணிக்கும் நன்மை பயக்கும். புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகம் தொடர வாழ்த்துக்கள்.