Saturday, March 5, 2011

“கிரிக்கெட்” பற்றி உனக்கென்ன தெரியும்..?


“நீங்க கண்டிப்பா எதாவது உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் அட்லீஸ்ட் உங்களுக்கு பிடித்த கேம்மாவது விளையாட வேண்டும்…உங்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்…?”

“கிரிக்கெட் டாக்டர்”
“ரொம்ப நல்லதா போயிற்று ஒரு வாரம் தொடர்ச்சியா கிரிக்கெட் விளையாடுங்க..ஒரு வாரம் கழிச்சி வாங்க டெஸ்ட் பண்ணி பாத்துடலாம்…கண்டிப்பா வெயிட்டுலே ஒரு மாற்றம் தெரியும்”

உடம்பு குறைக்கும் நோக்கில் டாக்டரை சந்தித்த, நம்ம ஹீரோ, அதன் பின் ஒரு வாரமாக ஒரே கிரிக்கெட் தான்…

“தம்பி தீயா விளையாடனும்னு” அவருக்கு அவரே உற்சாகப் படுத்திக் கொள்வார்…ஒரு வாரம் முடிந்த்து…தெரிந்த வரை அவர் உடல் எடையில் ஒரு மில்லி மீட்டர் கூட குறைந்ததாகத் தெரியவில்லை. டாக்டரை சந்தித்தார்.."

டாக்டர் வெயிட் செக் பண்ணினார்…பெரு மூச்சு விட்டார்.. ஒரு கிலோ ஏறியிருந்தது..!

“என்ன நான் சொன்ன படி செஞ்சீங்களா?”

“ ஆமா டாக்டர், தினமும் ஒரு மணி நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டுத்தான் மறு வேலை”

“நீங்க பேட்ஸ் மேனா? பௌலரா..?

“எல்லாமே நான் தான் டாக்டர்”

“ஆல் ரவுண்டரா அப்படின்னா கண்டிப்பா குறைஞ்சிருக்கணுமே…? ஆமா யார் கூட விளையாடுறீங்க?”

“ ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அல் மோஸ்ட் எல்லா டீமோடையும்”

டாக்டருக்குத் தலை சுற்றியது..சுதாரித்துக் கொண்டு,
“அடடே இப்ப வெல்லாம் உள்ளூர் டீமுக்கே இண்டர் நேஷனல் அளவுக்கு பேர் வச்சிடுறீங்களா..?வாரம் முழுதும் விளையாடுனீங்களா? இல்லை இடையிலே லீவு எதாவது…?”

“ஒரே ஒரு நாள் பவர்கட் அன்றைக்கு மட்டும் விளையாட வில்லை”

“பவர்கட்டா? நீங்க என்ன டே நைட் மேட்சா விளையாடுறீங்க..!! ?

“என்ன டாக்டர் விவரம் இல்லாமே கேட்குறீங்க..? ஒரு நாள் முழுவதும் பவர் கட், யூபிஸ் கூட ஒரு மணி நேரம் தான் தாங்கும்,, இதுலே எப்படி கம்ப்யூட்டரை ஆன் பண்ணுறது..?

“கிரிக்கெட் விளையாட எதுக்கு கம்ப்யூட்டர்..?”

கம்ப்யூட்டர் கேம் விளையாட கம்ப்யூட்டர் இல்லாமே எப்படி டாக்டர் ..?
என்னது கம்ப்யூட்டர் கேமா ? நீ இவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் கேம் கிரிக்கெட் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தீயா..? என்று டாக்டர் மயக்கம் போட்டு விழுந்தார்…

என்னைத் தெரிந்தவர்கள் இந்தக் கதையை படித்தால் உன் சொந்தக் கதையா இது..? என்று கேட்பார்கள் அந்த அளவிற்கு எனக்கும் இந்தக் கதைக்கும் எனக்கும் நிறைய தொடர்பு உண்டு...:-)

பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் இந்த ஆடுகளத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த வேளை, நீங்களும் ஆடுகளத்தில் எழுதுங்களேன்ன்னு ..ஒரு உரிமையுடன் என்னைக் கேட்ட போது…”அட இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புதுன்னு தான் தோன்றியது”வீடியோ கேம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் நானும், அவ்வப்போது நம்ம அணியினரை விமர்சிப்பேன். ( நம்ம அணியை விமர்சிக்க அந்தத் திறமை போதும்னு சொல்லிடாதீங்க) நண்பர்கள் டெண்டுல்கர், பாஜி, தோனி , சேவாக் ஆகியோர் பொறுத்துக் கொள்ள வேண்டும்..:-)


இண்டர்நேசனல் ப்ளேயருக்கு டேமேஜ் அதிகமா இருக்காதுன்னு நம்பறேன்…:-) நமக்கெல்லாம் களத்துலே இறங்கி விளையாடுறதுன்னாத்தான் அலர்ஜி, மற்றபடி களத்துக்கு வெளியே இருந்து விமர்சிப்பதுன்னா…நம்ம ஆளுங்களை மிஞ்ச முடியாது ..:-) இல்லேன்னா ரவிசாஸ்திரி மாதிரி ஆட்களெல்லாம் இப்ப மைக்கை பிடிச்சுக்கிட்டு ஒரு ஓவருக்கு இருபது ரன் எடுக்குறவங்களையெல்லாம் கமெண்ட் பண்ண முடியுமா..?.:-) ( அவரெல்லாம் ஒரு மேட்ச் முழுதும் நின்றாலே அவ்வளவு தான் எடுப்பார்.:-)). அந்த வரிசையில் நானும் இப்ப இந்த குழுவுடன் மைக்கை பிடிச்சுவிட்டேன்…
இனி கிளப்புடா தம்பி கிளப்புடா…:-)
அன்புடன்
கீழைராஸா

Thursday, March 3, 2011

அயர்லாந்து vs இங்கிலாந்து

உலகக்கோப்பையின் வேகமான சதத்தை அயர்லாந்து வீரர் அடிப்பாரென்றும், அயர்லாந்து இரண்டாவதாக பேட் செய்து அதிகமான ஸ்கோரை அடித்து வெல்லும் என்றும் நேற்று மாலை வரை யாரவது சொல்லியிருந்தால் அவரை அனைவரும் பைத்தியக்காரன் என்றே நினைத்திருப்பர். ஏன், அயர்லாந்து வீரர்களே சிரித்திருப்பார்கள் .

ஆனால், இந்த இரண்டு ரெக்கார்டுகளும் இன்று அயர்லாந்து வசம். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்கள் அடித்தபொழுது, அனைவரும் இங்கிலாந்து எளிதில் வென்றுவிடும் என்றுதான் எண்ணி இருப்பார்கள். அதேபோல்தான் தொடக்கத்தில் அயர்லாந்தின் ஆட்டமும் இருந்தது . ஸ்டெர்லிங் சிறிது அடித்து ஆடினாலும் , சீக்கிரம் ஆட்டமிழந்து விட்டார். பாதி ஓவர்கள் முடிந்த நிலையில் இருநூறு ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டது,பாதி வீரர்களும் அவுட் ஆகிவிட்டனர். 

இந்த நிலையில்தான் கெவினின் ருத்ர தாண்டவம் ஆரம்பம் ஆகியது. முதலில் ஸ்வானின் சுழற்பந்துவீச்சில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அப்பொழுது கூட யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்படியும் சிறிது நேரத்தில் ஆட்டம் இழந்துவிடுவார் என்றே எண்ணினார்கள். 32 ஆவது ஓவரில் பேட்டிங் பவர்ப்ளேயை எடுத்த கெவின் மற்றும் குஷாக் இணை ஐந்து ஓவர்களில் 62 ரன்கள் குவித்தனர். இந்த ஐந்து ஓவர்கள்தான் ஆட்டம் மாற அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து அடித்து ஆடிய கெவின் உலகக்கோப்பை வரலாற்றில் வேகமான சதத்தை அடித்தார். ஐம்பது பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 

அவருக்கு உறுதுணையாக ஆடிய  குஷாக் 47 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனப் பின் களமிறங்கிய மூனி துவக்கத்தில் சிறிது தடுமாறினாலும் , வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கெவின் அவுட் ஆனபின் பதட்டம் அடையாமல் நிதானமாக ஆடி அயர்லாந்தை வெற்றிப் பெற வைத்தார். 

அயர்லாந்து வெற்றிபெற கெவினின் ஆட்டம் முக்கியக்காரணமாக இருந்தாலும், இங்கிலாந்து  பேட் செய்தபொழுது கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே அடித்ததும் ஒரு காரணம். பீல்டிங்கிலும் இங்கிலாந்து அதிகக் கேட்ச்களை தவறவிட்டது அயர்லாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

எந்த அணியாக இருந்தாலும், லேசாக எடைப்போடக் கூடாது என்பதும், எத்தனை ரன்கள் அடித்தாலும் வெற்றி உறுதி இல்லை என்பதும் இந்த ஆட்டத்தின் படிப்பினைகளாகும். 

அயர்லாந்தின் வெற்றி மீதம் இருக்கும் ஆட்டங்களை முக்கிய ஆட்டங்களாக மாற்றி  உள்ளது . இங்கிலாந்து இனி அனைத்து ஆட்டங்களையும் குறிப்பாக பங்களாதேஷ் உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும்.இல்லையெனில் காலிறுதியில் நுழைவது அவர்களுக்குக் கடினமாகி விடும். 

அன்புடன் எல்கே 

 

Tuesday, March 1, 2011

சச்சினும் இந்தியாவும் - எழுச்சியின் வரலாறு

எனக்கு சச்சினைப் பிடிக்காது. ஆனா சில சமயங்கள்ல சச்சின் இல்லாத இந்திய அணியை நினைச்சுப் பார்க்கவே முடியாது. இன்னைக்கு சச்சினைப் பத்தின ஒரு ஆர்ட்டிகிள் பார்த்தேன். அப்படியே வாயடைச்சுப் போயிட்டேன். உண்மைலேயே சச்சின் நமக்கெல்லாம் கிடைச்ச கிஃப்ட்.

நாம தான் சரியா உபயோகிக்கல...

பாகிஸ்தான் டெஸ்ட்ல முதுகுல பெல்ட் கட்டிக்கிட்டு கடைசி 14 ரன் எடுக்க முடியாம அவுட்டான போது பாகிஸ்தான் நாடே அழுதிருக்க சான்ஸ் இருக்கு. சச்சினோட கமிட்மெண்டுக்கு எனது சல்யூட்.

இப்ப நாம ஆர்ட்டிகிளுக்கு வருவோம். இந்த ஆர்ட்டிகிள் வந்திருக்கிற இடம் த டைம்ஸ் ஆஃப் இந்தியா. ஆர்ட்டிகிளின் தலைப்பு

சச்சினும் இந்தியாவும் : இரண்டு பெரும் எழுச்சியின் வரலாறு

http://timesofindia.indiatimes.com/articleshow/7598432.cms

மனஸ் குப்தா எழுதிய அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியும் உண்மையை அப்படியே எடுத்துரைக்கிறது. அவ்வப்போது சச்சினை அதிகம் புகழவும் செய்கிறது :-)

1990களில் தான் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்தது. அப்போது தான் மன்மோகன் சிங்கும், சச்சினும் தங்களின் பயணத்தை ஆரம்பித்தனர். - Quote

இவர்களின் முயற்சி இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு முக்கிய இடம் பெற்றுத் தரும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. - Unquote

கவாஸ்கர் இந்தியாவை தோல்வியிலிருந்து மீட்கப் பார்த்தார் என்றால் சச்சின் வெற்றிக்காக உழைத்தார். ரிச்சர்ட்ஸின் அடிதடியும், கவாஸ்கரின் நுணுக்கமும், கபில்தேவின் இதயமும் கொண்டவர் லிட்டில் மாஸ்டர். வயதான பெண்மணிகள் பிரார்த்திக்கவும், வேலை செல்லும் ஆப்பீசர்கள் ஓபி அடிக்கவும், இளம் தலைமுறைக்கு உத்வேகமாகவும் அவதரித்தார் சச்சின் - Quote

ஷார்ஜாவின் மணற்புயல் போல் சச்சின் ஆடும் ஆட்டம்... சென்செக்ஸ் 10000 புள்ளிகள் உயர்வு. இந்தியாவின் அன்னிய செலவாணியும் சச்சினின் சென்ஞ்சுரிகளும் ஒரு சேர உயர ஆரம்பித்தன. ஒரு முறை ஸ்டீவ் வாக் சொன்னது, "நாங்கள் சச்சினிடம் தோற்றுவிட்டோம்". - Quote

இந்தியாவின் சாஃப்ட்வேர் கம்பெனிகள் தங்கள் முத்திரையை பதிக்க ஆரம்பித்த போது, இந்தியாவும் வெளி நாடுகளில் வெற்றிக் கனியைப் பறிக்கத் தொடங்கி இருந்தது.. அதன்பிறகு நடந்ததை உலகம் அறியும். - Quote

20 ஆண்டுகள் கடந்துவிட்டது. கீச்சுக் குரல் கொண்ட சிறுவன் தற்போது லெஜண்ட். உலகின் வேகமான வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் நாமும் ஒன்று. - Quote

சச்சினின் சாதனைகளில் இதுவரை கேட்டிராத சில:

  • 778 பௌலர்கள் சச்சினுக்கு பந்து வீசி இருக்கிறார்கள். அதில் 528 பேரால் சச்சினை அவுட்டாக்க இயலவில்லை. ஒரு முறை கூட.
  • இதுவரை 1145 மணி நேரம் சச்சின் பிட்சில் நின்றிருக்கிறார்.
  • இதுவரை 711 கிமீ ஓடி இருக்கிறார். (ரன் எடுக்க ஓடியவை மட்டும்)
 இந்தியாவின் சாதனைகளில் சில:

  • 1992ல் சென்செக்ஸ், ப்ரைவேட் ஏர்லைன்ஸ் எல்லாமும் ஆரம்பமானது.
  • ஐபிஎல் ஆரம்பம் 2008
  • உலகின் விலை குறைந்த கார் நானோ - 2010
என்னதான் சொன்னாலும், சச்சின் 100 போட்டா அந்த மேட்ச் இந்தியா தோத்திடும்னு தான் சொல்லப் போறேன் :)

நாய் வாலை............ :)