விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம் ஒருத்தன். அது சரி விடிய விடிய ராமாயணம் சொல்லி தூக்கத்த கெடுத்தவனுக்கு அந்தத் தண்டைனையக் கூட கொடுக்கலைன்னா ராமாயணம் கேட்டதுக்கு என்ன அர்த்தம்? ராமாயணம்னா ”காத்தடிக்குது காத்தடிக்குது” பாட்டுல பிரபுதேவா & co ஆடி காட்டுவாங்களே அத்த மாதிரி சும்ம அஞ்சு செகண்ட்ல சொல்லணும். இப்படி தினுசு தினுசா யோசிச்சு உதாரணம் கொடுத்தாலும் நேத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடந்தது உச்சக் கட்ட கொடுமை. பத்து மணி நேரம் டிவிக்கு முன்னாடி உட்கார்ந்து எச்சில் பண்ணி கடிச்ச நகமெல்லாம் போக, மேட்ச் பாத்த எல்லாருக்கும் இன்னைக்கு மிஞ்சினது நல்லா சோப்புப் போட்டு கழுவின பின்னாடியும் எஞ்சியிருக்கும் விரல் வீச்சந்தான்.
”பவுலிங் கொஞ்சம் சொதப்பல். ஆனா சாகீர் இருக்கிறதனால கொஞ்சம் வலுவானதா இருக்கும்”, “எட்டு பேட்ஸ்மேன் இருக்கோம்ல ஹர்பஜனையும் சேர்த்து அதனால பேட்டிங்க்ல நாம வலுவான அணிதான். பேட்டிங்கை வச்சு ஜெயிச்சிரலாம்.”, “டெண்டுல்கர் எப்படியும் அடுத்த உலகக்கோப்பைக்கு இருக்கப் போறதில்ல. இந்த வருஷம் எப்படியும் வாங்கணும்னு விளையாடுவாரு. அதனால கண்டிப்பா ஜெயிச்சிருவோம்.”, “தோனிகிட்ட என்னமோ ஒண்ணு இருக்குய்யா, என்னத்தையாவது பண்ணி ஜெயிக்க வச்சிர்ராம்ல” இப்படியாக பட்டிதொட்டி எங்கும் ஒரே விதமான குரல்களைக் கேட்க முடிகிறது.
எதிரணி எந்த அணியா இருந்தாலும் 300க்கு மேல அடிக்கும் வலுவான பேட்டிங் லயனப் இருக்கலாம். டெண்டுல்கர் அடிச்சு ஆடலாம், கோப்பையை ஜெயிக்கனுங்கிற கனவோட வழக்கத்திற்கு மாறாக அஞ்சு சிக்ஸர், அதுவும் சிறந்த ஸ்பின் பவுலர்னு சொல்ற ஸ்வான்னை அநாயசமாக விரட்டலாம். தோத்திட்டிருந்த மேட்ச்சை இந்தியா பக்கம் திருப்பினாண்டா சாகீர்னு இனி சாகீர் புகழ் எக்ஸ்ட்ரா டெஸிபலில் ஒலிக்கலாம். தோனி திடீர்னு லெக் ஸ்பின்னர் டீமுக்கு தேவைனு அவருக்கே உரித்தான அந்த குணகத்தை வெளிப்படுத்தலாம். எல்லாம் நினைத்தது போல நடந்தாலும் வெற்றி நினைத்தது போல கிடைக்காமல் போகலாம் என்பதற்கு நேத்து இந்திய அணிக்கு விழுந்த அடி ஒரு உதாரணம். இது ஒரு அபாய மணி. குறைகள் களையப்படாமல் இருந்தால் எதிர்பாராத சமயத்தில் களையமுடியாத சந்தர்பத்தில் நம்மை பாதிக்கும்னு சொல்வாங்க. நம்ம பவுலிங் தேராது, இவங்களை வச்சிட்டு உலகக்கோப்பை ஜெயிக்கிறது கஷ்டம்னு ஏற்கனவே பேசினாலும், இன்னைக்கு வரைக்கும் பெரிசா ஒரு மாறுதலும் வரலை. அதிலும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு ஆட்டதுக்கு முன்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமா அல்லது ஒரு ஓவர் போட்ட பின்னாடி ஃபிட்னஸ் இல்லாம போகுமான்னு இன்னும் யாருக்கும் தெரியல. முதல்ல அறிவிச்ச பதினைஞ்சு பேர் கொண்ட அணியில இல்லாம இருந்த ஸ்ரீசாந்த்தான் உலகக் கோப்பைல இந்திய அணியின் முதல் ஓவரைப் போட வேண்டிய நிர்பந்தத்தில இந்திய அணி இருக்கு. முணாஃப் படேல் கோயில்ல கொடுக்கிற சக்கரைப் பொங்கல் மாதிரி! நமக்கு யோகம் இருந்தா முந்திரிப்பருப்பு வரும் இல்லைன்னா ஒழுங்கா பிசையாம கிடைக்கும் சோற்றுக்கட்டி.
எப்பேற்பட்ட எதிரணியா இருந்தாலும் எட்டிலிருந்து பத்து ஓவருக்கு மேல் ஒரு விக்கெட்டை எடுக்காமலிருந்தால் அது ஆபத்தானது. இது ஆட்டத் தொடக்கத்தில் நடந்தால் இன்னும் மோசமான விளைவுகளைத் தரும். அதற்கு நேற்றைய ஆட்டம் ஒரு உதாரணம். முதலில் ஸ்ட்ராஸ்-பீட்டர்சன் ஜோடியை பத்து ஓவருக்கு (9.3 ஓவர்) ஆட விட்டார்கள். பின்னர் ஸ்ட்ராஸ்-இயான் பெல் ஜோடியை 20 ஓவருக்கு மேல் (26 ஓவர்) ஆட விட்டார்கள். இதில் சத்தம் அதிகமா இருந்ததால் ஸ்ட்ராஸ் எட்ஜ் கேட்காமல் போனதென சப்பைக்கட்டு வேறு (http://www.rediff.com/ cricket/report/world-cup-2011- strauss-edged-it-twice-but- indians-didnt-appeal/20110228. htm). இங்கிலாந்தை இந்தியாவுக்கு நிகரான அணியென நம்பாமல் இந்திய ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன்பே ஷேன் வார்னே ட்வீட்டியது “Looking forward to the game between india and England today should be a cracker.. My prediction a tie!”. ஷேன் வார்னே சொன்ன அளவிற்கு நூறு சதவிகிதம் துல்லியமாக முடிவு தெரியாமல் போனாலும் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு இப்படியொரு சவாலைத் தருமென்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இந்திய அணி பவுலிங்கில் ஜிம்பாப்வேவைவிட மோசமான நிலையிலிருக்கிறது. ஜிம்பாப்வே கூட உலகக்கோப்பையில் இதுவரையிலும் எதிரணியின் ஒரு விக்கெட்டை எடுக்க 26 ஓவர் எடுத்துக்கொண்டதில்லை.
பலவீனம் தெளிவாக கண் முன் தெரிகிறது. பவுலிங்க்கு சாகீரை மட்டுமே நம்பி இருக்கலாகாது. எவ்வளவு நல்ல பவுலராயிருந்தாலும் அவனாலும் ஒரளவிற்கு மட்டுமே அணியை காப்பாற்ற முடியும். 338 ரன் அடித்தாலும் பவுலிங் மோசமாகயிருந்தால் எதிரணி எளிதாக வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. இன்னும் உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்களில் நுழைந்து விட்டால் இந்த பவுலிங்கை நம்பி இந்தியா வெற்றி பெருமென்று கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. இரண்டே வழி. ஒன்று பவுலிங்கை கொஞ்சம் வலுவானதாக்குவது. அது இனிமேல் நடப்பது கொஞ்சம் கஷ்டம். ஒருவேளை ஆசிஷ் நெஹ்ரா முழு உடல் தகுதியுடன் வந்து ஒழுங்காக பந்து வீசி சாகீருக்கு தகுந்த இணையாக இருந்தால் நடக்கலாம். இரண்டாவது, டாஸ் ஜெயித்தால் பவுலிங்கை தேர்வு செய்து எதிரணி எவ்வளவு அடித்தாலும் நமது பலமான பேட்டிங்கைக் கொண்டு சேஸ் செய்வது. இல்லையென்றால் நாக் அவுட் சுற்றில் ஏதேனும் ஒரு எதிரணி வீரர் 150+ ஸ்கோர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
”Do onto others as they would do onto you; only do it first!”னு சொல்வாங்க. தோனிக்கு இவ்விஷயம் இந்நேரம் தெரிந்திருக்கலாம். அல்லது தோனி இந்நேரம் இப்படியும் யோசித்துக் கொண்டிருக்கலாம். எதற்கும் ஷேன் வார்னேவிடம் கோப்பையை இந்தியா வெல்லுமாவென ஆரூடம் கேட்டு வையுங்கள்.
எழுதியவர்: கோ.கணேஷ்