Sunday, April 3, 2011

தோனி, நீ தெய்வ மச்சானடா!!!



* நேற்றைய ஆட்டத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லும் நிலையில் இல்லை மனம். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கிறது.


* நான் கிரிக்கெட் பார்க்க துவங்கியது 87 உ.கோப்பை முதல்.... அன்று அரை-இறுதியில் அசாருத்தீன் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தவுடன் இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது முதல்... இந்த உ.கோப்பைக்கான எனது ஏக்கமும் தொடங்குகியது. ஒவ்வொரு உ.கோப்பைக்கும் அணியின் பலம் பலவீனம் பற்றியெல்லாம் கவலையில்லாமல் குருட்டுத்தனமாக நம்பினேன்.


* 96 உ. கோப்பை அரை இறுதி கல்லுரி விடுதியில் 200 நண்பர்களுடன் தாரை தப்பட்டை சூழ ஆட்டத்தை காண ஆரம்பித்த நான்... இந்தியாவின் 5 விக்கெட விழுந்தவுடன் தோல்வியை தாங்க இயலாமலும், ஏமாற்றத்தாலும் வீரர்களின் மேல் ஒரு வெறியான கோபத்தில் அறைக்குச் சென்று அங்கு ஒட்டியிருந்த சச்சின், அசாருத்தீன் மற்றும் மைக் டைசன்(பாவமரியாதவன்) கிழித்து நொறுக்கி .. ஒரு போர்வைக்குள் அழுகையுடன் முடங்கி போனேன். கல்கத்தாவே கலவரமானது, காம்ப்ளி அழுதது எதுவுமே நான் பார்க்கவில்லை.


* இப்படி ஒவ்வொரு முறையும் வாய்ப்பு நழுவும் போதும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.


* இப்படி எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. வென்ற போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம். என்னுடைய கல்லூரி விடுதி நாட்களும் நண்பர்களும் கண் முன் வந்து போயினர். அவர்களுடன் இந்த கணத்தை கொண்டாட முடியவில்லையே.


* போட்டி முடிந்து வீரர்கள் பலர் ஆனந்த கண்ணீர் வடித்தாலும் மனம் நெகிழ்ததே தவிர கண்ணீர் வரவில்லை. ஆனால், காலையில் காரில் அலுவலகம் வரும்போது 'சிறப்பு செய்தி தொகுப்பு (இன்றைக்கு நேற்றைய வெற்றி குறித்து மலையாள பண்பலையில் )' கேட்ட போது உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்னையும் அறியாமல் ஒரு வெறியில் "yessssssssss" என்று கீரிட்டு கத்தியே விட்டேன்.


* நான் ஏற்கனவே இங்கு சொன்னது போல யுவராஜ் ஜொலிக்கும் தொடர்கள் எப்போதும்(பெரும்பாலும்) இந்தியாவுக்கு சாதகமாகவே முடியும். அதுபோலவே உ.கொப்பையிலும் நடந்து விட்டது. சச்சின் மற்றும் அனைத்து வீரர்களும் (யாரப்பா அது ஸ்ரீசாந்துமான்னு கேக்குறது?) பங்களிப்பு செய்திருந்தாலும்.... தோனி, நீ தெய்வ மச்சானடா!!!

1996-2011


நேற்றைய மேட்சில் டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தவுடன் எனக்கு  1996 ஆம் வருடம் கல்கத்தாவில் நடந்த அரை இறுதிப் போட்டிதான் நினைவுக்கு வந்தது. அதில் இந்தியா டாஸ் வென்று  அவர்களை பேட் செய்ய அழைத்தது. அந்த உலகக் கோப்பையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜெயசூர்யா மற்றும் கலுவிதரனா இருவரும் முதல் இரண்டு ஓவர்களிலேயே ஆட்டம் இழக்க , இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் அரவிந்த டி சில்வா அற்புதமாக ஆடி 251 ரன்கள் சேர்க்க உதவினார். 

அதன்பின் அந்த ஸ்கோரை சேஸ் பண்ணத் துவங்கிய இந்தியா , சச்சின் ஆடிய வரை சமாளித்தது. அவர் அவுட் ஆகியவுடன் மளமளவென்று விக்கெட்களை இழக்கத்துவங்கி , பின் ரசிகர்களின் கோபத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கா வென்றதாக அறிவிக்கப்பட்டது. 


நேற்று அவர்கள் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தனர். இந்த உலகக் கோப்பையில் தரங்கா, தில்ஷன் இணை நன்றாகவே ஆடியுள்ளனர். ஆனால் நேற்று அவர்களால்  தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட இயலவில்லை. விரைவிலேயே இருவரும் அவுட் ஆனார்கள். பின் அப்பொழுது டி சில்வா ஆடியவாறு ஜெயவர்தனே ஆடத் துவங்கினார். கடைசி கட்டத்தில் நமது பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கும் வள்ளல்கள் ஆனார்கள். 


275 என்றக் கடினமான இலக்குடன் ஆடத் துவங்கிய இந்திய அணி, விரைவில் சேவாகையும், சச்சினையும் இழந்தது. அந்த சமயத்தில் பெரும்பாலானோர் மனதில் 1996 ம்,2003 ம் எட்டிப் பார்த்திருக்கும். ஆனால் , கம்பீர் ஒரு முனையில் கம்பீரமாக ஆட, மறுமுனையில் முதலில் கொஹ்லி பின் , கேப்டன் கூல் தோனி இருவரும் கைக் குடுக்க இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 1996 ஆம் வருட அரை இறுதிப் போட்டியில் தோற்றதற்கு சரியான பதிலடி நேற்றுத் தரப்பட்டுள்ளது.


மேட்ச்  முழுவதும் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வீரர்கள் வெற்றிப் பெற்றவுடன் வெளிப்படுத்தினர். எப்பொழுதும் கூலாக இருக்கும் தோனியும் சிறிது உணர்ச்சிவசப்பட்டார். பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணிலும் நேற்று ஒரு துளி கண்ணீராவது வந்திருக்கும் அந்தத் தருணத்தில். 

அன்புடன் எல்கே