Monday, May 30, 2011

கெய்ல், தோனி மற்றும் ஐபிஎல்

ஒரு ஆள் தனியா நின்னு ஒரு டீமோட தலையெழுத்த மாத்த முடியுமா? முடியும் என்பதற்கு இந்த ஐபிஎல் உதாரணம். அந்த ஒரு ஆள் கிரிஸ் கெய்ல். டீம் பெங்களூரு. கிரிக்கெட் ஒரு டீம் கேம். சில ஆட்டங்களின் வெற்றிகளை ஒரு தனி நபர் தீர்மானித்தாலும், தனி நபர் வெற்றி, அணியின் வெற்றியாக எல்லா நிகழ்வுகளிலும் சாத்தியமில்லை என்பதற்கும் இந்த ஐபிஎல் நல்ல உதாரணம். நல்ல டீமென்று ஆரம்பம் முதலே பாராட்டப்பட்ட சென்னை கோப்பையை வென்றிருக்கிறது. இறுதி போட்டியிலும் கெய்ல் விளையாடி பெங்களூருக்கு வெற்றி தேடித்தந்திருந்தால் இந்த ஐபிஎல்லை கெய்லின் ஐபிஎல்லென்றே சொல்லியிருக்கலாம். அது நடக்கவில்லை.

தனி நபருக்கென்று வழங்கப்படும் எந்த விருதும், தொடரில் தனி நபர் சாதனை என எதுவும் சென்னை அணியிடம் இல்லை. குழு விருதான, ஃபேர் ப்ளே விருதை வாங்கியிருக்கிறார்கள். கிரிக்கெட் டீம் கேம் என்றும். தோனி டீம் மேன் என்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. வெற்றி பெற்ற பின்பு புகழ்வது எளிதான காரியம். பல நேரங்களில் ஒரிரு வெற்றிகளிலேயே இந்தப் வெற்றிகளும் புகழாரங்களும் நின்று விடுவதும் உண்டு. ஆனால் அளப்பரிய வெற்றிகள் தொடர்ந்து கிடைக்கும் பொழுது, தோனி என்னும் பெயரை அவ்வளவு எளிதாக நம்மால் கடக்க முடியவில்லை. இந்தப் புகழும் போய்ச்சேரட்டும் தோனிக்கே. முடிந்தால் ஒரு விசில் போட்டு விட்டுப் போங்கள் கஷ்டப்பட்டு தமிழ் பேசறான்யா மனுஷன்.

வீரர்கள் ஏலத்தில், சென்னை முந்தைய ஐபிஎல்லில் அவர்களுக்காக விளையாடிய வீரர்களை ஓரளவிற்கு மறுபடியும் வாங்கிவிட்டனர். ஒரு வகையில் வீரர்கள் எல்லோரும் அவர்களுக்கான பொறுப்பை உணர்ந்திருந்தார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர்கள் ஒரு அணியாக எவ்வாறு செயல்பட ஆரம்பித்தார்கள் என்று. இதில் தோனியின் பங்கு எவ்வளவென்று தெரியவில்லை. ஆனால் பழைய வீரர்களை ஒரு அணியாக அவர்கள் பார்த்ததே தோனியின் வெற்றியென்று தான் சொல்ல வேண்டும். அவர்களை அவர்களின் பொறுப்பை உணரச்செய்ததே தோனியின் வெற்றி.

சென்னை மீண்டும் ஐபிஎல்லை வென்றிருக்கிறது. இனி மற்ற அணிகளும் இந்தத் தேர்வு முறையை செயல்படுத்தலாம். குழுவாக இயங்க ஆரம்பிக்கலாம். வலுவான அணியாக செயல்படுவதற்கு முயலலாம். வெல்பவர்கள் செய்வதும் அதையே தான். மற்றவர்களைத் தன் போல் மாற்ற முயல்கிறார்கள். அதனாலேயே அவர்கள் அதிகம் வெற்றிபெறுகிறார்கள். சென்னையின் இந்த வெற்றியும், தோனியின் இந்த வெற்றியும், அடுத்த ஐபிஎல்லுக்கான சரியான ஒரு களத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்!