Showing posts with label இ.வா. Show all posts
Showing posts with label இ.வா. Show all posts

Sunday, March 18, 2007

அடுத்த வீட்டிலும் எழவு

சரி, நம்ம வீட்டுலதான் இன்னிக்கு ஒப்பாரியும் ஓலமும் இருக்குன்னு பாத்தா, பக்கத்து வீட்டுலயும் எழவு விழுந்துருக்கு. ஆமாங்க, பாவம் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் முதல் முதலில் வெளியேறிய அணி என்ற அவப்பெயருக்கு ஆளாகி நிற்கின்றது.

நமக்குத்தான் ஆப்புன்னு பாத்தா பாகிஸ்தானுக்கு டபுள் ஆப்பு. பங்களாதெஷாவது டெஸ்ட் விளையாடும் அந்தஸ்துள்ள / வெற்றிகளை சிறிது சிறிதாக சுவைக்கத் தொடங்கிய அணி. ஆனால், பாகிஸ்தான் தோற்றதோ முதன் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் அயர்லாந்திடம். எங்கே போயி முட்டிக்கிறது?

பாகிஸ்தானின் அணித் தேர்வின்போதெ பலவித சலசலப்புகள். பின்பு அக்தர் & ஆஸிஃப் காயம் (!?!?!?!?) காரணமாக வெளியேற்றம். இம்ரான் அப்போவே சொன்னார். உலகக் கோப்பையில் பங்குபெற்றுள்ள பாகிஸ்தான் அணிகளில் இந்த அணிதான் சொத்தையான அணியென்றார். அது எந்தளவு உண்மை. பாகிஸ்தான் அணிக்குள் என்னென்னமோ பிரச்சனைகள் உள்ளன. அது பலரால் ஊகிக்கப்பட்டாலும் இதுவரை கசியவில்லை. இனி கசியத்தொடங்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் கலவர பூமியாகும். இரத்தக்காடாகும் என்பது மட்டும் உறுதி.

பாகிஸ்தான் அணியினர் பாகிஸ்தான் திரும்பிச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இண்ஜமாம் பதவி விலகுவார். உல்மர் இங்கிலாந்துக்கு பெட்டி கட்டி ரெடியாக இருப்பார். பாகிஸ்தான் அணியில் மிகப்பெரிய ஆப்பரேஷன் செய்யப்படும். தேவையான ஒன்றாகவே இருக்கும். நானும், இது போன்ற சொங்கியான ஒரு பாகிஸ்தான் அணியை பார்த்ததே இல்லை.

அடுத்த வீட்டு துக்கத்தில் பங்குகொண்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :(

ஏன் இந்த ஒப்பாரி?

என்ன நடந்திருச்சுன்னு இப்படி எல்லாரும் ஒப்பாரி வச்சி அழுவுறீங்க? ஏன் இந்த கொலைவெறி பதிவுகளெல்லாம்? என் இனிய இந்திய மக்களே ரிலாக்ஸ் ப்ளீஸ்.

என்னமோ ஒரு மேட்சுல தோத்துட்டா உலகமே இருண்டு போயிடுமா என்ன? ஜஸ்ட் ஒரு மேட்சுல தானே தோத்திருக்கோம். இன்னும் ரெண்டு மேட்ச் இருக்கு. அதுல கலக்குனா போச்சு. அடுத்த சுற்றுக்கு போயிடப் போறோம். அட போங்கங்க இவனுங்க எங்க இலங்கையை ஜெயிக்கப் போறானுங்க-னு சொல்றீங்களா? இலங்கையை ஜெயிக்க முடியாதுன்னு நீங்க நினைச்சீங்கன்ன இந்தியாவோட அடுத்த ரவுண்டுக்கு போனால் என்ன போகாட்டி என்ன? யோசிச்சு பாருங்க. இப்படி நம்பிக்கையை தளர விடக்கூடாதுங்க. நம்ம டீம் இருக்கே ஆஸ்திரேலியாவுக்கே அல்வா கொடுக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தது. என்ன சனியன், நேத்து நம்ம பங்காளிங்க நல்லா ஆடி தொலைச்சிட்டாய்ங்க. மேட்ச் முழுதும் ஒரு இடத்துல கூட நமக்கு சான்ஸ் தரல அவனுங்க. சூப்பர் பெர்ஃபார்மன்ஸ். நம்ம பங்காளிங்க திறமையை மதிக்க கத்துக்குவோம். இங்க யாருக்காச்சும் பங்களாதேஷோட ஆட்டத்தை குறை சொல்ல வக்கு இருக்கா, சொல்லுங்க? பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாத்திலும் கலக்கிட்டானுங்க.

ஓவர் நைட் மழை, பிட்ச் ஈரப்பதம் இதையெல்லாம் கண் முன்னாடி பார்த்த ட்ராவிட் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது தவறென்றாலும். நம்ம அணி இதைவிட நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கலாம். இதுக்கு மேல இந்த தொடர்ல ஷேவாக்கிற்கு வாய்ப்பு என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது.

எனக்கு துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், பங்களாதேஷின் எழுச்சியை வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த இளம் சிங்கம் (புலி?) தமிம் என்ன அடி அடிக்கிறான். பயமில்லாத ஒரு ஆட்டம். ஜெயசூர்யா + கங்குலியின் ஷாட்ஸ் அவனிடம் இருக்கிறது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது அவனுக்கு. நேற்று பங்காலிங்க ஆடிய ஆட்டத்திற்கு அவர் ஜெயித்தே இருக்க வேண்டும். அதே நடந்தது. இது இந்தியாவிற்கு தூக்கத்தில் மூஞ்சியில ஆசிட் ஊத்துனது மாதிரி. கவலைப்படாதீங்க மக்களே! நம்ம புலிகளின் வாலை பிடித்து விட்டார்கள். இனி தெரியும் விளைவுகள். நிச்சயம் நன்றாக விளையாடுவார்கள். வீறு கொண்டு எழுவார்கள். நீங்கள் அழுவதை நிறுத்துங்கள். வைக்கப்பட்ட ஆப்பு நல்லதிற்கே. அது ஆரம்பத்திலேயே கிடைத்தது அதை விட நல்லதிற்கே.

இலங்கையை வெல்வது ஒன்றும் கடினமல்ல. சமீப காலங்களில் அவர்களை கதற கதற அடிச்சு விரட்டியிருக்கிறோம். இப்போது கூடுதல் வெறியுடன் களமிறங்குவர் நம் புலிகள் (வீட்டில் மட்டுமல்ல என்பது நிருபிக்கப்படும்). எனவே, இந்தியாவின் செமி-ஃபைனல் மேட்சுக்காக காத்திருப்போம்.

நம்ம பசங்களுக்கு எப்போவுமே ஒன்று தேவைப்படும். அது 'A kick in their Ass'. அது கிடைச்சிருச்சு. இனி எல்லாம் சுகமே.

இறுதியாக, Hats Off my Bengal Brothers. We Tamils always support good cricket.

Tuesday, March 6, 2007

இந்த உ.கோப்பையின் இ.வா யார்?

உலகக் கோப்பை போட்டிகளில் சில நேரம் யாரும் எதிர்பாராத விதமாக முடிவுகள் வருவதுண்டு. அதிலும் கொடுமை சில நேரங்களில், அதுவரை அத்தனை பெரிய அளவில் வெற்றிகள் பெறாத அல்லது புதியதாக உலகக் கோப்பையில் பங்கெடுக்கும் அணிகள் (Minnows என்றழைக்கிறார்கள்) பலமிக்க அணிகளை வீழ்த்தி விடுவதுண்டு. இது போன்ற அதிர்ச்சிகள் உலகக் கோப்பையில் அவ்வப்போது நிகழ்வதுண்டு. பலமிக்க அணிகள் அத்தருணத்தில் இளிச்சவாயனாக (இனா வானா-வாக) காட்சிதரும்.

இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்து அதிர்ச்சிகளை இவ்வகையில் சேர்க்கலாம்.

முதல் அதிர்ச்சி:(இ.வா-ஆஸ்)
(1983 - ல் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை 13 ஓட்டங்களில் வென்றது)

இதுதாங்க ஜிம்பாப்வேக்கு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி. அறிமுகப் போட்டி. முதல் போட்டியிலேயே கிரிக்கெட்டில் பெரும்புலியான ஆஸ்திரேலியாவுக்கு தன் வருகையை அதிர்ச்சியாக பரிசளித்தது ஜிம்பாப்வே. தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வரும் Duncan Fletcher தான் அந்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன். அவர்தான் இந்த அதிர்ச்சிக்கும் வழி நடத்தியவர். 69 ஓட்டங்களை அவர் எடுத்ததோடு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் அதிர்ச்சிக்கு அடிகோலினார்.

இரண்டாம் அதிர்ச்சி:(இ.வா-மே.இ)
(1983 - ல் இந்தியா மேற்கிந்தியாவை 43 ஓட்டங்களில் வீழ்த்தி கோப்பையை வென்றது)

இந்தியாவிற்கு 1975 & 1979 இரண்டு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து ஒரே ஒரு வெற்றி. மேலும், தமது 9 வருட ஒருநாள் கிரிக்கெட் அனுபவத்தில் 17 வெற்றிகள் மட்டுமே. இத்தகைய ஒரு மோசமான சாதனையுடன் 1983-ல் களமிறங்கிய இந்திய அணி கோப்பையை வெல்லும் என ஒருவர் கூட கணித்திருக்க மாட்டார்கள். ஏன், கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இறுதிப் போட்டி வரை வந்த இந்திய அணி அன்றைய ஜாம்பவனாகிய மேற்கிந்தியாவை வாட்டி எடுத்தனர். அற்புதமான களத்தடுப்பு மற்றும் ஸீம்-பந்து வீச்சு மூலம் தமது 183 என்ற இலக்கை மே.இ அடைய விடாமல் தடுத்து வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர். ஒரே உலகக் கோப்பையில் இரண்டாவது அதிர்ச்சியும் அரங்கேறியது.

மூன்றாவது அதிர்ச்சி:(இ.வா-மே.இ)
(1996 - ல் கென்யா மேற்கிந்தியாவை 73 ஓட்டங்களில் வென்றது)

கென்யாவிற்கு முதல் உலகக் கோப்பை அனுபவம். யாரும் மேற்கிந்திய அணியுடன் கென்யா மோதுவதை போட்டியாகக் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் மேற்கிந்தியாவிற்கு காத்திருந்ததோ பெரும் இடி. கென்யாவின் மோரிஸ் ஒடும்பே மேற்கிந்திய பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தெறிந்தார். முடிவில் மே.இ 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக நின்றது. கென்யா அணியினர் புனே மைதானத்தை சுற்றிவந்த விதம் அவர்கள் ஏதோ உலகக் கோப்பையையே வென்றது போன்ற தோற்றத்தை தந்தது.

நான்காவது அதிர்ச்சி:(இ.வா-பாக்)
(1999-ல் பங்களதேஷ் பாகிஸ்தானை 62 ஓட்டங்களில் வென்றது)

அதுவரை பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணியை வென்றதில்லை. முதல் உலகக் கோப்பை அனுபவம். எதிரணியோ உலகமே பயந்தலறும்படியான பந்துவீச்சாளர்களை கொண்டது. வாசிம், வக்கார், அக்தர் மற்றும் சாக்லைன். இருந்தாலும் பங்களாதேஷ் ஒருவாறு சமாளித்து 223 எடுத்தது. 161-க்கு பாகிஸ்தானை ஆட்டமிழக்கச் செய்து வென்றது பங்களாதேஷ். ஆட்ட முடிவில் பாக் அணித்தலைவர் வாசிம் 'எங்கள் சகோதரர்களிடம்தானே தோற்றோம்' என்று செண்டிமெண்ட்டாக வசனம் பேசியது இன்றும் என் நினைவிலுள்ளது. இந்த வெற்றிதான் அப்போதய ஐ.சி.சி தலைவராக இருந்த டால்மியாவை பங்களாதெஷிற்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கச் செய்தது. (பங்காளி - பங்காளி கான்ஸெப்டும் உண்டு அதில்).

ஐந்தாவது அதிர்ச்சி:(இ.வா-இலங்கை)
(2003- ல் கென்யா இலங்கையை 53 ஓட்டங்களில் வென்றது)

மீண்டும் கென்யா ஒரு உலகக் கோப்பை அதிர்ச்சியை உலகிற்கு அளித்தது. இம்முறை இலங்கைக்கு அல்வா கொடுத்தது கென்யா. காலின்ஸ் ஒபுயாவின் நேர்த்தியான லெக்-ஸ்பின் பந்துவீச்சால் இலங்கையை திணறடித்தது. இந்த அதிர்ச்சி வெற்றியானது கென்யாவை அரை-இறுதி வரை எடுத்துச் சென்றது நினைவிருக்கலாம். ஆக, ஐந்தாவது கடந்த உலகக் கோப்பையில் நிறைவேறியது.

மேலுள்ளவற்றை பார்க்கையில், இம்முறையும் ஏதேனும் ஒரு அதிர்ச்சி நிகழ அதிக வாய்ப்பிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. பார்க்கலாம் யாரந்த இ.வா என்று. (யாரய்யா அது, அப்போட்டி பங்களாதேஷ் - இந்தியா என்று சொல்வது?) ஸ்காட்லாந்து - ஆஸ்? சரியாக கணிப்பவருக்கு தக்க பரிசு வழங்கப்படும். ;)