Sunday, January 20, 2008

பெர்த் பதிலடி, ஐ.சி.சி அணுகுமுறை...

இப்படியான ஒரு பதிலடியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும், 'வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கம்' என வர்ணிக்கப்படும் பெர்த்தில். பெர்த் ஆடுகளத்தில், மணிக்கு 150 கி.மீ மேல் பந்து வீசக்கூடிய மூன்று பந்து வீச்சாளர்கள் மற்றும் நுணுக்கமாக பந்து வீசக்கூடிய க்ளார்க் ஆகியோரின் பந்து வீச்சில் இந்தியா சுருண்டு மூன்று நாட்களுக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. நடந்ததென்னவோ இந்தியாவின் மிதவேக பந்துவீச்சுக்கும், ஸ்விங்- பந்து வீச்சிற்கும் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் நான்கே நாட்களில் முடிந்தது. சரியான பதிலடிதான். அதுவும் இந்த அடி பெர்த்தில் வைத்து கொடுக்கப்பட்டதுதான் சூப்பர்.

இந்த தொடரின் முதல் நாளிலிருந்தே (மெல்போர்ன் டெஸ்ட்) ஆஸ்திரேலியாவின் பேட்டிங் திணறல் கண்கூடாக தெரிந்தது. இந்திய மட்டையாளர்களும் தங்கள் பங்கிற்கு முதல் போட்டியில் சொதப்பியதால் நமக்கு தோல்வியே மிஞ்சியது. இரண்டாவது சிட்னியில் இந்தியா வென்றிருக்க வேண்டிய ஆட்டம். குறைந்த பட்சம் சமநிலை ஆகியிருக்கவேண்டியது. கொடுமை 'நாட்டாமைகள்' வடிவத்தில் தலைவிரித்தாடியதால் தோற்றோம்.

இரண்டாவது போட்டிக்கு பிறகு பலவித நாடகங்கள் அறங்கேறி மீண்டும் இந்தியா தொடரை தொடர சம்மதித்தது. மூன்றாவது போட்டிக்கு சேவாக்கை தேர்ந்தெடுத்ததன் மூலம் ட்ராவிட்டிற்கு அவரது வழக்கமான one-down இடத்தை கொடுத்து கும்ப்ளே வெற்றிக்கு வித்திட்டார் என்று சொல்லலாம். ட்ராவிட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி அவரும் அணியும் பட்டபாடு முதலிரண்டு ஆட்டத்தை கண்டவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிகள் பெரும்பாலும் ட்ராவிட்டை சார்ந்தே அமைந்திருக்கும் போது அவரை 'பலிகடா'வாக்கியது எந்தவித திட்டமோ தெரியவில்லை. யுவராஜ் அற்புதமான ஆட்டக்காரர்தான். அவரும் அணியில் இடம்பெற வேண்டும் தான். ஆனால் அதற்கான விலை ட்ராவிட் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. யுவராஜ்ஜின் கெட்ட நேரம் அவரும் ஜொலிக்கவில்லை, மூத்தவர்களும் சொதப்பவில்லை. விளைவு - யுவராஜ் இன்னும் காத்திருக்கத்தான் வேண்டும்.

இந்த வெற்றிக்கு காரணியாக குறிப்பிட ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. தொடக்கம் முதலே அடித்து ஆடி பந்துவீச்சாளர்களை நிலைகுலைத்த சேவாக், போராளி கும்ப்ளே, மிடில் ஆர்டர், எல்லாவற்றிற்கும் மேலாக பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சு + பேட்டிங். இப்படி பலகாரணங்களுடன் ஒரு வாரம் முன்பு நடந்த நிகழ்வுகளும் ஒரு வகையில் காரணம். கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்திரேலியவிற்கு சிறிதளவேனும் சவால் கொடுக்கும் அணியாக உள்ளது இந்தியா மட்டுமே. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர் 2-1 என்று இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டியது. குறைந்தபட்சம் 1-1 என்ற சமநிலையிலாவது இருந்திருக்க வேண்டியது. ஆனால், ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் முடிவு 2-2 என்று முடிந்தாலும் வியப்பிற்கில்லை.

இந்த போட்டியிலும் நடுவர்கள் ஒரு சில தவறுகளை செய்தனர். அவையெல்லாம் LBW தீர்ப்புகளில் மட்டுமே. அதெல்லாம் இயல்பான மனிதத் தவறுகளே. கடந்த போட்டியை போல Catch-களில் கூத்து நடக்கவில்லை. மூன்றாவது நடுவரின் சொத்தப்பல்களும் நடைபெறவில்லை. இக்கட்டான சூழலில் ஆசாத் ரவூஃபும், பில்லியும் போட்டியை திறமையாக கையாண்டார்கள்.

ஸ்டீவ் பக்னரை தொடரிலிருந்து வெளியேற்றியதன் மூலம் ஐ.சி.சி தற்காலிகமான தீர்வை வேண்டுமானால் தந்திருக்கலாம். இதே போன்று தவறுகள் தொடரும்போதெல்லாம் நடுவரை நீக்கினால் கிரிக்கெட் கேலிக்கூத்தாகிவிடும் என்பதை ஐ.சி.சி உணர வேண்டும். தீர்வாக, கூடுதல் நடுவர்களை Elite panel-ல் சேர்த்து நன்கு பயிற்சியளிக்க வேண்டும். தொழில் நுட்ப உதவிகளை நடுவர்களும் வீரர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சட்டங்களை வகுக்க வேண்டும். எல்லா தீர்ப்புகளும் சரியான தீர்ப்புகளாக அமைய முடியாதுதான். சில தவறுகள் நேரலாம். ஆனால், முடிந்த அளவு தவறுகளை கணிசமாக குறைக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஐ.சி.சி விரைந்து செயல்பட வேண்டும். இத்தனை சுவையான டெஸ்ட் கிரிக்கெட்டை காக்கும் பொறுப்பு தற்போது அவர்கள் கையில்தான்.

இறுதியாக, செல்லும் இடங்களிலெல்லாம் இப்போதுதான் (சில ஐந்தாறு ஆண்டுகளாகத்தான்) இந்தியா வெல்ல தொடங்கியுள்ளது. இதற்கு முன்பெல்லாம் கவாஸ்கர்களும், பட்டோடிகளும், கபில்தேவ்களும் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இனியாவது, வெளிநாட்டு தொடர்களில் ஒரு வெற்றியோடு திருப்தியடைந்து விடாமல் தொடர்ந்து வெற்றிகளை பெற முயற்சிக்க வேண்டும். நிச்சயம் இந்த அணியால் அது முடியும். அது பல முறை நிறுவப்பட்டுள்ளது. நேற்றும். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். சந்தேகிக்க முடியாத திறமையுள்ளவர்கள் உள்ள அணி, அத்துடன் பண பலமும் உள்ளது. வேறென்ன வேண்டும் பிறகு. கடின உழைப்பும் ஒற்றுமையும் தவிர.

பெர்த்தில் அற்புதமாக ஆடிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!!

12 comments:

Naufal MQ said...

குறிப்பிட மறந்தது:

ரஞ்சி கோப்பையை வென்ற டெல்லி அணிக்கு வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

யப்பா, இப்பவாவது 'go aussie go'ன்னு அந்த சவத்து மூதிங்களைத் தொரத்துனீங்களே?! நல்லா இருங்கடே!

சாத்தான்குளத்தான்

Naufal MQ said...
This comment has been removed by the author.
Naufal MQ said...

அண்ணாச்சி,
இப்பவும் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் எனக்கு பிடிக்காது என்று சொல்லவில்லை. அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடும் நமது அணியும் சூப்பர்னு தான் சொன்னேன்.

இந்த டெஸ்ட்டில் ஆஸி அமைதியாக ஆடியது நல்லாவே இல்லை அண்ணாச்சி. குயில்னா அது கூவனும். மயில்னா அது ஆடனும். அதுமாதிரி ஆஸி-ன்னா வெறியோட (வரையறைக்குட்பட்டு) ஆடனும். :)))

குசும்பன் said...

பெர்த் பிட்சில் இந்தியா ஒரு நாளுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது அதுவும் அவன் பேரு என்னா டைட் அல்லது லூசோ அவன் பந்து வீச்சுக்கு முன்னாடி நிற்பது கடினம் என்று சொல்லி அவனுங்க அடிச்ச கூத்து, அதுவும் அந்த சடையாண்டி ரிசல்ட் பற்றி எல்லாம் கவலை படவேண்டி இல்லை என்று சொன்ன திமிரு இப்ப எங்க போய் மூஞ்ச வெச்சுப்பானுங்க?

நாமளாவது கடைசி ஒரு ஓவர் வரை தாக்கு பிடிச்சோம் ஆனா அவனுங்க 4 நாள்ளே மூட்டைய கட்டியாச்சு!!!

இனி தொடரை சமன் செய்ய கூட வேண்டாம் இது போதும்:)))

குசும்பன் said...

நம்ம ஆளுங்க எப்பொழுதுமே உட்டாவாதான் செய்வானுங்க சப்பை டீமை நமக்கு எதிராக உலக சாதனை செய்யவிடுவானுங்க, ஆனா பெரிய டீம் உலக சாதனைக்கு ஆப்பு அடிச்சு நிறுத்துவானுங்க!!!

Naufal MQ said...

//இனி தொடரை சமன் செய்ய கூட வேண்டாம் இது போதும்:)))//

கிழிஞ்சது போங்க. இந்த மாதிரி நினைக்கிறதுனாலதான் வெளங்க மாட்டேங்குது :(

Naufal MQ said...

//குசும்பன் said...
நம்ம ஆளுங்க எப்பொழுதுமே உட்டாவாதான் செய்வானுங்க சப்பை டீமை நமக்கு எதிராக உலக சாதனை செய்யவிடுவானுங்க, ஆனா பெரிய டீம் உலக சாதனைக்கு ஆப்பு அடிச்சு நிறுத்துவானுங்க!!!
//

இப்படி எப்பவாச்சும் கிடைக்கும் புகழுக்கு மயங்காமல் இந்திய அணி பெரிய இடத்தை பெற வேண்டும் ஆபிசர். அதாவது...
நேற்று- மேற்கிந்திய தீவுகள்
இன்று- ஆஸ்திரேலியா
நாளை- இந்தியா
என்ற நிலை உருவாகனும்.

enRenRum-anbudan.BALA said...

Fast bowler,

நல்ல அலசல்! மிக நிச்சயமாக இந்தியா பெர்த்தில் வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை தான், டெஸ்ட்டின் 4 நாட்களிலும் நாம் ஆஸ்திரேலியாவை டாமினேட் செய்து பெற்ற மகத்தான வெற்றி :)

"GO Aussie Go" --- No No No ;-)

எ.அ.பாலா

Anonymous said...

>>>>இதற்கு முன்பெல்லாம் கவாஸ்கர்களும், பட்டோடிகளும், கபில்தேவ்களும் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.>>>>>>

It's amazing how people forget! It was during the Gavaskar / Kapil Dev time, we successfully chased 406 (losing only 4 wkts in the process) to create a world record and successfully defended 120-odd run to skittle Australia for 83 runs.

At least Morarji Desai was right in one thing. We (Indians) get excited easily.

- Ravi

Naufal MQ said...

நன்றி எ.அ.பாலா.

Naufal MQ said...

நண்பர் ரவி (அனானி),

//It's amazing how people forget! It was during the Gavaskar / Kapil Dev time, we successfully chased 406 (losing only 4 wkts in the process) to create a world record and successfully defended 120-odd run to skittle Australia for 83 runs.//

இதை பார்த்துட்டு சொல்லுங்க...
In away(overseas) matches...

During 1932-1999:- Played:156, Won:13, Lost:70, Draw:73

During 2000-2008:- Played:49, Won:17, Lost:17, Draw:15