Tuesday, April 3, 2007

அதிரடி மாற்றங்கள் தேவை

நாம் என்னதான் இந்தியா வெளியேறியதை மறக்க முயன்றாலும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடக்கும் வரை அது இயலாத ஒன்றாகவே இருக்கும்.

சரி. நடந்தது நடந்து விட்டது. இருபது ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த அவமான வெளியேற்றம். அதற்காக, நாம் எல்லாரும் நேசிக்கும் ஒரு விளையாட்டை அப்படியே விட்டுவிட முடியுமா? நமது அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எல்லாருக்கும் அறிய ஆவல் இருக்கும். எனக்கும் இருக்கிறது.

வரும் 7-ந்தேதி பி.சி.சி.ஐ மும்பையில் கூடி இந்திய அணியின் தோல்வி பற்றியும் அதற்கான தீர்வுகளையும் ஆராய இருப்பதாக தெரிகிறது. இதில் பயிற்சியாளர் சாப்பலின் அறிக்கையும் உ.கோ அணிக்கு மேலாளராக சென்ற ஜக்தலே என்பவரின் அறிக்கையும் கணக்கில் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும்.

ஏற்கனவே சாப்பல் பல புயல்களை கிளப்பியிருக்கிறார். மே.இ புறப்படும் முன்பு மூத்த வீரர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார். அது இப்போதுதான்(நான்கு நாட்களுக்கு முன்) சாப்பலின் நண்பர்/பத்திரிக்கையாளர் பாலு என்பவர் மூலமாக வெளியாகியுள்ளது. அதாவது, என்னுடைய கணிப்பில் சாப்பல் சேவாக் மற்றும் ஹர்பஜன் இருவரையும் தேர்வு செய்ய வேண்டாம் எனக் கூறியிருக்க வேண்டும். அதற்கு டிராவிட் மறுப்புத் தெரிவித்து அணியில் சேர்த்திருக்க வேண்டும். இதைத்தான் சாப்பல், 'மூத்த வீரர்கள் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு பதில் மூத்த வீரர்களையே ஆதரிக்கின்றனர்' என குறுஞ்செய்தி அனுப்பியிருக்க வேண்டும்.

இந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி ஒற்றுமையுடன் விளையாடியதாக எங்கேயும் துளிகூட காணக்கிடைக்கவில்லை. எல்லாருக்குள்ளும் ஒரு பிரச்சனை இருப்பது போலவே தோன்றியது. மூத்த வீரர்கள் தங்களுக்குள் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டதாகவே தெரிகிறது. அவரவர் தங்களின் இடங்களை தக்க வைப்பதிலேயே கவனமாக செயல்பட்டதாக தெரிகிறது (அதில கூட கங்குலிக்கு மட்டுமே வெற்றி).

இது மாதிரியான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனில், இந்திய அணியில் துனிச்சலான சில முடிவுகளை வாரியம் எடுக்க முன்வர வேண்டும் (எடுக்குமா என்பது எனது கேள்வி). இதுபோன்ற குழுக்கள் வளராமல் இருக்க இப்போதுள்ள பயிற்சியாளர், அணித் தலைவர் மற்றும் மூத்த வீரர்களை வீட்டுக்கனுப்ப வேண்டும். நான் ஒரு தீவிர கங்குலி ரசிகன் தான். இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நம் அணியை விட கங்குலி பெரிதல்ல எனக்கு. சச்சின், சேவாக், ஹர்பஜன், கங்குலி & டிராவிட் இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும். யுவராஜ் அல்லது கைஃப் யாராவது ஒருவரை அணித்தலைவராக்க வேண்டும். இந்த இளம் அணி தொடக்கம் முதலே வெற்றிகளை குவிக்க இயலாது தான். ஆனால், ஒன்றிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக உலகின் முதன்மை அணியாக வரும் வாய்ப்புள்ளது.

மூத்த வீரர்கள் மற்றும் குழு மனப்பான்மையை நீக்கிவிட்டால் மட்டும் போதுமா என்று எல்லாரும் கேட்பீர்கள். அது மட்டும் போதாது தான். நமது ஆடுகளங்களின் தரம் மற்றும் உள்ளூர் போட்டிகளின் தரத்தையும் அதிகரிக்க வேண்டும் (இந்தப் பதிவில் இராம.கி அய்யா அழகாக விளக்கியிருக்கிறார்). முழங்காலுக்கு மேல் பந்து எழும்பும்படியான ஆடுகளங்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளை நாம் வெல்ல முடியும். பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளின் ஆடுகளங்கள் இப்போதெல்லாம் பேட்டிங் - சாதகமானவையே. டெஸ்ட் போட்டிகளை வெல்ல இதுபோன்ற பயிற்சிகள் நமக்கு அவசியமாகிறது.

சரி. ஆடுகளங்களை மாற்றியமைத்தால் போதுமா என்று கேட்காதீர்கள். உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம், வெறும் பணத்திற்காக மட்டுமே அலைகிறது. இப்போதும் கூட இவர்களுக்கு அக்கரை வந்து மேற்கண்ட துனிச்சலான முடிவுகளை எடுப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. காரணம், வணிக முதலைகளும் அரசியல் வியாதிகளும் நடத்தும் ஒரு நிறுவனம் கிரிக்கெட் எக்கேடு கெட்டால் என்ன பணம் வந்தால் சரிதான் என்று சிந்திக்குமா? அல்லது நாட்டின் முதன்மையான விளையாட்டை சீர் செய்ய முயற்சிக்குமா? ஆக, மேற்சொன்ன முடிவுகள் எடுக்கப்பட்டு இந்திய அணி ஆட்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நோயிலிருந்து மீளவேண்டுமெனில் பி.சி.சி.ஐ-யின் அதிகார வர்க்கமே மாற வேண்டும். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அதிலும் நம் நாட்டு கிரிக்கெட்டிற்கு உணமையிலேயே தொண்டாற்ற துடிக்கும் முன்னாள் வீரர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வரவேண்டும். இப்படியே நிலமை தொடருமாயின், இந்திய அணி ஒருபோதும் விளங்கப் போவதில்லை.

(நிறைய எழுத நினைத்தேன் மனதிற்குள். விடுப்பட்டிருக்கிறது சிலவை. பின்னூட்டங்களில் சொல்ல வாய்ப்பு கிடைத்தால் சொல்கிறேன்)

9 comments:

Naufal MQ said...

சச்சின் உ.கோ-யில் தொடக்க ஆட்டக்காரராக ஆடவே விரும்பினாராம். அதற்கு சாப்பல் மறுப்பு தெரிவித்ததில் இருவருக்கும் லடாய் என்பதும் தகவல்.

முத்துகுமரன் said...

ம்,
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்துவிடும் :-)

என்னுடைய தேர்வு கைப்.

கார்த்திக் பிரபு said...

good one thalava

Naufal MQ said...

// முத்துகுமரன் said...
ம்,
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்துவிடும் :-)
//
நடக்கும் என்று சொல்வது போல் தெரிகிறது. பார்க்கலாம்.

//
என்னுடைய தேர்வு கைப்.
//
அவருக்கு கேப்டனாக இருந்த அனுபவமிருக்கிறது.

Naufal MQ said...

// கார்த்திக் பிரபு said...
good one thalava
//

தாங்ஸ் தல.

முத்துகுமரன் said...

ஜூனியர் உலக கோப்பை வென்ற அணியின் கேப்டனாக இருந்தவர் கைப். அங்கு விளையாடிய இன்னொருவர் யுவராஜ் :-)

Naufal MQ said...

//முத்துகுமரன் said...
ஜூனியர் உலக கோப்பை வென்ற அணியின் கேப்டனாக இருந்தவர் கைப். அங்கு விளையாடிய இன்னொருவர் யுவராஜ் :-)
//

ஆம். இருவரும் அணிக்குள் நுழைய காரணமாக இருந்த வெற்றி அதுதான்.

இருவருக்குள்ளும் சில ஆண்டுகளுக்குப் பின் ஈகோ வராது என்கிறீர்களா? வரும். அப்படி வந்தால், அவர்களையும் தூக்கியெறிய வேண்டும்.

மணிகண்டன் said...

வீரர்களையும், இந்திய கிரிக்கெட்டையும் புரிந்து கொள்ளாத கோச், ஒரே நேரத்தில் கேப்டனாக பணியாற்றிய பலர் டீமில் உள்ள்தால் உருவானா ஈகோ, அதனால் உருவான தனித்தனி குழுக்கள், சுயநலம்னு இப்படி பல வைரஸ்கள் ஒரே நேரத்துல தாக்கி நம்ம அணிய சிக்குன் குனியா வந்த மாதிரி முடக்கிப் போட்டுடுச்சுங்க பவுலர். நீங்க சொன்ன மாதிரி நானும் கங்குலி ரசிகன் தான். ஆனா இந்த முறை அவர் ஆடுனது தன்னோட இடத்தை காப்பாத்திக்க மட்டுமேங்கறது சின்னக்குழந்தைக்கு கூட புரிஞ்சிருக்கும். சச்சினும் கேப்டனாக ஆசைப்படற மாதிரி தெரியுது. இதுக்கெல்லாம் ஒரே தீர்வு இவங்க எல்லாரையும் (சச்சின், கங்கூலி, திராவிட், ஷேவாக்) தூக்கி எறிஞ்சுட்டு, இளம் வீரர்களை கொண்டு வர்ரது தான். ஆனா இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரே நேரத்துல செய்யற துணிவு பிசிசிஐக்கு இருக்க மாதிரி தெரியலை.

கங்கூலிய தூக்கினா பெங்கால் ரசிகர்கள் கொடி பிடிப்பாங்க. இந்தியா தோத்துட்டு வந்ததை பத்தி கூட கவலைப்படாம கங்கூலிக்கு கொல்கத்தாவுல வரவேற்பு குடுத்தவங்க தான அவங்க. சச்சினை தூக்க சரத் பவார் விடமாட்டாரு. சச்சின் இருக்கற வரைக்கும் அகர்கரை கழட்டிவிட அவர் விடமாட்டாரு. ஏற்கனவே சேப்பலும்,திராவிடும் தங்களுக்கு வாய்ப்பு குடுக்காம ஒதுக்கறதா பிசிசிஐ கிட்ட பேசச்சொல்லி ஸ்ரீசாந்தும்,பதானும் சச்சின் கிட்ட முறையிட்டதா க்ரிக் இன்ஃபோல ஒரு செய்தி வந்திருக்கு. இதுக்கு விடிவே இல்லைன்னு நினைக்கிறேன்.

Naufal MQ said...

//ஆனா இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரே நேரத்துல செய்யற துணிவு பிசிசிஐக்கு இருக்க மாதிரி தெரியலை.
//
மணி,
இதையெல்லாத்தையும் ஒன்னா செஞ்சாத்தான் பிரச்சனை இருக்காது. இதுல யாராச்சும் ஒருத்தனை தூக்கி ஒருத்தனை விட்டுவச்சாலும் பிரச்சனைதான். சர்ச்சைதான். அதுனால, இதை வாரியம் செய்யுமா என்பது சந்தேகமே.

//ஏற்கனவே சேப்பலும்,திராவிடும் தங்களுக்கு வாய்ப்பு குடுக்காம ஒதுக்கறதா பிசிசிஐ கிட்ட பேசச்சொல்லி ஸ்ரீசாந்தும்,பதானும் சச்சின் கிட்ட முறையிட்டதா க்ரிக் இன்ஃபோல ஒரு செய்தி வந்திருக்கு. இதுக்கு விடிவே இல்லைன்னு நினைக்கிறேன்.
//

அதை நானும் படிச்சேன். இதையெல்லாம் வச்சு பாக்கும்போது, முட்டை எடுத்த சச்சினுக்கு பரிசாக கேப்டன் பதவி கிடைக்கும் என தெரிகிறது. ஹும் என்ன கொடுமைங்க இது.