Monday, April 9, 2007

பி.சி.சி.ஐ - போஸ்ட் மார்டம்

நாம் என்னதான் வலையுலகத்திலும் மெயிலுலகத்திலும் இந்திய அணியின் உ.கோ தோல்வியை அறுத்து கிழித்தாலும், அதற்கு பொறுப்பாளரான பி.சி.சி.ஐ Official Postmortem செய்ய வேண்டும் அல்லவா? அதற்கான கூட்டத்தை கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அறிக்கையும் தந்துள்ளனர்.

அறிக்கைகளை நோண்டி பார்க்கும் முன் சரத் பவாரின் சாமர்த்தியத்தை பாராட்டவேண்டும்(?). அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை மிகத் திறமையாக இந்த விடயத்தை கையாண்டிருப்பது மூலம் நிரூபித்திருக்கிறார். இந்த கூட்டம் கூடும் முன்பு பலமுனைகளிலிருந்து தொடர்ந்து நெருக்கடிகள் வாரியத்திற்கு வந்தவாறு இருந்தன. பயிற்சியாளர், முன்னார் வீரர்கள், ஊடகம், பொதுமக்கள் மற்றும் இன்னாள் மூத்த வீரர்கள். இப்படி எல்லா தரப்பினரையும் அடக்க வேண்டும் என்பது வாரியத்தின் முதல் சவாலாக இருந்தது. அதை திறம்பட (??) செய்தார் சரத் பவார்.

அதாவது, வாரியம் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்ப்பார்கள்/ விமர்சிப்பார்கள் என கருத்தப்பட்ட முன்னாள் வீரர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அவர்களையும் இந்த கூட்டத்தில் பங்கெடுக்க செய்ததன் மூலம். இதன் மூலம் தாங்கள் பங்குபெற்று முடுவெடுக்கும் ஒரு கூட்டத்தை பற்றி அவர்கள் விமர்சிக்க முடியாது. அவர்களும் பொறுப்பாளர்களாகிறார்கள்.

பின்னர், மூத்த வீரர்கள் மேல் தொடர்ந்து குற்றம் சுமத்தியும் சில நேரங்களில் வாரியத்தின் செயல்பாடுகளையும் சாடி வந்த பயிற்சியாளர் சாப்பலையும் (அவர் நீங்கிய பின்னும்) தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு 'தேசிய கிரிக்கெட் அகாடமி'க்கு கெஸ்ட் பயிற்சியாளராக நியமித்தனர். இதனால், அவர் இந்திய கிரிக்கெட்டின் செயற்பாட்டை யோசித்தே இனி விமர்சனம் செய்ய வேண்டி வரும். மேலும், இத்தனை காலங்களில் இந்திய அணியில் என்னவெல்லாம் நடந்தது என தெரிவிக்க அவருக்கு ஒரு தயக்கம் இருக்கும்.

தற்போதுள்ள மூத்தவீரர்கள் சாப்பலின் கருத்து குறித்து பேட்டியளித்த போது, அவர்களின் பிரச்சனையை வாரியம் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என எச்சரித்தனர். சச்சினுக்கும் யுவராஜுக்கும் எச்சரிக்கை நோட்டிஸும் கிடைத்தது.

இந்நிலையில், வாரியத்தின் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பெரும்பாலும் வரவேற்க தக்கவையே. ஆடுகளங்களின் தன்மை, உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்புகளில் மாற்றம், இளம்வீரர்களின் பயிற்சிகளில் மாற்றம் இப்படி பல. ஆனால், இவையெல்லாம் செயற்பாட்டிற்கு வருமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

திறமைக்கேற்ற- ரிசல்ட் ஓரியண்டட் சம்பளம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால், இவற்றால் லாபமடையும் வாரியத்தை (பணத்திற்கு மேல் பணம் குவிக்கும்) யார் அடக்குவது? அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப் போவது யார்? அரசா? ஐ.சி.சி யா? இல்லை. யாருமில்லை என்பது தான் சோகம். அவர்கள் வைத்ததே சட்டம். அவர்கள் தங்களது பலத்தை இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்கு பயன்படுத்தினால் நல்லது. எனது தனிப்பட்ட மற்றொரு கருத்து: வீரர்கள் விளம்பர படங்களில் நடிப்பதால் அவர்களுடைய திறமை/கவனம் குறையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், அது குறித்தான வாரியத்தின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனால், இந்திய அணியின் தோல்விக்கு நான் முக்கியமான காரணமாக கருதும் ஒரு விடயத்தை பற்றி வாரியம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அதாவது, சாப்பல் கூறியிருந்தது போல மூத்தவீரர்களுக்கிடையில் பிணக்கம். ஒத்துழையாமை. ஒற்றுமையின்மை. இதைப்பற்றி ஏன் வாரியம் கண்டுகொள்ளவில்லை? மூத்த வீரர்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைப்பற்றி தொடர்புடைய வீரர்களிடம் விசாரிக்க கூட இல்லை. அவர்கள் ஐவரும் (சச்சின், ட்ராவிட், கங்குலி, சேவாக் மற்றும் ஹர்பஜம்) இருக்கும் வரை குழு மனப்பான்மையும் ஒத்துழையாமையும் இல்லாமலா போய்விடும்? மற்றவற்றை காட்டிலும் இந்திய அணி 'டீம் ஸ்பிரிட்'டுடன் ஆடியிருந்தாலே உலகக் கோப்பையில் இன்னும் ஆடிக்கொண்டிருக்கும். அதை சரிசெய்யாத வரையில் நாம் ஆஸ்திரேலியாவாக முடியாது. ஜிம்பாப்வேயாக மட்டுமே இருக்க முடியும்.

9 comments:

Jazeela said...

நல்ல அலசல் ஃபாஸ்ட்.

அபி அப்பா said...

நல்ல கருத்து பாஸ்ட், ஆமா நாதான பர்ஸ்ட்:-)

Naufal MQ said...

// ஜெஸிலா said...
நல்ல அலசல் ஃபாஸ்ட்
//
நன்றி.

// அபி அப்பா said...
நல்ல கருத்து பாஸ்ட், ஆமா நாதான பர்ஸ்ட்:-)
//
இல்லை.
ஆமா, அப்படியென்ன கொலைவெறி பர்ஸ்ட் பர்ஸ்டுன்னு?

மணியன் said...

//வீரர்கள் விளம்பர படங்களில் நடிப்பதால் அவர்களுடைய திறமை/கவனம் குறையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.//

வீரர்கள் விளம்பரப் படங்களில் நடிப்பதை விட அதற்கான ஒப்பந்தங்களில் தான் பிரச்சினை எழுகிறது. அவர்களது போட்டிபங்கேற்பின்படி பணம் கிடைக்கிறது.மூன்று மாதங்களிற்கு மேல் ஆடாவிட்டால் கிடைக்காது; இதனால் காப்டனுக்கும் தேர்வு குழுவிற்கும் ஆட்டவீரர்களால் மன அழுத்தமும் ஒருவருக்கொருவர் மனத்தாங்கல்களும் ஏற்படுகின்றன. ஆட்டத் தேவைக்கில்லாமல் ஆட்களை எடுத்துக் கொள்ளும் அவலமும் நிகழ்கிறது. இதனால்தான் ஒப்பந்தங்களை வாரியம் ஒப்புமை கொண்டே செய்து கொள்ளவேண்டும் என்று விதிக்க நேர்ந்தது. ஓட்டங்கள் வேகமாக எடுக்கமுடியாவிடினும் தங்கள் கியாரண்டி பணத்திற்காக ஆடுகளத்தில் அதிக நேரம் , தொலைக்காட்சியில் தங்கள் பிராண்ட் தெரியுமாறு, தடவிக் கொண்டிருந்ததும் நடந்தது. ஆட்டநாயகர்களை விட அவர்களின் விளம்பர ஏஜண்டுகளே ஆட்டத்தை ஆட்டுவித்து வந்தனர்.

Naufal MQ said...

நண்பர் மணியன்,
நீங்கள் கூறிய விடயம் நான் அறிந்திராதது. தகவலுக்கு நன்றி. நீங்கள் கூறுவது போல் நடக்க வாய்ப்புள்ளது. அதுதான் முன்னர் நடந்ததுக்கும் காரணமாக இருக்குமோ என நானும் எண்ணுகிறேன்.

அப்படியானால், அதிலுள்ள கட்டுப்பாடுகளும் அவசியம் தான்.

நன்றி நண்பர் மணியன்.

Naufal MQ said...

// ஓட்டங்கள் வேகமாக எடுக்கமுடியாவிடினும் தங்கள் கியாரண்டி பணத்திற்காக ஆடுகளத்தில் அதிக நேரம் , தொலைக்காட்சியில் தங்கள் பிராண்ட் தெரியுமாறு, தடவிக் கொண்டிருந்ததும் நடந்தது//
உள்குத்து கங்குலிக்கா? :)

Anonymous said...

ஜிம்பாப்வேயாக மட்டுமே இருக்க முடியும்

ஜிம்பாப்வே அணியை கேவலப் படுத்த வேண்டாம்.

Naufal MQ said...

//ஜிம்பாப்வே அணியை கேவலப் படுத்த வேண்டாம். //

யாரது அங்கே... இவரை கவனியுங்கள்!!

-L-L-D-a-s-u said...

ஓ இதுல இவ்வளவு அரசியல் இருக்கா?

//விளம்பர படங்களில் நடிப்பதால் அவர்களுடைய திறமை/கவனம் குறையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. //
மணியன் சொன்னதற்கும் மேல் .. மற்றொன்று .. ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் (எ.கா.. சச்சின்) ஓய்வு பெறும் எண்ணத்தில் இருந்தாலும் , அவருக்குள்ள விளம்பர responsibilityயை ஒத்து, ஓய்வு பெறுவதை தள்ளிப்போடுகிறார் .. நட்சத்திர ஆட்டக்காரர்கள் தொடர்ந்து இடம் பெறுவதும் ,. புதிய ஆட்டக்காரர்களுக்கு வாயப்பு மற்றும் குறைந்த வாய்ப்பும் கிடைப்பது இந்த விளம்பரதாரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணவும் தோன்றுகிறது ..