Tuesday, March 6, 2007

இந்த உ.கோப்பையின் இ.வா யார்?

உலகக் கோப்பை போட்டிகளில் சில நேரம் யாரும் எதிர்பாராத விதமாக முடிவுகள் வருவதுண்டு. அதிலும் கொடுமை சில நேரங்களில், அதுவரை அத்தனை பெரிய அளவில் வெற்றிகள் பெறாத அல்லது புதியதாக உலகக் கோப்பையில் பங்கெடுக்கும் அணிகள் (Minnows என்றழைக்கிறார்கள்) பலமிக்க அணிகளை வீழ்த்தி விடுவதுண்டு. இது போன்ற அதிர்ச்சிகள் உலகக் கோப்பையில் அவ்வப்போது நிகழ்வதுண்டு. பலமிக்க அணிகள் அத்தருணத்தில் இளிச்சவாயனாக (இனா வானா-வாக) காட்சிதரும்.

இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்து அதிர்ச்சிகளை இவ்வகையில் சேர்க்கலாம்.

முதல் அதிர்ச்சி:(இ.வா-ஆஸ்)
(1983 - ல் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை 13 ஓட்டங்களில் வென்றது)

இதுதாங்க ஜிம்பாப்வேக்கு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி. அறிமுகப் போட்டி. முதல் போட்டியிலேயே கிரிக்கெட்டில் பெரும்புலியான ஆஸ்திரேலியாவுக்கு தன் வருகையை அதிர்ச்சியாக பரிசளித்தது ஜிம்பாப்வே. தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வரும் Duncan Fletcher தான் அந்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன். அவர்தான் இந்த அதிர்ச்சிக்கும் வழி நடத்தியவர். 69 ஓட்டங்களை அவர் எடுத்ததோடு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் அதிர்ச்சிக்கு அடிகோலினார்.

இரண்டாம் அதிர்ச்சி:(இ.வா-மே.இ)
(1983 - ல் இந்தியா மேற்கிந்தியாவை 43 ஓட்டங்களில் வீழ்த்தி கோப்பையை வென்றது)

இந்தியாவிற்கு 1975 & 1979 இரண்டு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து ஒரே ஒரு வெற்றி. மேலும், தமது 9 வருட ஒருநாள் கிரிக்கெட் அனுபவத்தில் 17 வெற்றிகள் மட்டுமே. இத்தகைய ஒரு மோசமான சாதனையுடன் 1983-ல் களமிறங்கிய இந்திய அணி கோப்பையை வெல்லும் என ஒருவர் கூட கணித்திருக்க மாட்டார்கள். ஏன், கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இறுதிப் போட்டி வரை வந்த இந்திய அணி அன்றைய ஜாம்பவனாகிய மேற்கிந்தியாவை வாட்டி எடுத்தனர். அற்புதமான களத்தடுப்பு மற்றும் ஸீம்-பந்து வீச்சு மூலம் தமது 183 என்ற இலக்கை மே.இ அடைய விடாமல் தடுத்து வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர். ஒரே உலகக் கோப்பையில் இரண்டாவது அதிர்ச்சியும் அரங்கேறியது.

மூன்றாவது அதிர்ச்சி:(இ.வா-மே.இ)
(1996 - ல் கென்யா மேற்கிந்தியாவை 73 ஓட்டங்களில் வென்றது)

கென்யாவிற்கு முதல் உலகக் கோப்பை அனுபவம். யாரும் மேற்கிந்திய அணியுடன் கென்யா மோதுவதை போட்டியாகக் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் மேற்கிந்தியாவிற்கு காத்திருந்ததோ பெரும் இடி. கென்யாவின் மோரிஸ் ஒடும்பே மேற்கிந்திய பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தெறிந்தார். முடிவில் மே.இ 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக நின்றது. கென்யா அணியினர் புனே மைதானத்தை சுற்றிவந்த விதம் அவர்கள் ஏதோ உலகக் கோப்பையையே வென்றது போன்ற தோற்றத்தை தந்தது.

நான்காவது அதிர்ச்சி:(இ.வா-பாக்)
(1999-ல் பங்களதேஷ் பாகிஸ்தானை 62 ஓட்டங்களில் வென்றது)

அதுவரை பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணியை வென்றதில்லை. முதல் உலகக் கோப்பை அனுபவம். எதிரணியோ உலகமே பயந்தலறும்படியான பந்துவீச்சாளர்களை கொண்டது. வாசிம், வக்கார், அக்தர் மற்றும் சாக்லைன். இருந்தாலும் பங்களாதேஷ் ஒருவாறு சமாளித்து 223 எடுத்தது. 161-க்கு பாகிஸ்தானை ஆட்டமிழக்கச் செய்து வென்றது பங்களாதேஷ். ஆட்ட முடிவில் பாக் அணித்தலைவர் வாசிம் 'எங்கள் சகோதரர்களிடம்தானே தோற்றோம்' என்று செண்டிமெண்ட்டாக வசனம் பேசியது இன்றும் என் நினைவிலுள்ளது. இந்த வெற்றிதான் அப்போதய ஐ.சி.சி தலைவராக இருந்த டால்மியாவை பங்களாதெஷிற்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கச் செய்தது. (பங்காளி - பங்காளி கான்ஸெப்டும் உண்டு அதில்).

ஐந்தாவது அதிர்ச்சி:(இ.வா-இலங்கை)
(2003- ல் கென்யா இலங்கையை 53 ஓட்டங்களில் வென்றது)

மீண்டும் கென்யா ஒரு உலகக் கோப்பை அதிர்ச்சியை உலகிற்கு அளித்தது. இம்முறை இலங்கைக்கு அல்வா கொடுத்தது கென்யா. காலின்ஸ் ஒபுயாவின் நேர்த்தியான லெக்-ஸ்பின் பந்துவீச்சால் இலங்கையை திணறடித்தது. இந்த அதிர்ச்சி வெற்றியானது கென்யாவை அரை-இறுதி வரை எடுத்துச் சென்றது நினைவிருக்கலாம். ஆக, ஐந்தாவது கடந்த உலகக் கோப்பையில் நிறைவேறியது.

மேலுள்ளவற்றை பார்க்கையில், இம்முறையும் ஏதேனும் ஒரு அதிர்ச்சி நிகழ அதிக வாய்ப்பிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. பார்க்கலாம் யாரந்த இ.வா என்று. (யாரய்யா அது, அப்போட்டி பங்களாதேஷ் - இந்தியா என்று சொல்வது?) ஸ்காட்லாந்து - ஆஸ்? சரியாக கணிப்பவருக்கு தக்க பரிசு வழங்கப்படும். ;)

22 comments:

Anonymous said...

சிறந்த செய்தித் தொகுப்பு. உலகக்கோப்பை போட்டி நடைபெரும் இத்தறுனத்தில் இன்னும் எதிர்பார்க்கிறோம்

Naufal MQ said...

வருகைக்கும் எதிர்பார்ப்பிற்கும் நன்றி ராசுக்குட்டி. எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.

மணிகண்டன் said...

அசத்தட்டிங்க பவுலர்!
இந்த முறை இ.வா -- பாகிஸ்தான்! அயர்லாந்திடம் தோற்கப்போகிறாங்க பாருங்க :)

பரிசு என்னன்னு சொன்னிங்கன்னா வாங்கிக்க தயாரா இருப்பேன்!

Naufal MQ said...

//மணிகண்டன் said...
அசத்தட்டிங்க பவுலர்!
இந்த முறை இ.வா -- பாகிஸ்தான்! அயர்லாந்திடம் தோற்கப்போகிறாங்க பாருங்க :)
//
அய்யோ பாவம். பக்கத்து வூட்டுக்காரன். :) நடந்தாலும் நடக்கும். பாக்கலாம்.

//பரிசு என்னன்னு சொன்னிங்கன்னா வாங்கிக்க தயாரா இருப்பேன்!
//
கணிப்பு சரியாக இருந்தால் நிச்சயமாக பரிசு ஏற்பாடு செய்யப்படும். கவலைப்படாதீங்க.

மணிகண்டன் said...

யார் ஆனாலும் சரிங்க. நாம ஆகிடக்கூடாது :)

பங்களாதேஷும் அயர்லாந்தும் ஆடியிருக்கறத பார்த்தாலே புளியை கரைக்குது.

Naufal MQ said...

ஆமா மணிகண்டன். நான் கூட இப்போ அலுவலகத்துல பங்களாதேஷ் பத்தி தான் பேசிக்கிட்டிருந்தேன். பங்காளிங்க நமக்கு ஆப்பு வச்சாலும் வப்பானுங்கடோய்- னு... ஹூம்.. விதி அப்படித்தான் நடக்கனும்னு இருந்தா நாம என்னங்க செய்ய முடியும். :(

மணிகண்டன் said...

இப்படி கற்பனை பண்ணிப் பாருங்க பவுலர்..நாலு க்ரூப்லயும் எந்த பெரிய அணியுமே அடுத்த ரவுண்டுக்கு போகலைன்னா ? அப்ப இ.வா யாரு?

ICC

Naufal MQ said...

கற்பனை கூட அது நடக்கப் போவதில்லை. கற்பனை கூட பண்ண முடியவில்லை. :)

இலவசக்கொத்தனார் said...

இன்னிக்கு நடந்த பயிற்சிப் போட்டிகளையும் சேர்த்துக்கலாமா? நியூசிலாந்து அப்போ இந்தக் கோப்பையின் முதல் இ.வா?!

Naufal MQ said...

வாங்க இ.கொ,

பயிற்சி ஆட்டங்களை Official ODI-ல் ஐ.சி.சி சேர்க்காததினால் நாமும் மன்னிச்சு வுட்டுறலாம். பொழச்சி போட்டும்.

மணிகண்டன் said...

//யார் ஆனாலும் சரிங்க. நாம ஆகிடக்கூடாது :)

பங்களாதேஷும் அயர்லாந்தும் ஆடியிருக்கறத பார்த்தாலே புளியை கரைக்குது.

//

நண்பரே பயந்த மாதிரியே ஆயிடுச்சு..

இருந்தாலும் நான் சொன்ன மாதிரி பாகிஸ்தானும் நம்மளோட சேர்ந்தி இ.வா ஆனதுக்கு எதாவது போட்டுக் கொடுங்க. புண்பட்ட மனசி பரிசு வச்சு ஆத்திக்கறேன் :)

Naufal MQ said...

//மணிகண்டன் said...
அசத்தட்டிங்க பவுலர்!
இந்த முறை இ.வா -- பாகிஸ்தான்! அயர்லாந்திடம் தோற்கப்போகிறாங்க பாருங்க :)
//

அய்யா... அய்யா....

எப்படி இதெல்லாம்.... ஞானம் எங்கிருந்து வருது உங்களுக்கு... கூடவே அதே நாள்லதான் நாமலும் இ.வா ஆகனுமா? ம்ம்ம்... என்னமோ நடக்குதுன்னு மட்டும் வெளங்குது.. இன்னிக்கு நான் பதிவு போடுற மனநிலையில இல்லை.

Avanthika said...

Anna defenetly they both deserve this Win....i also feel that less popular would come up this time.. for all the efforts they take..

Avanthika said...

நாம எல்லாரும் தான் இ.வா..இப்போ

அபி அப்பா said...

//நாம எல்லாரும் தான் இ.வா..இப்போ //

அவந்திகா சொல்வதுதான் சரி:-)))

Naufal MQ said...

இப்பதிவு விரைவில் அப்டேட் செய்யப்படும்.

அபி அப்பா said...

//இப்பதிவு விரைவில் அப்டேட் செய்யப்படும்.//

அப்டீன்னா?

Naufal MQ said...

//அபி அப்பா said...
//இப்பதிவு விரைவில் அப்டேட் செய்யப்படும்.//

அப்டீன்னா?
//

நேத்து ஆப்பு வாங்குன ரெண்டு பேரையும் இந்த லிஸ்டுல சேக்கனும்ல அதச் சொன்னேன்.

Naufal MQ said...

//(யாரய்யா அது, அப்போட்டி பங்களாதேஷ் - இந்தியா என்று சொல்வது?)
//
அன்றே நான் கணித்தது இன்று நடந்தா தொலையனும். :( இனிமே நான் பேசாம இருப்பதுதான் நலம். :(

Mani - மணிமொழியன் said...

தொகுப்பு சிறப்பா இருக்கு.
இ.வா பார்வையாளர்களான நாமதான்னு நினைக்கிறேன் :(

Pot"tea" kadai said...

ஒரு வங்கதேச பத்திரிகையாளர் இம்முறை கோப்பையை வெல்லப்போவது பங்களாதேசு என்று கணித்திருக்கிறார். அந்த செய்தியை நீங்கள் படித்தீர்களா? இது உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் முன்பே வந்த பத்திரிகை தொகுப்பு.

அவர் சொன்னது லாஜிக்காக தான் சப்-காண்டினெண்டின் 3 நாடுகளும் கோப்பையை வென்று விட்டது மிச்சமிருப்பது ஒன்று தான் அது பங்களாதேஷ். அதனால் இம்முறை கோப்பை பங்களாதேஷ் தான் என்று.

எனக்கென்னவோ சான்ஸ் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. அது விளையாட்டு வீரர்களின் நம்பிக்கையினால் அல்ல. இலங்கையை கோப்பை வெல்ல வைத்த அதே பயிற்சியாளர் Dav whatmore மீதான நம்பிக்கையிலும் இருக்கலாம்.

அன்று ஜெயசூரியாவிடம் இருந்த அதே அக்ரெஷன் இன்று அந்த பையன் தமிமிடம் உள்ளது.

பார்ப்போம்...

Naufal MQ said...

//Pot"tea" kadai said...
ஒரு வங்கதேச பத்திரிகையாளர் இம்முறை கோப்பையை வெல்லப்போவது பங்களாதேசு என்று கணித்திருக்கிறார். அந்த செய்தியை நீங்கள் படித்தீர்களா? இது உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் முன்பே வந்த பத்திரிகை தொகுப்பு.
//

வாங்க நண்பர் பொட்டிக்கடை,
ஆமாம். நானும் படித்தேன். படித்துவிட்டு நண்பர் குழுவுடன் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தோம். சிரிச்சது தப்போன்னு இப்போ தோனுது.

//எனக்கென்னவோ சான்ஸ் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. அது விளையாட்டு வீரர்களின் நம்பிக்கையினால் அல்ல. இலங்கையை கோப்பை வெல்ல வைத்த அதே பயிற்சியாளர் Dav whatmore மீதான நம்பிக்கையிலும் இருக்கலாம்.
//
அவர் கிட்டயிருந்து சாப்பல் கத்துக்க நிறைய இருக்குங்க.

//அன்று ஜெயசூரியாவிடம் இருந்த அதே அக்ரெஷன் இன்று அந்த பையன் தமிமிடம் உள்ளது.

பார்ப்போம்...
//
நேற்று என் மனதில் தோன்றிய அதே வரிகள். :)

கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பார்க்கலாம். :)