Thursday, March 29, 2007

சூடு பிடிக்கும் சூப்பர் 8

சூப்பர் 8 போட்டிகள் ஒரு த்ரில்லோட தான் துவங்கியிருக்குன்னு சொல்லனும். நேற்று நடந்த தெ.ஆ - இலங்கை போட்டியில் 50+44 ஓவர்களுக்கு தெ.ஆ கை ஓங்கியிருந்தாலும் திடிர்னு போட்டி இலங்கை வெற்றி பெறும் சூழ்நிலைக்கு வந்திருச்சு. ஆமாங்க, தே.ஆ ஜெயிக்க 4 ரன் இருக்கு, 32 பந்துகள் மற்றும் 5 விக்கெட்டுகள் கையில இருக்கு. அப்பதாங்க நம்ம சடையாண்டி தம்பி மலிங்கா பொல்லாக் விக்கெட்டை எடுத்துட்டாரு. அடுத்த பந்துல ஹால் அவுட். இப்ப ஓவர் முடிஞ்சு போச்சு. அடுத்த ஓவர்ல தெ.ஆ ஒரு ரன் எடுக்குது. மீண்டும் நம்ம சடையாண்டி தம்பி முதல் பந்துல கல்லிஸ் விக்கெட்டை எடுத்து ஹாட்-ரிக் சாதனை பண்ணிட்டாரு. விட்டாரா அதோட, அடுத்த பந்திலேயே நிடினியும் அவுட். ஆக நாலு பந்துல நாலு விக்கெட். தெ.ஆவின் நிலமை படுமோசமா ஆயிருச்சு திடிர்னு. இப்போ தெ.ஆ ஜெயிக்க தேவை 3 ரன் கையில் ஒரு விக்கெட் 3 ஓவர் மீதமிருக்கு. தெ.ஆ நல்ல நேரம் பீட்டர்சன் ஒரு 4 அடிச்சு அணியை ஜெயிக்க வச்சிட்டாரு. தெ.ஆ 'சோக்கர்ஸ்' (Chokers) னு சொல்றது சரியாத்தான் இருக்கு. எளிதா ஜெயிக்க வேண்டிய மேட்ச், இப்படி த்ரில் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துடானுங்க.

அது அப்படியிருக்கு. மற்றொரு சூப்பர் 8 போட்டியில காதுல புகை வரும் (யாருக்குன்னு வலையுலக மக்களுக்கு சொல்லத்தேவையில்லை) போட்டி முடிவு கிடைச்சிருக்கு. 322 அடிச்சா ஜெயிக்கலாம் என்று களம் கண்ட மே.இ சொல்ற மாதிரி ஒன்னும் ஆடல. லாரா மட்டும் பொறுப்போடு (இந்திய மூத்த வீரர்கள் கவனிக்க) ஆடி 77 ஓட்டங்கள் எடுத்தாரு. ராம்தின் 52 ஓட்டங்கள் எடுத்து 212 ஓட்டங்கள் வரை வந்திருக்காங்க. ஆஸ்திரேலியா 103 ஓட்டங்கள வித்தியாசத்தில் வென்றது. மத்த அணிகளெல்லாம் தட்டு தடுமாறி ஆடிக்கொண்டிருக்கும் போது 'நம்ம' (மீண்டும் காதில் புகை) ஆஸ்திரேலியா மட்டும் கலக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஆறாவது முறையாக 300+ ஸ்கோர் எடுத்துள்ளது ஆஸி அணி. இனியும் தொடரும். இம்முறை ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதை தடுக்க வேறெந்த அணியும் அருகில் கூட தென்படவில்லை.

இன்னொரு நெருடும் செய்தி. இன்னிக்கும் மே.இ அணிக்கு போட்டியுள்ளது. நியுசிலாந்து அணியுடன். தொடர்ந்து மூன்றாவது நாளாக களமிறங்கவுள்ளனர் மே.இ அணியினர். நேற்றைய முன் தினம் தொடங்கிய ஆஸி-மே.இ போட்டி மழை காரணமாக பகுதி ஆட்டம் நேற்று நடத்தப்பட்டு நிறைவடைந்தது. இன்று மற்றொரு போட்டி அட்டவனையில் உள்ளது மே.இ அணிக்கு. என்ன வகையான திட்டமிடலோ? நினைத்து பாருங்கள் எப்படி இருக்கும் மே.இ அணிக்கு.

நம்ம பசங்க தங்களின் மே.இ சுற்றுப்பயணம் (sun and sand visit) முடிந்து நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர். இரவோடு இரவாக வந்து சேர்ந்ததால் எதிர்பார்த்திருந்த அர்ச்சனைகளிலிருந்து தப்பித்துள்ளனர். அட்லீஸ்ட், அதையாவது ஒழுங்கா திட்டமிட்டார்களே. பாராட்டுக்கள்!!

Wednesday, March 28, 2007

இந்தியாவின் அடுத்த 5 போட்டிகள்

அதிர்ச்சி தோல்வியுற்று உ.கோ விலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணியின் அடுத்த தொடருக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. மே மாதம் இந்த போட்டிகள் நடக்க இருக்கின்றது.

மே 2 - இந்தியா Vs அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராயப்பேட்டை, சென்னை


மே 5 - இந்தியா Vs ஹை-டெக் பாலிடெக்னிக், கோயம்புத்தூர்


மே 7 - இந்தியா Vs கிண்டர்கார்டன் நர்சரி, மேலவீதி, மதுரை


மே 9 - இந்தியா Vs புனித யோவான் கலைக்கல்லூரி, நெல்லை


மே 12 - இந்தியா Vs மகளிர் நடுநிலைப்பள்ளி, திருச்சி

இவையனைத்தும் பலம் வாய்ந்த அணிகளாக இந்திய அணியால் கருத்தப்படுவதால், போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை செட் மேக்ஸ் சேனல் நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்யும்.

கிரேக் சாப்பல் முன் ஜாமின்

இந்திய கிரிக்கெட்டில் பழிசுமத்தும் படலம் நன்றாக துவங்கி வைக்கப்பட்டுள்ளது. யாரால்? வேறு யார் நம்ம பயிற்சியாளர் மூலம் தான். நேற்று இரவு அனேக செய்தி சேனல்களில் ப்ரேக்கிங் நியூஸ் என்று அவர் ஒர் பத்திரிக்கை நண்பருக்கு அனுப்பியதாக சில குறுஞ்செய்திகளை (SMS) காண்பித்தார்கள். மனிதன் ஏற்கனவே குழம்பி இருக்கும் குட்டையை Dozer-ஐ விட்டு குழப்புகிறார். அவரது சில குறுஞ்செய்திகள்:

# உலகக் கோப்பைக்கு தேர்வு செய்திருந்த அணியில் எனக்கு முழு திருப்தியில்லை. இளம்வீரர்களை கேட்ட என்னுடைய வேண்டுகோளை கேப்டனும், வெங்க்சர்க்காரும் நிராகரித்தனர்.

# வெங்சர்க்கார் சர்ச்சைக்களுக்கு பயந்து மூத்த வீரர்களையே தேர்வு செய்தார்.

# மூத்த வீரர்கள் தன்னலமாகவே ஆடினர்

# சுரேஷ் ராய்னா அணியில் இடம்பெறுவதை மூத்தவீரர்கள் விரும்பவில்லை.

# யுவராஜ்சிங் தன்னை பெரிய ஸ்டாராக நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. அவர் வளர்ந்து வரும் ஸ்டார் மட்டுமே.



இவைகள் தான் சாப்பல் வீசியிருக்கும் பவுன்ஸர்கள். எல்லாம் சரி, ஒரு பொறுப்பான பதவியிலிருக்கும் ஒருவர் நாடு திரும்பும் முன் அவசரப்பட்டு பழியை அடுத்தவர்கள் மேல் போடுவதேன்? அனைத்து குறுஞ்செய்திகளையும் பார்த்தால், இந்தியர்கள் தமக்குள் அடித்துக்கொள்ளட்டும் என்று நன்றாக திட்டமிட்ட பழிகள். அனைத்து தரப்பினரையும் வளைத்து போட்டிருக்கிறார். இந்திய தோல்விக்கு பலரின் பங்கு இருந்தாலும் பொறுப்பற்ற தனமான பழிச்சாடல்கள் நல்லதல்ல. சாப்பல் தன்மீது விழப்போகும் பழிக்கு முன் ஜாமின் எடுத்தது போலிருக்கிறது. சாப்பல் இந்திய அணியின் ஒற்றுமையை மீண்டும் அதளபாதாளத்திற்கு தள்ளியிருக்கிறார். வெல்டன் கோச்!!

Tuesday, March 27, 2007

உல்மர் கொலை: மும்பை சூதாட்ட தரகருக்கு தொடர்பு?

பாப் உல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் ஜமைக்கா போலிஸ் கொலையாளி(களை) தேடி வருவது யாவரும் அறிந்ததே. இதில் சூதாட்ட தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரனை முடுக்கி விட்டுள்ள நிலையில் புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பாப் உல்மர் இறப்பிற்கு ஒரு நாள் முன்பு மும்பை சூதாட்ட தரகர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அதற்கான தொடுப்பு: (MSN தமிழ்)

உல்மர் கொலை: மும்பை சூதாட்ட தரகருக்கு தொடர்பு?

Monday, March 26, 2007

வியர்டு ஃபாஸ்ட் பவுலர்

நம்ம அபிஅப்பாவும், மணிகண்டனும் எனக்கு ஆளுக்கொரு பவுன்ஸர் வீசிட்டு போயிட்டாங்க. ஃபாஸ்ட் பவுலருக்கே பவுன்ஸர். புரியலயா? அதாங்க என்னோட வித்தியாசமான் ஐந்து குணங்களை/செயல்களை சொல்லனுமாம். இது என்னடா வம்பா போச்சுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

முதலில், இதுக்கு போயி ஒரு பதிவு போடவா அப்படின்னு ஒரு சோம்பல் மூளையில் ஒரு மணி அடிச்சுது. உலகக் கோப்பை நேரம் வேற. நம்ம பசங்க வேற கொலைவெறியை தூண்டிவிட்டுட்டு போயிட்டாய்ங்க. இந்த மூட்ல இந்த வியர்டு பதிவை எங்கே போடுறதுண்ணு தள்ளிப் போட்டுகிட்டே வந்துட்டேன். இந்தியா தோற்றுப்போன அன்னிக்கு 99.99 % மக்கள்ஸ் ஒருவிதமான வியர்டு மூட்ல தான் இருந்திருப்பாங்க.

சரி, நடந்ததை நினைச்சு என்ன நடக்கப்போகுதுன்னு மனசை தேத்திகிட்டு யோசிச்சப்ப, என்னையே நான் அலச முடிஞ்சது. அதுக்காகவாச்சும் இந்த ரெண்டு பேருக்கும் நன்றி. எனக்குள்ள சில வித்தியாசமன குணங்களை (இதே குணங்கள் உங்களில் பலருக்கு கூட இருக்கலாம்) இங்கே அறியத்தருகிறேன்.

# முன்னாடியெல்லாம் (இப்ப உண்டான்னு தெரியல) ஞாயிற்றுக்கிழமை மதியம் டி.டி-யில் பிறமொழி படம் போடுவாங்க தெரியும்ல. அப்போ கீழே பாத்தீங்கன்னா சப்-டைட்டில் ஆங்கிலத்துல போடுவாய்ங்க. அப்போ ஆரம்பிச்சுது இந்த பழக்கம். அதாவது சப்-டைட்டிலை படிச்சு வசனத்தை புரிந்து கொள்கிறேன் பேர்வழின்னு வீடியோவை பார்க்க மாட்டேன். என்னதான் படத்தை பார்க்க நான் முயற்சி செய்தாலும், கண்ணு தானாக சப்-டைட்டில்லதான் போயி நிக்கும். இப்ப வரைக்கும் இந்த பழக்கம் இருக்கு. பிறமொழி படங்கள் இப்ப பார்த்தாலும் சப்-டைட்டில் ஆஃப் செஞ்சுட்டுதான் பார்க்கிறேன். ஆஃப் செய்ய வழியில்லையேல், வெறென்ன செய்ய சப்-டைட்டிலை படிச்சதோடு திருப்திபட்டுக்க வேண்டியதுதான்.

# நான் ஒரு சரியான மறதி பேர்வழிங்க. கடைக்கு ஒரு பொருள் வாங்கப்போனா கடைக்கு போய் சேர்ந்ததும் என்ன வாங்க வந்தோம்னு மறந்துடுவேன். அந்த அளவுக்கு மறதி. ஊர்ல இருக்கும் போது மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே போவேன். இப்போ ஒன்னும் கவலையில்லை, கடைக்குப் போய் மறந்தாலும் செல்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம். என்ன இலவசாமா ரெண்டு திட்டு வாங்கிகொள்ளவேண்டும். :)

# அப்புறம், நடக்கும் போது என்னமோ உலகப்போரையே நான் தான் போயி நிறுத்தனும். அதான் அவசரமா போறென்னு சொல்ற மாதிரி வேகமாக நடப்பது. சில நேரம் வேகமா நடக்கிறமோன்னு தோணும். உடனே வேகம் குறைத்து நடக்க ஆரம்பிப்பேன். ஆனால், சில நிமிடங்களில் எனக்கே தெரியாது எப்போ வேகம் கூட்டினேன் என்று அந்தளவிற்கு மாறியிருக்கும் நடை வேகம்.

# நம்ம ஊர்ல தெருவில் நடக்கும் போது, கடைகளில் மாட்டப்பட்டிருக்கும் போர்டுகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் ஃபாண்ட்ஸ் (Fonts) பார்த்து ரசித்தவாறு நடப்பது. அதே போர்டுகளின் மூலையில் Art by அப்படிங்கிற இடத்துல யாரு வரைஞ்சிருக்கான்னு கையொப்பம் இருக்கும். அதையும் பார்த்தவாறு நடப்பது வழக்கம். இத்தனைக்கும் நடையில் அதே வேகம் இருக்கும். :)

இவ்ளோதாங்க எனக்குத் தெரிஞ்சு என்கிட்ட இருக்கும் வியர்டு பழக்கங்கள். மற்றபடி, என்னுடன் இருக்கும் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இன்னும் சிலவை தெரிந்திருக்கலாம். என்னடா இவன் கிரிக்கெட்டை பற்றி ஒன்னு கூட வியர்டா சொல்லலைன்னு பார்க்கிறீங்களா? கிரிக்கெட் பார்க்க போனாலோ, விளையாட போனாலோ சீரியஸாகிடுவேன். இதெயெல்லாம் கவனிக்க நேரமிருப்பதில்லை. :)

ஆகா, யாராவது அஞ்சு பேரை கோர்த்து விடனுமாமே. எனக்கு அவ்வளவா பதிவர்களை பழக்கமில்லை. சிலரைத்தவிர. பின்னூடமிட்டதோடு சரி. அதனால், இவர்கள் ஏற்கனவே வியர்டு சொல்லிட்டாங்களா இல்லையான்னு தெரியல. இருந்தாலும் கூப்பிட்டு பார்க்கலாம்.

1. ஆசிப் அண்ணாச்சி
2. முத்துகுமரன்
3. பினாத்தல் சுரேஷ்

மற்றபடி எனக்குத் தெரிந்த பதிவர்களான அபிஅப்பா, தம்பி இருவரும் தங்கள் வியர்டு குணங்களை சொல்லிட்டாங்க. அதனால், அவர்களுக்கு ப்ராக்ஸியாக:

4. கிரேக் சாப்பல்
5. டிராவிட்

அடுத்த கட்டத்திற்கு போகலாம் வாங்க

ம்ம்ம்!! ஒருவழியாக இந்த உலகக் கோப்பையின் முதல் சுற்று பரபரப்புடனும், ஒரு பில்லியன் ஏமாற்றத்துடனும், கொலைவெறியுடனும், கொலையுடனும் முடிந்து விட்டது. இனிமேல் தான் இருக்கிறது விறுவிறுப்பான போட்டிகள். சூதாட்ட பரதேசிகளுக்கு மிகவும் பிடித்த அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் விரட்டி அடிக்கப்பட்டதில் எனக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியே.

பிறகென்ன, இவர்கள் வென்றாலும் தோற்றாலும் அதில் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றுள்ளது என செய்திகள் வரும். இந்த மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்சனைகளுக்கு எல்லாருக்கும் மறைமுகமான பங்குண்டு. வீரர்களை கடவுள்களாக வழிபடும் இந்த முட்டாள் ரசிகர்கள், தன்னுடைய வருமானமே பெரிதென வரிந்து கட்டிக்கொண்டு வீரர்களின் அன்றாட நிகழ்வுகளைக்காட்டி கூட பணம் சம்பாதித்த ஊடகங்கள், மாஃபியா கும்பல்கள், மற்றும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை கூட ஆட மறுத்த இந்த வீரர்கள். அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். அதனால் இதை விடுங்கள்.

அடுத்த கட்ட போட்டிகளுக்கு இலங்கை, நம்ம ஆஸ்திரேலியா, மே.இ, நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, தெ.ஆ மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்று அதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை அணி 2 புள்ளிகளையும் நல்ல ஓட்ட விகிதத்தினையும் பெற்று முதலிடத்திலுள்ளது. அடுத்ததாக, ஆஸ்திரேலியா அணியுள்ளது. என்னுடைய அரை-இறுதி தெரிவாக இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தெ.ஆ அணிகள் தகுதிபெறும் என்று நினைக்கிறேன். யாருக்குத் தெரியும் முதல் சுற்றில் நடந்தது போல இதிலும் அதிர்ச்சி வைத்தியங்கள் நடந்தால் நாம் பொறுப்பேற்க முடியுமா? :)

புள்ளிகள் அட்டவணை:









சூப்பர்-8 போட்டிகளின் கால அட்டவணை:




















அயர்லாந்துடனான போட்டிகள் தவிர்த்து மற்ற போட்டிகள் யாவும் கலக்கலாக இருக்கும். Don't Miss.

Saturday, March 24, 2007

GO AUSSIE GO!!!

இந்திய அணி அடித்து விரட்டப்பட்ட நிலையில் மக்கள் புலம்பித் திரிகின்றனர். தம்பிக்கு தொலைபேசினால் 'நாதாரிங்க நம்ம ஆசையில மண்ணை அள்ளிப் போட்டுட்டானுங்களேன்னு' புலம்புறார். அங்கிட்டு நம்ம அபிஅப்பா, 'நம்ம அபிபாப்பாகிட்ட பேட்டை கொடுத்திருந்தா கூட 10 ரன்னாவது அடிச்சிருக்குமே'னு அலுத்துக்கொள்கிறார். என்ன செய்ய? பேசுமிடமெல்லாம் புலம்பல். திரும்புமிடமெல்லாம் சோர்வான முகங்கள்.

சரி! ரியாலிட்டிக்கு வருவோம். மக்களே ஒன்றும் குறைந்து விடவில்லை. நடக்கவிருக்கும் போட்டிகளில் நாம் கேவலப்படாம இருக்குற மாதிரி ஒரு அணிக்கு ஆதரவளிக்கனுமா? இருக்கவே இருக்கு நம்ம ஆஸ்திரேலியா. ஆமாங்க, தாய்நாட்டுப் பற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் எனக்கு பிடித்த அணி ஆஸ்திரேலியா. ரியல் ஃபைட்டர்ஸ் (ஆசிப் அண்ணாச்சி, நண்பர் முத்துகுமரன் காதில் புகை வருவது தெரிகிறது). இவனுங்கள நம்பி நாம கை தட்டலாம். அதனால், சகலமானவர்களுக்கு தெரிவிப்பதென்னவென்றால் ஆஸ்திரேலிய ஆதரளாவர்கள் அணியில் சேரவேண்டுமென்றால் இந்த ஃபாஸ்ட் பவுலருடன் கை கோருங்கள். எதிரணியினரை சம்மு சம்மு சம்மு சம்மு சம்ஹாரம் பண்ணிடலாம். :)

இன்று தெ.ஆ உடனான போட்டியை காணத் தவறாதீர்கள். அனல் பறக்கும் போட்டியாக இருக்கும். ஆளில்லாமல் (முக்கிய வீரர்கள் இல்லாமல்) விளையாடிய வென்ற மப்புடன் சில அணிகள் வலம் வருவதாக தெரிகிறது. இன்று தெரியும் அதற்கு விடை. ஆஸ்திரேலியா போடும் வெற்றி நடை.

GO AUSSIE GO!!!!

2011 - உ.கோ: இந்திய அணி

மார்ச் போனால் செப்டம்பர் இருக்கு. இது படிக்கும்(?!) மாணவர்களின் பழமொழி. இது இப்போது இந்திய அணிக்கும் பொருந்தி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் வெகு விரைவில் அணி வெளியேறியதை கண்டு மனம் தளராத இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த உலகக் கோப்பைக்கான அணியை தயார் செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளது. அதற்கான அணி விரைவில் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் 4 ஆண்டுகள் Vision 2011-க்காக சிறப்பு பயிற்சியளிக்கப்படும் என தெரிகிறது. கீழ்கானும் வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் ஊகிக்கப்படுகின்றனர்:

1. சச்சின் (கேப்டன்)
2. டிராவிட்
3. கங்குலி
4. ஹர்பஜன்
5. முகில் சோப்ரா
6. முகேஷ் தாஸ்
7. அன்வர் கான்
8. கிரிகேஷ் படேல்
9. முகம்மது ஸைஃப்
10. ஹரிஹரன்
11. ராய்க்கர்
12. ஹனுமந்த் சிங்
13. பத்ம குமார்.

இந்த அணி சிறப்பாக விளையாடும் என (வழக்கம்போல்) இந்திய கிரிக்கெட் வாரியமும், மக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

நேற்றைய ஆட்ட முடிவுக்குப் பின் பல ரசிகர்கள் மனமுடைந்து வெறுத்துப் போனாலும், பல்வேறு தரப்புகளிலிருந்து இந்த உதவாக்கரை இந்திய அணிக்கு நன்றிகள் குவிந்தவாறு உள்ளது. அவர்களை மேலும் இன்னலுற செய்யாதிருந்தமைக்காக இந்த உதவாக்கரை அணியை பாராட்டியும் உள்ளனர். அந்த பல்வேறு தரப்புகள்.

* உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள். இவர்கள், ஒருதரப்பு (One sided) போட்டிகளை விரும்பாதவர்கள். சூப்பர் 8-லும் இந்தியா நுழைந்து இந்தியாவிற்கெதிரான ஒருதரப்பு போட்டிகளை காண விரும்பாதவர்கள். இனியாவது நல்ல போட்டிகள் காண (சூதாட்ட புகார்கள் இல்லாத போட்டிகள்) வழிசெய்ததற்காக இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

* தூக்க விரும்பிகள். கிரிக்கெட்டும் பிடிக்கும் தூக்கமும் பிடிக்கும். இவர்களுக்கு இந்தியா பங்குபெறும் போட்டிகள் என்றால் உயிர். தூக்கம் துறந்து கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற இக்கட்டிலிருந்து விடுதலை வாங்கி தந்த இந்திய அணிக்கு நன்றி கூறுகின்றனர் இவர்கள்.

* நிறுவனங்களின் முதலாளிகள். இவர்களின் நிறுவனங்களில் உ.கோப்பை நடைபெறும் நாட்களில் (பெரும்பாலும் இந்திய போட்டிகள்) இவர்களின் உற்பத்தி திறன்(productivity) பாதிக்கப்படுவதாக புலம்பித்திரிந்தவர்கள் இப்போது மகிழ்ச்சியில் உள்ளனர். அலுவலகத்தில் தூங்குபவர்கள்/கிரிக்கெட் பேசியே நேரம் கடத்துபவர்கள் இனி குறைவார்கள் என்பதனால்.

* மனைவிமார்கள். தங்களின் கனவன்மார்கள் உ.கோ தொடங்கியதிலிருந்து 'மந்திரிச்சி விட்ட கோழி' மாதிரி நடமாடுவதாக புகார் செய்தவர்கள். குடும்பத்தில் கனவன் -மனைவி உறவுக்கே இந்த கிரிக்கெட் ஆப்பு வைக்கிறதே என்று அங்கலாய்த்தவர்கள். அவர்களும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்ததோடு பாராட்டியுள்ளனர். பாராட்டு, கனவர்மார்களுக்கு பெரிய ஆப்பு வைத்ததால்.

* மாணவர்கள். இறுதித்தேர்வு நேரத்தில் உ.கோ வருகிறதே என்று கவலைப்பட்டவர்கள். இறுதியில் கிரிக்கெட்டிற்கே முக்கியத்துவம் தந்து இராப்பகலாக படிக்காமல் கிரிக்கெட் பார்த்தே படிப்பை கோட்டை விட இருந்தவர்கள். நல்ல வேளை தமது எதிர்கால வாழ்க்கையை கடைசி நேரத்திலாவது காப்பாற்றிய இந்திய அணியை காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆக, இத்தனை பேரின் வாழ்வில் சுடர் ஏத்திய அணிக்கு எல்லாரும் ஜோரா ஒரு 'ஓ' போடுங்க. மேலும் வேறு யாரேனும் இந்திய அணிக்கு நன்றி கூற வேண்டுமாயின் தயக்கமின்றி இங்கே தெரிவிக்கலாம்.

Tuesday, March 20, 2007

சுமை குறைந்த சுந்தரன்!

அடேயப்பா! இவர் இந்த மாதிரி இயல்பா சிரிச்சதைப் பாத்து எத்தனை நாளாச்சு. நேத்து அடிச்சு துவைச்சதுக்கப்புறம் சேவாக் மிகவும் ரிலாக்ஸ்டாக காணப்பட்டார். அப்போது நடுவருடன் அவர் பகிர்ந்துகொண்ட நிமிடங்கள் தான் இந்த படம்.

சரி, இந்தப் படத்தை பார்த்தா உங்களுக்கு எதாவது சொல்லனும்னு தோனுதா? ஆம் என்றால், (பொழுது போகவில்லையென்றால்) ஏதாச்சும் சொல்லிட்டு போங்க. நம்ம மக்களோட கற்பனை சக்தியே தனியென்று எனக்கு தெரியும். போட்டுத் தாக்குங்க.

எல்லாரும் பெருமூச்சு விட்டாச்சா?

ரண்டு நாட்களாக விடாது சுழற்றி அடித்து வந்த சூறாவளி நேற்றிரவு மேற்கிந்திய தீவுகளில் கரைகடந்தது போலிருக்கிறது. நேற்று வரை இந்திய அணியை திட்டி தீர்த்து வந்த நம் ரசிக கண்மணிகள் நேற்றைய 'பட்டையை கிளப்பிய' வெற்றிக்குப் பின் மகிழ்ச்சியுடன் நடமாடத் தொடங்கிவிட்டனர். இது ஒரு கத்துக்குட்டி அணிக்கெதிரான வெற்றி என்றாலும் பெரிய வெற்றியாகையால் 'இங்க பாரு மச்சான், கோப்பை நமக்குத்தான்' எனும் விதத்தில் (வழக்கம்போல) வீர சவடால்கள் விடத்துவங்கியுள்ளனர். 'அடப்பாவிகளா! நேத்து தானடா வீட்டையெல்லாம் உடைச்சீங்க. அதுக்குள்ள தலையில தூக்கிவச்சி கொண்டாட ஆரம்பிச்சாச்சா'. என்னவோ போங்க நம் இந்திய மக்களின் உணர்ச்சிகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

நேத்து நான் மேட்ச் பார்க்கும் போது கூட (கும்பலாத்தான் மேட்ச் பார்த்தேன். அதுல இருக்கும் கிக்கே தனி) இந்தியா பேட்டிங் முடிஞ்சவுடனே ஒருத்தன் சொல்றான், 'இது போதும்டா. சூப்பர் 8-க்கு போகாட்டி கூட பராவில்லைடா'. அடப்பாவிப்பயலே, நேத்து வரைக்கும் கொலைவெறியோட அலஞ்சியேடா. இதே மூஞ்சிதான் இலங்கை கூட இந்தியா தோற்றுப்போய்விட்டால் (அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு) மீண்டும் கையில கல்லை தூக்குவான். அந்தளவிற்கு நம்ம மக்கள் எமோஷனல். அந்த நிமிடத்தில் என்ன நடக்கிறதோ அதற்கேற்றால் எதிர்வினை இருக்கும் நம்மிடம். நம் மக்கள் மூளையைவிட இதயத்திற்கு அடிபணிந்தவர்கள். :)

என்னவோங்க, சின்ன அணியிடம் வென்றால் கூட பெருமைப்படும் அளவிற்கு வென்றார்கள். இதில் எனக்கு இன்னொரு மகிழ்ச்சி என்னன்னா சேவாக் ரன் அடிச்சது தான். சேவாக் அடித்த எல்லா ஷாட்டுகளுமே சரியாக அடிக்கப்பட்டவை ஒரே ஒரு ஷாட் தவிர(அவர் அவுட் ஆன ஷாட்). நேற்று வரை அவரை திட்டி தீர்த்த வர்ணனையாளர்கள் கூட புகழ்கிறார்கள் (இவர்களும் நம்ம ரசிகர்கள் மாதிரிதான்). இதே மாதிரி சேவாக் இலங்கை கூட ஆடுவாரா என்று எல்லாரும் கேட்பது தெரிகிறது. சேவாக்கின் தனித்தன்மையே அவருக்கு ஒரு பந்து வீசப்பட்டால், அதில் அவருக்கு சிக்ஸ் அடிக்கவும் தெரியும்(நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்று பொருள்), அதே பந்தில் அவுட்டாகவும் தெரியும் (அந்த நேரத்தில் அவரை காப்பாற்ற ட்ராவிடால் மட்டுமே முடியும்). நேற்றைய ஆட்டத்திற்குப் பின் அவர் ஃபார்ம், நம்பிக்கை, பாடி லாங்குவேஜ் எல்லாம் முன்னேறி இருக்கும். நேற்று அவர் நூறடித்துவிட்டு பேட்டை உயர்த்தி காட்டியபோது, சேவாக்கின் தாயை விட மகிழ்ச்சியடந்தவர் ட்ராவிட்தான். அவர் 100 அடித்தது போன்றதொரு மகிழ்ச்சி.

எல்லா பெரிய அணிகளும் சிறிய அணிகளை 200+ வித்தியாசத்தில் ஜெயிக்கும் போது நாமலும் அதை செய்ய முடியும் என்பதை நிரூபித்த நம்ம பசங்களுக்கு ஒரு 'ஓ' போட்டுத்தான் ஆகனும். மேலும் மேலும் அசத்துவார்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கிருக்கிறது.
========================================================

ப்புறம், கடந்த 3/4 நாட்கள் கிரிக்கெட்டின் கருப்பு நாட்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. மறைந்த பாப் உல்மரின் இறப்பிற்கு பலவாறு காரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

பாகிஸ்தான் அயர்லாந்து அணியுடன் தோற்றதிற்கு காரணம் மேட்ச் ஃபிக்ஸிங் என்றும், பாகிஸ்தான் அணியினர் சூதாட்ட தரகர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர் என்றும், சூதாட்ட பெரும்புள்ளிகள் உல்மரை கொலை செய்திருக்கலாம் என்றும் வதந்திகள் (?) கிளம்பியவண்ணம் உள்ளன.
சிலர், அவர் அளவிற்கதிகமாக மது அருந்தியிருக்கலாம் அதனால் தான் வாந்தியெடுத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் உடல்-பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. முடிவுகள் கிரிக்கெட்டிற்கு பங்கம் விளைவிப்பவையாக இல்லாமல் இருக்க வேண்டும்.

===================================================


வையெல்லாம் நடந்து முடிந்திருக்கையில், நம் கவனிக்கத் தவறிய மற்றொரு நிகழ்ச்சியும் இந்த இரண்டு நாட்களில் நடந்திருக்கிறது. இங்கிலாந்து அணியில் அது சிறிய அளவில் புயலை கிளப்பி இப்போது அடங்கியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் துனை கேப்டன் Flintoff தனது அணித்தோழர்களுடன் (James Anderson, Ian Bell, Jon Lewis, Paul Nixon and Liam Plunkett) சேர்ந்து இரவு நேரத்தில் குடித்து கலாட்டா செய்திருக்கிறார்.

இதனை கண்டிக்கும் விதமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனைவருக்கும் அபராதம் விதித்திருக்கிறது. ஆனால், துனை கேப்டனான Flintoff-ற்கு மட்டும் தன்டனை கூடுதலாக வழங்கியிருக்கிறார்கள். என்ன தெரியுமா? அவருடைய துனை கேப்டன் பதவியை பறித்ததுடன் கனடாவிற்கெதிரான எதிரான போட்டியில் அவரை விலக்கினர்.

இப்போது Flinoff தன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களிடமும், கிரிக்கெட் வாரியத்திடமும் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.

விளையாடப் போன இடத்தில் ராக்கூத்து கேட்குதா உனக்கு மவனே!!

Monday, March 19, 2007

Tremor Continues....

முதலில் பாப் உல்மரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். :(

இந்த உலகக் கோப்பையில் என்னென்னவோ நடந்து வருகிறது. என்னைக் கேட்டால் இதுதான் நான் பார்த்த/பார்க்கும் உ.கோ போட்டிகளிலேயே மோசமானது என்பேன். துன்பங்கள் நிறைந்ததாயிருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடங்கிய நேரத்தில் எல்லாரும் முதல் சுற்று மிகவும் சலிப்படையச் செய்யும்/செய்கிறது என்று சலித்துக் கொண்டார்கள். நமது வலைப்பதிவர்கள் கூட சிறிய அணிகள் உலகக் கோப்பை போட்டிகளில் தேவையா என்று கொதித்து போயினர். ஆனால், நடந்தது என்ன? உங்கள் எல்லாருக்கும் தெரியும். இந்தியாவை பங்களாதேஷ் மண்ணைக் கவ்வ செய்தது. மற்றொரு புறம் அதே நாளில், அயர்லாந்து பாகிஸ்தானை உலகக் கோப்பையை விட்டே விரட்டி அடித்தது. அதோடு மட்டுமில்லாமல், அந்த போட்டியின் விளைவே பாப் உல்மரின் இறப்பிற்கு ஏற்பட்ட மன உளைச்சலை உண்டாக்கியிருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். அவர் கூட பாக்-அயர்லாந்து போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
"I am deeply hurt and cannot tell you how it is going to affect me," Woolmer told AFP late on Saturday after the Ireland defeat, saying he would answer more questions on email later in the week.

பாப் உல்மர் இங்கிலாந்து அணிக்காக ஆடியிருந்தாலும் அவர் இங்கிலாந்து அணிக்கு மட்டும் சொந்தமல்ல. அவர் கான்பூரில் பிறந்தவராதலால் இந்தியாவிற்கும் சொந்தமாகிறார். அவர் உலகக் கிரிக்கெட்டிற்கே சொந்தக்காரர். இங்கிலாந்து கவுண்டி அணியின் பயிற்சியாளராக பணியாற்றியிருக்கிறார். பின்பு, தெ.ஆ அணிக்காக பயிற்சியாளராக பணியாற்றி அப்போதய அணித்தலைவர் ஹேன்ஸி க்ரோனேயுடன் சேர்ந்து தே.ஆ-வை உலகை வெல்லும் அணியாக மாற்றியதை யாரும் மறுக்க முடியாது. அதன் பின்பு, பாகிஸ்தான் அணிக்காக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணியை வலுமிக்கதாக ஆக்க தவறியது அவருடைய குற்றமாக கருத இயலாது. பாகிஸ்தான் அணியின் உட்பூசல் நிறைந்த காலத்தில் அவர் பணியாற்றியது அவருக்கு பின்னடைவாக ஆகிப்போனது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் பயிற்சியளித்த விதம் உலகை வியப்படையச்செய்தது. உலகில் முதல் கிரிக்கெட் லேப்-டாப் கோச் அவர்தான். அவரின் இறப்பு கிரிக்கெட்டின் இழப்பு.

பின்பு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் இண்ஜமாம் ஒருநாள் போட்டிகளிலிருந்து (உ.கோப்பைக்குப் பின்) தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அது எல்லாரும் எதிர்பார்த்ததே. ஆனால், அவர் அறிவித்த நேரந்தான் சரியில்லை. பாகிஸ்தானுக்கு ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் அவர் இதை அறிவித்திருப்பது எவ்விதத்தில் அறிவுப்பூர்வமானது என தெரியவில்லை. பல விதங்களில் பாகிஸ்தான் அணிக்கு அடி. பாவம்.

இன்றைய போட்டியை குறித்து கூறவேண்டுமானல், இந்தியாவிற்கு எளிதான ஒரு போட்டிதான். சச்சின் - கங்குலி வெற்றி இணை மீண்டும் பேட்டிங்கை துவக்கக்கூடும். வெற்றி மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். முதல் போட்டியில் தோற்றதில் ரசிகர்கள் மிகவும் வெறுத்துப் போயிருக்கிறார்கள். பெர்முடா அணியுடன் கூட இந்தியா வெல்லாது எனும் அளவிற்கு. ஒரு நகைச்சுவை துணுக்கு கூட உலவி வருகிறது.

இண்ஜமாம் ட்ராவிட்டை பார்த்து பாடுகிறார்:
இண்ஜமாம்: வர்ரீயா? வரமாட்டியா? வராங்காட்டி உன் பேச்சு காய்....

அதற்கு ட்ராவிட்: நீ முன்னாடி போனா...நான் பின்னாடி வாரேன்...


கொடுமை. மக்களே இந்திய அணி அடுத்த சுற்றுப் போட்டிக்கு தகுதி பெரும். 'அப்செட்' அடிக்கடி நிகழ்வதில்லை. அப்படி நிகழ்வதாயிருந்தால் அதனை 'அப்செட்' என்று அழைத்திருக்கமாட்டார்கள். இலங்கையுடனும் வெல்லும். ஏன் இலங்கையை சமீபத்தில் (1976-ல் அல்ல) வென்றதை மறந்து விட்டீர்களா? தயவு செய்து பாகிஸ்தான் அணியுடன் இந்த இந்திய அணியை ஒப்பிடாதீர்கள்.

ரசிக கண்மணிகளே! இன்றைய வெற்றியை கொண்டாட ஆயத்தமாகுங்கள்!! துன்பங்களை மட்டுமே தந்து வரும் இந்த உலகக் கோப்பை இந்தியாவின் வெற்றிகள் மூலம் நம்மை துன்பம் மறந்து மகிழ்ச்சியூட்டட்டும்!!!

Sunday, March 18, 2007

தோனியின் வீடு தாக்கப்பட்டது.

நேற்றைய கேவல தோல்விக்குப் பின் இந்தியாவில் கலவரங்களும் போராட்டங்களும் நடக்கும் என்பது எல்லாரும் எதிர்பார்த்தது. அது இப்போது நடந்து வருகின்றது என்ற செய்தி கேட்டதும் வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது.

ஆம், நாட்டில் பல பகுதிகளிலும் இப்போது போராட்டங்களும், தீயெரிப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதோ செய்தி.

இதில் உச்சமாக தோனியின் வீடு தாக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டின் சுற்றுச்சுவர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு கேவலமான சம்பவம். விளையாட்டை இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டு பொதுச் சொத்துக்களுக்கும் வீரர்களின் உடமைகளுக்கு தீங்கு விளைவித்தல் எவ்விதத்தில் நியாயம்? :(

அடுத்த வீட்டிலும் எழவு

சரி, நம்ம வீட்டுலதான் இன்னிக்கு ஒப்பாரியும் ஓலமும் இருக்குன்னு பாத்தா, பக்கத்து வீட்டுலயும் எழவு விழுந்துருக்கு. ஆமாங்க, பாவம் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் முதல் முதலில் வெளியேறிய அணி என்ற அவப்பெயருக்கு ஆளாகி நிற்கின்றது.

நமக்குத்தான் ஆப்புன்னு பாத்தா பாகிஸ்தானுக்கு டபுள் ஆப்பு. பங்களாதெஷாவது டெஸ்ட் விளையாடும் அந்தஸ்துள்ள / வெற்றிகளை சிறிது சிறிதாக சுவைக்கத் தொடங்கிய அணி. ஆனால், பாகிஸ்தான் தோற்றதோ முதன் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் அயர்லாந்திடம். எங்கே போயி முட்டிக்கிறது?

பாகிஸ்தானின் அணித் தேர்வின்போதெ பலவித சலசலப்புகள். பின்பு அக்தர் & ஆஸிஃப் காயம் (!?!?!?!?) காரணமாக வெளியேற்றம். இம்ரான் அப்போவே சொன்னார். உலகக் கோப்பையில் பங்குபெற்றுள்ள பாகிஸ்தான் அணிகளில் இந்த அணிதான் சொத்தையான அணியென்றார். அது எந்தளவு உண்மை. பாகிஸ்தான் அணிக்குள் என்னென்னமோ பிரச்சனைகள் உள்ளன. அது பலரால் ஊகிக்கப்பட்டாலும் இதுவரை கசியவில்லை. இனி கசியத்தொடங்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் கலவர பூமியாகும். இரத்தக்காடாகும் என்பது மட்டும் உறுதி.

பாகிஸ்தான் அணியினர் பாகிஸ்தான் திரும்பிச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இண்ஜமாம் பதவி விலகுவார். உல்மர் இங்கிலாந்துக்கு பெட்டி கட்டி ரெடியாக இருப்பார். பாகிஸ்தான் அணியில் மிகப்பெரிய ஆப்பரேஷன் செய்யப்படும். தேவையான ஒன்றாகவே இருக்கும். நானும், இது போன்ற சொங்கியான ஒரு பாகிஸ்தான் அணியை பார்த்ததே இல்லை.

அடுத்த வீட்டு துக்கத்தில் பங்குகொண்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :(

ஏன் இந்த ஒப்பாரி?

என்ன நடந்திருச்சுன்னு இப்படி எல்லாரும் ஒப்பாரி வச்சி அழுவுறீங்க? ஏன் இந்த கொலைவெறி பதிவுகளெல்லாம்? என் இனிய இந்திய மக்களே ரிலாக்ஸ் ப்ளீஸ்.

என்னமோ ஒரு மேட்சுல தோத்துட்டா உலகமே இருண்டு போயிடுமா என்ன? ஜஸ்ட் ஒரு மேட்சுல தானே தோத்திருக்கோம். இன்னும் ரெண்டு மேட்ச் இருக்கு. அதுல கலக்குனா போச்சு. அடுத்த சுற்றுக்கு போயிடப் போறோம். அட போங்கங்க இவனுங்க எங்க இலங்கையை ஜெயிக்கப் போறானுங்க-னு சொல்றீங்களா? இலங்கையை ஜெயிக்க முடியாதுன்னு நீங்க நினைச்சீங்கன்ன இந்தியாவோட அடுத்த ரவுண்டுக்கு போனால் என்ன போகாட்டி என்ன? யோசிச்சு பாருங்க. இப்படி நம்பிக்கையை தளர விடக்கூடாதுங்க. நம்ம டீம் இருக்கே ஆஸ்திரேலியாவுக்கே அல்வா கொடுக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தது. என்ன சனியன், நேத்து நம்ம பங்காளிங்க நல்லா ஆடி தொலைச்சிட்டாய்ங்க. மேட்ச் முழுதும் ஒரு இடத்துல கூட நமக்கு சான்ஸ் தரல அவனுங்க. சூப்பர் பெர்ஃபார்மன்ஸ். நம்ம பங்காளிங்க திறமையை மதிக்க கத்துக்குவோம். இங்க யாருக்காச்சும் பங்களாதேஷோட ஆட்டத்தை குறை சொல்ல வக்கு இருக்கா, சொல்லுங்க? பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாத்திலும் கலக்கிட்டானுங்க.

ஓவர் நைட் மழை, பிட்ச் ஈரப்பதம் இதையெல்லாம் கண் முன்னாடி பார்த்த ட்ராவிட் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது தவறென்றாலும். நம்ம அணி இதைவிட நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கலாம். இதுக்கு மேல இந்த தொடர்ல ஷேவாக்கிற்கு வாய்ப்பு என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது.

எனக்கு துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், பங்களாதேஷின் எழுச்சியை வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த இளம் சிங்கம் (புலி?) தமிம் என்ன அடி அடிக்கிறான். பயமில்லாத ஒரு ஆட்டம். ஜெயசூர்யா + கங்குலியின் ஷாட்ஸ் அவனிடம் இருக்கிறது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது அவனுக்கு. நேற்று பங்காலிங்க ஆடிய ஆட்டத்திற்கு அவர் ஜெயித்தே இருக்க வேண்டும். அதே நடந்தது. இது இந்தியாவிற்கு தூக்கத்தில் மூஞ்சியில ஆசிட் ஊத்துனது மாதிரி. கவலைப்படாதீங்க மக்களே! நம்ம புலிகளின் வாலை பிடித்து விட்டார்கள். இனி தெரியும் விளைவுகள். நிச்சயம் நன்றாக விளையாடுவார்கள். வீறு கொண்டு எழுவார்கள். நீங்கள் அழுவதை நிறுத்துங்கள். வைக்கப்பட்ட ஆப்பு நல்லதிற்கே. அது ஆரம்பத்திலேயே கிடைத்தது அதை விட நல்லதிற்கே.

இலங்கையை வெல்வது ஒன்றும் கடினமல்ல. சமீப காலங்களில் அவர்களை கதற கதற அடிச்சு விரட்டியிருக்கிறோம். இப்போது கூடுதல் வெறியுடன் களமிறங்குவர் நம் புலிகள் (வீட்டில் மட்டுமல்ல என்பது நிருபிக்கப்படும்). எனவே, இந்தியாவின் செமி-ஃபைனல் மேட்சுக்காக காத்திருப்போம்.

நம்ம பசங்களுக்கு எப்போவுமே ஒன்று தேவைப்படும். அது 'A kick in their Ass'. அது கிடைச்சிருச்சு. இனி எல்லாம் சுகமே.

இறுதியாக, Hats Off my Bengal Brothers. We Tamils always support good cricket.

Saturday, March 17, 2007

டி.டி-யில் உ.கோப்பை- அட்டவனை

கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷனை தவிர வேறு வழியில்லாதவரா நீங்கள்? கவலை வேண்டாம். முதல் சுற்று போட்டிகளில் இந்தியா பங்குபெறும் போட்டிகளை மட்டும் ஒலி/ஒளிபரப்பவிருக்கும் தூர்தர்ஷன் சூப்பர் எட்டில் மற்ற அணிகள் பங்குபெறும் சில தலையாய போட்டிகளையும் ஒளிபரப்ப இருக்கிறது. அதற்கான கால-அட்டவனையை தேடி கண்டுபிடித்துவிட்டேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ:

Telecast schedule on Doordarshan:
* March 13: West Indies-Pakistan at Jamaica (starts one hour late) 06.30 p.m.
* March 17: India-Bangladesh at Trinidad & Tobago, starts 05.30 p.m.
* March 19: India-Bermuda at Trinidad & Tobago, 05.30 p.m.
* March 23: India-Sri Lanka at Trinidad & Tobago, 05.30 p.m.
* March 24: Australia-South Africa at St. Kitts & Nevis 05.30 p.m.
The teams given below are all probable match-ups:
* March 31: India-Australia at Antigua & Barbuda, 05.30 p.m.
* April 2: India-New Zealand at Antigua & Barbuda, 05.30 p.m.
* April 7: India-South Africa at Guyana, 05.30 p.m.
* April 8: Australia-England at Antigua & Barbuda, 05.30 p.m.
* April 11: India-England at Barbados, 05.30 p.m.
* April 13: Australia-Pakistan at Barbados, 05.30 p.m.
* April 15: India-Pakistan at Barbados, 05.30 p.m.
* April 19: India-West Indies at Barbados, 05.30 p.m.
* April 24: 1st semi-final at Jamaica (starts one hour late), 06.30 p.m.
* April 25: 2nd semi-final at St. Lucia, 05.30 p.m.
* April 28: Final at Barbados, 05.30 p.m.
One-hour highlights of the above matches will be telecast the next day, from 8.00 a.m. to 9.00 a.m., March 14, 18, 20, 24 and 25, and April 1, 3, 8, 9, 12, 14, 16, 20, 25, 26 and 29.

Manjoorul Islam விபத்தில் உயிரிழப்பு


பங்களாதேஷ் தனது உலகக் கோப்பை வேட்டையை துவங்க இருக்கும் நாளில் ஒரு சோகமான செய்தி அவர்களுக்கு. நமக்கும் தான். :(

அதாவது, பங்களாதேஷ் அணிக்காக 2003 முதல் 2006 வரை ஆடிய வீரர் Manjoorul Islam சாலை விபத்தில் நேற்று மாலை காலமாகினார். :( அவருக்கு வயது 22 மட்டுமே. மிக இளவயதில் இறந்த ஒரு டெஸ்ட் வீரர் இவரென்பது தகவல்.

நேற்று ஃபதுல்லா இடத்தில் என்ற நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் ஆடிவிட்டு நண்பருடன் மோட்டார் பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த பேருந்தில் மோது அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடன் சென்ற நண்பரும் அவருடன் கிரிக்கெட் விளையாடும் வீரருமான சஜ்ஜாதுல் என்பவர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார். அந்த போட்டியில் மஞ்சூருல் இஸ்லாம் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்திருக்கிறார்.

இடக்கை ஸ்பின்னரான இவர், தனது முதல் ஒருநாள் போட்டியில் முதல் ஓவரிலியே இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனை வீழ்த்தியிருக்கிறார். அது இன்றுவரை ஒரு பங்களாதேஷி சாதனையாகும்.

இவரின் இறப்புச்செய்தி தற்போதய பங்களாதேஷ் வீரர்களை மனம்கலங்கச் செய்திருக்கும். ஒன்றாக கிரிக்கெட் ஆடியவர்கள். இருக்காதா பின்னே? செய்தியை படிக்கும் நமக்கே அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதனால் துக்கம் நெஞ்சடைக்கும் போது அவர் அணியினருக்கு இருக்காதா. அவர் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

உ.கோப்பை - சில விதிகளில் திருத்தம்

உலகக் கோப்பைகள் நடந்து கொண்டிருந்தும் இந்தவேளையில் ஐ.சி.சி-யானது தற்போதுள்ள சில விதிகளில் சில திருத்தங்களை செய்ய முன்வந்துள்ளது. இது குறித்து எம்.எஸ்.என் -ல் வெளியான செய்தி:

உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து உலகக் கோப்பை விதிகளில் மாற்றம் செய்ய ஐசிசி ஒப்புக்கொண்டுள்ளது.

டாஸ் போட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் ஆட்டம் நடைபெறும் போது புதிதாக டாஸ் போடவும், அணியில் வீரர்களை மாற்றம் செய்யவும் வழிசெய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் செயல்பாடுகள் பொது மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டாஸ் போட்ட பின்னர் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டால் மறுநாள் ஆட்டம் நடைபெறும் போது புதிதாக டாஸ் போட
வேண்டும் என விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மாற்றம் உலகக் கோப்பை போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

இதே போல் திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் வீரர்களை மாற்றிக் கொள்ளவும் புதிய திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த ரன்விகிதம் கணக்கிடுவது சூப்பர் எட்டு போட்டிகளுக்கு தகுதி பெறும் அணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் சிக்ஸ்

தமிழ்மணத்தில் 'எனக்கு பிடித்த/பிடிக்காத ஆறு' என்று அனேக வலைப்பதிவர்கள் பதிவிட்டு கலக்கி வந்ததை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். இப்போது அதே வரிசையில் இன்னொருவர் இணைந்திருக்கிறார். ஆனால் இவர் வலைப்பதிவரும் இல்லை. இவர் பதிந்திருப்பது தமிழ் வலைப்பதிவும் இல்லை.

அவர் தெ.ஆ-வின் நம்பிக்கை நாயகன் கிப்ஸ். அவர் செய்திருக்கும் சாதனை ஒரே ஓவரில் ஆறு 'ஆறு'கள். என்னதான் சொதப்பல் அணிக்கு எதிரான ஒரு சாதனை என்றாலும் கிரிக்கெட் விளையாடுபவர்களுத்தான் தெரியும் அது எத்தனை கடினமான சாதனை என்று. ஒரு சிறுபிள்ளையை பந்து வீச செய்து (அது ரப்பர் பந்தோ ப்ளாஸ்டிக் பந்தோ எதுவாயினும்) நீங்களும் தொடர்ந்து ஆறு சிக்ஸ் அடிக்க முயன்று பாருங்கள். நாக்கு வெளியே தள்ளிடும். அத்தனை கடினம் தொடர்ந்து ஆறு சிக்ஸ் அடிப்பது. டைமிங் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. என்னுடைய கண்ணோட்டத்தில் இச்சாதனை சிறிய அணிக்கு எதிரானதென்றாலும் ஒரு இமயமே. பாராட்டுக்கள் கிப்ஸ்!

உங்கள் பார்வைக்கு கிப்ஸின் ஆறு வீடியோ கீழெ:

Wednesday, March 14, 2007

கவாஸ்கர் Vs பாண்டிங் - பாகம் 2

கவாஸ்கர்- பாண்டிங் இடையேயான சொற்போர் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தில் அடிக்கும் லூட்டி குறித்து கவாஸ்கர் சிறிது நாட்களுக்கு முன் கருத்து கூறியிருந்தார். அதற்கு பாண்டிங்கும் தன் பங்கிற்கு கவாஸ்கரையும் இந்திய அணியையும் திட்டி தீர்த்தார். அது இன்னும் ஓய்ந்தபாடில்லை. கவாஸ்கர் மீண்டும் பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பேசிய கவாஸ்கர்:

நான் 1981-ம் ஆண்டு மைதானத்திலிருந்து வெளியேற காரணம் ஆஸ்திரேலிய வீரர்கள் தான். அவர்கள் என்னை வசைமொழிந்ததால்தான் நான் வெளியேற நேரிட்டது.

இதுபோல அவர்கள் தொடர்ந்து வசைமொழிகளை மற்ற அணி வீரர்கள் மீது பயன்படுத்தினால் ஒருநாள் இல்லை ஒருநாள் யாராவது ஒருவர் ஆஸ்திரேலிய வீரரை மைதானத்திலேயே தாக்கும் நிலை ஏற்படும். மதுபான விடுதிகளில் ஆஸ்திரேலியர்கள் இதுபோல வசைமொழிந்துவிட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட முடியுமா? இதற்கு எடுத்துக்காட்டாக மதுபான கடையில் தாக்கப்பட்டு உயிரிழந்த வீரர் டேவிட் ஹூக்ஸ்-ஐ கூறலாம்.

என்று காட்டமாக பதிலளித்துள்ளார். இருவரின் பனிப்போர் நன்றாக சூடுபிடித்துள்ளது. தற்போதய ஸ்கோர் கவாஸ்கர் 2 பாண்டிங் 1.

வேடிக்கை பார்த்துவரும் நமக்கெல்லாம் கொண்டாட்டம்தானே?

Tuesday, March 13, 2007

முதல் போட்டி - வெ.இ Vs பாக்

அப்பாடா! பல பேரின் பலநாள் ஏக்கத்திற்கு இன்று நிறைவேறப்போகிறது. ஒன்பதாவது உலகக் கோப்பையின் முதல் போட்டி இன்று ஜமைக்காவில் சபீனா பார்க் மைதானத்தில் பாகிஸ்தான் - வெ.இ அணிகளுக்கிடையே நடக்க இருக்கிறது. முதல் போட்டியே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விறுவிறுப்பை எதிர்பார்ப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. இதுவரை இவ்விரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று விறுவிறுப்பான போட்டிகளைத் தந்துள்ளது. இரு அணியினரும் ஆடியுள்ள 7 உலகக் கோப்பை போட்டிகளில் 5-2 என்ற கணக்கில் வெ.இ -பாக் அணிகளின் வெற்றி எண்ணிக்கை உள்ளது. இவை பெரும்பாலும் 70 - 80 களின் அசைக்க முடியாத வெ.இ அணியால் கிடைத்த வெற்றிகளாகும். சமீபத்திய 10 போட்டிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் 8-2 என்ற கணக்கில் வெ.இ அணியை வீழ்த்தியுள்ளது.


தற்போதய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் மூலதனமான வேகப்பந்து வீச்சு கேள்விக்குள்ளாகியுள்ளது. அக்தர் மற்றும் ஆஸிஃப் பங்குபெறாத இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை காண உலகமே காத்திருக்கிறது. முஹம்மது சமி - உமர் குல் - அசார் - ரானா ஆகியோர் எப்படி பந்துவீசப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், நிலையான ஒரு மிடில்-ஆர்டர் மட்டையாளர்கள் தான் இந்த பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள். யூனுஸ், யூசுஃப் & இண்ஜமாம் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டிங் வரிசை ஷொகைப் மாலிக் மற்றும் அஃப்ரிடியால் மேலும் வலுப்பெறும். தொடக்க ஆட்டக்காரர்களின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைக்க இயலும் என்பதை உறுதியாக கூற இயலாத நிலை. பயிற்சி போட்டிகளின் வெற்றி நிச்சயம் பாகிஸ்தானுக்கு நம்பிக்கை அளித்திருக்கும். குறிப்பாக தெ.ஆ அணிக்கெதிரான வெற்றி. கிரிக்கெட்டின் கணிக்க இயலாத அணி ஒன்று உண்டென்றால் அது பாகிஸ்தான் தான்.


வெ.இ அணியைப் பொறுத்தவரை 50-50 வாய்ப்புள்ள ஒரு அணியாகும். கரீபியன் தீவுகளின் தென்னைமரங்களை உலுக்கினால் விழுவது வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று கிரிக்கெட்டில் சொல்லிக் கொள்வார்கள். அந்தளவிற்கு வேகப்பந்து வீச்சிற்கு புகழ்பெற்ற இடம். ஆனால், தற்போத அணியில் சொல்லிக் கொள்ளும்படியான புகழ்பெற்ற ஒரு வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை. பெரும்பாலும் இளைய வேகப் பந்து வீச்சாளர்கள். பேட்டிங்கை பொறுத்தவரை கெய்ல் - லாராவின் ஆட்டத்தை பொருத்தே அமையும். சந்திரபால் & சர்வான் இருந்தாலும் கெய்ல் மட்டும் ஒரு 15 ஓவர்கள் பேட்டிங் செய்தால் ஆட்டத்தின் போக்கில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. லாராவின் தலைமையின் கீழ் ஒற்றுமையாக ஆடத்துவங்கியுள்ளனர் இந்த 9 நாடுகளின் கூட்டமைப்பு வீரர்கள். ஒற்றுமைக்கு பலன் கிட்டுமா? வெ.இ இன்றைய வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

ரசிகர்கள் தவறாமல் இந்த போட்டியை கண்டுகழியுங்கள். இரு அணிகளும் ஏறக்குறைய ஒரே அளவான திறமையுடன் இருப்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.

என் கணிப்பு: பாகிஸ்தான் வெற்றி பெறும்.

Monday, March 12, 2007

உலகக் கோப்பை - வண்ணமய துவக்கம்









கவாஸ்கர் Vs பாண்டிங்

ஆஸ்திரேலிய அணி வீரர்களின் நடத்தை குறித்து கவாஸ்கர் தெரிவித்த கருத்திற்கு ஆஸ்திரேலிய அணித்தலைவர் பாண்டிங் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் சுனில் கவாஸ்கர் ஒரு நாளேட்டிற்கு அளித்த பேட்டியில்:
கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியவை மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் உள்ளது. இதுதான் அவர்கள் கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறப்பதற்கு காரணமாக உள்ளது. ஆனால், அதே வேளையில் அவர்கள் களத்தில் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களிடையே வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாக உள்ளது. இந்த நடத்தை விசயத்தில் ஐ.சி.சி யும் ஒருசார்பு நிலையை கடைபிடித்து வருவது வருத்தமளிக்கத்தக்கது.

என்று அந்த பேட்டியில் போரை தொடங்கி வைத்தார்.

அதற்கு 'தி ஆஸ்திரேலியன்' நாளேட்டிற்கு பதிலளிக்கும் விதமாக பாண்டிங் பேட்டியளித்தது தான் பனி-போரின் உச்சகட்டம்.
கவாஸ்கர் தனது காலத்தில் கிரிக்கெட்டை எவ்வாறு விளையாடினார் என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். அது நமக்கு தெரியாதா என்ன?

1980-81-ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, மெல்பர்னில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் டென்னிஸ் லில்லியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனதாக நடுவர் தெரிவித்தார். ஆனால், அது முறையற்றது என்று கவாஸ்கர் வாதாடியதோடு தன்னுடன் பேட்டிங் செய்த சவுகானையும் வெளியே அழைத்துச் சென்றார். இவ்வாறு நடந்து கொண்ட கவாஸ்கர் எங்களை விமர்சிக்க தகுதியற்றவர்.

கடந்த 12 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்த காலகட்டங்களில் கவாஸ்கர் இந்திய
அணியில் முக்கிய அங்கம் வகித்தவர். எனவே இந்த தோல்விகளில் அவருக்கும் பொறுப்புள்ளது. எனவே, இந்திய அணியினரின் ஆட்டம் பற்றி மட்டும் கவாஸ்கர் கவலைப்பட்டாலே போதும். நாங்கள் விளையாடிய 10 டெஸ்டிலும் வென்றுள்ளோம். எனவே, எங்களை
பற்றிய கவனம் அவருக்கு தேவையற்றது.


ஆக, உலகக் கோப்பை துவங்கிய கையோடு இருவருக்கும் இடையே பனிப்போரும் துவங்கியுள்ளது. இது இருவருக்கிடைப்பட்டதாயினும் இரு நாடுகளையும் வம்புக்கு இழுத்துள்ளனர் இருவரும்.

பாண்டிங் கூறுவது போல் கவாஸ்கர் இந்திய அணியின் வெற்றிக்கு பாடுபடட்டும் முதலில். எல்லாரும் இணைந்து நல்ல வலிமைமிக்க இந்திய அணியை உருவாக்கி எல்லாரையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திக் காட்டுங்கள். பின்பு கவாஸ்கர் இது போன்று நாக்கு மேல் பல் போட்டு பேசலாம். அதுவரை கவாஸ்கர் முதலில் தமது ................................

Saturday, March 10, 2007

உலகக் கோப்பை சேதம்

அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை வரும் 13-ந்தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன் போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளுக்கு உலகக் கோப்பையை காட்சிக்காக கொண்டு செல்வது வழக்கம்.

இதனடிப்படையில், கடந்த வியாழனன்று கோப்பை கல்கத்தா கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அப்போது, நிகழ்ச்சி நிர்வாகிகளில் ஒருவர் கோப்பையை கையில் எடுத்தபோது கோப்பையின் கீழ்பகுதியிலிருந்த தங்க வளையம் ஒன்று வெளியே பெயர்ந்துவிட்டது. இதனால், உடனே உலகக் கோப்பை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்பட்டதாக தெரிகிறது.

கல்கத்தவிற்கு அடுத்து, மும்பை மற்றும் சென்னை நகரங்களுக்கு உலகக் கோப்பை எடுத்து செல்லப்படும். பின்பு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுகிறது.

11 கிலோ எடை கொண்ட இந்த உலகக் கோப்பை தங்க முலாம் பூசப்பட்டதாகும். இது இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் மதிப்பு 80,000 அமெரிக்க டாலராகும்.

கல்கத்தாகாரர்களுக்கு எல்லாத்திலும் கொஞ்சம் Sprit கூடுதல்தான் போல. :)

Tuesday, March 6, 2007

இந்த உ.கோப்பையின் இ.வா யார்?

உலகக் கோப்பை போட்டிகளில் சில நேரம் யாரும் எதிர்பாராத விதமாக முடிவுகள் வருவதுண்டு. அதிலும் கொடுமை சில நேரங்களில், அதுவரை அத்தனை பெரிய அளவில் வெற்றிகள் பெறாத அல்லது புதியதாக உலகக் கோப்பையில் பங்கெடுக்கும் அணிகள் (Minnows என்றழைக்கிறார்கள்) பலமிக்க அணிகளை வீழ்த்தி விடுவதுண்டு. இது போன்ற அதிர்ச்சிகள் உலகக் கோப்பையில் அவ்வப்போது நிகழ்வதுண்டு. பலமிக்க அணிகள் அத்தருணத்தில் இளிச்சவாயனாக (இனா வானா-வாக) காட்சிதரும்.

இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்து அதிர்ச்சிகளை இவ்வகையில் சேர்க்கலாம்.

முதல் அதிர்ச்சி:(இ.வா-ஆஸ்)
(1983 - ல் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை 13 ஓட்டங்களில் வென்றது)

இதுதாங்க ஜிம்பாப்வேக்கு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி. அறிமுகப் போட்டி. முதல் போட்டியிலேயே கிரிக்கெட்டில் பெரும்புலியான ஆஸ்திரேலியாவுக்கு தன் வருகையை அதிர்ச்சியாக பரிசளித்தது ஜிம்பாப்வே. தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வரும் Duncan Fletcher தான் அந்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன். அவர்தான் இந்த அதிர்ச்சிக்கும் வழி நடத்தியவர். 69 ஓட்டங்களை அவர் எடுத்ததோடு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் அதிர்ச்சிக்கு அடிகோலினார்.

இரண்டாம் அதிர்ச்சி:(இ.வா-மே.இ)
(1983 - ல் இந்தியா மேற்கிந்தியாவை 43 ஓட்டங்களில் வீழ்த்தி கோப்பையை வென்றது)

இந்தியாவிற்கு 1975 & 1979 இரண்டு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து ஒரே ஒரு வெற்றி. மேலும், தமது 9 வருட ஒருநாள் கிரிக்கெட் அனுபவத்தில் 17 வெற்றிகள் மட்டுமே. இத்தகைய ஒரு மோசமான சாதனையுடன் 1983-ல் களமிறங்கிய இந்திய அணி கோப்பையை வெல்லும் என ஒருவர் கூட கணித்திருக்க மாட்டார்கள். ஏன், கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இறுதிப் போட்டி வரை வந்த இந்திய அணி அன்றைய ஜாம்பவனாகிய மேற்கிந்தியாவை வாட்டி எடுத்தனர். அற்புதமான களத்தடுப்பு மற்றும் ஸீம்-பந்து வீச்சு மூலம் தமது 183 என்ற இலக்கை மே.இ அடைய விடாமல் தடுத்து வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர். ஒரே உலகக் கோப்பையில் இரண்டாவது அதிர்ச்சியும் அரங்கேறியது.

மூன்றாவது அதிர்ச்சி:(இ.வா-மே.இ)
(1996 - ல் கென்யா மேற்கிந்தியாவை 73 ஓட்டங்களில் வென்றது)

கென்யாவிற்கு முதல் உலகக் கோப்பை அனுபவம். யாரும் மேற்கிந்திய அணியுடன் கென்யா மோதுவதை போட்டியாகக் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் மேற்கிந்தியாவிற்கு காத்திருந்ததோ பெரும் இடி. கென்யாவின் மோரிஸ் ஒடும்பே மேற்கிந்திய பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தெறிந்தார். முடிவில் மே.இ 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக நின்றது. கென்யா அணியினர் புனே மைதானத்தை சுற்றிவந்த விதம் அவர்கள் ஏதோ உலகக் கோப்பையையே வென்றது போன்ற தோற்றத்தை தந்தது.

நான்காவது அதிர்ச்சி:(இ.வா-பாக்)
(1999-ல் பங்களதேஷ் பாகிஸ்தானை 62 ஓட்டங்களில் வென்றது)

அதுவரை பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணியை வென்றதில்லை. முதல் உலகக் கோப்பை அனுபவம். எதிரணியோ உலகமே பயந்தலறும்படியான பந்துவீச்சாளர்களை கொண்டது. வாசிம், வக்கார், அக்தர் மற்றும் சாக்லைன். இருந்தாலும் பங்களாதேஷ் ஒருவாறு சமாளித்து 223 எடுத்தது. 161-க்கு பாகிஸ்தானை ஆட்டமிழக்கச் செய்து வென்றது பங்களாதேஷ். ஆட்ட முடிவில் பாக் அணித்தலைவர் வாசிம் 'எங்கள் சகோதரர்களிடம்தானே தோற்றோம்' என்று செண்டிமெண்ட்டாக வசனம் பேசியது இன்றும் என் நினைவிலுள்ளது. இந்த வெற்றிதான் அப்போதய ஐ.சி.சி தலைவராக இருந்த டால்மியாவை பங்களாதெஷிற்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கச் செய்தது. (பங்காளி - பங்காளி கான்ஸெப்டும் உண்டு அதில்).

ஐந்தாவது அதிர்ச்சி:(இ.வா-இலங்கை)
(2003- ல் கென்யா இலங்கையை 53 ஓட்டங்களில் வென்றது)

மீண்டும் கென்யா ஒரு உலகக் கோப்பை அதிர்ச்சியை உலகிற்கு அளித்தது. இம்முறை இலங்கைக்கு அல்வா கொடுத்தது கென்யா. காலின்ஸ் ஒபுயாவின் நேர்த்தியான லெக்-ஸ்பின் பந்துவீச்சால் இலங்கையை திணறடித்தது. இந்த அதிர்ச்சி வெற்றியானது கென்யாவை அரை-இறுதி வரை எடுத்துச் சென்றது நினைவிருக்கலாம். ஆக, ஐந்தாவது கடந்த உலகக் கோப்பையில் நிறைவேறியது.

மேலுள்ளவற்றை பார்க்கையில், இம்முறையும் ஏதேனும் ஒரு அதிர்ச்சி நிகழ அதிக வாய்ப்பிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. பார்க்கலாம் யாரந்த இ.வா என்று. (யாரய்யா அது, அப்போட்டி பங்களாதேஷ் - இந்தியா என்று சொல்வது?) ஸ்காட்லாந்து - ஆஸ்? சரியாக கணிப்பவருக்கு தக்க பரிசு வழங்கப்படும். ;)

Sunday, March 4, 2007

மே.இந்தியாவிலிருந்து கனடாவிற்கு


'ஆண்டர்ஸன் கம்மின்ஸ்'. இந்த பெயர் அல்லது அருகிலிருக்கும் படத்திலுள்ள முகம் ஞாபகம் இருக்கிறதா? ஆம். இவர் மே.இந்திய அணிக்காக விளையாடியவர். 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 478 ரன்களை குவித்ததுடன் 78 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஒரு ஆல்-ரவுண்டர். 1996 உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார்.

சரி, அவருக்கென்ன இப்போ என்று கேட்கிறீர்களா? அவர் நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில் வெறு ஒரு நாட்டிற்காக விளையாட இருக்கிறார். அதாவது இந்த முறை அவர் பங்கு பெற்றிருக்கும் அணி கனடா.

என்ன குழப்பமாக இருக்கிறதா? குழப்பமொன்றும் இதில் வேண்டாம். அதாவது கம்மின்ஸ் கனடாவில் தான் பிறந்து வளர்ந்தார். அந்நாட்டு குடிமகன் தான். ஆனால், இடையில் மே.இந்திய தீவுகளில் வசித்த போது மே.இந்திய அணிக்காக விளையாட தேர்வு பெற்று ஆடி வந்தார். தற்போது கடந்த 11 ஆண்டுகளாக தனது தாய்நாடான கனடாவில் வசித்து வருகிறார். அதே நேரம் கனடா கிரிக்கெட் அணியிலும் தேர்வு பெற்று விளையாடி வருகிறார். உலகக் கோப்பை அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

எனக்குத் தெரிந்து இரு வேறு அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் இவர். மற்றவர் தெ.ஆ-வின் முன்னாள் அணித்தலைவர் கெப்ளர் வெஸ்ஸல்ஸ். அவர் ஆஸ்திரேலியா அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

Saturday, March 3, 2007

தே.ஆ அணி கோப்பையை வெல்லாது

அப்படின்னு நான் சொல்லலங்க. சொன்னவர்கள் விபரம் கீழே. :)

நடக்க இருக்கின்ற உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு தெ.ஆ அணிக்கு இல்லை என்று இரண்டு முன்னால் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். யார் யார் தெரியுமா? ஒன்று ஷேன் வார்னே. மற்றொன்று ரனதுங்க.

நேற்று ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஷேன் வார்னே கூறியதாவது:

ஆஸ்திரேலியா இம்முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு தெ.ஆ விட நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளே தடையாக இருக்கும்.

என்னதான் உலகில் முதல் நிலை அணியாக தெ.ஆ இருந்தாலும் கோப்பையை வெல்லும் அளவிற்கு மிகச் சிறந்த அணியாக இல்லை.


என பேட்டியின் போது தெரிவித்துள்ளார். இது தெ.ஆ மனச்சோர்வடையச் செய்யும் ஒருவகை பயமுறுத்தல் என நான் எண்ணியிருந்த போது ரனதுங்கவும் இது போல தெரிவித்த செய்தியை வாசிக்க நேரிட்டது. ரனதுங்க அறிவித்ததாவது:

இந்த முறை உலகக் கோப்பைக்கான டாப் நான்கு அணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் நியுசிலாந்து தேர்வு பெறும்.

இதில் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிகவும் கூடுதல். அவர்களின் பேட்டிங் மிகவும் பலமானதாக இருக்கிறது. தற்போதய இந்திய அணி கோப்பையை வென்ற எனது அணி (1996) போலவே எனக்கு தோற்றமளிக்கிறது.

இதில் தெ.ஆ-வை நான் ஒதுக்க காரணம், அவர்கள் பெரிய போட்டிகளில் தடுமாறும் மனநிலை உள்ளவர்கள். அதற்கு பல உலகக் கோப்பை போட்டிகளே சான்று.


என ரனதுங்காவும் தெ.ஆ அணிக்கு கோப்பை கிடைக்காது என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர்கள் பெரும்பாலும் சாடுவது பெரிய போட்டிகள் என்றாலே தொடை நடுங்கும் தெ.ஆ வின் குணத்தைத்தான்.

தெ.ஆ அணியினருக்கு இது இந்நேரம் காதில் விழுந்திருக்கும். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இருக்கிறது ஆப்பு. :)

Thursday, March 1, 2007

அக்தர், ஆஸிஃப் நீக்கம்


நான் எதிர்பார்த்தது போலவே, பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சு வேதாளங்கள் அக்தர் மற்றும் ஆஸிஃப் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி பாகிஸ்தான் அணி மேற்கிந்தியாவிற்கு புறப்படுவதற்கு சற்று முன் அறிவிக்கப்பட்டது.


லண்டன் சென்றிருந்த அக்தர், ஆஸிஃப் இருவரும் 'இன்று வருவார்கள் நாளை வருவார்கள்' என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் இருவரும் இன்று வரை வந்தபாடில்லை. இருவரும் தமது உடலில் எஞ்சியிருக்கும் போதை பொருள் தடயங்களை அகற்றுவதற்காக லண்டன் சென்றிருக்கிறார்கள் என்று செய்தி வெளியானது எல்லாரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தும் இதுவரை அணியினருடன் வந்து சேராதது மர்மமாகவே உள்ளது. மீண்டும் ஒரு ஊக்கப் பொருள் சோதனைக்குட்பட அவர்கள் ஆயத்தமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.


அவ்விருவருக்கும் பதிலாக முஹம்மது சமி மற்றும் யாசிர் அராஃபத் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அணியினருடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணித்தனர். இந்த இருவர் இல்லாத பாகிஸ்தான் மிகவும் பலவீனமாக எனக்கு காட்சியளிக்கிறது. பார்க்கலாம் எப்படி விளையாடுகிறது இந்த பாக் அணி என்று.

சென்று வென்று வருக


மேற்கிந்திய தீவுகளில் நடக்க இருக்கும் 9வது உலகக் கோப்பைகளில் கலந்து கொள்ள இந்திய அணி மும்பையிலிருந்து புறப்பட்டு சென்றது.

100 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் தங்களுடைய தோள்களில் சுமந்து சென்றது இந்திய அணி. கிரிக்கெட்டை உயிர் மூச்சாக நினைக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதியாக விளையாடச் செல்லும் வீரர்களிடம் கேட்டால் தெரியும் இந்த சுமை எத்தனை கனமானது என்று. நம் வீரர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு/ஆதரவுதான் ப்ளஸ் & மைனஸ். பிரேஸில் மக்களுக்கு கால்பந்து போல நமக்கு கிரிக்கெட்.

'வெற்றி பெறுவதற்காக மட்டுமே விளையாட வந்துள்ளோம்' என்ற எண்ணத்துடன் இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் வெறியுடன் போராடுமானல் வெற்றி நமதே. இந்திய அணியில் திறமைக்கு ஒரு பொழுதும் பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் பெரும்பாலும் தோற்பதெல்லாம் மனவலிமையை இழக்கும் சூழ்நிலைகளில் மட்டுமே. அதற்கு சான்றாக கடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியினை கூறலாம். சில நாட்களுக்கு முன் மெக்ராத் அப்போட்டியினை குறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில் : 'இறுதி போட்டிக்கு முந்தைய நாள், எமது அணி(ஆஸி) மிகுந்த உற்சாகத்திலும், பதற்றமின்றியும் காணப்பட்டோம். நாங்கள் ஒருவருக்கொருவர் நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், இந்திய அணியினர் மாறாக பயிற்சிகளில் மூழ்கியிருந்ததோடு, பதற்றத்துடனும் இறுகிய முகத்துடனும் காணப்பட்டனர். அப்போது நாளை போட்டியில் வெற்றி எமதே என்று எனக்கு தெரிந்துவிட்டது' என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பதற்றமடையாமல் மனவலிமையுடன் இந்திய அணி இந்த உலகக் கோப்பையை எதிர் கொள்ள வேண்டும். அதுவே நமக்கு பாதி வெற்றியை பெற்று தந்துவிடும்.

ஊடகங்களின் அட்டகாசம்:

இந்திய அணியை வழியனுப்புவதை ஒரு மெகா-தொடர் அளவில் நிகழ்ச்சியாக சில ஆங்கில/இந்தி ஊடகங்கள் இரண்டு நாட்களாகவே நடத்தி வருகின்றன. ஒவ்வொரு நகரத்திலிருந்தும் பாட்டு பாடி ஆட்டம் ஆடி வழியனுப்பி வைப்பதாக காட்டுகிறார்கள். கோமா நிலையிலிருந்து ஒருவர் மயக்கம் தெளிந்து இந்நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டால் 'இந்தியா உலகக் கோப்பை வென்று விட்டதா?' என கேட்க தோன்றும். அளவுக்கு மிஞ்சிய ஆர்ப்பாட்டம் இந்த ஊடகங்கள் செய்பவை.

ஒரு செய்தி ஊடகம், மும்பை விமான நிலையத்தில் வைத்து, தோனியின் கைப்பையை காண்பித்து அது எத்தனை கிலோ எடை இருக்கும் என ஆராய்கிறது. தேவையா இது? இது போல பல கூத்துக்கள். எல்லாம் வியாபார நோக்கம். இவர்களே மக்களுக்கு கிரிக்கெட் மீது வெருப்பை உண்டாக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது. அத்தனைக்கு சலிப்படைய வைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வரம்பே இல்லை போலிருக்கிறது.

பலி கொடுக்க இருக்கும் ஒரு கடாவின் முகத்தில் இருக்கும் ஒரு வித பயத்தை போலவே இந்திய வீரர்களின் முகத்திலும் இவர்களே வரவைத்து விடுகிறார்கள். பாவம் நம் வீரர்கள். அளவிற்கதிகமான எதிர்பார்ப்புகள்.

சென்று வென்று வருக என நாமும் வாழ்த்தி அனுப்புவோம்.