Tuesday, February 27, 2007

ஊக்க மருந்தும் வேகப்பந்து வேதாளங்களும்

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு முதுகெலும்பான அக்தர் & ஆஸிஃப் இருவரும் சில மாதங்களாகவே பெரும் சிக்கலில் தவித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் இருவரும் ஊக்க மருந்து உட்கொண்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன், பயிற்சியாளருக்கும் அக்தருக்கும் இருக்கும் மனக்கசப்பின் பின் விளைவாக இது கருதப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பாக் கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. இது கிரிக்கெட் உலகையே உலுக்கியது.

இருப்பினும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களின் தூண்டுதல் பேரில் அவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தற்போதைய உலகக் கோப்பை அணியிலும் இருவரின் பெயரும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், பாக் அணி மேற்கு இந்தியாவிற்கு புறப்படும் முன் அனைவருக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும் என்றும் இதனால் ஐ.சி.சியால் நடத்தப்படவிருக்கும் சோதனைகளில் யாரும் சிக்கி அணிக்கு அவப் பெயர் ஏற்படாமல் தடுக்க இயலும் என்றும் பாக் வாரியம் அறிவித்தது. உடனே அக்தரும் ஆஸிஃபும் லண்டனுக்கு பறந்தனர். அதற்கு அவர்கள் தெரிவித்த காரணமோ வேறு. அதாவது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் முழங்கால், முழங்கை காயங்களுக்கு தகுந்த வைத்தியம்/ஆலோசனை பெறுவதற்கே என அவர்களால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து வெளியாகும் செய்தி ஒன்று இருவரும், தங்கள் உடலில் உள்ள ஊக்க மருந்தான Nandrolone-ன் தடயம் உடலிலிருந்து முற்றிலும் அழிப்பதற்காகவே வந்துள்ளதாக தெரிவிக்கிறது. ஒருவர் ஊக்க மருந்து உட்கொண்டால் அதற்கான தடயம் உடலில் ஆறு மாதம் வரை இருக்குமாம். அதை அழிப்பதற்காகத்தான் இருவரும் லண்டன் சென்றுள்ளனர் என தெரிவிக்கிறது அந்த ஊடகம்.

அதற்கிடையில், பாக் கிரிக்கெட் வாரியம் மற்ற அனைத்து வீரர்களுக்கும் சோதனை நடத்தி முடிவும் அறிவித்து விட்டது. யாருக்கும் எதிர்மறையான முடிவு வரவில்லை. இந்த இருவருக்காக மட்டும் பாக் வாரியம் காத்திருக்கிறது. இருவரும் வருவதாக தெரியவில்லை. இதனால் பாக் வாரியம் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னதான் திறமை இருந்தாலும் இதெல்லாம் டூ மச் இல்லையா? பாக் கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் பதிலாக மாற்று வீரர்களாக முஹம்மது சமி மற்றும் அசார் மஹ்மூத் இருவரையும் தேர்வு செய்து வைத்துள்ளது. அக்தர் -ஆஸிஃப் வருகை தாமதமானால் சமி மற்றும் அசாருக்கு நல்வினைப்பயன் கிடைக்கும்.

சிக்கல்களில் சிக்கி தவிப்பது ஒன்றும் அக்தருக்கு புதிதல்ல. அவர் வந்த நாள் முதல் பல வித சிக்கல்களில் சிக்கி வெளியேறி வந்தவர்தான். அவரது திறமை ஒப்பற்றது. அவரை கண்டு மற்ற அணி வீரர்கள் நடுங்கி வருகின்றனர். ஆனால், இடையிடையே அவரது ஒழுங்கீனம் அவருக்கு அவப்பெயரையும் சிக்கல்களையும் ஈட்டி கொடுக்கிறது. ஆஸிஃப் கதையோ வேறு. புதிய இளம் திறமையான பந்துவீச்சாளர். அவர் இது போன்றவற்றிலிருந்து விலகி இருப்பதே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு நல்லது.

யாராக இருந்தாலும் தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

8 comments:

Anonymous said...

thavaru seiyum pothu, athanal erpadum avamam theriyathanga. nalla puththi vantha sari

Naufal MQ said...

அவமானங்களை பெரிதாக நினைக்காதவர்களாக இருக்கலாம்.

வருகைக்கு நன்றி நக்கீரன்.

Anonymous said...

good post dude

karthick prabhu

Naufal MQ said...

நன்றி கார்த்திக் பிரபு. :)

கதிர் said...

நல்ல பதிவு, கிரிக்கெட்டு உயிர் மூச்சா நெனச்சிட்டு இருக்கேளா?

Naufal MQ said...

// தம்பி said...
நல்ல பதிவு, கிரிக்கெட்டு உயிர் மூச்சா நெனச்சிட்டு இருக்கேளா?
//

சிலருக்கு ஆரியம் உயிர்மூச்சு. சிலருக்கு திராவிடம். உங்களுக்கு வீராச்சாமி. அதுபோல் எனக்கு இதுவும்.

Anonymous said...

Latest News: Razzaq out due to injury. Azhar Mahmood in.

Naufal MQ said...

//Anonymous said...
Latest News: Razzaq out due to injury. Azhar Mahmood in.
//
ஆம் அனானி. பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி அது.