Sunday, February 18, 2007

நடந்தவை நன்றாகவே நடந்தது

விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு சமம் எதுவுமில்லை. வெற்றி பெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, நம்பிக்கை, ஊக்கம் எல்லாமே தனி தான். மலையை பெயர்த்தெடுக்கும் மனவலிமை பிறக்கும்.


ஆம். அது போல் தான் இந்திய அணியின் மனநிலையும் இப்போது இருக்கும். இருக்க வேண்டும். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் இப்படி ஒரு மன வலிமை பெற வேண்டியது அவசியமாகிறது. இரண்டு தொடர் வெற்றிகள் பெற்ற நம் அணிக்கும் மனவலிமை கூடியிருக்கும். வீரர்களுக்கிடையே நல்ல ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும். வீரர்களுக்கிடையே உள்ள சூழல் மகிழ்ச்சியானதாகவும் ஒற்றுமையாகவும் மாறி இருக்கும். இது தோல்விகளின் போது கிடைப்பதில்லை. தோல்விகளின் போது ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதிலும், கவலையிலும், ஊடகங்களின் தொல்லையிலும் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை வரும். அணி நிலைகுலைந்து போக வேண்டி வரும்.

இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு முன்பு இப்படியான தொடர் வெற்றிகள் நல்ல பயிற்சியாகவே அமைந்தது. பயிற்சியாளரின் தொடர் 'சோதனைகள்' (எக்ஸ்பெரிமெண்ட்) ஒரு முடிவுக்கு வந்ததும் மகிழ்ச்சியே. அணியில் இப்போது எல்லாரும் தங்களது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி இருப்பதும் மகிழ்ச்சி தரும் செய்தியே. இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் பேட்டிங்கிலும் சரி பந்துவீச்சிலும் சரி கிடைத்து வந்துள்ளது. இந்த இரண்டு தொடர்களையும் உற்று நோக்கினால் எல்லாரும் நன்றாக ஆடியிருப்பது தெரிய வரும். சேவாக் மற்றும் யுவராஜ் மீது இருந்த ஐயங்கள் கூட நேற்று விலகியது. எதிர்பாராத விதமாக சேவாக் ஆட்டமிழந்தது வருத்தமே. மற்றபடி அவரது ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் (இர்ஃபான்) தவிர அனைவரும் சிறப்பாகவே பந்து வீசினார்கள். சுழல் பந்து வீச்சு மட்டுமே சிறிது கவலை தருகிறது. அணியின் மூத்த வீரர்கள் கங்குலி, டிராவிட் மற்றும் சச்சின் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது நிச்சயம் அணியிக்கு பலம் தரும் செய்தியே.
ஓரு வழியாக அணி தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது சரியான நேரத்தில். சிறு சிறு பிசிறுகள் காணப்பட்டாலும் உலகக் கோப்பையை வெல்லத் தகுதியான அணியாக இந்த அணி தோற்றமளிக்கிறது. நமது வீரர்களின் திறமைகளில் எள்ளளவும் நமக்கு ஐயமில்லை. வேண்டியதெல்லாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற 'வெறி'. கடந்த உலகக் கோப்பையில் காணப்பட்டது போன்ற ஒற்றுமை. இவை இரண்டும் சேர்ந்தால் வெற்றி நமதே. மேற்கிந்தியாவிலிருந்து கிழக்கிந்தியாவிற்கு வெற்றிக் கோப்பை வரும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

No comments: